March 2, 2009
அரசியலின் கதை : மூன்று
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை ஆரம்பித்து வைத்தார் ஜார்ஜ் புஷ். அதன் ஒரு அத்தியாயம் இராக். பயங்கர ஆயுதங்களைத் தேடுகிறோம் என்று சொல்லி பாக்தாத்தில் பீரங்கிகளை உருட்டிக்கொண்டு போய் நிறுத்தியது புஷ் அரசாங்கம். வேட்டை மிருகத்தைப் போல் சதாமைத் தேடிப்பிடித்து அடைத்துவைத்தார்கள். கையோடு குற்றச்சாட்டுகள் பதிவு செய்து பொம்மை விசாரணை நடத்தி தூக்கில் போட்டார்கள். பாக்தாத் வீதிகளில் ரத்த ஆறு ஓடியது. பல லட்சக்கணக்கான இராக்கியர்கள் நடுவீதியில் ஆதரவற்று நின்றார்கள். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டுவிட்டது. இராக் முற்றிலுமாகச் சிதைந்துபோனது. அபு காரிப் சிறையில் அமெரிக்க வீரர்கள் அரங்கேற்றிய மிருகத்தனமான சித்திரவதைகளைக் கண்டு உலகமே அதிர்ந்து பின்வாங்கியது. இந்த நிமிடம் வரை இராக் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம். இந்த நிமிடம் வரை அமெரிக்கர்கள் இராக்கை விட்டு வெளியேறவில்லை.
ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்கோ ஒரு மூலையில் யாருக்காகவோ நடைபெறும் போர் என்று ஒதுங்கியிருந்தார்கள். அரசியல் விவகாரம் நமக்கு எதற்கு? இராக்கில் போர் நடந்தால் எனக்கு என்ன? சதாம் கெட்டவர் கொன்றொழிக்கப்படவேண்டியவர் என்கிறது என் அரசாங்கம். பயங்கர ஆயுதங்களை அவர் ஒளித்துவைத்திருப்பதாகச் சொல்கிறது என் அரசாங்கம். தீவிரவாதத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்தப் போர் என்கிறது என் அரசாங்கம். அரசாங்கம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இது அரசாங்கத்தின் முடிவு. நான் என்ன சொல்ல?
அரசியல் சாக்கடை என்று நினைத்தவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள். அரசியல் ஒரு அடாவடித்தனம் என்று நினைத்தவர்கள் ஜார்ஜ் புஷ்ஷைத் திட்டி தீர்த்தபிறகு ஒதுங்கிக்கொண்டார்கள். அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களும் அரசியலை நிராகரித்தவர்களும் சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் போனார்கள். இராக் போன்ற விவகாரங்கள் தன்னை பாதிக்காது என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.
போர் புரியச் சென்ற அமெரிக்கர்கள் பைகளில் மூட்டைகளாக வந்து சேர்ந்தபோதுதான் இவர்கள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார்கள். ஐயோ இவர் என் கணவர். இவன் என் மகன். இவன் என் நண்பன். இவன் என் சகோதரன். இவர் என் அப்பா. எதற்கு இந்தப் பாழாய் போன போர்? அப்போதுதான் கண்களைத் திறந்து பார்த்தார்கள். அதிர்ந்தேபோனார்கள். உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு அலைகள் வெடித்துக்கொண்டிருந்தன. அமெரிக்காவுக்கு எதிராக. புஷ்ஷுக்கு எதிராக. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக. அடக்குமுறைக்கு எதிராக. அமெரிக்காவை உலகம் எப்படி பார்க்கிறது என்பதை அவர்கள் அழுத்தம்திருத்தமாக உணர்ந்துகொண்டனர். எதைப் பற்றியும் யோசிக்காமல், எதையும் தெரிந்துகொள்ளாமல் அலட்சியமாக இத்தனை காலம் இருந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்கமாட்டோம். வீதிகளில் இறங்கினார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க அரசே! உடனடியாக நம் வீரர்களைத் திரும்பப்பெற்றுக்கொள். போரை உடனே நிறுத்து.
அரசாங்கம் என்பது புனிதமான அமைப்பு. அரசாங்கம் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும். அரசாங்கத்தை எதிர்ப்பது சட்டத்தை எதிர்ப்பதற்குச் சமமானது. மெய்யான தேசபக்தி் கொண்ட எவரும் அரசாங்கத்தை எதிர்க்கத் துணியமாட்டார்கள். இதுபோல் இன்னும் பல பிம்பங்கள் அரசாங்கத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிம்பங்கள் உடைந்தாகவேண்டும். உடைத்தாகவேண்டும். அரசாங்கம் தவறுகள் செய்யும். சாதாரண தவறுகள் மட்டுமல்ல மாபெரும் தவறுகளும். நம்மால் எதுவும் முடியாது என்று இந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வது ஓர் அரசியல். எதிர்ப்பது ஓர் அரசியல். கண்டும் காணாமல் இருந்துவிடுவது ஓர் அரசியல். தெருவில் இறங்கி வந்து போராடுவது ஓர் அரசியல்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நன்று. தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்
I am collecting the chapers. Will collate them, print and distribute to my friends. Keep up good work maruthan
Super!!!!!!!!!!
To hell with governments on earth, I'm going to Mars! ;-)
//அரசாங்கம் என்பது புனிதமான அமைப்பு. அரசாங்கம் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும். அரசாங்கத்தை எதிர்ப்பது சட்டத்தை எதிர்ப்பதற்குச் சமமானது. மெய்யான தேசபக்தி் கொண்ட எவரும் அரசாங்கத்தை எதிர்க்கத் துணியமாட்டார்கள். இதுபோல் இன்னும் பல பிம்பங்கள் அரசாங்கத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.//
Well said. I admire your thoughts
VERY DIFFERENT VIEW POINT
ப்ளாகின் "template" ஐ மாற்றுங்கள் மருதன் , இது படிக்க ஏதுவாகவே இல்லை
ஈழப்போர் ஆரம்பமாகிய பின்னர் தான் ஈழத்தமிழர் பலருக்கு அரசியலில் ஆர்வம் வந்தது....
Post a Comment