March 4, 2009

அரசியலின் கதை : நான்கு


’வணக்கம். என் பெயர் ஜோ வில்டிங். இது என் வெப்சைட். Wildfire. நான் பார்த்த, கேள்விப்பட்ட சங்கதிகளை இங்கே பதிவு செய்துள்ளேன். உட்காருங்கள். ஒவ்வொன்றாக பொறுமையாகப் படியுங்கள். களைப்படையும்போது, சிறிது தேநீர் அருந்துங்கள்.’

இப்படித் தொடங்குகிறது அந்த வலைத்தளம். தேதி வாரியாக, கிழமை வாரியாக கதைகள். அருந்த ஒரு டம்ளர் பால் கிடைக்காமல் சுருண்டு கிடக்கும் குழந்தைகளைப் பற்றி. ஃபலூஜாவில் திடீர் திடீர் என்று இடிந்து விழும் கட்டடங்களைப் பற்றி. அமெரிக்கப் படை வீரர்கள் அதிர அதிர நடத்தும் அட்டகாசங்கள் பற்றி. இன்னமும் நிறைய.

புத்தகம் எழுதப்போகிறோம், நியூஸ் ஸ்டோரி எழுதுகிறோம் என்று சொல்லி நிருபர்கள் பலர் இராக்கில் கூடாரம் அடித்து தங்கியிருக்கிறார்கள். சாயந்திரம் வெயில் இல்லாதபோது பிளாஸ்கில் தேநீர் எடுத்துக்கொண்டு, தோளில் ஒரு காமிராவை மாட்டிக்கொண்டு எழுதி அனுப்ப மாட்டர் தேறுமா என்று கிளம்பிவிடுவார்கள். கிடைத்தால் சரி. கிடைக்காவிட்டாலும் சரி. நான்கு செய்தித்தாள்களைப் படித்துவிட்டு, ஐந்தாவதாக ஒரு கதையை உருவாக்கிவிடமுடியும். அதிக சிரமமில்லை. பேனா மூடியை அல்லது லாப்டாப்பை பிரித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் மண்டைக்குள் ஏதாவது உதிக்கும்.

ஆனால், ஜோவுக்கு உதிக்காது. சீறிப்பாய்ந்து வரும் தோட்டாக்களை அவர் அருகிலிருந்து தரிசித்திருக்கிறார். கொடுத்த வேலையை சீராக முடித்துவிட்டு, உருண்டு போகும் பீரங்கியை வெறுப்பு பொங்க பார்த்திருக்கிறார். இராக்கின் புழுதி, ரத்தம், சத்தம் எல்லாமே இவருக்குப் பரிச்சயமானவை.

ஜோ வில்டிங் (Jo Wilding) ஒரு பத்திரிகையாளர். வயது 32. பிரட்டன்வாசி. முக்கால் பேண்ட் போட்டுக்கொண்டு இராக் வீதிகளில் நடந்து சென்று, தான் பார்த்தவற்றை, தன்னை பாதித்தவற்றை அழுத்தத்துடன் பதிவு செய்து வருகிறார். இராக்கைப் பொறுத்தவரை, ஜோ சொல்லித்தான் உலகுக்கு பல பதறவைக்கும் கதைகள் தெரியவந்தன.

தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர். தீவிர பிரிட்டன் எதிர்ப்பாளர். இராக்குக்கு ஒரு நடை போய் பாருங்கள் வேறு என்னவாகவும் உங்களால் இருக்க முடியாது என்கிறார் ஜோ. 1991 முதல் 2003 வரை இராக் மீது இந்த இரு தேசங்களும் விதித்த பொருளாதாரத் தடைகளால் 5,00,000 குழந்தைகள் செத்துப் போனார்கள். குண்டூசி கூட உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றது அமெரிக்காவும் பிரிட்டனும். விளைவு? ஒரு துண்டு ரொட்டியை ஒன்பது பேர் மூன்று வேளைக்குச் சாப்பிட்டாகவேண்டிய நிலைமை. மருந்து மாத்திரைகள் இல்லை. மின்சாரம் இல்லை. உணவுப் பொருள்கள் இல்லை.

ஜோ முதன் முதலாக இராக் சென்றது 2001-ல். பொருளாதாரத் தடை என்னும் பெயரில் ஒரு தேசத்தை எப்படியெல்லாம் சித்திரதை செய்யலாம் என்பதை அவர் நேரடியாகத் தெரிந்துகொண்டது அன்றுதான். பிறகு, 2003-ல் மீண்டும் இராக் சென்றார். இந்த முறை அவர் சென்றது ஒரு பத்திரிகையாளராக அல்ல. சர்க்கஸ் உரிமையாளராக. இராக் குழந்தைகளை மகிழ்விக்க சர்க்கஸ் நடத்திக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் சுற்றி வருகிறோம். இராக்குக்கும் வரலாம்தானே? அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுவிட்டு நுழைந்தார். சர்க்கஸ் நடத்தினார். நரகத்தை, தப்பு, நகரத்தைச் சுற்றிப் பார்த்தார். கையோடு கொண்டு சென்றிருந்த (ரகசியமாகத்தான்) பிளாஸ்திரி, மாத்திரை, மாத்திரைகளை தேவைப்படுபவர்களுக்கு விநியோகித்தார். சர்க்கஸ் டிக்கெட்டில் கிடைத்த பணத்தை இராக்கியர்களுக்காகச் செலவிட்டார்.

