May 25, 2010

குற்றமும் தண்டனையும்

அண்ணாசாலை ஸ்பென்சர் ப்ளாசாவில் உள்ள லாண்ட்மார்க் புத்தகக் கடை. கசிந்து வரும் மெலிதான மேற்கத்திய இசையைக் கிழித்துக்கொண்டு ஒரு பெண் கூச்சலிடும் சத்தம் கேட்டது.

'எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிச் செய்திருப்பாய்? நீயெல்லாம் ஒரு மனிதனா? ஒரு பொது இடத்தில் கேவலமாக எப்படி உன்னால் நடந்துகொள்ளமுடிகிறது?'

என்ன ஆச்சு மேடம் என்று கேட்க ஓடிவந்த டை கட்டிய அந்த இளைஞரிடம் அதே கோபத்தை வீசினார் அந்தப் பெண்.

'உங்கள் கடையில் இந்த தவறு நடந்திருக்கிறது. என்ன செய்யப்போகிறீர்கள்? வேடிக்கை பார்க்க மட்டும்தான் உங்களுக்குத் தெரியுமா?'

'ஐ பெக் யுவர் பார்டன். என்ன நடந்தது?'

'என் பெண்ணிடம் இந்த அயோக்கியன் அசிங்கமாக நடந்துகொண்டிருக்கிறான். நான்கூட அதை கவனிக்கவில்லை. உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இதோ இந்த ஊழியர்தான் என்னை அழைத்துவந்து காண்பித்தார். புத்தகம் பார்த்துக்கொண்டிருந்த என் பெண்ணிடம் சென்று... ச்சே!... மிருகம்.'

'யார் இவர்?'

'என்ன கேட்கிறாய் நீ? இவன் யார் என்று எனக்கெப்படித் தெரியும்?'

அதற்குள் அங்கே பத்து, இருபது பேர் கூடிவிட்டார்கள். பெரும்பாலானோர் லாண்ட்மார்க் ஊழியர்கள். மூத்தவர் ஒருவர் அந்தப் பெண்ணை அமைதிப்படுத்திவிட்டு, அந்த இளைஞனை நெருங்கினார். அவனுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. இங்கே நடப்பதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் கை கட்டி நின்றுகொண்டிருந்தான்.

'என்னப்பா பிரச்னை?'

'நான் எதுவுமே செய்யலே.'

அந்தப் பெண் சீறிப் பாய்ந்தார்.

'ராஸ்கல், எதுவும் செய்யவில்லை நீ?'

பதிலில்லை.

'சொல், எதுவும் செய்யவில்லை நீ?'

இப்போது அந்த மூத்தவர் குறுக்கிட்டார்.

'மேடம், அமைதியாக இருங்கள். நாங்கள் விசாரிக்கிறோம்.'

'நான் ஏன் அமைதியாக இருக்கவேண்டும்?'

அம்மா இதை வாங்கித் தருகிறாயா என்று கேட்டபடி ஒரு காமிக்ஸை கொண்டு வந்து நீட்டிய அந்தக் குழந்தையைப் பார்த்தேன். நான் எதுவும் செய்யவில்லை என்று சொன்ன அந்த இளைஞனின் முழங்கால் உயரம் கூட இல்லை.

இதற்குள் சீருடை அணிந்த இரு லாண்ட்மார்க் காவலர்கள் வந்துவிட்டார்கள்.

'நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் மேடம். நீங்கள் கவலைப்படவேண்டாம்.' என்றார் மூத்தவர்.

'இவனை நீங்கள் வெளியில் விட்டால் என்னால் சும்மா இருக்கமுடியாது. இதுபோன்ற அயோக்கியனைத் தக்கமுறையில் தண்டிக்கவேண்டும்.'

சொல்லிவிட்டு, அந்தக் காமிக்ஸ் புத்தகத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு, குழந்தையை தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

காவலர்கள் அந்த இளைஞனை நெருங்கினார்கள்.

'என்ன ஆச்சு?'

'அந்தம்மா என்ன சொல்லிச்சுன்னே தெரியலே. எனக்கு இங்கிலீஷ் தெரியாது.'

'அவங்கப் பொண்ணை அழ வச்சியாமே!'

'நான் எதுவுமே செய்யலைங்க. ஆனா, இவங்க பாட்டுக்குத் திட்டிக்கிட்டே இருந்தாங்க.'

