January 27, 2010

மகிந்தவின் ராணுவ அரசியல்

1) 2010 தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷே அடைந்த வெற்றி, சரத் ஃபொன்சேகா அடைந்த தோல்வி இரண்டும் பரவலாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம் இது.

பதிவான வாக்குகளில் ராஜபக்ஷே 57.8 சதவீத வாக்குகளையும் (60,15,934) சரத் ஃபொன்சேகா 40 சதவீத வாக்குகளையும் (41,73,185) பெற்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வன்னியில், நாற்பது சதவீதம். இந்த இரு பகுதிகளிலும் சரத் ஃபொன்சேகா மகிந்தவைவிட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார். மகிந்த சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இப்போது 1 மில்லியன் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

தேர்தல் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பே கடுமையான செய்தி தணிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் ஆணையரை மிரட்டி, அதட்டி, வீட்டுக்காவலில் வைத்து தேர்தல் முடிவை வெளியிடச் செய்திருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற மகிந்த, பெரும்பான்மை சிங்களர்களுக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கும் மத்தியில் நல்லுறவு ஏற்பட பாடுபடுவேன் என்று உறுதி கூறியிருக்கிறார் மகிந்த. தோல்வி அடைந்த சரத் ஃபொன்சேகாவின் அறிக்கை இது. இலங்கையில் சட்டம், ஒழுங்கு கிடையாது. நடைபெற்ற தேர்தலில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. என்னால் இலங்கையில் உயிரச்சம் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கமுடியாது. எனவே, நான் வெளியேறுகிறேன்.

ஒருவேளை, மகிந்த தோற்றிருந்தால், தற்போது சரத் வெளியிட்டிருக்கும் அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கக்கூடும். சரத் வென்றிருந்தால், மகிந்த அளித்த அதே உறுதிமொழியை அவரும் அளித்திருப்பார்.

இந்த தேர்தல் மூலமாக திட்டவட்டமாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியது ஒன்றைத்தான். அரசியலில் ராணுவமும், ராணுவத்தில் அரசியலும் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், இதை மகிந்தவின் வெற்றியாகவோ சரத்தின் தோல்வியாகவோ கொள்ளமுடியாது. ராணுவக் கொள்கையின் வெற்றியாக மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்.

2) ராணுவத்தின் அரசியல்

தேர்தலுக்குச் சற்று முன்புவரையிலும்கூட சரத் ஃபொன்சேகா ஒரு ஹீரோவாகத்தான் அங்கே இருந்திருக்கிறார். நிச்சயம் மகிந்தவை தோற்கடித்துவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ராணுவத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு அலாதியானது. ராணுவ வீரர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் சரத் ஆதரவாளர்கள். அதிகாரிகளில் 40 சதவீதம் பேர். சந்தேகமில்லாமல், மகிந்தவையும் அவர்தம் சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேவையும் அதிர்ச்சிக்கொள்ளச் செய்த பலம் இது.

மகிந்தவின் விருப்பத்தையும் மீறி சரத் ஃபொன்சேகாவை ராணுவ ஜெனரலாக நியமித்தவர் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷே. கோத்தபயவும் சரத்தும் ஒன்றாக ராணுவத்தில் பணியாற்றியவர்கள். பல ஆண்டுகால தொடர்பு கொண்டவர்கள். சரத் போன்ற மூர்க்கமான தற்பெருமைக்காரரை ராணுவப் பணியில் வைத்திருப்பது எத்தனை விபரீதமானது என்பது கோத்தபயவுக்கும் தெரியும். என்றாலும், புலிகளை அழித்தொழிக்க சரத் தேவைப்பட்டார். மகிந்தவும் வேறு வழியின்றி பொறுத்துக்கொள்ளவேண்டிவந்தது.

பணியில் அமர்ந்தபிறகு சரத் கொடுத்த தலைவலிகளுக்கு எல்லையே இல்லை. நான், எனது, என்னுடைய என்று நொடிக்கொரு தரம் பேசினார். பத்தரிகையாளர்களைத் தன்னிச்சையாகச் சந்தித்தார். மகிந்தவின் அனுமதி பெறாமல் ராணுவம் தொடங்கி அரசியல் விவாகரங்கள் வரை விவாதித்தார். நடந்து முடிந்த போரில் கிடைத்த வெற்றி என்னுடையதே என்று பெருமிதத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னார். பிரபாகரனின் 'மரணத்தை' அறிவிக்கும் அதிமுக்கிய வாய்ப்பை மகிந்தவுக்குத் தராமல் தானே பயன்படுத்திக்கொண்டார்.

நான் நினைத்தால் பையன்களை சிலரை அனுப்பி கொழும்புவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவேன் என்று ஒருமுறை எகத்தாளமாக அவர் அறிவித்தபோது, மகிந்தவும் கோத்தபயவும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இனி சரத் நமக்குத் தேவையில்லை.

