March 10, 2009

எதுவும் செய்யலாம், தவறில்லை


உலகம் உன்னை நேசிக்கவேண்டும். உன்னைக் கண்டு பயப்படவேண்டும். இந்த இரண்டும் கைகூடிவிட்டால் உன்னை அடித்துக்கொள்ள யாரும் இல்லை. நேசிப்பரைக் கண்டு எப்படிப் பயப்படமுடியும்? யாரைப் பார்த்து பயப்படுகிறோமோ அவரை எப்படி நேசிக்கமுடியும்? இந்த சந்தேகம் உனக்கு வந்தால், இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள். உன்னைக் கண்டு உலகம் பயப்பட்டால் போதுமானது. நேசிப்பு அநாவசியம்.

மாக்யவல்லியின் அரசியல் சித்தாந்தத்தை இப்போது வாசிக்கும்போது, அதிகம் அதிர்ச்சியடையமுடியவில்லை. ஐயோ இப்படியெல்லாமா பட்டவர்த்தனமாக அறிவுறுத்துவார்கள் என்று நம் நெஞ்சம் பதைபதைப்பதில்லை. பழகிவிட்டது. மாபெரும் யுத்தங்களை, மாபெரும் அழிவுகளை, மாபெரும் வீழ்ச்சிகளை நாம் சந்தித்துவிட்டோம். மாக்யவல்லி எவற்றை கனவு கண்டாரோ அவற்றை நம் அரசியல் தலைவர்கள் செயல்படுத்திவிட்டார்கள். இன்னமும் செயல்படுத்திக்கொண்டார்கள்.

முழுப்பெயர் நிகோலோ மாக்யவல்லி (Niccolo Machiavelli). இத்தாலியர். தத்துவஞானி. நாடகங்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். இத்தாலிய அரசாங்கத்தில் உயர் பதவி. வரலாறு, ராணுவம், அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் அதிகம். மாக்யவல்லியின் படைப்புகளில் அதிகப் பிரசித்தி பெற்றது தி பிரின்ஸ் (The Prince). எழுதி முடித்ததும், தனிச்சுற்றுக்கு சில பிரதிகள் எடுத்து நண்பர்களிடம் மட்டும் நூலைக் காட்டியிருக்கிறார். முழுமையான முதல் பதிப்பு முதலில் அவரது மரணத்துக்குப் பிறகே வெளிவந்தது. 1530ம் ஆண்டில்.

அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது? எப்படித் தக்கவைத்துக்கொள்வது? அதிகாரத்தால் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் தி பிரின்ஸை அமைத்திருக்கிறார் மாக்யவல்லி. இளவரசர்களுக்காக எழுதப்பட்ட அரசியல் சாசனம். சரி, அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவதாம்? மாக்யவல்லியின் அறிவுரை இது. இலக்கை நிர்ணயித்துக்கொள். வழிமுறைகளைப் பற்றி கவலைப்படாதே. தவறு, சரி என்று எதுவும் இல்லை. அநாவசியமாக உன்னைக் குழப்பிக்கொள்ளாதே. உன் லட்சியம் இலக்கை அடைவது. அதில் மட்டும்தான் நீ கவனம் செலுத்தவேண்டும்.

சட்டப்படி நடக்கவேண்டும், நியாயப்படி இருக்கவேண்டும் போன்ற வெண்டைக்காய் கொள்கைகளை முதலில் உன் மனத்தில் இருந்து துடைத்து அழி. நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு போன்றவை தடைகற்கள். உன்னை கீழே பிடித்து இழுக்கும் தீயசக்தியின் மாய உருவங்கள். கலங்காதே. உன் பயணம் நீ உத்தேசித்த பாதையில் தொடரட்டும். உன் பாதை தவறானதாகவே இருந்தாலும் மாற்றிக்கொள்ளாதே. ஆன்றோர், சான்றோர் அறிவுரைகளுக்குப் பலியாகிவிடாதே. யார் வளைக்க முயன்றாலும் தோற்காதே.

ஐயோ இவன் தவறிழைப்பவன், தீங்கானவன் என்று பிறர் தூற்றுவார்களே என்று அச்சப்படாதே. ஆரம்பத்தில் தூற்றுபவர்கள்கூட பின்னால் பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் மனத்தில் வெற்றிகரமாகப் பயத்தை முதலீடு செய்துவிட்டால் பெரும் லாபம் ஈட்டிவிடலாம். அவர்களை சுலபமாக ஏமாற்றிவிடலாம். அதிகாரம் உன் கைக்கு வரட்டும். அதற்குப் பிறகு நீ வைப்பதுதான் சட்டம். நீ உச்சரிக்கும் விதிகளைத்தான் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றியாகவேண்டும். உனக்கு அடிபணிந்து போவதைத் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்காது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். தவறான வழியில் சென்றாலும் சரி, நேர்மையான வழியில் சென்றாலும் சரி. அதிகாரம் ஒன்றேதான். தேவைப்படும் சமயங்களில் பலாத்காரத்தைப் பயன்படுத்த தயங்காதே.

