October 12, 2009

ஜனநாயகமும் சித்திரவதைகளும்


ஆறு முதல் ஏழு மணி நேரங்கள் வரை துரத்தி அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். எட்டி உதைத்தும், இரும்பு தடி கொண்டு தாக்கியும் சித்திரவதை செய்திருக்கிறார்கள். கண், காது, கை, கால், தொடை என்று உடல் எங்கும் ரத்தம். படத்தில் உள்ள ஜோயல் எலியட் (Joel Elliott) ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர். டெல்லியில் உள்ள Caravan இதழில் மே மாதம் தொடங்கி பணிபுரிந்துவருபவர். தி நியூ யார்க் டைம்ஸ், தி கிறிஸ்டியன் சயின்ஸ் மானிடர், சான் ஃபிரான்ஸிஸ்கோ க்ரானிகல் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர்.

நடந்து செல்லும்போது, காவல்துறையினர் நடைபாதையில் வைத்து ஒருவரை அடித்து சித்திரவதை செய்வதைப் பார்த்து பதறி குரல் எழுப்பியிருக்கிறார். கோபம் கொண்ட காவல் அதிகாரிகள் இவரையும் இழுத்துப் போட்டு அடித்திருக்கிறார்கள். தான் அனுபவித்த சித்திரவதைகளை ஒரு ரிப்போர்ட்டாகப் பதிவு செய்திருக்கிறார் ஜோயல்.

அவுட்லுக்கில் வெளியாகியுள்ள அந்த ரிப்போர்ட்டை இங்கே படிக்கலாம். கார்டியனில் வெளியான மற்றொரு செய்தி இது. டெல்லி காவல்துறை முற்றிலும் நேர்மாறான விளக்கத்தை அளித்திருக்கிறது. ஜோயல் ஒரு காரை திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைத் தடுக்கும் முயற்சியை மட்டுமே நாங்கள் மேற்கொண்டோம். ஜோயல் இதை மறுத்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்க, இப்படியொரு காரணத்தைச் சொல்லிவிட்டால், யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானால் சித்திரவதை செய்யலாமா?

டெல்லி காவல்துறைக்கு எதிராக 2006ம் ஆண்டில் மட்டும் 5360 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள், கஸ்டடியில் பாலியல் பலாத்காரம், சித்திரவதை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும். (National Crime Records Bureau (NCRB) 2006 Annual Report). இந்த 5360 குற்றச்சாட்டுகளில், 579 வழக்குகளில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த விசாரணைகளின் முடிவுகள் என்ன என்பது வெளியிடப்படவில்லை. ஏப்ரல் 2006 முதல் மார்ச் 2007 வரை, டெல்லி சிறைச்சாலைகளில் 25 பேர் லாக்கப்பில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் பலாத்காரத்தின் தலைநகரமும் டெல்லிதான். இந்தியாவில் அதிக பாலியல் பலாத்கார வழக்குகள் டெல்லியில்தான் பதிவு செய்யப்படுகின்றன. அதிகாரபூர்வமான கணக்கின்படி, 581 பாலியல் வண்புணர்ச்சி வழக்குகள், 835 பாலியல் அத்துமீறல் வழக்குகள் 2007ல் மட்டும் பதிவாகியுள்ளன. பதிவாகாத வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் இருக்கக்கூடும்.

0

அதே அவுட்லுக் இதழில், ராமச்சந்திர குஹாவின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. The Axis Year என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை, 1984ம் ஆண்டு இந்தியாவைப் பற்றியது. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீக்கியக் கலவரம் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அலசுகிறார் குஹா. ஏகப்பட்ட வில்லன்களைக் கொண்ட 1984ன் கதாநாயகனாக ஜோதி பாசுவை முன்னிறுத்துகிறார் குஹா. காங்கிரஸ் காந்தியவாதீகளைக் காட்டிலும் அசலான காந்தியவாதி இவரே. கல்கத்தாவில் கிட்டத்தட்ட 50,000 சீக்கியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், டாக்ஸி ஓட்டுனர்கள். டெல்லியிலும் பஞ்சாபிலும் சீக்கியர்கள் துரத்தி விரட்டி படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரஸ் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஜோதிபாசு அரசாங்கம் தனது சீக்கியர்களை பாதுகாத்தது. அதே 1984ல் போபால் விஷவாயு கசிவால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

