June 12, 2010

சாமிநாத சர்மாவின் பர்மா நடைப் பயணம் 2

'இந்த 'பர்மா வழி நடைப் பயணம்' என் வாழ்க்கைப் பயணத்தில் - என் சுய சரிதத்தில் ஒரு பகுதி; ஒரு திருப்பம். இந்த நடைப் பயணத்தின் பெரும்பகுதி என்னைப் பொறுத்தமட்டில், ஏதோ ஒரு வகை வாகனப் பயணமாகவே அமைந்தது... இங்ஙனம் நான் குறைவான தூரத்திற்கு மட்டும் நடந்து வந்தபோதிலும் பர்மாவிலிருந்து புறப்பட்ட பெரும்பாலோர் நீண்ட தூர நடைப் பயணத்தையே மேற்கொள்ள வேண்டியவர்களானார்கள். இவர்களைக் கணக்கில் கொண்டு இந்நூலுக்கு, 'எனது பர்மா வழி நடைப் பயணம்' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன்.'

கிளம்பலாம் என்று முடிவாகிவிட்டது. சில உடைகள், பாத்திரங்கள், சமையல் சாமான்கள் ஆகியவற்றை மூட்டை கட்டியாகிவிட்டது. ஆனால், இத்தனை காலம் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள், எழுதி வைத்திருந்த குறிப்புகள், கையெழுத்துப் பிரதிகள், சொற்பொழிவுகளின் குறிப்புகள் ஆகியவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார் சாமிநாத சர்மா. 'இவையனைத்தையும் எப்படியாவது எடுத்துக் கொண்டு செல்லவேண்டுமென்பது என் ஆசை. ஆனால், முடியவில்லை. கையெழுத்துப் பிரதிகளையாவது எடுத்து வர முயன்றேன். அதுவும் முடியாது போயிற்று... உபநிஷதங்களின் பிரதிகள், ரஸ்கின் பெருமகனுடைய ஒரு நூல், பிளேட்டோவின் குடியரசு என்ற நூல் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது.'

உடல் சோ்வை மி்ஞ்சும் மனச்சோர்வு. கப்பல், ரயில், டோலி என்று ஏறி இறங்கினார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தங்கினார்கள். மழையில் நனைந்து, வெயிலில் சுருண்டு, தட்டுத்தடுமாறி, இயற்கையை ரசித்து, கிடைத்ததை ருசித்து, உயிர் பயம் கொண்டு, நம்பிக்கையிழந்து, நம்பிக்கை பெற்று, பாடல்கள் பாடி, சண்டைகள் போட்டு, மலைமீதேறி, பள்ளத்தாக்கில் தவழ்ந்து நடந்துகொண்டிருந்தார்கள். ரங்கூன், மாந்தளை, மொனீவா, கலேவா, டாமு, நாகா மலைத் தொடர், இம்பால், டிமாபூர் ஆகிய பகுதிகளைக் கடந்து ஏப்ரல் 24, 1942 பகல் சுமார் மன்று மணிக்குக் கல்கத்தா வந்தடைந்தார் சர்மா. அங்கிருந்து சென்னை.

எனது பர்மா வழி நடைப் பயணத்தில் சர்மா தன் பயண அனுபங்களை சீராகத் தொகுத்திருக்கிறார். உயிர் பயம் கொண்டு யுத்த களத்தில் இருந்து தப்பியோடும் ஓர் அகதியின் வாழ்க்கைத் தவிப்பாக இப்புத்தகம் விரிவடைகிறது. நண்பர்களும், முகம் அறியாதவர்களும் சர்மாவுக்கு உதவுகிறார்கள். சுத்தமற்ற, சுவையற்ற ஆகாரங்களை உட்கொள்கிறார். இரவு பகலாக நடந்து சோர்வுடன் ஒரு புதிய இடத்துக்கு வந்து சேரும்போது, அவருக்குள் இருந்த பத்திரிகையாளர் விழித்துக்கொள்கிறார். நீரோடையில் குளித்து முடித்துவிட்டு, சுற்றிப் பார்க்க கிளம்பிவிடுகிறார். மக்கள்கூடும் இடத்தில் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டு அவர்கள் பேசுவதை செவிமெடுக்கிறார். குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். பிறகு, அழுகு தமிழில் அவற்றை பதிவு செய்கிறார். டாமு பகுதியில் அவர் கொடுக்கும் ஒரு வர்ணணையைப் பாருங்கள்.

