December 21, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி / நூல் அறிமுகம் 3 - அம்பேத்கர்

இன்றும்கூட அம்பேத்கரின் உருவச் சிலைகள் கூண்டுகளுக்குள்தான் அடைப்பட்டு கிடக்கின்றன. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றும்கூட அம்பேத்கரின் சிந்தனைகள் புரட்சிகரமானவை என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.

சமீப காலமாக, அம்பேத்கர் குறித்து அதிக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சர்ச்சைகளும் மோதல்களும்கூட பெருகிக்கொண்டிருக்கின்றன. அம்பேத்கரை கடவுளாக உருமாற்றும் முயற்சிகளும் அம்பேத்கரின் ஆளுமையைக் குறைத்து அல்லது திரித்து மதிப்பிடும் முயற்சிகளும் சமஅளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இரண்டுமே ஆபத்தானவை.

இந்து மதத்தையும் காங்கிரஸையும் அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது தெரிந்த அளவுக்கு பாகிஸ்தான் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்துமான அவர் அணுகுமுறையை பலர் அறிந்திருக்கவில்லை. அதே போல், அம்பேத்கரை மகர் போன்ற குறிப்பிட்ட சில சாதியினரின் தலைவராக குறுக்கி அடையாளம் காட்டவும் பலர் முயன்று வருகிறார்கள்.

பெரியாரை மட்டுமல்ல அம்பேத்கரையும் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரவணைத்துக்கொள்ள மறுத்தன. இத்தனைக்கும் பெரியார், அம்பேத்கர் இருவரும் பொதுவுடைமைச் சித்தாந்தம் பயின்றவர்கள்தாம். இருவரும் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். நிலச்சீர்திருத்தத்தை, நிலப் பங்கீட்டை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். அதே சமயம், அனைத்துக்கும் முன்னதாக அவர்கள் சாதி ஒழிப்பை முன்வைத்தார்கள். முதலில் இங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றார்கள்.

இந்தியாவின் பிரச்னைகள், ரஷ்யா, சீனா எதிர்கொண்ட பிரச்னைகள் போன்றவையல்ல. இங்கு போல் வேறெங்கும் சாதி இத்தனை ஆதிக்கம் செலுத்தியதில்லை. பல நூற்றாண்டுகளாக இங்கே ஒரு சமூகம், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டுக்கிடக்கிறது. இவர்களை விடுவிக்காமல், தேசத்தை விடுவிக்கமுடியாது. இவர்களுக்கு சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கும் சமயத்தில், இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைப்பதில் பலனில்லை. அதற்காகப் போராடுவதிலும் பயனில்லை.

இருவருடைய அணுகுமுறையும் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷாருக்கு நெருக்கமானவர்கள், துரோகிகள் என்று இருவருமே குற்றம்சாட்டப்பட்டனர். இந்து மதத்தை இருவரும் நிராகரித்தனர். அம்பேத்கர் சமூக, அரசியல் ஆய்வு நோக்கில் வலுவான வாதங்களுடன் இந்து மதத்தை நிராகரித்தார். பெரியாரின் கூர்மையான அதே சமயம் எளிமையான பகுத்தறிவு வாதங்கள் இந்து மதத்தின் தண்டுவடத்தை உடைத்து நொறுக்கின. அம்பேத்கரைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் எளிய, பாமர மக்களை பெரியார் சென்றடைந்தார். பெரியார் இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை முன்வைத்தார். அம்பேத்கர், பௌத்தத்தின் தர்க்கப்பூர்வமான சிந்தனை திறனை, பகுத்தறிவை, கடவுள் மறுப்புக் கொள்கைகளை.

அம்பேத்கர் ஒரு சிந்தனாவாதியாக, அறிவு தளத்தில் இயங்கியவராக அறியப்படுகிறார். பெரியார், உணர்ச்சிபூர்வமானவராக. பெரியாரை எதிர்த்த அளவுக்கு அம்பேத்கரை மதவாதிகள் எதிர்க்காததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், இது மேலோட்டமான மதிப்பீடு மட்டுமே. பெரியாரின் சிந்தனகைளும் அம்பேத்கரின் சிந்தனைகளும் பல அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் இருவரும் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு விதமாகச் செயலாற்றினார்கள்.

பெரியாரை ஓர் இந்துவாக மாற்றியமைக்க ஒருவராலும் கனவு காணமுடியாது. ஆனால், அம்பேத்கரை அவ்வாறு மாற்றியமைக்க முடிகிறது. (தலித் முரசு இதழில் அழகிய பெரியவன் இது குறித்து சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்). காரணம், அம்பேத்கர் தழுவிய பௌத்தத்தை பலரும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தான் காண்கிறார்கள்.

பெரியாரின் முழுமையான படைப்புகள் அச்சில் இல்லை. ஆனால், அம்பேத்கரின் படைப்புகள் முழுமையாக அச்சில் கிடைக்கின்றன. இணையத்திலும் கிடைக்கின்றன.

ஆர். முத்துக்குமார் எழுதிய பெரியாரின் வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்ற ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது. அம்பேத்கரின் சிந்தனைகள் வாயிலாக அவர் வாழ்க்கையை, அவர் வாழ்ந்த காலகட்டத்தை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

3 comments:

Anonymous said...

'பெரியாரை மட்டுமல்ல அம்பேத்கரையும் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரவணைத்துக்கொள்ள மறுத்தன'

Communists and Periyar worked together for some time but fell apart and never came together again.The fault was on both sides.

முகமது பாருக் said...

//இன்றும்கூட அம்பேத்கரின் உருவச் சிலைகள் கூண்டுகளுக்குள்தான் அடைப்பட்டு கிடக்கின்றன. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றும்கூட அம்பேத்கரின் சிந்தனைகள் புரட்சிகரமானவை என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.//

எதார்த்தமான உண்மைங்க.. கண்டிப்பாக இதை மாற்றியே ஆகவேண்டும்..

Anonymous said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...... http://wp.me/KkRf