நித்யானந்தா ஒரு ஏமாற்றுக்காரர் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்காக வெகு காலம் முன்பே உருவாக்கப்பட்ட வலைத்தளம் இது. முழுக்க முழுக்க கிண்டலான தொனியில் நித்யானந்தாவின் போலித்தனத்தை ஒவ்வொன்றாக தேடிப்பிடித்து இவர்கள் அம்பலப்படுத்திவருகிறார்கள். இதை வாசிக்கும்போது, நித்யானந்தரின் போலித்தனம் அவரது பிறப்பில் இருந்தே தொடங்குவதை கண்டுகொள்ளலாம்.
ஒரே ஒரு உதாரணம். குடியாத்தத்தில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றிருப்பதாக நித்யானந்தா சொல்லி வந்திருக்கிறார். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், கல்லூரி நிர்வாகம் தனது வலைத்தளத்தில் நித்யானந்தாவின் புகைப்படத்தை பிரசுரித்து அவரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது. 'சுவாமிஜி நித்யானந்தா எங்கள் முன்னாள் மாணவர் என்று சொல்லிக்கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்கள் மதிய உணவு திட்டத்துக்காக அவர் ஒரு லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் கல்லூரிக்கு தாராளமான நன்கொடைகள் அளித்து வந்துள்ளார். 1990 முதல் 1993 வரை எங்கள் கல்லூரியில் அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார்.'
ஆதாரப் படம் கீழே.
இங்கேதான் பிரச்னை வந்தது. ஜனவரி 1, 2000 புத்தாண்டு அன்று கடவுள் தனக்கு சித்தி அளித்திருப்பதாக (அன்று அரசாங்க விடுமுறை என்பதால் கடவுள் அன்று ஃப்ரீயாக இருந்திருக்கவேண்டும்) நித்யானந்தா ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகள் பல்வேறு இடங்களில் சுற்றியலைந்த பிறகே இந்த பாக்கியம் அவருக்குக் கைகூடியிருக்கிறது. பிரச்னை என்னவென்றால், நித்யானந்தா பாலிடெக்னிக் படிப்பை முடித்தது 1993ம் ஆண்டு. சித்தி பெற்றது 2000ல். இடையில் இருந்தது ஆறரை ஆண்டுகளே என்னும்போது எப்படி அவரால் ஒன்பது ஆண்டுகள் சுற்றியலையமுடிந்தது?
நித்யானந்தாவின் பிறந்த தேதி ஜனவரி 1, 1978 (அவர் வாழ்வில் எல்லா அற்புதங்களும் ஜனவரி 1ம் தேதியே அரங்கேறியிருக்கின்றன). பதினேழு வயதில் திருவண்ணாமலையில் இருந்த தன் பெற்றோர் வீட்டை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக நித்யானந்தா குறி்ப்பிட்டிருக்கிறார். குடியாத்தம் கல்லூரியில் அவர் இணைந்த 1990-ல் இருந்து அவர் பிறந்த 1978-ஐ கழித்தால் கிடைப்பது 12. என்றால், 12 வயதில் பாலிடெக்னிக்கில் இணைந்து 15 வயதில் என்ஜினியராகிவி்ட்டார் என்று அர்த்தம்.
இந்த விஷயங்கள் வலைத்தளத்தில் அம்பலப்படுத்தி, சுவாமிஜி அருள்கூர்ந்து உங்கள் பிறப்பு, படிப்பு, பட்டம் பெற்ற ஆண்டுகள் போன்றவற்றை அளியுங்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இன்றைய தேதி வரை ஆசிரமத்தில் இருந்து இந்தக் கேள்விகளுக்கு பதில் வெளிவரவில்லை. எனவே, இனியும் வரப்போவதில்லை. வெளிவந்திருப்பது வீடியோ மட்டுமே.0
ஒரு புது சாமியார் உருவாகும்போது அது பரபரப்புச் செய்தியாகிறது. அதே சாமியார் வீழ்த்தப்படும்போது, அதுவும் பரபரப்புச் செய்தியாகிறது. ஒரு சாமியாரின் புகழ் உச்சத்தில் இருக்கும்போது, அவனோடு சேர்ந்து அவனை உருவாக்கியவர்களும் லாபம் சம்பாதிக்கிறார்கள். புதிய கதைகள், புதிய அற்புதங்கள் ஜோடிக்கப்படுகின்றன. ஊர், உலகம் முழுவதும் அவன் புகழ் பரப்பப்படுகிறது. அதே சாமியார் சிக்கலில் மாட்டு்ம்போது, அவனை உருவாக்கியவர்கள் சட்டென்று அவனிடம் இருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டுவிடுகிறார்கள்.
