June 4, 2009

சிங்கள இனவெறியின் வேர்கள்

சிங்களர்கள் தமிழர்களை மட்டுமே தங்கள் எதிரிகளாகக் கொண்டனர் என்று நினைப்பது தவறு. கிறிஸ்தவர்களுக்கு எதிராக அனகாரிக தர்மபாலா 1902ம் ஆண்டு மேற்கொண்ட பிரசாரத்தின் ஒரு பகுதி இங்கே.

'காட்டுமிராண்டிக் கொள்ளையோரால் அழிவு உண்டாகும் முன்னர் இந்த அழகான இலங்கைத்தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சொர்க்கமாக ஆக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவரும் பலதெய்வ வணக்கமும் உயிர்க்கொலை, களவு, விபசாரம், பொய், மதுப்பழக்கம் யாவற்றுக்கும் காரணமாக இருந்தது. பண்டைப் பெருமைமிக்க, நாகரிகமடைந்த சிங்கள மக்கள் பிரித்தானிய நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சதித்திட்டங்களால் வீழ்ச்சியடைகின்றனர். உயர் அதிகாரிகள் தேயிலைச் செய்கைக்காகக் காடுகளை அழிக்கின்றனர். அபின், கஞ்சா, விஸ்கி, சாராயம் போன்ற மது சார்ந்த நஞ்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சாராயக் கடைகளையும் சிகையலங்கார நிலையங்களையும் திறந்துள்ளனர். பழைய கைத்தொழில்களை அழித்து மக்களைச் சோம்பலாக்கிவிட்டனர்.'

கவனிக்கவும். தர்மபாலாவின் பிரசாரப் போர் பிரிட்டனின் காலனியாதிக்கத்துக்கு எதிரானது அல்ல. கிறிஸ்தவர்களுக்கு எதிரானது மட்டுமே. பிரிட்டனின் அநீதியான ஆக்கிரமிப்பை அவர் எதிர்க்கவில்லை. தன் நாடு அடிமைப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை, தன் இனம் பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டுமே தர்மபாலா விரும்பினார். என் இனம், என் சமயம், என் மொழி, என் மக்கள்.

தமிழர்கள், கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற அரேபியர்களின் வரவு இஸ்லாத்தை இலங்கையில் செழிக்கச்செய்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அரேபிய வர்த்தகர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இலங்கையிலும் தொழில்துறையில் முன்னணியில் இருந்தனர். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜாவா, மலேஷிய முஸ்லீம்களை டச்சு, பிரிட்டன் அரசு பெருமளவில் இலங்கைக்கு அழைத்து வந்தது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். பாகிஸ்தானிய மற்றும் தென்னிந்திய முஸ்லீம்களும் இதில் அடங்குவர்.

1915ம் ஆண்டு தர்மபாலா இப்படி எழுதினார்.

'அந்நியரான முகமதியர் ஷைலாக்கின் வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தராக மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகைகளில் இருந்து நாட்டைக் காப்பதற்காக ரத்தத்தை ஆறு போல் பெருக்கிய மூதாதையரைக் கொண்ட மண்ணின் மைந்தரான சிங்களவர் பிரித்தானியரின் கண்களில் நாடோடிகளாகத் தெரிகின்றனர். தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து, வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமவாசியைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறான். மண்ணின் மைந்தன் பின்தள்ளப்படுகிறான்.'

(ஷேக்ஸ்பியரின் தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸில் வரும் கதாபாத்திரம் ஷைலாக். சதையை அடமானாகக் கேட்டுப்பெற்று கடன் கொடுத்த யூதர்).

அதே 1915ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிரான முதல் பெரும் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கானோர் இறந்துபோயினர். பிரிட்டன் துருப்புகள் இடைமறித்து கலகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன. முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டிப் பேசிய சிங்கள அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றனர்.

சிங்கள இனம் ஏன் உசத்தியானது என்பதை விவரிக்கும் 1980ம் ஆண்டு பிரசுரம் ஒன்று கீழே. Kauda Kotiya? என்று தலைப்பிடப்பட்ட பிரசுரம் அது. இதன் பொருள், புலி யார்? இந்தப் பிரசுரத்தின் முழுமையான வடிவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

'சிங்கள இனம் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட சான்றாதாரமுள்ள தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. இலங்கைச் சிங்களவரின் வரலாற்றைவிடப் பழமையான வரலாறு வேறொன்றுமில்லை. இலங்கை சிங்களவருக்குரியது என்ற கருத்து வெறும் வாய் மொழி மரபாக வழங்கும் ஐதீகங்களையோ கட்டுக்கதைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. பண்டைய குகைச் சாசனங்கள், மாபெரும் பௌத்த தூபிகள், விகாரைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட புத்த பெருமானின் உருவச் சிலைகள், மிகப் பெரிய குளங்கள், நீர்ப்பாய்ச்சல் முறைமைகள் யாவும் சிங்கள இனம் மற்றும் சிங்கள தேசத்தினரின் பாரம்பரியத்துக்கு அசைக்கமுடியாத சான்றுகளாகும்.'

'..இந்தச் சிங்களரல்லாத சிறுபான்மையினர், தமது சொந்த மண்ணின் மீது சிங்கள மக்களுக்குரிய உரிமையை மிகவும் அநீதியான முறையில் அழிக்க முயல்வது மாத்திரமல்லாது ஐயமற்ற அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் வேறு பல அநீதிகளை இழைத்து வருகின்றனர்.'