'முகாமின் ஒரு பக்கத்தில் சிற்றருவியொன்று, மனக் கலக்கமடைந்தவர்கள் தளர்ந்து நடப்பதுபோல், கலங்கிய நீரைத் தாங்கிக் கொண்டு நிதானமாகச் சென்று கொண்டிருந்தது. ஆங்காங்கு மரங்கள் ஆயுதமிழந்த போர் வீரர்கள் ஸ்தம்பித்து நிற்பது போல், ஆடாமல் அசையாமல் நெட்ட நெடிய நின்று கொண்டிருந்தன. பணமிருந்தும் மனமில்லாதவர்கள் எப்படித் தயங்கித் தயங்கிப் பிறர்க்குக் கொடுப்பர்களோ... அப்படி, இந்த மரங்களினுடைய அளவிலும் எண்ணிக்கையிலும் குறைவாயிருந்த இலைகள் லேசாக அசைந்து அசைந்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன.'

வக்ஸு என்னும் கிராமத்தைப் பற்றிய குறிப்பு. 'சிலர், நோய்வாய்ப்பட்டவர்களாய் முனகிக் கொண்டிருந்தார்கள். இருந்த இடத்திலேயே மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய அருவருப்பைப் பொருட்படுத்தாமல், நாணமோ, கூச்சமோ இன்றி மல-ஜலம் கழித்துக்கொண்டிருந்தார்கள் சிலர். மற்றொரு பகுதியில் 'ஐயோ' என்று சொல்லி அழுவதற்குக் கூட ஆளில்லாமல், இறந்து போனவர்களைத் தூக்கிச் சென்றார்கள், சவங்களைத் தூக்கிச் செல்வதற்கென்று நியமிக்கப்பட்டிருந்த கூலியாட்கள். இந்தக் கதம்பக் காட்சிக்கு மத்தியில் எங்கள் சமையல், சாப்பாடு எல்லாம் நடைபெற வேண்டியிருந்தது. என்ன செய்வது? கூசிக் குலைந்து கொண்டிருந்தால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். அப்படிக் கிடக்க எங்கள் வயிறு மறுத்து விட்டது.'

ஒரு கட்டத்தில், மூங்கில் கம்புகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட டோலிகளில் அமர்ந்து செல்கிறார்கள். வெற்றுடலுடன் டோலியைச் சுமந்து வரும் மணி்ப்பூர் கூலிகளைக் கண்டு சர்மா மனம் கலங்குகிறார். ஒரு முறை, குறுகலான பாதையில் ஏணையில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு சக்கிலியர் குடும்பம் நாலைந்து குழந்தைகளுடன் கூடவே வந்து கொண்டிருந்தது. சர்மாவை உலுக்கியெடுத்தது இந்தக் காட்சி. இதோ அவரது மொழியில்.