உண்மை வெளிவராதவரை அனைவரும் நல்ல சாமியார்கள். நல்ல லாபகரமான விற்பனைச் சரக்குகள். சிக்கல் வந்துவிட்டால், அவன் யாரோ, நான் யாரோ. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், சரக்கு போலி என்பது தெரிந்தபிறகும், அதை வைத்து விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் திறன் இந்த வியாபாரிகளுக்கு உண்டு என்பதுதான். உண்மை என்று சொல்லி வியாபாரம் செய்தவர்கள், இது போலி என்றும் சொல்லி வியாபாரத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும், லாபகரமாக!
நுகர்வோரைத்தான் குற்றம் சொல்லவேண்டும். நல்ல சரக்கு, போலி சரக்கு, இரண்டையும் தயக்கமின்றி, சங்கடமின்றி விலைகொடுத்து வரிசையில் நின்று வாங்கிச்செல்ல கூட்டம் இருக்கிறது. நல்ல சரக்கு என்று இத்தனை காலம் சொல்லி வந்தாயே, அதையே இன்று போலி என்கிறாயே, உன்னை நான் எப்படி இனி நம்புவது என்று ஒருவரும் சீறுவதில்லை. அப்படியா, சரி வேறு சரக்கு இருந்தால் சொல் என்று புன்னகைத்துக்கொள்கிறோம். ஆத்திரத்துடன் ஆசிரமத்தை அடித்து உடைக்கும் ஒரு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலானவர்களின் மனநிலை இதுவே.
பெரும்பாலானவர்களி்ன் மனநிலையை அறிந்துவைத்திருக்கும் விற்பனையாளர்கள் இந்த சாமியாரிடம் இருந்து சுரண்டவேண்டிய அளவுக்குச் சுரண்டிவிட்டு, மிச்சத்தை தூக்கிவீசிவிட்டு, புதிய சாமியாரை உருவாக்க கிளம்பிவிடுவார்கள். உருவானபிறகு மீண்டும் அது செய்தியாகும். எக்ஸ்க்யூஸ்மி ஒரு புது புராடக்ட் வந்திருக்கு, பார்க்கறீங்களா என்று டை கட்டிய விற்பனை பிரதிநிதிகள் நம்மை புன்னகையுடன் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அம்பலப்படுத்தப்படும் சாமியார்களை உடனடியாக நிராகரிக்கமுடிந்தவர்களால், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் விற்பனையாளர்களை பரிகசிக்கமுடியாமல் போவது ஏன் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
0
மேலும் இரு பிரிவினர் இருக்கிறார்கள். சாமியார்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று சொல்லாதீர்கள், இந்த சாமியார் அயோக்கியன் என்று வேண்டுமானால் சொல்லலாம், நிஜ ஆன்மிகவாதிகள், அசலான சித்த புருஷர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் நம்மை கைவிடமாட்டார்கள். போலிகளை நம்பி ஏமாறவேண்டாம்.
இரண்டாவது பிரிவினர், ஆன்மிகத்தை கட்டித்தழுவிக்கொண்டு, சாமியார்களை மட்டும் நிராகரிப்பார்கள். இந்த ஆள் மாட்டுவான்னு எனக்கு முன்னாலேயே தெரியும், அவன் முகத்தைப் பார்த்தாலே ஃபிராடுன்னு எழுதி வச்சிருக்கே என்று சொல்லிக்கொள்வார்கள். இவர்களைப் பொருத்தவரை கடவுள் நிஜம். ஆன்மிகம் நிஜம். இந்து மதம் நிஜம். மேலுலகம், கீழுலகம் நிஜம். கடவுளின் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். இடைத்தரகர்கள் தேவையில்லை.
