September 12, 2009

புதிய புத்தகம் : திபெத்

திபெத் குறித்து மினிமாக்ஸ் வெளியீடாக, ஒரு புதிய புத்தகம் வெளிவந்துள்ளது.புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.

திபெத் என்றவுடன் சில பிம்பங்கள் நம் மனத்தில் தோன்றும். புத்த மதம், தலாய் லாமா, காவி உடை, சீனா, சிம்லா ஒப்பந்தம், அமைதிக்கான நோபல் பரிசு, தர்மசாலா. திபெத் ஒரு இருண்ட புதிர் என்றால் ஒவ்வொரு பிம்பமும் அந்தப் புதிரைப் புரிந்துக்கொள்ள உதவும் துண்டு வெளிச்சம் என்று சொல்லலாம். இந்த பிம்பங்களை சேகரித்தால் திபெத்தை அறிந்து கொள்ளலாம் என்றாலும், திபெத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த பிம்பங்கள் மட்டுமே போதும் என்று நினைத்து விடக்கூடாது.

திபெத் என்பது என்ன? தேசமா? மாகாணமா? அல்லது வெறுமனே ஒரு நிலப்பரப்பு மட்டும்தானா? எந்தவொரு நாட்டுக்கும் நேராத ஒரு பெரும் குழப்பத்தை சுமந்துகொண்டிருக்கிறது திபெத். பாலஸ்தீனமும் பிரச்னைக்குரிய ஒரு பிரதேசம்தான். ஆனால், அதற்கு ஐ.நா.வின் அங்கீகாரம் உண்டு. திபெத்துக்கு அதுவும் கிடையாது. அந்த வகையில், தன்னுடைய அடையாளம் என்ன என்றே தெரியாமல் இன்று வரை தவித்துக்கொண்டிருக்கிறது திபெத்.

இன்றைய திபெத்தின் வரலாறு மட்டுமல்ல பண்டைய திபெத்தின் வரலாறும்கூட ஒரு புதிர்தான். திபெத்தின் தன்வரலாறுதான் இப்படி, திபெத் பற்றி பிற நாடுகளின் பார்வையை ஆராயலாம் என்றால் அதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் என்று ஒவ்வொரு நாட்டிலும் திபெத்தின் வரலாறு ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு சீன வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் திபெத், சீனாவின் ஒரு பகுதிதான் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும். பிரச்னைக்குரிய பகுதி என்று கூட சீனா குறிப்பிடாது. திபெத் என்பது சீனாதான்! அன்று முதல் இன்று வரை சீனாவின் கொள்கையில் மாற்றமில்லை.

நவீன திபெத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் வேறு பார்வை கிடைக்கிறது.
திபெத் ஒரு தனி நாடுதான் என்றும், சீனா திபெத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் அழுத்தமாக அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், திபெத்தின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள யாருமில்லை.

இன்றுவரை திபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. சீனா திபெத்தில் நிகழ்த்தும் கலாசாரப் படுகொலைகள் குறித்தும் கலாசார சீரழிவுகள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சீனாவை மிக அழுத்தமான மொழியில் கண்டிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. எனில், திபெத் ஒரு தனி நாடுதான் என்று அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? இங்குதான் சிக்கல். சீன அரசுக்குக் கட்டுப்பட்ட ஒரு சுயாட்சிப் பிராந்தியமாகத்தான் திபெத் இருக்கமுடியும் என்பதே அமெரிக்காவின் நிலைபாடு.

கட்டுப்பட்ட சுதந்தரம் என்றால் என்ன? சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? அப்படி கட்டுப்படுத்த முடிந்தால் அதைச் சுதந்தரம் என்று சொல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்காவின் விடை மௌனம்.

கலாசார ரீதியாகவும் மத ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் திபெத்தோடு தோழமை பாராட்டி வரும் மற்றொரு நாடு இந்தியா. பண்டைய காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான உறவு நிலை இருந்திருக்கிறது. மாவோவின் கம்யூனிசக் கட்சியால் தனக்குப் பாதகம் நேரலாம் என்று அஞ்சிய தலாய் லாமா லாசாவை விட்டுத் தப்பிச் செல்ல நினைத்தபொழுது அவர் தேர்ந்தெடுத்த நாடு இந்தியா.

இத்தனைக்கும் தலாய் லாமாவை எப்படியாவது அமெரிக்காவுக்கு வரவழைத்துக்கொள்ள அத்தேசம் மிகவும் முயற்சி செய்தது. பல சலுகைகளைத் திபெத்துக்கு அள்ளி வழங்கியது. ஆனால் தலாய் லாமா நாடிச் சென்றது இந்தியாவைத்தான். இன்றளவும் இந்தியாவில் உள்ள தர்மசாலாதான் தலாய் லாமாவின் தலைநகரம்.

அப்படியானால் திபெத்தின் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவளிக்கிறதா? திபெத் ஒரு தனி நாடு என்று இந்தியா ஏற்றுக்கொள்கிறதா? கிடையாது.

திபெத் எனும் புதிருக்கு எங்குதான் விடைகளைத் தேடுவது?

நூல் குறித்த மேலதிக விவரங்கள் இங்கே.

0

திபெத் குறித்து நான் எழுதிய, அசுரப் பிடியில் அழகுக்கொடி கிழக்கில் 2006ல் வெளிவந்தது. நூலின் தலைப்பு, சீனாவின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதை குறிக்கிறதா என்று சிலர் கேட்டனர். கிடையாது, மதத்தின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதைத்தான் தலைப்பு குறிக்கிறது என்று நான் தெளிவுபடுததினேன்.

2 comments:

ஹரன்பிரசன்னா said...

//திபெத் குறித்து நான் எழுதிய, அசுரப் பிடியில் அழகுக்கொடி கிழக்கில் 2006ல் வெளிவந்தது. நூலின் தலைப்பு, சீனாவின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதை குறிக்கிறதா என்று சிலர் கேட்டனர். கிடையாது, மதத்தின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதைத்தான் தலைப்பு குறிக்கிறது என்று நான் தெளிவுபடுததினேன்.//

சிலேடை மாதிரி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் என நினைத்திருந்தேனே... அது தப்பா?

ஊடகன் said...

மிக நல்லப்பதிவு ......