'கடைசியாகப் பிறந்தவை இரட்டைக் குழந்தைகள். சில மாதங்கள்தான் ஆகியிருக்கும். குடும்பத்தின் தலைவன், அவ்விரண்டு குழந்தைகளையும் ஒரு காலடியில் சதுரமான இரண்டு பலகைகளை வைத்து, தோள் மீது தூக்கிக்கொண்டு வந்தான். குடும்பத் தலைவி தட்டுமுட்டுச் சாமான்களை ஒரு கோணிப் பையில் கட்டி அதை இடுப்பில் சுமந்து வந்தாள்... குழந்தைகளில் மூத்த பெண்ணுக்கு சுமார் எட்டு வயதிருக்கும். இடுப்பில் இரண்டு முழத் துண்டும் கிழிந்திருந்த ரவிக்கையும் அதன் உடை. மேலே ஒரு தாவணி கூடக் கிடையாது... குளிரி்னின்று பாதுகாத்துக் கொள்ள மூன்று குழந்தைகளும் தங்கள் மார்பை, இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டிருந்தார்கள். மற்ற பெரியவர்களோடு சேர்ந்த வர வேண்டுமென்பதற்காக இவர்கள் நான் அமர்ந்து வந்த ஏணையைத் தொடர்ந்தாற்போல் ஓட்டத்திலேயே வந்து கொண்டிருந்தார்கள். நான் ஏணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து இவர்கள் என்ன நினைத்திருப்பார்களோ?'

சர்மா தொடர்கிறார். 'என்ன அநியாயம் இது? யாருக்கும் யாருக்குமோ போர் நடைபெற்றுக்கொண்டிருக்க. அந்தப் போருக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத அந்தப் போரின் காரண காரியங்களைப் பற்றிச் சிறிதும் அறிந்து கொள்ளமுடியாத பாமர ஜனங்கள், வருணிக்க முடியாத துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே?... இதற்கு மேல் என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. என் மேல் சட்டையைக் (கதர் ஜிப்பாவை) கழற்றி மூத்த பையனிடத்தில் கொடுத்தேன். அதை அவன் ஆவலோடு வாங்கி உடம்பில் போட்டுக் கொண்டபோது. அவனுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இளங்கன்று போல் துள்ளிக் குதித்தான். அவனுக்கு அந்தச் சட்டை பெரிதாயிருந்தது. அதைப் பார்த்த அவனுக்கு அடுத்த நான்கு வயதுச் சிறுவன் அந்தச் சட்டைக்குள் நுழைந்து கொண்டான். இருவருக்கும் அது போதுமானதாகவே இருந்தது.'

கண்முன் விரிந்த முக்கியக் காட்சிகள் அனைத்தையும் தன் பயண நூலில் பதிவு செய்திருக்கிறார் சர்மா. இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்ததால், பிறரிடம் உதவிக் கேட்கக்கூட துணிவின்றி தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் சர்மா. இம்பால் முகாமில் குழந்தைகளுக்குச் சமையல் செய்து பரிமாறியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போது ஊர் மக்களிடம் உரையாடுவார். இல்லையென்றால் எழுத்துப் பணி. குடியரசு மொழிபெயர்ப்பைப் பயணம் முழுவதும் தொடர்ந்ததில் ஏனைய அலுப்புகளும் வருத்தங்களும் மறைந்துவிட்டன என்று ஓரிடத்தில் குதூகலத்துடன் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயண நூ்லில், சர்மாவின் மனைவியின் பெயர் ஓரிடத்திலும் இடம்பெறவில்லை. என் வாழ்க்கைத் துணைவி என்றே நூல் நெடுகிலும் குறிப்பிடுகிறார். ஒரே ஒரு முறை தன் மனைவியிடம் அவர் கோபித்துக்கொண்டிருக்கிறார். மலைபாங்கான ஒரு பகுதியில் ஏறி சென்றுகொண்டிருந்தபோது, முற்றிலும் சோர்வடைந்து அங்கேயே மூர்ச்சியடைந்துவிட்டார் சர்மா. நான் பிறகு வந்து சேர்கிறேன், நீ கூட்டத்துடன் சென்றுவிடு என்று நினைவு தப்புவதற்கு முன் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார். நீண்ட நேரத்துக்கு்ப் பிறகு அவர் மீண்டபோது, தன் மனைவி தன் அருகில் இன்னமும் அமர்ந்திருப்பதைக் கண்டதும் நிதானம் தவறிவிட்டது. நான் சொன்னதை ஏன் செய்யவில்லை? ஒரு கத்து. அத்தோடு சரி.

