September 7, 2009

ஹியூகோ சாவேஸ் யார் பக்கம்?



1. ஒப்பற்ற தலைவர்


லிபியாவின் அதிபர் கர்னல் கடாஃபி தனது நாற்பதாண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டாடும் வகையில் ஒரு மாபெரும் விழாவை இந்த மாதத் தொடக்கத்தில் நடத்தினார். தலைநகரம் திரிபோலியில் ஒரு வாரம் நீடித்த இந்தக் கொண்டாட்டத்தில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

ஹியூகோ சாவேஸும் மகிந்த ராஜபக்ஷேவும் முதல் முறையாக இங்கே கைகுலுக்கிக்கொண்டார்கள். மகிந்தவின் அர்ப்பணிப்பு உணர்வையும் புலிகளை ஒடுக்கியதில் அவர் காட்டிய தீவிரத்தையும், தீவிரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை அடைந்துள்ள மாபெரும் வெற்றியையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் சாவேஸ். பிற நாடுகளுக்கு இது ஒரு படிப்பினை என்றும் அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அதிபர் கிலானி, பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ இருவரையும் சந்தித்திருக்கிறார் ராஜபக்ஷே. இருவரிடம் இருந்தும் பாராட்டுதல்கள் குவிந்திருக்கின்றன. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நீங்கள் ஓர் ஒப்பற்ற தலைவர் என்று நேரடியாகவே ராஜபேக்ஷேவைப் பாராட்டியிருக்கிறார் அரேயோ.

தன் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்கொட்டுவதற்காக கடாஃபி நடத்திய இந்த விழாவின் நாயகர் கடாஃபி அல்ல. மகிந்த ராஜபக்ஷேதான். உலக அரங்கில் கம்பீரமான ஒரு தலைவராக அவர் மாறியிருக்கிறார். தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் ராஜபேக்ஷேவை தனது ஆசானாக போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறது. மாபெரும் வியாதி ஒன்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்ட ஆராய்ச்சியாளர் போல் வெற்றிக்களிப்புடன் கையசைத்துக்கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ஷே. அவரிடம் இருந்து ரகசியங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் அவர் சகாக்கள் அவரை மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படித் திட்டமிட்டீர்கள்? எப்படி இந்தப் போரை நடத்தினீர்கள்? எதிர்ப்புகளை எப்படி முறியடித்தீர்கள்? தயவுசெய்து எங்களுக்கும் கற்றுத்தாருங்கள், ஆசானே!

ராஜபேக்ஷேவின் வெற்றி சூத்திரத்தில் ரகசியங்கள் எதுவும் இல்லை. மிக எளிமையான விதிகளை உள்ளடக்கிய வெளிப்படையான சூத்திரம் அது. எதிரியைக் கண்டுபிடி. வெளிப்படையாகப் போர் பிரகடனம் செய். எதிரி மீது மட்டுமல்ல, எதிரி இனத்தின் மீதும். மனித இழப்புகள் பற்றி கவலைப்படாதே. பிரசார யுத்தத்தைத் தொடங்கு. உன் எதிரி நடத்துவது தீவிரவாதப் போர். எனவே, நீ நடத்துவது புனித யுத்தம். நீ அரசாங்கம். ஆகவே, நீ நடத்துவது நேர்மையான யுத்தம்.

அனைவருக்கும் தெரிந்ததுதான். அனைவரும் நடத்த விரும்புவதுதான். என்றாலும், சமகாலத்தில் இத்தனை கச்சிதமாக, இத்தனை வெற்றிகரமாக ராஷபக்ஷேவைப் போல் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தியவர் வேறு யாருமிலர். அமெரிக்கா நடத்தாத போரா? அமெரிக்காவுக்குத் தெரியாத பயங்கரவாதமா? என்றாலும், ராஜபக்ஷேவுக்குக் கிடைத்த பாராட்டும் வரவேற்பும் புஷ்ஷூக்குக் கிடைக்காதது ஏன்? புஷ்ஷின் போர்க் கொள்கையை கிட்டத்தட்ட அப்படியே பின்பற்றும் ஒபாமாவுக்குக் கிடைக்காதது ஏன்?