கிட்டத்தட்ட அதே முடிவுக்குத்தான் சரத் ஃபொன்சேகாவும் வந்து சேர்ந்திருந்தார். என் சாதனையை, மகிந்த, கோத்தபய போன்ற அரசியல்வாதிகள் பயன்படுத்தி அறுவடை செய்துகொள்ள நான் ஏன் அனுமதிக்கவேண்டும்? அவர்களுக்குத்தான் என் உதவி தேவை. எனக்கு அவர்கள் தேவையில்லையே. ஆனானப்பட்ட புலிகளையே அழிக்க முடிந்த என்னால், இவர்களை தோற்கடிக்க முடியதா?

நிரந்தர விரிசல் அங்கே ஆரம்பமானது. ஒரு போர் முடிவடைந்து இன்னொன்று தொடங்கியது.

3) அரசியலின் ராணுவம்

பலரும் நினைப்பது போல், அரசியலுக்குள் ராணுவம் நுழைந்ததற்கு காரணம் சரத் ஃபொன்சேகா கிடையாது. தமிழர்கள் மீதான போரை மகிந்த அரசு கட்டவிழ்த்துவிட்ட அந்தக் கணமே ராணுவம் அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. அந்த வகையில், சரத்தைவிட மகிந்த திறன் வாய்ந்த சூழ்ச்சிக்காரர். எப்போது அரசியல் தேவை, எப்போது ராணுவம் தேவை என்று அவருக்குத் தெரியும். இந்த இரண்டும் ஒன்றிணையும் புள்ளி எது என்பதையும் அவர் தெளிவாகவே அறிந்திருக்கிறார்.

தேவைப்படும் வரை சரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பணி முடிந்ததும், தூக்கியெறிந்துவிட்டார். பணியில் இருந்தபோது, தேவைப்படும் சுதந்தரத்தை சரத்துக்கு வழங்கிவிட்டு பிறகு ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டுவிட்டார். இலங்கை சிங்களர்களுடைய பூமி. சிறுபான்மையினருக்கு இங்கே இடமில்லை என்று ராணுவச் சீருடை அணிந்து சரத் ஃபொன்சேகா அகம்பாவத்துடன் மைக்கில் கத்தியபோது, மகிந்த கைக்கட்டி அமர்ந்திருந்தார். நியாயப்படி பார்த்தால், ஒரு ஜனநாயக (என்று சொல்லிக்கொள்ளும்) நாட்டில் முக்கியப் பதவில் இருக்கும் ஒரு அதிகாரி இப்படிப்பட்ட அறிக்கைகளை விடுவது தண்டணைக்குரிய குற்றமாகும். கண்டுகொள்ளவில்லை மகிந்த. அதே போல், தனிப்பட்ட முறையில் சரத் மீது எழுந்த மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் அவர் அசட்டை செய்தார்.

நான்தான் நிஜ ஹீரோ என்று சரத் கொக்கரித்தபோதெல்லாம்கூட, மகிந்த அமைதியாகத்தான் இருந்தார். போர் முடிந்து, திரை விழுந்தபிறகு நிலைமை சட்டென்று மாறிப்போனது. சரத்தின் வேடம் வலுக்கட்டாயமாகக் கலைக்கப்பட்டது.

நான் உன்னைக் களத்தில் சந்திக்கிறேன் என்று சரத் வெகுண்டு சீறியபோதும், மகிந்த அவர் மீது திரும்பி பாயவில்லை. தன் நண்பர்களிடம்தான் திரும்பினார். இனி நான் ராணுவ ஹீரோ அல்ல அரசியல் ஹீரோ என்று சரத் மக்களிடம் சென்றபோது, திரைக்குப் பின்னால் பதுங்கி தன் வேலைகளை ஆரம்பித்தார் மகிந்த. வாக்கெடுப்பு தனக்குச் சாதகமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன.

சரத்துக்குப் பெருமளவு ராணுவ ஆதரவு உண்டு என்பதைத் தெரிந்துவைத்திருந்த மகிந்து, கடிவாளத்தை இழுத்துப் பிடித்தார். விடுப்பு எடுத்துக்கொண்டு 'மகிந்த சாருக்காகப்' பிரசாரம் செய்துகொண்டிருந்த ராணுவ வீரர்களுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவு போய் சேர்ந்தது. தேர்தல் முடிவடையும்வரை ராணுவத்தினருக்கு விடுமுறைகள் கிடையாது.

தேர்தல் நாடகம் நடந்துமுடிந்து, கணக்கெடுப்பு முடிவடையும் தருவாயில் நிஜ ஹீரோ நீயல்ல நானே என்று முன்வந்து நின்று இருகைகூப்பி கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார் மகிந்த.

(தொடரும்)

3 comments:

Anonymous said...

Good Analysis. No doubt Rajabakshe is a master evil mind

சுமிர் said...

இது மகிந்தவின் வெற்றி மட்டுமல்ல. சிங்கள இனவெறியின் வெற்றிக்கூட

Venkatesan said...

What are the implications for Tamilians over there?