பர்மா குறித்து இன்றும்கூட பல நூல்கள் எழுதப்படவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது, சாமிநாத சர்மாவின் இந்நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சர்மாவின் வாயிலாகவே ஒரு தலைமுறை மக்கள் வரலாறும் அரசியலும் கற்றுள்ளார்கள். இன்னமும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வெ. சாமிநாத சர்மா சுமார் அறுபது நூல்கள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் தனி. செப்டம்பர் 17, 1895ம் ஆண்டு வட ஆர்க்காடு, செய்யாறு தாலுகாவில் உள்ள வெங்களத்தூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1978ம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி மரணடைந்தார். அமுதசுரபியில் தொடராக வெளிவந்த எனது பர்மா வழி நடைப் பயணம் அவரது மரணத்துக்குப் பிறகே புத்தக வடிவம் பெற்றது.

சாமிநாத சர்மாவின் பர்மா நடைப் பயணம் பகுதி 1

11 comments:

vijayan said...

தமிழின் மாபெரும் கொடை வெ.சாமிநாத சர்மா (அடைமொழிகள் போட்டு அவரை கேவலப்படுத்த வேண்டாம்.).

சுதிர் said...

புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொல்லவில்லையே?

மருதன் said...

சுதிர் : சாமிநாத சர்மாவின் முழுத் தொகுப்புகளையும் வளவன் பதிப்பகம், சென்னை பதிப்பித்திருக்கிறார்கள்.

புதிர் said...

வளவன் பதிப்பகம் என்பது பெங்குயின் மாதிரியா? எங்கும் கிடைக்குமா? முழு முகவரி தரவும். தொலைபேசி எண்ணுடன்.

Anonymous said...

Marudhan, Burma(Myanmar) is still a place of mystery even years after saminatha Sarma's travel. I wonder why there aren't many writers who write about that country.

வீ.புஷ்பராஜ் said...

இந்த பதிவு சாமிநாத சர்மா பற்றிய ஒரு இம்ப்ரசனை என்னிடம் ஏற்படுத்தியிருக்கிறது. பலமுறை அவர் புத்தகங்களை புரட்டிகூட பார்க்காமல் கடந்து சென்றிருக்கிறேன். இனி அப்படி நடக்காது. நல்ல எழுத்துக்களை பற்றிய உங்கள் அறிமுகம் மேலும் தொடரட்டும். உங்கள் மொழி மிக நன்று. நன்றி.

வீ.புஷ்பராஜ் said...

இந்த பதிவு சாமிநாத சர்மா பற்றிய ஒரு இம்ப்ரசனை என்னிடம் ஏற்படுத்தியிருக்கிறது. பலமுறை அவர் புத்தகங்களை புரட்டிகூட பார்க்காமல் கடந்து சென்றிருக்கிறேன். இனி அப்படி நடக்காது. நல்ல எழுத்துக்களை பற்றிய உங்கள் அறிமுகம் மேலும் தொடரட்டும். உங்கள் மொழி மிக நன்று. நன்றி.

மருதன் said...

வீ. புஷ்பராஜ் : நன்றி. ரஷ்யா, சீனா, பாலஸ்தீனம், துருக்கி என்று பல நாடுகளின் வரலாறை மிக எளிமையான நடையில் சர்மா எழுதியிருக்கிறார். காரல் மார்க்ஸ், ஹிட்லர், சன் யாட் சென் என்று அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகளின் பட்டியல் பிரமிப்பை ஏற்படுத்துபவை. வாசித்து மகிழுங்கள்.

ஆர்.முத்துக்குமார் said...

உங்களிடம் இருந்து போபால் விஷவாயு குறித்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

ஆர். முத்துக்குமார்

sarathi said...

ஐயா சாமிநாத சர்மா அவர்கள் பிறந்த மண்ணில் நான் பிறந்ததை எண்ணி பூரிப்படைகிறேன்.
இன்றும் அவர் வீடு இருக்கிறது.
தகவலுக்கு.
தி.கருணாகரன். செல்.9787896187

sarathi said...

தி.கருணாகரன் வெங்களத்தூர்.
9787896187