September 12, 2009

சீனாவும் விவாதங்களும்



கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு (செப்டம்பர் 13, 2009) மதியம் 12.00 மணிக்கு ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் சீனா விலகும் திரை நூல் குறித்த விவாதம் ஒலிபரப்பாகிறது. பல்லவி அய்யர் ஆங்கிலத்தில் எழுதிய Smoke and Mirrors நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பாளர் ராமன் ராஜாவுடன் நான் உரையாடுகிறேன்.

பல்லவி அய்யர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். தி ஹிந்துவில் சீனா குறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சீனாவில் இருந்திருக்கிறார். சீனாவிடம் இருந்து இந்தியாவும் இந்தியாவிடம் இருந்து சீனாவும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்பது இவருடைய கருத்து. நமக்கு நல்ல சாலைகள் வேண்டும், நல்ல மருத்துவ வசதிகள் வேண்டும், கல்வி வேண்டும், நல்ல ஆட்சி வேண்டும். சீனாவுக்கு ஜனநாயகம் வேண்டும், நிறைய கருத்து சுதந்தரம் வேண்டும், மாற்று கருத்துகளை வரவேற்கும் பக்குவம் வேண்டும். சீனாவின் தொழில் வளர்ச்சி பல்லவி அய்யரைக் கவர்ந்திருக்கிறது. ஆண்களுக்குச் சமமாகப் பெண்களை மதிக்கும் குணம், Dignity of labour ஆகியவற்றை பாராட்டுகிறார். அதே சமயம், சீனர்கள் அனைவரும் ஒன்றுபோலவே சிந்திக்கிறார்கள் என்று குறைபட்டுக்கொள்கிறார்.

இந்திய ஆட்சி முறை, சீன ஆட்சி முறை இரண்டையும் ஒப்பிடுகிறார். இங்கே, தேர்தலில் நின்று ஜெயித்து, ஆட்சியைப் பிடித்துவிட்டால், போதும். அதற்குப் பிறகு எதுவும் செய்யவேண்டியதில்லை. அடுத்த தேர்தல்வரை பிரச்னையில்லை. சீனாவில் இது சாத்தியமில்லை. ஆயிரத்தெட்டு கட்சிகள் இல்லை அங்கே. ஒற்றை கட்சி சர்வாதிகாரம். என்றாலும், தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவேண்டுமானால் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். செய்கிறார்கள்.

மற்றபடி, கடுமையான ஒடுக்குமுறை உண்டு. நினைத்ததைப் பேசிட, எழுதிட முடியாது. இங்கே, மன்மோகன் சிங் அரசு ஒழிக என்று வெளிப்படையாக பாராளுமன்றத்துக்கு வாசலில் நின்று கோஷம் போடலாம். எதையும் எழுதலாம். ஒவ்வொருவருக்கும் வாக்கு உண்டு. ஆனால், இந்தச் சுதந்தரத்தை வைத்துக்கொண்டு நம்மால் எதுவும் சாதித்துக்கொள்ளமுடியவில்லை. சுதந்தரத்தைப் பறிகொடுத்துவிட்டு, சீனர்கள் சாதித்திருக்கிறார்கள். எனில், நமக்கு என்ன தேவை? ஜனநாயகம் இல்லாத வளர்ச்சியா? வளர்ச்சி இல்லாத ஜனநாயகமா?

பரவலாக விவாதிக்கப்படவேண்டிய புத்தகம் இது. ஒத்துக்கொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், முரண்படுவதற்கும் பல விஷயங்கள் இதில் உள்ளன.

3 comments:

Anonymous said...

// எனில், நமக்கு என்ன தேவை? ஜனநாயகம் இல்லாத வளர்ச்சியா? வளர்ச்சி இல்லாத ஜனநாயகமா? //

Good question

R.PARTHASARATHY,KARNATAKA said...

Hello sir.... I read many of ur books from kizhakku pathippagam. They were informative to the history of revolution leaders. Thank You.

மருதன் said...

Thanks Mr R. Parthasarathy.