
ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸனின் புகழ்பெற்ற படைப்பான டாக்டர் ஜெகைல் அண்ட் மிஸ்டர் ஹைட் (Dr. Jekyll and Mr. Hyde) 1886-ம் ஆண்டு வெளிவந்தபோது அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை இந்தப் புத்தகத்தின் மீதான ஈர்ப்பு தீரவில்லை. சாந்தமான, கண்ணியமான மருத்துவராக வரும் டாக்டர் ஜெகைலிடம், குரூரமான குற்றவாளியான ஒரு ஹைட் ஒளிந்திருப்பார். ஜெகைலால் சாதிக்க முடியாததை ஹைட் சாதிப்பார். அதாவது, நல்ல ஜெகைல் செய்ய விரும்பிய தீய செயல்களை, ஹைட் சாதித்துக்கொடுப்பார். ஜெகைல், ஹைட் இருவரும் ஒருவரே என்பது கதையின் இறுதியில்தான் தெரியவரும்.
யங் இந்தியாவில் மே 8, 1924-ம் ஆண்டு காந்தி எழுதுகிறார்.
'இந்திய ஊடகங்களில் என்னைப் பற்றி வெளிவரும் செய்திகளை -- அவை பாராட்டாக இருந்தாலும் சரி, தாக்குதலாக இருந்தாலும் சரி -- படிக்கக்கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றி போதுமான அளவுக்கு நான் பெருமிதமே கொள்கிறேன் என்பதால் வெளியில் இருந்து வரும் பாராட்டு எனக்குத் தேவையில்லை. தாக்குதல்களை நான் உதாசீனம் செய்வதற்குக் காரணம், எனக்குள் ஒளிந்திருக்கும் ஹைட் வெளிக்கிளம்பி நல்லவிதமான ஜெகைலைக் கைப்பற்றி, என் அகிம்சை கொள்கையின் மீது வன்முறையை பிரயோகித்துவிடக்கூடாது என்பதால்தான்.'
டாக்டர் ஜெகைலாக நமக்கு அறிமுகமாகியிருக்கும் காந்தி மிகவும் பிரபலமானவர். பிரிட்டனுடன் அகிம்சை வழியில் போராடி நம் நாட்டுக்குச் சுதந்தரம் பெற்று தந்தவர். அந்த வகையில், நம் தேசத்தின் தந்தை. சத்தியத்தின் திருவடிவம். அகிம்சாமூர்த்தி. மார்டின் லூதர் கிங் முதல் நெல்சன் மண்டேலா வரை உலகத் தலைவர்கள் பலருக்கும் வழிகாட்டி. இந்திய தேசத்தின் மனித முகமாக, பெருமிதமான அடையாளமாக முன்னிறுத்தப்படுபவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மிக நேர்மையான மனிதராக காந்தி அறியப்பட்டிருக்கிறார். தவறுகள் இழைக்காத, அப்படியே இழைத்தாலும் அவற்றை மனம் திறந்து ஒப்புக்கொள்ளும் துணிச்சல் கொண்டவராக உயர்த்திப் பிடிக்கப்படுகிறார். எனவேதான், காந்தி குறித்த என் முந்தைய பதிவுக்கு எதிர்ப்புகளே அதிகம் வந்து சேர்ந்தன.
ஒப்புக்கொள்கிறேன். காந்தி நேர்மையானவர். தனக்குள் ஒரு ஹைட் இருப்பதை காந்தி மூடி மறைக்கவில்லை. தனது அகிம்சை தத்துவத்தை உள்ளிருக்கும் ஹைட் பலாத்காரத்தால் முறியடித்துவிடுவானோ என்னும் மெய்யான பயத்தை கலக்கமின்றி காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த போராட்டம் இது. இந்தப் போராட்டத்தில் ஜெகைல் பெற்ற வெற்றிகள் தெரிந்த அளவுக்கு, ஹைட் அடைந்த வெற்றிகள் அதிகம் தெரியாமல் போய்விட்டது.
எனவே, இந்தப் புதிய பகுதி.
காந்தியை அருகில் சென்று கவனித்து அவரை ஊன்றி வாசிக்கும் ஒரு சந்தர்பமாக இந்தத் தொடரை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகிறேன். இது காந்தியின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதால், இதில் இடம்பெறப்போகும் நிகழ்ச்சிகளும் அதையொட்டிய விவாதங்களும் வரிசைக்கிரமமாக அமையப்போவதில்லை. வேறு பல எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் இதனை எழுதப்போவதால், பத்திரிகை தொடர் போல் கறாராக நேரம் நிர்ணயித்துக்கொள்ளாமல், அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் (அதே சமயம், பெரும் இடைவெளி இல்லாமல்) எழுத முயற்சி செய்கிறேன்.
6 comments:
//ஹைட் அடைந்த வெற்றிகள் அதிகம் தெரியாமல் போய்விட்டது.//
சத்தியமான வரிகள்.
வெளியே தெரியாமல் போனவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுங்கள்.
வாழ்த்துககள் மருதன். ஆரம்பியுங்கள். ஆர்வமாக இருக்கிறேன்
These days it has become fashion to write ill of Gandhiji. What more to say?
காந்தியின் ஹைடை நீங்கள் தேடப் போய் உங்களின் ஜெகைலைக் கண்டறிய வாழ்த்துகள். சில சமயம் ‘குரங்கைப் பிடிக்கப் போய் பிள்ளையாராய் ஆன கதை’ என்றெல்லாம் பழமொழிகள் மாறிவிடுகின்றன தோழர்.
ஏதோ கடலைமிட்டாய் வாங்கி கொடுத்ததை போல காந்தி சுதந்தரம் வாங்கி கொடுத்தார் என்று இன்னமும் சொல்லி கொண்டு திரிகிறோம். காந்தியை சரியாக புரிந்து கொண்டால் இப்படி சொல்ல மாட்டோம்
best wishes for your endeavors
Post a Comment