February 19, 2010

இந்தியா : நான்கு புத்தகங்கள்

புதிய புத்தகம் பேசுது பிப்ரவரி 2010 இதழில், தென்னிந்திய கிராம தெய்வங்கள் நூல் குறித்து பக்தவத்சல பாரதி எழுதியுள்ள விரிவான அறிமுகக் கட்டுரை முக்கியமானது. ஹென்றி ஒயிட்ஹெட் எழுதிய The Village Gods of South India என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்த்திருப்பவர் எஸ். கண்ணன். வெளியீடு, சந்தியா பதிப்பகம். பக்கம் 200. விலை, ரூ.100. இந்நூலை அறிமுகம் செய்து எழுதும் பக்தவத்சல பாரதி, காலனிய இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கிய நூல்களை பட்டியலிட்டுள்ளார்.

'கிறித்துவத்தை அறிமுகம் செய்யவும், அதனைப் பரப்பவும் முற்பட்ட ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் இங்குள்ள சமயங்களை அறிந்துகொள்வதன் தேவையை உணர்ந்தார்கள். அத்தகைய முயற்சியால் ஏற்பட்ட எண்ணற்ற பதிவுகளில் நான்கு பதிவுகள் முக்கியமானவையாகும்.'

அந்த நான்கு பதிவுகள் பின்வருமாறு.

1) பார்த்தலோமஸ் சீகன்பால்க் (Bartholamaus Ziegenbalg)

இந்தியாவுக்கு வந்த முதல் புராட்டஸ்டண்ட் மிஷினரி. டச்சுக் காலனி சார்பாக வந்த ஜெர்மானியப் பாதிரியார். 1706ம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்தார். இவரது முக்கிய நூல், Genealogy of the South Indian Deities. ஆங்கில வடிவம் முழுமையாக இங்கே கிடைக்கிறது.

2) அபே.ஜெ.எ. துபுவா (J.A. Dubois)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பிரெஞ்சுப் புரட்சியின்போது இந்தியாவுக்குத் தப்பி வந்தவர். இந்துக்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்கள் நட்பைப் பெற்று, அவர்களது மதநூல்களை கவனமாகப் படித்து உள்வாங்கிக்கொண்டவர். பிரெஞ்சு மொழியில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது இவரது முக்கியப் படைப்பான, A description of the Character, Manners and Customs of the People of India; and of their Institutions, Religions and Civil). இந்திய சாதி அமைப்புகள் குறித்து தன் நூலில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

ஆன்லைனில் முழுமையான புத்தகம் வாசிக்கக் கிடைக்கிறது.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பை அலைகள் வெளியிட்டுள்ளது.

3) ஹென்றி ஒயிட்ஹெட் (Henry Whitehead)

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த பாதிரியார். தென்னிந்தியா முழுவதும் சுற்றிவந்து இறை ஊழியம் செய்தவர். மக்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் மீது ஆர்வம் கொண்டு மேலதிக தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார். தங்கியிருந்த 40 ஆண்டுகளில், தான் சேகரித்தவற்றை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். The Village Gods of South India என்னும் பெயரில் வெளிவந்த அந்த நூலை இங்கே முழுவதுமாக வாசிக்கலாம்.

4) வில்பெர் தியடோர் எல்மோர் (Wilber Theodore Elmore)

ஐரோப்பியப் பாதிரியார். 1915ல் வெளிவந்த இவரது Dravidian Gods in Modern Hinduism திராவிடக் கடவுள்கள் குறித்த முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது.

இந்தப் புத்தகங்களை வாசிப்பது இரு வகைகளில் பயனளிக்கக்கூடியது என்கிறார் பக்தவத்சல பாரதி. ஒன்று, காலனிய இந்தியாவை, அதன் வரலாறை, கலாசாரத்தை, சாதிய முறையை, மத நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ளலாம். இரண்டு, இவற்றை எழுதிய, எழுத வைத்து வாங்கிய காலனியாதிக்கவாதிகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

6 comments:

ரவி said...

எட்கர் தர்ஸ்டனின் நூலையும் இதில் சேர்த்திருக்கலாம். முக்கியமான படைப்பு

Sudhir said...

useful books. useful links

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி...

RK said...

Such books have to be brought out in Tamil to reach all readers. Thanks

நிதின் said...

கிழக்கில் இந்த புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு வருமா?

மருதன் said...

நிதின் : ஆர்வம் உள்ளவர்கள் மொழிபெயர்க்க முன்வரும்போது, நிச்சயம் வெளிவரும். விருப்பம் உள்ளவர்கள், தொடர்பு கொள்ளலாம்.