இதன் அர்த்தம், பௌத்தம் என்றால் சிங்களம். சிங்களம் என்றால் பௌத்தம். சிங்களர்களின் தொன்மைக்கு ஆதாரம், பௌத்தத்தின் தொன்மை. சிங்கள வரலாறு என்பது பௌத்தத்தின் வரலாறு. சிங்களர்களின் கலாசாரம் என்பது பௌத்தத்தின் கலாசாரம். தொன்மையான வரலாறு கொண்டவர்கள் ஆதலால் சிங்களர்கள் இலங்கையின் பூர்வகுடிகள். பூர்வகுடிகள் ஆதலால் இலங்கை சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தமானது.

(ஆதாரம் : இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள், குமாரி ஜெயவர்த்தனா)

6 comments:

Anonymous said...

சிங்கள இனவெறியின் வேர்கள் என்று பழைய குப்பைகளை கிளறுவதால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எந்த நன்மையும் வரப் போவதில்லை. சிங்களவர்களிடம் நிறையவே மாற்றம் வந்துவிட்டது. இனவெறி என்று பார்த்தால் புலி ஆதரவாளர்கள் தான் இன்னும் மோசமான இனவெறியில் இருக்கிறார்கள்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

அனானி சொன்ன முதல் வரி கரெக்ட். ஸ்ரீலங்க அரசாங்கத்திற்கு அமோக வெற்றி - புலிகள்,தனி ஈழ இயக்கம் மட்டுமல்லாமல், சர்வ தேச கண்டன தீர்மானங்களையும் தடுத்து விட்டார்கள். இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற பெரும்பான்மை நாடுகள் ஸ்ரீலங்க அரசுக்கு அரசியல் ஆதரவும், பொருளாதார ஆதரவும் கொடுக்கின்றனர். இனி தனி ஈழம் ஓட்டை விழுந்த பலூன் தான்.

அது போக, சிங்கள-பௌத்த இன வாதத்தில் பல Irony கள் உள்ளன. பல சிங்கள-பௌத்த இன வாதிகள் கிருத்தவர்களாக ஆரம்பித்தனர். உதாரணமாக, அனகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் டான் கார்லோஸ் ஹேவவிதரண. சிங்கள தலைவர்கள் எல்லொருக்குமெ கிருத்துவ பெயர்கள் உண்டு. மஹிந்த ராஜபக்‌ஷே முதல் பெயர் பெர்சி. அவர் சகோதரர் பாசில்.

அதனால் என்ன தெரிவது என்றால், மேல்தட்டினர் பின்பற்றுவது மரபு பௌத்தம் இல்லை, அது ஒரு சந்தர்பவாதம். 19ம் நூற்றாண்டு வரை, பல சிங்கள மேல் தட்டினர் டட்சு, ஆங்கில காலனீய ஆட்சியாளர்களை திருப்தி செய்வதற்கு கிருத்துவர்களாக மாறினர். மேலை காலனீய அதிகாரம் தேய தேய , மறுபடியும் பௌத்தர்களானர்கள். அது மரபு பௌத்தம் இல்லையாதலால் , தேசீய வாதத்தை ஒரு psychological overcompnesation எடுத்துக் கொணடனர்.
19ம் நூற்றாண்டு முடிவிருந்து ’நாம் ஆரியர்’ என நினைக்க தொடங்கினர். இதில் வேடிக்கை என்ன என்றால், ஒரு பக்கம் சிங்கள தேசீய வாதத்தினர் மகா வம்சம் சிஙகள இனத்தவரின் சரித்திரம் - அதன் மேல் தான் தஙகள் அடையாளம் உள்ளது என சொல்கிறனர். மகாவம்சம் சிங்களவரை, ஆரியர் என குறிப்பிட வில்லை - ஆரியர் என்ற வார்த்தையையே எடுக்க வில்லை. மகாவம்சத்தின் தம்பியான சூலவம்சமும் சிங்களவர் ஆரியர் என குறிக்க வில்லை. சூல வம்சம் - ஒரு தடவைதான் ஆரியர் என சிலரை குறிப்பிடுகிறது - அது மதுரையில் இருந்து வந்த சில வீரர்களைப் பற்றி.

சிங்களவரின் ஆரிய கருத்தியல் 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, தமிழகத்தில் திராவிட கருத்தாக்கம் ஏற்பட்ட அதே சமயத்தில். இரண்டும் காலநீய தாக்குதலால் ஏற்பட்டவை.

உண்மையிலேயே ஸ்ரீலங்காவில் ஆரியர் யார் என்றால், ‘ஆரிய சக்ரவர்த்தி’ என்ற வம்சம் யாழ்பாணத்தை ஆண்டது.

இப்பொழுது, ஈழ தமிழர்கள் எப்படி சிங்களவருடன் ஓரளவு சுமுகமாக வாழ முடியும் என யோசிக்க வேண்டுமே தவிற, வெளி உலகத்தை, முக்கியமாக தமிழ்நாட்டை நம்பி ஒன்றும் நடக்கப் போவதில்லை.

விஜயராகவன்

Anonymous said...

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளை பிரித்தானியா சென்று காத்த பெருமை தமிழர் களையே சேரும்

Anonymous said...

Dear Anani
DID you mean that now singhalese have the mind and might to treat tamils equally. Except very few Singhalese still they are barbaric. Dont blabber as you know everything. If your friends have given our people rights what is the need for us to fight with weapons,

சுதிர் said...

மருதன், இலங்கை தமிழர்கள் குறித்தும் முஸ்லீம்கள் குறித்தும் அவரகளுககு இடையில் உள்ள பிளவுகள் குறித்தும் எழுதுங்களேன்

Anonymous said...

lets watch singalan's history www.youtube.com/watch?v=mZEXHCL8WhQ and www.youtube.com/watch?v=GXmdHqV-gwA

இந்த வீடியோ பதிவையும் பாருங்கோ...