சீக்கியப் படுகொலைகளுக்கு இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. போபால் விஷவாயு சம்பவத்துக்கும் தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே, 1984ம் ஆண்டு சம்பவங்களின் தாக்கத்தை இன்றைய இந்தியாவிலும் காணமுடிகிறது என்கிறார் ராமச்சந்திர குஹா. எனவே, 1984ம் ஆண்டை The Axis Year என்று வருணிக்கிறார் குஹா. தடுப்பு நடவடிக்கைகள், எதிர் நடவடிக்கைகள் எடுக்கமுடியாமல் அரசாங்கம் செயலிழந்திருந்த ஆண்டு.

1984ம் ஆண்டில் மட்டுமா அரசாங்கம் செயலிழந்திருந்தது? ராமச்சந்திர குஹா எழுதிய India After Gandhi உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவைக் கொண்டாடும் ஒரு நூல். (இந்தியா : காந்திக்குப் பிறகு, பாகம் ஒன்று, தமிழில்). ஆம், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து்கொண்டிருக்கின்றன. ஏழைமை, வேலையின்மை, பஞ்சம், பசி ஆகியவை இன்னும் மறைந்துவிடவில்லை. காஷ்மீர், வடகிழக்கு பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. நக்சல் தீவிரவாதம் பெருகிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. குடிநீர் இல்லை. சாலைகள் இல்லை. குறைகள் ஆயிரம் உண்டிங்கே. ஆனால், இத்தனை குறைகள் இருந்தாலும், இத்தனை போதாமைகள் இருந்தாலும், இந்தியா இன்னமும் ஒரு தேசமாக, உடைபடாத, பிரிவுபடாத தேசமாக திகழ்கிறது. இது இந்தியாவின் வெற்றி. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. குஹா அப்படித்தான் பார்க்கிறார்.

ஜோயல் எலியட் தாக்கப்பட்ட சம்பவத்தை குஹாவின் பார்வையில் பார்க்கும்போது, சில விஷயங்கள் தெளிவாகின்றன. இத்தனைப் பெரிய ஜனநாயக தேசத்தில், ஒரு நபரோ, சில நபர்களோ தாக்கப்படுவது பெரிய விஷயமல்ல. கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு தேசத்தில், சில ஆயிரம் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவறில்லை. அவற்றை நாம் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமும் இல்லை.

4 comments:

selventhiran said...

கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு தேசத்தில், சில ஆயிரம் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவறில்லை. அவற்றை நாம் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமும் இல்லை. //

மருதன், சில ஆயிரம் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், தவிர்க்கப்பட வேண்டியது. உங்கள் கடைசி வரிகளை ஸ்கேலாக வைத்து குஜராத் என்கவுண்டர்களை அளந்தால் விபரீதமாக இருக்கும்.

மருதன் said...

ஆம், செல்வேந்திரன். தவிர்க்கப்படவேண்டும் என்பதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். ராமச்சந்திர குஹாவின் 'வாழ்க ஜனநாயகம்!' கோஷத்தை கிண்டல் செய்யவே அவ்வாறு குறிப்பிட்டேன். மெஜாரிட்டி நன்றாக இருந்தால் போதும் மைனாரிட்டியைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்பதுதான் இன்றைய ஜனநாயகப் பண்பு. குஜராத் போலி என்கவுண்டர் கண்டிக்கப்படவேண்டியது. பிரச்னையை பெரிய அளவில் வெளியில் கொண்டுவராமல், காங்கிரஸ் வாய் மூடி அமைதியாக இருப்பதை, கவனியுங்கள்.

அச்சம் தவிர் said...

இதெல்லாம் இந்திய மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது. அரச பயங்கரவாதம் பற்றியும், பெருகி வரும் மனித உரிமை மீறல் பற்றியும் எத்தனை மக்கள் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை..!

மருதன் said...

அச்சம் தவிர் :

//இதெல்லாம் இந்திய மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது. அரச பயங்கரவாதம் பற்றியும், பெருகி வரும் மனித உரிமை மீறல் பற்றியும் எத்தனை மக்கள் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை..!//

இருப்பதிலேயே அதிக ஆபத்தானது இதெல்லாம் சகஜம்தான் என்று நினைக்கும் போக்கு.