2. அமெரிக்காவின் ஆசான்

இந்தியாவையும் இந்தப் போரில் இணைத்துக்கொண்ட ராஜபக்ஷேவின் ராஜதந்திரம்தான் காரணம். இந்தியாவின் உதவி இருந்ததால், ஆயுத பலமும் ஆள் பலமும் தொழில்நுட்ப பலமும் கிடைக்கப்பெற்றது. இந்தியாவின் உதவி இருந்ததால், ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறவில்லை. எங்கள் போருக்கு உதவுங்கள் என்று கோராமல், இது நம் போர் என்று இந்தியாவை அவரால் அழைக்கமுடிந்தது. உண்மையில், ராஜபக்ஷே நடத்தியது இருமுனைப் போர். ஒன்று, புலிகள் மீது (என்னும் பெயரில் மக்கள் மீதும்) நடத்தப்பட்ட போர். மற்றொன்று, ஊடகங்கள் மீது அவர் தொடுத்த போர். மிகக் கடுமையான தணிக்கை முறைகளை அவரால் கையாள முடிந்தது. இலங்கைக்கு உள்ளே மாத்திரமல்ல, வெளியிலும். இங்கும் இந்திய அரசின் உதவி அவருக்குக் கிடைத்தது. தி ஹிந்து உள்ளிட்ட இந்திய தேசிய பத்திரிகைகள், அதிகாரபூர்வமான இலங்கை அரசு தூதரகங்களாக செயல்பட்டன. ராஜபக்ஷே நடத்திக்கொண்டிருப்பது தீவிரவாதத்துக்கு எதிரான போர்தான் என்று தொடர்ந்து இவர்கள் பிரசாரம் செய்துவந்தார்கள். இலங்கையில் உருவாகும் மாற்றுக்கருத்துகள் வலுக்கட்டாயமாக நசுக்கப்பட்டன. இந்தியாவிலும் இதே நிலைமைதான். மக்களுக்கு உண்மை நிலை தெரியாதவாறு மத்திய அரசும் மாநில அரசும் பார்த்துக்கொண்டன. புலிகள் என்று மட்டுமல்ல, ஈழம், தமிழர்கள் என்றுகூட உச்சரிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இராக், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா நடத்திய போரில் இந்த அளவுக்கு தணிக்கை முறையை கொண்டுவரமுடியவில்லை. மூடிமறைக்க முயன்றார்கள். எதிரிகளின் இழப்பு எண்ணிக்கையை மட்டுப்படுத்திக் காட்டினார்கள். பழியை அவர்கள் மீது சுமத்தினார்கள். இவையனைத்தும் சாத்தியமானது. ஆனால், யுத்தம் நடக்கவேயில்லை என்று முழு முற்றாக மறுதலிக்க முடியவில்லை. காரணம், அமெரிக்காவிலேயே பல இயக்கங்கள் இந்தப் போரை எதிர்த்தன. செய்திகளையும் வெளியிட்டன.

இலங்கையில் அரசாங்கம் மட்டுமே செய்திகளை உற்பத்தி செய்து அளித்து வந்தது. எதிர் இயக்கங்கள் இல்லை. இலங்கை அரசின் போக்கை சிங்களர்கள் இறுதிவரை கண்டிக்கவில்லை. காரணம், ராஜபக்ஷே ஊட்டிய இனவெறி. புலிகளோடு சேர்த்து தமிழர்களும் கொல்லப்பட்டபோது, சிங்களர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். ஒரே நாட்டில் வாழும் மற்றொரு பிரிவினரின் மரணத்தை இத்தனை வெளிப்படையாகக் கொண்டாடிய இன்னொரு இனம் இல்லை.

பெயரளவில் இலங்கையை அமெரிக்கா எதிர்த்து வந்தாலும், மகிந்த ராஜபக்ஷேவைக் கண்டு நிச்சயம் அமெரிக்கா உள்ளூர பொறாமை அடைந்திருக்கும். அந்த வகையில், அமெரிக்கா ராஜபக்ஷேவிடம் இருந்து மேலதிகம் கற்கவேண்டியிருக்கிறது.

3. இது அறியாமையா?

அமெரிக்கா எதிர்க்கிறது ஆகவே நான் ஆதரிக்கிறேன் என்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையோடு ராஜபக்ஷேவின் செயல்களை பாராட்டியிருக்கிறார் ஹியூகோ சாவேஸ். இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊடகங்கள் அளித்த செய்திகளை மட்டுமே சாவேஸ் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. சோஷலிசப் பாதையில் வெனிசூலாவை அழைத்துச்செல்லவேண்டும் என்னும் முனைப்புடன் இயங்கி வரும் சாவேஸ், இலங்கை விவகாரத்தில் மிகக் குறுகலாகச் சிந்தித்திருப்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

