March 15, 2009

அரசியலின் கதை : எட்டு

அரசியல் என்றால் அரசைப் பற்றிய இயல் (படிப்பு). அரசியல் விஞ்ஞான நூல் என்றும் சொல்லாம். Polis என்றால் நகரம். அதாவது City State. நகரத்தைப் பற்றிய அல்லது நகரத்தைச் சார்ந்த ஒவ்வொரு விஷயமும் Politics என்று அழைக்கப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் நகரங்களே பிரதானமாக இருந்தன. ஆகவே பாலிடிக்ஸ் என்றால் நகரத்தைப் பற்றிய விஷயம் என்று அப்போது அர்த்தப்படுத்தி இருந்திருந்தார்கள். கிரேக்கத்தைப் போன்ற நகர அமைப்புகள் இன்று இல்லை. ஆகவே, Politics என்னும் சொல்லுக்கான பொருளை நாம் சற்று விரிவாக மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும். நகரத்துக்குப் பதிலாகச் சமுதாயம். சமுதாயத்தைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் படிப்பது அரசியல்.

நாம் அனைவருமே சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயத்தைப் பற்றியது அரசியல். ஆகவே, அரசியல் என்பது நம் அனைவருக்குமானது என்று வகுத்துக்கொள்வது சரியாக இருக்கும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அரசியல் நம் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வரலாறும் அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு துறைகள். ஒரு பொருளின் கடந்த காலம்தான் வரலாறு என்றும் அதன் நிகழ்காலம் அரசியல் என்றும் சொல்பவர்கள் உண்டு. கடந்த கால அரசியலே வரலாறு. இன்றைய அரசியல் எதிர்கால வரலாறு.

0

எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி பலரும் விலகி நிற்பதற்குக் காரணம் அரசியலைக் கற்பதில் உள்ள சிரமம். அரசியல் சொற்களில் இருந்து பிரச்னை ஆரம்பமாகிறது. Catalyst, Atomic weight, Hypothalamus போன்ற சொற்களுக்கு என்ன பொருள் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அறிவியலின் பலம் இது. எல்லாவற்றுக்கும் பொதுப் பெயர்கள் உள்ளன. இந்தப் பொதுப் பெயர்களை அனைவரும் கற்றுத் தீரவேண்டியது அவசியம்.

குடியாட்சி என்றால் என்ன? சோஷலிசம் என்றால் என்ன? ஏகாதிபத்தியம் என்றால் என்ன? பொதுவுடைமை என்றால் என்ன? குடியரசு? ஜனநாயகம்? சுதந்தரம்? அனைத்துமே நமக்குப் பரிச்சயமான சொற்கள்தாம் என்றாலும் இந்தச் சொற்களுக்கான பொருளை நாம் சரியாக தெரிந்து வைத்திருக்கிறோமா? கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இவற்றுக்கு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். ஆகவே முதல் தேவை துல்லியமான கலைச்சொல் வளர்ச்சி. அறிவியல் துறைகளில் இருப்பதைப் போன்ற திடமான அர்த்தங்கள்.

மற்றொரு பிரச்னை அலட்சியம். அட, இத்தனை வருடங்களாக செய்தித்தாள்கள் படிக்கிறேன், பத்திரிகை படிக்கிறேன், டிவி பார்க்கிறேன். எனக்குத் தெரியாத அரசியலா? இத்தனை காலம் கழித்தா அரசியல் என்றால் என்ன என்று நான் படிக்கவேண்டும்? ஐயா, படிப்பதற்கு அப்படி அதில் என்னதான் இருக்கிறது?

அரசியலைப் பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொண்டுவிட்டதாகப் பலரும் நினைக்கிறார்கள். வெளிநாட்டு விவகாரங்கள், அந்நியச் செலவாணி, பண வீக்கம், அடுத்த பிரதமர் யார், பெட்ரோல் விலை உயர்வு ஏன், பட்ஜெட், வல்லரசு கனவு இப்படி எல்லாவற்றையும் பற்றி தொடர்ந்து விவாதித்துக்கொண்டு இருப்பதால் அரசியல் நமக்குக் கைவந்துவிட்டது என்று பலரும் நம்பி விடுகிறார்கள்.

(தொடரும்)

1 comment:

VIKNESHWARAN ADAKKALAM said...

மிகவும் நுட்பமான விளக்கம்... மேலும் தொடருங்கள்...

//வரலாறும் அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு துறைகள். ஒரு பொருளின் கடந்த காலம்தான் வரலாறு என்றும் அதன் நிகழ்காலம் அரசியல் என்றும் சொல்பவர்கள் உண்டு. கடந்த கால அரசியலே வரலாறு. இன்றைய அரசியல் எதிர்கால வரலாறு.//

மிகவும் அழகான விளக்கம்... ஆரம்ப காலத்தில் மக்கள் கூடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது தானே வழிபாட்டு தளங்கள்... இன்றய நிலையில் அதில் அதீத மாற்றங்கள்... இதை பற்றிய விரிவான செய்திகளை அட்த்தடுத்த பகுதிகளில் எதிர்பார்க்கிறேன்...