June 12, 2010

சாமிநாத சர்மாவின் பர்மா நடைப் பயணம் 1


1941 இறுதியில், ஜாவா, சுமத்ரா, மலேயா ஆகிய நாடுகள் மீது ஜப்பான் ஆக்கிரமிப்புப் போர் நடத்திக்கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் இரண்டாவது வாரம் முற்பகல் ஆகாய விமானங்கள் பர்மாவின் தலைநகரம் ரங்கூன் மீது வட்டமடிக்க ஆரம்பித்தன. அதே மாதம் 23ம் தேதி, அபாய அறிவிப்புச் சங்கு ஊதப்பட்டது. எண்பதுக்கும் அதிகமான விமானங்கள் திரண்டு வந்துவிட்டன. சில விநாடிகளில் இருநூறுக்கும் அதிகமானோர் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டனர். சாலையெங்கும் மனித உடல்கள். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இந்தியர்கள்.

இந்தியாவைப் போலவே பர்மாவும் பிரிட்னின் கட்டுப்பாட்டில் இருந்தது. பர்மாவைப் பாதுகாக்க, ஜப்பானுக்கு எதிராக தங்கள் விமான்ங்களை பிரிட்டன் கொண்டு வந்தது என்றாலும், ஜப்பான் அச்சுறுத்தலை முறியடிக்கமுடியவில்லை. அபயாய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. திடீரென்று சங்கு ஊதப்படும். கையில் இருப்பதை கீழே போட்டுவிட்டு மக்கள் சிதறியோடுவார்கள். தோட்டங்களில் பதுங்குக் குழிகளும், வீட்டுக்குக் கீழே பாதுகாப்பு அறைகளும் ஏற்படுத்தப்பட்டன.

பர்மாவில் தொடர்ந்து தங்கியிருக்கலாம் என்று முடிவு செய்தவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. இவர்களில் பெரும்பாலானோர் இந்திய வியாபாரிகள். பர்மாவில் வந்து வாணிகம் செய்து பொருள் சேர்த்தவர்கள். சேமித்ததை அப்படியே விட்டுவிட்டு ஓடிவர அவர்களுக்கு மனமில்லை. மேலும், இந்தியா திரும்பினால் எப்படிப்பட்ட வாழ்வு அமையுமோ என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. தாய்நாடுதான் என்றாலும், அகதிகளாகத்தானே பார்ப்பார்கள்? வேண்டுமானால், பணக்கார அகதி என்று சொல்லிக்கொள்ளலாம்.

இவர்கள் பாதுகாப்பு தேடி தாற்காலிகமாக ரங்கூனைவிட்டு பர்மாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஊர்களுக்குப் பயணமானார்கள். ரயில் வண்டிகள் நிரம்பி வழிந்தன. கப்பல்களில் எள்ளளவு இடமும் இல்லை. போன வண்டி திரும்பி வரட்டும் என்று காத்திருக்கமுடியாது. காத்திருக்கும் வேளையில் குண்டு வந்து விழாது என்று என்ன நிச்சயம்? மேலும், இங்கே வீசுபவர்கள் வடக்குப் பகுதியில் வீசமாட்டார்களா?

எனவே, இந்தியாவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இந்தியா செல்வதற்கான வழி எது என்று பலருக்குத் தெரியாது. இருந்தாலும் நடந்துகொண்டிருந்தார்கள். வாரக் கணக்கில், மாதக் கணக்கில் நடந்துகொண்டிருந்தால், இந்தியா வந்துவிடாதா என்ன? அப்படியே இந்தியாவைச் சென்றடைய முடியாவிட்டால்தான் என்ன? குறைந்தபட்சம், உயிர் பிழைக்கலாமே! ஒன்றுமே தெரியாத பர்மாவில் வந்து, தங்கி, பிழைப்பு நடத்தவில்லையா?

டிசம்பர் 1941 தொடங்கி பிப்ரவரி 1942 வரையிலான இரு மாதங்களில் 89 முறை ஜப்பான் ரங்கூனைத் தாக்கியது. வெ. சாமிநாத சர்மா ஜோதி பத்திரிகை அலுவலகத்துக்கு உள்ளே அமர்ந்து கடைசித் தலையங்கம் எழுதிக்கொண்டிருந்தார். 1937, ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜோதி என்னும் மாத பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் சாமிநாத சர்மா. அரசியல், விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்த ஏடு இது. பெரும்பாலான கட்டுரைகளை வெவ்வெறு பெயர்களில் சாமிநாத சர்மாவே எழுதுவது வழக்கம். ஐம்பதுக்கும் மேற்பட்ட புனைப்பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

சாமி, இனியும் இங்கே இருக்காதீர்கள், ஓடிவிடுங்கள் என்று நண்பர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகே, இனியும் பத்திரிகை செயல்படுவது சாத்தியமில்லை என்பது ஊர்ஜிதமான பிறகே, சர்மா ரங்கூனைவிட்டு வெறியேறினார். பிப்ரவரி 12, 1942 அதிகாலை தொடங்கியது அவர் நடைப் பயணம். வழிநெடுகிலும் தான் எழுதிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சர்மா ஒரு நூலை எழுதினார்.

(தொடரும்)

4 comments:

வீ.புஷ்பராஜ் said...

சாமநாத சர்மாவின் நடைப் பயணம் பர்மாவிற்குள்ளேயேவா அல்லது இந்தியாவை நோக்கியா என்று அறிந்துகொள்ள ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர்பார்த்திருக்கிறேன்.

சுதிர் said...

சாமிநாத சர்மாவின் ஹிட்லர் படித்திருக்கிறேன். ஆனால் பர்மா படிக்கவில்லை. படிக்க தூண்டுகிறது உங்கள் எழுத்து

Anonymous said...

hi... i saw the archive page(koppu or padhivugal) today only...before I thought u rejected my idea to have an archive page...

ஜோதிஜி said...

மருதன் பத்ரி வலைதளத்தில் உங்கள் பின்னூட்டம் படித்தேன்.

வயிறே புண்ணாப் போச்சு.

ரொம்ப ரொம்ப நேர்ல பார்த்த மாதிரியே ஒரு உணர்வு. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பபபபப

அந்த சமயத்தில் நீங்கள் எப்படி இருந்துருப்பீங்கன்னு கற்பனை செஞ்சு பாத்துக்கிட்டுருககேன்........................
Profile thru not allowed. Pls check.........