முதல் பிரிவினரை ஏற்றுக்கொண்டால், தொடர்ந்து நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்போம். இந்த சாமியார் போனால் இன்னொருவர் வருவார். அவர் போனால், மற்றொருவர். இரண்டாவது பிரிவினரை ஏற்றுக்கொண்டால் தாற்காலிகமாக சாமியார்களிடம் இரு்ந்து தப்பலாம். ஆனால், மதத்தின் கோரப்பிடியில் இருந்து மீளமுடியாது.
சில, பல சீர்திருத்தங்கள் செய்தால் போதும், நிலைமை சரியாகிவிடும் என்னு்ம் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது. மதம் இருக்கும்வரை போலித்தனங்கள் இருக்கவே செய்யும். மதம் இருக்கும்வரை, மயக்கங்களும் ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். எனவே, மதம் இருக்கும்வரை, சாமியார்கள் இருக்கவே செய்வார்கள். மதம் நீடிக்கும்வரை மூடநம்பிக்கைகள் நீடிக்கவே செய்யும். சாமியார்களை வி்ற்று பிழைக்கும் வியாபாரிகள் இருக்கவே செய்வார்கள்.
கிளைகளை வெட்டிக்கொண்டே இருப்பது அல்ல; வேரை வெட்டிச் சாய்ப்பதுதான் இந்தப் பிரச்னை தீர சிறந்த வழி. ஒரே வழியும் அதுதான்.
18 comments:
/இந்திய/இந்து/பார்ப்பனீய மரபிலிருந்து நித்தியானந்தங்களும், ஜெயேந்திரன்களும் இல்லாமல் புத்தனா தோன்றுவான்
அட ராமா! நான் ரெண்டாவது பிரிவில் இருக்கேன். இப்ப என்ன செய்யறதுன்னு தெரிலையே:(
அரவிந்தன், நீங்கள் சொல்வது உண்மைதான். புத்தரை அழித்தொழித்த இந்த மரபில் இதுபோன்ற சாமியார்கள்தான் காளான்களாக தோன்றிக்கொண்டிருப்பார்கள்.
துளசி கோபால் : மதத்தையும் சாமியார்களையும் பிரித்து பார்க்கமுடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் உற்பத்தியாகிக்கொண்டேதான் போவார்கள்.
ஆதரிப்பதையும், பிறகு அம்பலங்கள் அரங்கேறியதும் தடிகொண்டு தாக்குவதையும் - இரண்டையுமே பக்தர்களாகப்பட்டவர்கள் ஒருவித கண்மூடித்தனத்துடன் செய்வதுதான் பிரச்னை.
இந்தப் பிரச்னையில் அதன் ஆனி வேரான மதநம்பிக்கையை சுட்டிக்காட்டியிருப்பது நான் படித்தவரை அநேகமாக நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நடக்க சாத்தியமில்லா விட்டாலும் தீர்வு என்பது அதுதான் எனும்போது, அதை ஒரு பதிவாககூட முன்மொழிய இங்கே பலரும் தயங்குவதுதான் புதிராக உள்ளது.
சாமியார்களின் போலித்தனங்களை ஆயிரம் ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தாலும், அதையெல்லாம் புறங்கையால் விலக்கி விட்டு மறக்காமல் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பிடிவாதமான பக்திக்கு பின்னால் மரபு ரீதியான காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது. காலம் காலமாக ஏதாவது உருவத்தை வழிபட்டே வாழ்ந்துவிட்டார்கள். அது சிலையாகவும் இருக்கலாம்; அதிமானிடமாகவும் இருக்கலாம். எதிலாவது தங்களை ஒப்புவித்துக்கொள்வதில் இயல்பான மனோபாவத்தை கொண்டிருக்கிறார்கள்.
வீ. புஷ்பராஜ்: வாழ்வின் நடைமுறை சிக்கல்களை மதம் விடுவிக்கும என்று அவர்கள் நம்புகிறார்கள் (இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் குறைந்தது அடுத்த பிறவியிலாவது).
பிரச்னைகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கு்ம் இன்றைய காலகட்டத்தில், பழைய கடவுள்களோடு சேர்த்து, புதிய கடவுள்களும் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.