க்யூபா செய்த அதே தவறை வெனிசூலா செய்திருக்கிறது. ரால் காஸ்ட்ரோ அரசாங்கமும் சாவேஸ் அரசாங்கமும், புரட்சிகர அரசியல் நெறியில் இருந்து வழி தவறி சென்றுவிட்டதை இலங்கை சம்பவம் உணர்த்துகிறது. ஒடுக்குபவர்கள் யார், ஒடுக்கப்படுபவர்கள் யார் என்பதை சாவேஸும் ரால் காஸ்ட்ரோவும் இறுதிவரை புரிந்துகொள்ளவேயில்லை. குறைப் புரிதலுடன் இலங்கையை ஆதரித்திருக்கிறார்கள். இந்தக் குறைப் புரிதலுடன் க்யூபாவையும் வெனிசூலாவையும் அணுகினால் என்ன ஆகும்? காஸ்ட்ரோவும் சாவேஸூம் சர்வாதிகாரிகளாகவே காட்சியளிப்பார்கள். இவர்களது ஆட்சி அராஜக ஆட்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். காரணம், மேற்குலக ஊடகங்களின் சித்தரிப்புகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஆதிக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள்தாம் என்பதால் அவர்களைத்தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

சாவேஸின் இந்தத் தடுமாற்றம் கண்டிக்கத்தக்கது. பொறுமையாக ஆராயாமல், முழு உண்மையை உணராமல், அதிகாரத்தில் இருப்பவர்களின் செய்திகளை மட்டுமே நம்பி ஒரு முடிவுக்கு வருவதை அறியாமை என்று மட்டும் வரலாறு எடுத்துக்கொள்ளாது.

4. உலகளாவிய பார்வை

மாவோவின் முதல் மகன், மாவோ அனியிங் (Mao Anying) வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில் (1950-1953) கொல்லப்பட்டார். ஸ்டாலினின் மகன், யாகோவ் துகாஷ்விலி (Yakov Dzhugashvili) இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியால் சிறைபிடிக்கப்பட்டு இறந்துபோனார். சோவியத் சிறைபிடித்து வைத்திருந்த ஒரு ஜெர்மானிய ஃபீல்ட் மார்ஷலை (Friedrich Paulus) விடுவித்தால் யாகோவை விட்டுவிடுகிறோம் என்று ஹிட்லர் அரசாங்கம் பேரம் பேசியபோது, ஓர் உயர் அதிகாரிக்கு மாற்றாக சாதாரண ஒரு வீரனை அளிக்கமுடியாது என்று ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

அசலான கம்யூனிச தேசங்களாக சோவியத் யூனியன், சீனா இரண்டும் திகழ்ந்தபோது, அவை தம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட பிற நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளித்துவந்தன. இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சோவியத்திடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் உத்வேகம் பெற்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் கொண்டிருந்த பரந்த, உலகளாவிய பார்வையே இதற்குக் காரணம். அருகில் மட்டுமல்ல தொலை தேசங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் போராட்டங்களில், ஒடுக்கப்படுபவர்கள் யார், ஒடுக்குபவர்கள் யார் என்பது பற்றிய மதிப்பீட்டை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களது வெளியுறவுக் கொள்கை அவ்வாறே வடிவம் பெற்றது. கம்யூனிச நாடு, சோஷலிச நாடு என்று அறியப்படும் க்யூபாவும் வெனிசூலாவும் இந்தப் பண்பை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது.


ஆதாரம் :

Libya's revolution anniversary, opportunity to boost political clout
Libya's Last Bedouin
Libya marks 40 years of Gaddafi
Libya celebrates 40 years since Gadhafi coup
Questions over Libyan Celebrations
Warm welcome to a close friend

4 comments:

Anonymous said...

Dear Mr.Marudan,Iam karthikeyan.
It's really good post.I agree with you thoghts.
Country like cuba and vensula encourage srilanka atrocity is really unfortunate.They dont know what happend actually.

Theekanal said...

Surprising and shocking that Chavez is siding with Rajabakse!

கந்தர்மடத்திலிருந்து கவின் said...

சாவேஸ் இன் கருத்து தமிழர் தரப்பின் இராஜதந்திர தோல்வியை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது....இன்னும் உருத்திரகுமார் மாதிரியான “பணம் புடுங்கி” பன்னாடைகளின் பின்னால் போய்க்கொண்டிருந்தால், நிலமை இதைவிட மோசமாகும்.

கியூபா,வியட்னாம்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர்தனும் விழித்திருக்கலாம்.

Anonymous said...

Anbu thozlare,

I can understand your feeling while writing this post.
because i am also disappointed when CUBA & VENISULA, supporting Srilanka.
Even my close friends are doing the same thing, i am not getting angry.But Leaders like FIdel & Chavez supporting SL is not at all tolerable.
As you said Really they dont know what is happening there.

Is there any way to explain them the real situation to them??
Instead of worrying, Can we do something to correct it?

-GIRI