ஆட்சி உன் கைக்கு வந்ததும், நீ செய்யவேண்டிய முதல் காரியம் ராணுவத்தைப் பலப்படுத்துவதுதான். ஏகப்பட்ட எதிரிகள் முளைப்பார்கள். எச்சரிக்கையுடன் இரு. உன் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை எப்போதும் கண்காணித்துக்கொண்டிரு. யாரையும் சுலபத்தில் நம்பிவிடாதே. இது போதும் என்னும் மனநிலை ஆபத்தானது. அதிகாரம் கிடைத்துவிட்டதே என்று சும்மா இருப்பதில் பிரயோஜனமில்லை. அதிகாரம் பெருகிக்கொண்டே போகவேண்டும். அடுத்த பிரதேசத்தின் மீது போர் தொடுத்து உனதாக்கிக்கொள். அதிகாரத்தை வலுப்படுத்து. ராணுவத்தைப் பயன்படுத்து. அச்சுறுத்து. உன் சக்தியை, ஆற்றலை உயர்த்திக்கொள். அதற்காக எதையும் விலைகொடுக்கத் தயங்காதே.

மன்னர் என்பவர் சாந்தமாக இருக்கவேண்டும், அன்புமயமாக இருக்கவேண்டும், மக்களை நேசிப்பவராக, அவர்கள் பிரச்னைகளைப் புரிந்துகொள்பவராக, தீர்த்துவைப்பராக இருக்கவேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அப்படியா என்று கேட்டுக்கொள். நிச்சயம் நானும் அப்படிப்பட்ட ஒரு மன்னன்தான் என்று சொல்லிக்கொள். அப்படிப்பட்ட ஒரு தோற்றத்தைக்கூட ஏற்படுத்திக்கொள். ஆனால், நீ மாறிவிடாதே. சாந்தம், அமைதி, மனிதத்தன்மை போன்ற வெண்டைக்காய் சமாசாரங்களால் உன் மூளையை மழுங்கடித்துவிடாதே. உனக்குத் தேவை அமைதியும் நல்ல பெயரும் அல்ல. அதிகாரம். மேலும் அதிகாரம். அதைவிட உயர்ந்த அதிகாரம்.

ஹிட்லர்களும் முஸோலினிகளும் இந்தப் புத்தகத்தில் இருந்து உருவானவர்களே. மாக்யவல்லி அவர்களுக்காகவே சில விஷங்களைச் சொல்லியிருக்கிறார். இரக்கம் காட்டுவது உன் பலவீனத்தைத்தான் காட்டும். முடிந்தவரை மிருகத்தனத்தைப் பிரயோகம் செய். குரூரமாக இருப்பதும்கூட சரியானதே. உன் மேல் அதீத அச்சம் உருவாகும்போது உன்னை வழிபட ஆரம்பித்துவிடுவார்கள். உன்னை எதிர்க்கும் திராணி ஒருவருக்கும் இருக்காது.

தி பிரின்ஸை இன்றைய அரசியல்வாதிகள் வாசித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கடைபிடிக்கிறார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும் என்னும் அவசியம் இல்லை. உனக்கு விருப்பமில்லை என்றால், நிராகரித்துவிடலாம். பொய் சொல்லலாம். தவறில்லை. கொலை தவறில்லை. குற்றம் தவறில்லை. துரோகம் தவறில்லை. நீ மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவன். நீ சட்டத்தைவிட உயர்ந்தவன். நீ அரசன். தலைவன்.

(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)

6 comments:

ஜீவா said...

மருதன் எப்படி இருக்கிங்க

ஆனால் கடைபிடிக்கிறார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும் என்னும் அவசியம் இல்லை.///

மிகக்சரியாக சொன்னீர்கள்

தோழமையுடன்
ஜீவா

மருதன் said...

நலமாக உள்ளே ஜீவா. நன்றி

Anonymous said...

These politicians will never be good. I hate them all.

Anonymous said...

நல்ல அரசியல் நூல். சாணக்கியரின் நீதியும் இப்படித்தான் இருக்கும் போல.

காரணம் ஆயிரம்™ said...

இவரு மாதிரியே இன்னொருதரும் இருக்காரு...

அவரு பேரு Robert Greene... ஆபத்தான மேலாண்மை கொள்கைதான் அவருடைய பொருளடக்கம்...

The 48 Laws of Powerஒரு உதாரணம்...

'நண்பர்களை முழுமையாக நம்பாதே,எதிரிகளை பயன்படுத்து','துர்பாக்கியசாலிகளை அண்டவிடாதே','கருணை கொண்டு உதவி செய்யாதே.. காரியம் இருந்தால் உதவி செய்','Work on the Hearts and Minds of Others' என ....

இப்படி 48 விதிகள்..

சுவாரசியமான புத்தகம்...
ஆனால், தாயுள்ளம் கொண்ட இந்தியாவில் இந்த விதிகளை பின்பற்றலாகாது... !!!

இதன் தமிழ் பதிப்புதான், நக்கீரன் வெளியிட்ட ரா.கி.ர-வின், 'நீங்களும் முதல்வராகலாம்'

அன்புடன்
காரணம் ஆயிரம்

Anonymous said...

http://www.esnips.com/doc/09602cf8-b39b-4d0f-a689-4bd3105e4405/The-Prince-by-Nicolo-Machiavelli


in d above link we can read d book price...