யாராவது வந்து ஏதாவது செய்து நம் துயரங்களைப் போக்கிவிட மாட்டார்களா என்னும் வேதனை கலந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவர்களை அற்புதங்கள் நிகழ்த்தும் சாமியார்கள் பக்கம் திருப்புகிறது.
மதத்தின் பிடியில் சிக்கிக்கொண்டால் சீரழிவுதான் என்பதை பெரியாரும் அம்பேத்கரும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
சாமியார்கள் மட்டும் வியாபாரிகள் இல்லை... நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள் - மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்...
ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
மருதன்,
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அசல் வியாபாரிகள் யார் என எனக்கு தெரியாது.
என்னை பொறுத்தவரை வார இதழ் குமுதம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நடந்து கொள்கிறது.
"கதவைத் திற காற்று வரட்டும்" தொடர்மூலம் சம்பாதித்த அவர்கள்,இப்போது இந்த விஷயத்திலும் பரபரப்பாக எழுதி சம்பாதிக்கிறார்கள்.
நித்யானந்தாவை ஏதோ ஒரு விழாவில் பாராட்டி பேசிய விவேக்,பார்த்திபன்,விசு இவர்களிடம் இப்போது என்ன கருத்து சொல்கிறீர்கள் என வெட்கமில்லாமல் கேட்கிறார்கள்.
இந்த விஷயத்தில் குமுதத்தின் Stand என்ன என்று விளக்காமல் அடுத்தவர்களை கார்னர் செய்கிறார்கள்.
குமுதம் போன்ற சில பத்திரிக்கைகள் பரபரப்பாக எழுதுவதற்கும்,சம்பாதிப்பதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது.
silentboy: குமுதத்தின் நிலைப்பாடு வியாபாரம் செய்வது மட்டுமே. நித்யாவை வைத்து பணம் சம்பாதித்தவர்களைத்தான் நான் அசல் வியாபாரிகள் என்று குறிப்பிட்டேன். நித்யா போலி என்பதையும் சொல்லி அதே வியாபாரிகள் லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
//குமுதத்தின் நிலைப்பாடு வியாபாரம் செய்வது மட்டுமே. நித்யாவை வைத்து பணம் சம்பாதித்தவர்களைத்தான் நான் அசல் வியாபாரிகள் என்று குறிப்பிட்டேன். நித்யா போலி என்பதையும் சொல்லி அதே வியாபாரிகள் லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்//
மருதன், உங்களது இக்கருத்து முரண்களால் நிறைந்திருக்கிறது. இரண்டாவது வரியிலிருந்து நீங்கள் எழுதியுள்ள அனைத்தும் முதல் வரிக்கான அர்த்தத்தை வலுப்படுத்தும் வாதமாகவே ஒலிக்கிறது.
குமுதம் நித்தியாவை கொண்டு முதலில் ‘கதவை திறந்து வைத்து காற்று வர’ வியாபாரம் செய்தது. பிறகு அதுவே அவரை போலி என்று சொல்லி அதையும் இணையத்தில் வியாபாரம் செய்தது;செய்தும் வருகிறது(குமுதம் ரிப்போர்டரில் சாரு நித்தியாவைப்பற்றி தொடர் எழுதப் போகிறாராமே!). எனவே நீங்கள் மறுதலித்து அசல் வியாபாரிகளுக்கு எழுதியுள்ள விளக்கம் ஷேம் சைடு கோலாகவே தெரிகிறது.
மருதன்,
வியாபாரம் செய்வது என்பதன் பொருள்,பொருள் ஈட்டுவதுதான் என்பது என்னுடைய புரிதல்.திரு.புஷ்பராஜ் குறிப்பிட்டுள்ளபடி உங்களது பதில் ஏற்புடையதாக இல்லை,அதே சமயம் முரண்பட்டதாக உள்ளது.உங்கள் கட்டுரையின் கருத்துக்களில் நான் முரண்பட வில்லை.ஆனால் குமுதம் பற்றிய உங்கள் பார்வையில் நான் முரண்படுகிறேன்.
Basicaana manidha charaterai gavanikka marandhu vitteergal. Manidhargalukku unmai pidikkaadhu. aarudhal mattumey pidikkum. Nithyanandha unmai peysiyirundhaal oru aalum appodhey avarai madhiththirukka maattaargal. Nithyanandha peysiyadhellaam manidhargal yedhai keytka virumbinaargalo adhaiye.
