கே. குணசேகரன் எழுதிய இருளர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பழங்குடி இனங்கள் குறித்த விரிவான மற்றொரு புத்தகத்துக்காக தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.
இருவாட்சி இலக்கிய இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் சிறப்பு வெளியீட்டில் குணசேகரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தலைப்பு, சென்னம் பட்டணம். அதிலிருந்து ஒரு பகுதி கீழே.
0
'சென்னம் சிறுவகைமீன். இதை ருசித்தவர்கள், ருசிப்பவர்கள் இப்போதும் சென்னம்கண்ணி என்று அழைப்பதைச் சுருக்கி சென்னாகுன்னி என்று அழைப்பார்கள். பட்டணத்துக்காரர்கள் பலருக்கும் இது தெரியும். ஆழம் குறைந்த கடல் பகுதியில் இது அதிகம் கிடைக்கும். அதிகமாக இது கிடைத்தாலும், அக்காலத்தில் இன்றுபோல் இரும்பிலான படகு, கப்பல் இல்லை. எல்லாவற்றையும் மரத்தால்தான் செய்தார்கள். மரம் என்னதாக் உறுதியாக இருந்தாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல இந்த சென்னம் கன்னிகள் திரள் திரளாகப் படையெடுத்து மரக்கலன்களை அரித்து துவம்சம் செய்துவிடும். இதனால் இந்தக் கடல் பக்கம் பெருமளவு கப்பல்கள் ஒதுங்க அச்சப்பட்டன. அதனால்தான் தமிழ்நாட்டுக் கடற்கரை நெடுகிலும் துறைமுகம் ஏற்பட்டு இயங்கினாலும், சென்னைப் பக்கம் அந்நாட்களில் துறைமுகம் வரவில்லை. மைலாப்பூரிலும், பழவேற்காடிலும் எண்ணூரிலும் துறைமுகம் இருந்தது. ஆனால் இங்கில்லை. காரணம் சென்னம் மீனுக்குப் பயந்துதான். ஆனாலும், சில கட்டுமர மீனவர்கள் மட்டும் தங்கள் தொழிலை இங்குதான் செய்தார்கள்.
'சென்னம் கிடைத்த இடம் சென்ன பட்டணமானதே தவிர வேறெந்த காரணமும் இல்லை. இருப்பதாக சான்றும் இல்லை.'
0
எஸ். முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு, நரசய்யாவின் மதராசப்பட்டினம் இரண்டும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்தையாவின் சென்னை, பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, சென்னை வெள்ளைக்கார சீமான்களும் சீமாட்டிகளும் நிரம்பிய ஒரு நகரமாக, அவர்கள் உருவாக்கிய ஒரு நகரமாக, அவர்களுக்கான ஒரு நகரமாகவே காட்சியளிக்கிறது. சென்னம் மீன் குறித்த குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.
தன் வாதத்துக்கு வலு சேர்க்க இலக்கியங்களில் சென்னம் மீன் அகப்படுகிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறார் குணசேகரன்.
3 comments:
சென்னாங்குண்ணி மீன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் விரிவான பொருளை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அது சரி, சென்னம் மீன் கிடைத்ததால் இது சென்னைப் பட்டணமா? அப்படியானால் சென்னப்ப நாயக்கர் என்னவானார்?
சென்னை!
பெயர் காரனம் புதிக தகவல்!
இது ஒரு புது தகவல். சென்னவராயர் அல்லது அப்படி பெயர் கொண்ட ஒருவரிடமிருந்து பிரிட்டிஷ்காரர்கள் செயிண்ட் ஜார்ஜ் பகுதியை வாங்கினார்கள் என்பதாகவே இவ்வளவு காலம் நினைத்திருந்தேன்.
Post a Comment