ஏப்ரல் 2004-ல் நிலைமை மோசமாக மாறியது. இராக் எரிய ஆரம்பித்தது. குறிப்பாக, ஃபலூஜா. மூன்றாவது முறையாக இராக்குக்குள் காலடி எடுத்து வைத்தார் ஜோ. வந்ததும் வராததுமாக அவருக்குள் உதித்த கேள்வி இதுதான். பத்திரிகையாளர்கள் என்று ஒருவரும் இங்கே இல்லையே. ஏன்? எங்கே போய்விட்டார்கள் அவர்கள்? இராக்கில் போர் என்று சதாமோ புஷ்ஷோ பிரஸ்மீட் வைத்து சொன்னால்தான் வருவார்களா? போர் எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டாமா? இராக்கியர்கள் இந்தப் போரை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டாமா? எதற்காக இந்தப் போர் என்று கேட்கவேண்டுமா? போரால் பாதிக்கப்படுபவர்களை கண்டு பேசி, அவர்கள் துயரங்களை பதிவு செய்ய வேண்டாமா?

அன்று முடிவு செய்ததுதான். ஏப்ரல் 2004 ஜோ எழுதத்தொடங்கினார். இன்றுமுதல் நான் ஒரு பத்திரிகையாளர். போர் எத்தனை குரூரமானது, எத்தனை விகாரமானது என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்போகிறேன். உண்மை. உண்மையை மட்டும். அதுவும் கண்ணால் கண்ட உண்மையை மட்டும்.

ஜோவின் ஒரே ஒரு பதிவு மட்டும் இங்கே.

’ஒரு வயதான ஆள் வீட்டை விட்டு வெளியில் வந்தார். காற்று வாங்குவதற்காக இருக்கலாம். அல்லது வெளியில் எங்காவது செல்ல உத்தேசித்திருக்கலாம். ஒரு நிமிடம்தான் ஆகியிருக்கும். அவர் மார்பை குறிபார்த்து சுட்டுவிட்டார்கள். ஏன் எதற்கு என்று தெரியவில்லை. அப்பாவின் அலறல் சத்தம் உள்ளே இருந்த மகன்களுக்குக் கேட்டது. ஆனால், கதவைத் திறந்து வெளியில் வர அவர்களுக்குத் துணிச்சலில்லை. ஏதோ ஒரு வேலையாக சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் அந்த வீட்டை நான் கவனித்தேன். கதவை பலமாகத் தட்டினேன். யாருமில்லை, வெளியில் வாருங்கள் என்று கத்தினேன். பிறகுதான் அவர்கள் வெளியில் வந்தார்கள். இறந்து போன தந்தையை அப்போதுதான் அவர்கள் பார்த்தார்கள்.’

அமெரிக்க ராணுவ பயங்கரவாதத்தின் உச்சகட்டம் ஃபலூஜா. யாரும் யாரையும் எப்போது வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம். காரணம் அநாவசியம். இறந்தவர்களையும் அடிபட்டவர்களையும் ஜோ ஆம்புலன்ஸில் சுமந்து சென்றபோதுகூட, ஆம்புலன்ஸ் வண்டியை நோக்கி அமெரிக்க வீரர்கள் சரமாரியாக சுட்டிருக்கிறார்கள். ஃபலூஜாவில் மட்டுமல்ல. இராக் முழுவதும் இதுபோல் பல நூறு கதைகள்.

மாற்று ஆடைகள் வாங்குவதற்கு வழியில்லாமல் அவதிப்படும் இராக்கியர்கள். பிரசவத்துக்கு வண்டி கிடைக்காமல், மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரை விடும் இளம்பெண்கள். இன்று உயிருடன் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாமல் கண் விழிக்கும் மக்கள். நேற்று வரை வாழ்ந்த வீடு இன்று இல்லை என்பதால் கை நீட்டி பிச்சை எடுக்கும் குழந்தைகள். ஜோ இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறார். ஜோவின் வலைதளம் இதோ. http://www.jowilding.net/

ஜோவுக்கு அரசியல் பிடிக்கும். மாற்று அரசியல்.

(தொடரும்)

2 comments:

Anonymous said...

Interesting one

Anonymous said...

வாவ் ஜோ!