@daydasher: உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது. இது வெற்றிகரமான சாமியார்கள்/பிரசங்கிகள் எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். வெகுஜன உளவியலுக்கு மாறான கலக கருத்துக்களின் பின்னால் — அது மெய்ஞான போதனையாகவே இருப்பினும் — எப்போதும் மெஜாரிட்டி சேர்வதில்லை. எங்கே மெஜாரிட்டி கூடுகிறதோ, அங்கே அவர்களின் முன்முடிவுகளை ஒட்டிய பிரசங்கம் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
@ daydasher @ வீ. புஷ்பராஜ்
நீங்கள் குறிப்பிடும் வெகுஜன உளவியல் குறித்து இங்கே விவாதிக்கலாம்.
நீங்கள் முன்வைக்கும் கருத்து இது. வெகுஜன உளவியலுக்கு எதிரான கருத்துகள் உண்மையாகவே இருந்தாலும் அவற்றை மக்கள் நிராகரிக்கவே செய்கிறார்கள் அல்லது அவற்றுக்கு பேராதரவு அளிப்பதில்லை. காரணம், அந்தக் கருத்துகளோடு அவர்களால் ஒன்றிபோக முடியவில்லை.
ஒடுக்கப்பட்டோரின் பெருமூச்சாக, இதயமில்லாத உலகின் இதயமாக, மக்களின் ஓபியமாக மதம் திகழ்கிறது என்றார் மார்கஸ்.
ஒடுக்கப்படும், அவதிப்படும் மக்களின் துயரங்களை மதங்களால் போக்கமுடியாது. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏன் நீடிக்கின்றன, ஏன் பலர் ஏழைகளாகவும் சிலர் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு மதங்கள் நேரடியாக பதிலளிப்பதில்லை. காரணம், மதங்களால் சமூகப் பிரச்னைகளை புரிந்துகொள்ளமுடியாது.
மதங்களால் செய்யமுடிந்தது ஒன்றைத்தான். மக்களுக்குத் தேவைப்படும் சமாதானங்களை, ஆறுதல் வார்த்தைகளை அளிக்கமுடியும். கர்மா, முற்பிறவி பலன் என்று திசைதிருப்பமுடியும். அடுத்தப் பிறவியில் நீங்கள் செல்வந்தர் ஆகலாம் என்று நம்பிக்கையளிக்கமுடியும். மொத்தத்தில், போலியான ஒரு மாய உலகை கட்டமைத்து அளிக்கமுடியும். குறைந்தது கனவுகளையாவது அளிக்கமுடிகிறதே என்று மக்களும் மதங்களை அரவணைத்துக்கொள்கிறார்கள். மதமும் மனிதர்களை அரவணைத்துக்கொள்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மக்களுக்கு இந்த மாய உலகம் போதும் என்றா? உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே!
@மருதன்
மதங்கள் மனிதர்களுக்கு என்ன அளிக்கின்றன என்னும் வழமையான பார்வையை கொஞ்சம் மாற்றி, மனிதர்களுக்கு மதங்களின் தேவை ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் சிந்திக்கும்போது சில விஷயங்களின் மேல் உத்தேசமான ஒரு தெளிவு கிடைக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் புத்தர் போன்ற மஹான்கள் ஏற்கெனவே கண்டறிந்து சொன்ன அவைதீக கோட்பாடுதான்.
அஃதாவது, மனிதன் பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய மூன்றின் மீதும் ஆதிகாலம் முதல் இன்று வரை பெரும் அச்சம் கொண்டவனாக இருக்கின்றான். அவற்றிலிருந்து தன்னை விடுவிக்கும் மதம்/மார்க்கம்/வழிபாட்டுமுறை எதிலாவது தன்னை ஒப்பிவித்துக்கொள்வதில் தாளாத முயற்சியுடையவனாக இருக்கிறான். அதை கண்டறிதலுக்கான தேடல், அவனில் எப்போதும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கான தீர்வு சிலருக்கு அவரவர் பிறக்கும்போது உடன் சுமத்தப்பட்ட மத வழிபாட்டு முறையிலேயே கிடைத்து விடுகிறது. சிலருக்கு அதையும் தாண்டியதொரு தேடலாக நீள்கிறது.