லாண்ட்மார்க் பெண் ஊழியர் ஒருவர் குறுக்கிட்டார்.

'சரி சரி, விடுங்க சார். அவங்க நார்த் இண்டியா லேடி. அதான் சின்ன விஷயத்துக்குக்கூட கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டாங்க. நீங்க போங்க.'

'எதுக்குத் தம்பி குழந்தை பாப்பாக்கிட்ட போய் விளையாடிக்கிட்டு!'

காவலர்கள் இருவரும் கலைந்து செல்ல தயாரானார்கள். அப்போதுதான் அதை கவனித்தார்கள்.

'ஆமாம், நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?'

'ஏன், முதல் மாடி வழியாதான்.'

'முதுகுல பை மாட்டியிருக்கீங்களே!'

'ஆமாம், என்னுடையது.'

'செக்யூரிட்டி உள்ளே விட்டிருக்க மாட்டாங்களே. எப்படி வந்தீங்க?'

அந்த இளைஞன் ஏதோ சொல்லியபடி கிளம்பத் தயாரானான். இப்போது காவலர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

'முதல்ல, பையைத் தொறந்து காமி.'

இன்னொருவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார். முதல் முறையாக, குரலில் கடுமை கூடியிருந்தது.

'எங்கே இருக்கே? பேரு என்ன?'

திரண்டிருந்த கூட்டம் கலைக்கப்பட்டது.

விசாரணை ஆரம்பமானது.

நான் கிளம்பிவிட்டேன். அந்த இளைஞனுக்கு ஒருவேளை ஏதாவது தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், அதற்கு முதுகுப்பையே காரணமாக இருந்திருக்கும்.

14 comments:

நர்சிம் said...

என்னத்தச் சொல்ல? அவர்களுக்கு அதுதான் பிரதானம். மிகக் கேவலமான ஒன்று.

வால்பையன் said...

என்ன கொடும சார் இது!

Santhappanசாந்தப்பன் said...

ஐஞ்சு பைசா திருடினா தப்பா சார்?

சுதி்ர் said...

மனதை தொடுகிறது மருதன். அவனுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்

Anonymous said...

Good piece of writing

ஆர். அபிலாஷ் said...

மிக நல்ல பதிவு மருதன். எவ்வளவு தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள். நீங்க சிறுகதை எழுதுவீங்களா?

Ramesh Ramasamy said...

இது நடந்ததா? அல்லது கற்பனையா? :(

மருதன் said...

நன்றி அபிலாஷ், நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. உங்கள் எஸ்.எம்.எஸ் கிடைத்தது. நம்பரை குறித்து வைத்துக்கொண்டேன்.

மருதன் said...

ரமேஷ் ராமசாமி, இது நேரில் பார்த்த சம்பவம். உரையாடல்கள் உள்பட அத்தனையும் நிஜம்.

Krish93 said...

சிறுவர்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் இந்தியாவில் பெருகி வருகிறது என்று படித்தேன். உங்கள் பதிவு அதிர்ச்சி ஊட்டுகிறது. ருச்சிகா வழக்குக்கு இன்று வரை சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லையே

யாழ் said...

ஒரு சிறுகதை படிப்பது போன்ற உணர்வை தருகிறது

Anonymous said...

NOTE: I think LANDMARK doesnt give any discount for books we buy there. In chennai u can buy international books at 30% discount in IBD opposite to saidapet railway station. A bulk puchaser of a bookshop and I went there and we bought books at 33.3% discount price. Personaly I asked one f d persons of IBD whether they would give discount for me even if i buy a single book. He said they would give books for me at 30% disount. Also I got to know aout WESTLAND whole sale booksellers. I went to WESTLAND and buy a novel for 30% discount...If u buy books frequently go to these 2 places...

Anonymous said...

NOTE: I think LANDMARK doesnt give any discount for books we buy there. In chennai u can buy international books at 30% discount in IBD opposite to saidapet railway station. A bulk puchaser of a bookshop and I went there and we bought books at 33.3% discount price. Personaly I asked one f d persons of IBD whether they would give discount for me even if i buy a single book. He said they would give books for me at 30% disount. Also I got to know aout WESTLAND whole sale booksellers. I went to WESTLAND and buy a novel for 30% discount...If u buy books frequently go to these 2 places...

Tamil And English said...

Maruthan,

You need to be waited in that place and explain the complete story... It is look like half boil...ok. what message are you trying to convey to us from this incident?