இந்த இடத்தில்தான், சாமியார்களின் தேவை உருவாகிறது. கண்டவர்கள் விண்டதில்லை; விண்டவர்கள் கண்டதில்லை எனும்படி தங்களால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியாதபடி புதிராக இருக்கும் கடவுளிடம், தாங்கள் நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களை, கடவுளுக்கும் தங்களுக்கும் இடையேயான மீடியமாக காண்கிறார்கள் - தேடலில் ஈடுபட்டிருக்கும் நம்பிக்கையாளர்கள். அதிலும் அச்சாமியார்களே உபாதைகளை சொஸ்தப்படுத்துபவர்களாகவும் அற்புதங்களை நிகழ்த்துபவர்களாக அமைந்துவிடும் பட்சத்தில், சிலருக்கு அவர்களே எளிதில் கடவுளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
யுகம் யுகமாக தேடல்கள் புதிய புதிய திசைகளில் அமைந்துகொண்டே இருக்கின்றன. அதை நிறைவு செய்யும் புதுப் புது சாமியார்களின் தேவையும், அவர்கள் போதிக்கும் வேறு வேறான வழிபாட்டு முறைகளும் ஓயாமல் உருவாகியபடியே இருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரணாக அல்லது மேம்பட்டதாக தோன்றும்/பிரசங்கிக்கப்படும் இவை ஒவ்வொன்றின் தொடக்கத்தையும் முடிவையும் ஒரு நூல் கொண்டு இணைத்துப் பார்த்தால் கிடைக்கும் உருவம், மேற்சொன்ன மூன்று தலையாய பிரச்னைகளின் நிவாரணத்திற்கான எத்தனங்களாகவே இருக்கக் காணலாம்.
இங்கே பிணி என்பதை பாபங்களில் இருந்து விடுதலை, நல்வாழ்வு குறித்தான பெருவிருப்பம் எனும்படி உட்கூறாக கிளை பிரித்து இன்னும் ஆழமாக சென்று பேசமுடியும். ஆனால் எல்லாவற்றின் உள்ளீடான பொருளும் முடிவில் ஒன்றாக இருக்கமுடியும்.
இங்கே சாமியார்கள் என்றால் மேற்காசியாவில் தொடர்ந்து மெஸ்ஸையாக்களின் தேவை இருந்துகொண்டே இருந்திருக்கிறது. மறுதலிக்க முடியாத மார்க்கமாக தெரியும் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பின்னால் வந்த மீட்பர்களால்/தேவதூதர்களால்/நற்செய்தியாளர்களால் மறுதலிக்கப்பட்டே வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் நம்பிக்கையாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்த உளவியலில் அறிவியலாலும்கூட பெரிய மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியவில்லை. காரணம், இதன் பின்னாலுள்ள காரணங்கள் மரபு ரீதியானவை.
மதத்தைப்பற்றி மார்கஸ் சொன்ன ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். அதில் அந்த கடைசி வரியாகிய ‘opium of the mass' என்பதற்குத்தான் வரலாற்றில் போர்களாகவும், உயிரிழப்புகளாகவும் எத்தனை எத்தனை எண்ணற்ற உதாரணங்கள்!
மதத்தின் வரையறையாக நான் படித்தனவற்றுள் ‘இயற்கையின் போக்கையும், மனித வாழ்வையும் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் மனிதசக்திக்கும் மேலான ஒரு சக்தியுடன் நல்லிணக்கம் செய்து கொள்ளுதல்’ என்று எங்கேயோ படித்தது இன்னும் நீங்காமல் நினைவில் நீடிக்கிறது. இதற்கும் வெளியே சென்று பெரிதாக எதையும் பகுத்தாய்ந்து விட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்..... ஆமாம் நண்பர்களே, இப்படி பல போலி சாமியார்கள் அப்பாவி மக்களை அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்று சொல்லி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிகின்றனர், ராமன்ஸ்வாமிஜி ( ramanswamiji )என்ற போலி சாமியார் நான் கடவுள் என்று சொல்லி வலைதலங்களில் எமாற்றி வருகிறான், மக்களே உஷார்!!!!!!
Post a Comment