June 16, 2010

'INDIAN ARMY RAPE US!'

1

அந்தப் பன்னிரண்டு பெண்களும் முழுக்கமிட்டுக்கொண்டே நடந்து சென்றனர். 'வா, வந்து எங்களைக் கற்பழி. எங்களைக் கொன்றுபோடு. எங்கள் சதையை எடுத்துக்கொள்'. அசாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினர் தங்கியிருந்த காங்ளா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு அருகே அவர்கள் திரண்டு வந்தனர். பொது மக்கள் ஒன்றுகூடும் வரை ஓயாமல் முழுக்கமிட்டார்கள். பிறகு, தங்கள் உடைகளைக் களைந்தனர். அவர்கள் கையில் இருந்த பதாகையில் ரத்தச் சிவப்பில் நான்கு வார்த்தைகள். INDIAN ARMY, RAPE US!

இந்தப் போராட்டத்துக்குப் பின்னணி, மனோரமா. ஜூலை 11, 2004 அன்று 17வது அசாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினர், தங்ஞம் மனோரமாவின் வீட்டுக்குள் நுழைந்து, கட்டிலில் படுத்திருந்து அவரை இழுத்து தள்ளினார்கள். கத்தி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தார்கள். தன் தாய் மற்றும் இளைய சகோதரர்கள் முன்னிலையில் மனோரமா மிருகத்தனமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். தீவிரவாத இயக்கங்களுடன் இவருக்குத் தொடர்பு இருக்கிறது, விசாரிக்கவேண்டும் என்று சொல்லி இழுத்துச் சென்றார்கள். பொழுது சாயும் நேரம், உடல் முழுவதும் காயங்களுடன் அரைகுறை ஆடையுடன் மனோரமாவி்ன் உடல் வீதியோரம் கண்டெடுக்கப்பட்டது.

கிராம மக்கள் திரண்டு சென்று சத்தம் போட்டு கத்திய பிறகே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனவே, அந்த நிர்வாணப் போராட்டம். எதிர்பார்த்தபடியே, மணிப்பூரிலும் மணிப்பூருக்கு வெளியிலும் இது தலைப்புச் செய்தியானது. ஒரு பெண்ணின் உடலை அழித்ததற்குப் பழி தீர்க்க, பன்னிரண்டு பெண்கள் தங்கள் உடலை ஆயுதமாக உருமாற்றிக்கொண்டார்கள்.

உங்களுக்கு எப்படி இந்தத் துணிச்சல் வந்தது? மக்கள் முன்னிலையில் உடைகளை எப்படிக் களைந்தீர்கள்? பன்னிரண்டு பேரில் ஒருவரான லோய்தாம் இபிடோம்பி தேவியின் பதில் இது. 'அதற்கு மேல் எங்களால் அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. இனி தாங்காது என்னும் கட்டத்தில் வெடித்துவிட்டோம்'. தங்கள் கோபத்தை வேறு எப்படி வெளிப்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவி்ல்லை. 'மணிப்பூர் பெண்களுக்கு அது வாழ்வா, சாவா போராட்டம்' என்கிறார் மற்றொரு போராளியான இமா கியானேஸ்வரி.

மணிப்பூரின் வரலாற்று ஏடுகளில், பெண்களின் தீரமிக்கப் போராட்டங்கள் பல பளிச்சிடுகின்றன. டிசம்பர் 1974ல், ஒரு பெண் தன் கணவனை அழைத்துச்செல்ல சாராயக் கடைக்குச் சென்றார். கடை முதலாளி அந்தப் பெண்ணை அடித்துவிட்டார். கோபமுற்ற பெண்கள் ஒன்று திரண்டு, தங்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். மீரா பைபி (Meira Paibi) என்னும் அமைப்பு உருவானது. இதன் பொருள், தீப்பந்தம் ஏந்தும் பெண்கள். இரவு நேரங்களில் கையில் தீப்பந்தத்துடன் பெண்கள் வீதிகளில் ரோந்து சுற்றியதால் இந்தப் பெயர் நிலைத்தது. அரசாங்கத்தின் சாராய கொள்கையை இவர்கள் பலமாக எதிர்த்தனர். சாராயக் கடைகளைக் கும்பலாகச் சென்று தாக்கினர். தீ வைத்தனர். விற்பனையில் இருந்த போதை மருந்துகளை அடித்து நொறுக்கினர். சிறிது சிறிதாக வளர்ந்த அமைப்பு, பிற பிரச்னைகளையும் கையில் எடுத்துக்கொண்டது. பாலியல் பலாத்காரத்துக்கு எதிராகவும், வரதட்சணை கொலைகளுக்கு எதிராகவும், வீட்டு கொடுமைகளுக்கு எதிராகவும் அணி சேர்ந்து போராட ஆரம்பித்தார்கள்.

2000ம் ஆண்டு, இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் என்னும் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக்கொன்றார்கள். 19 வயது இளைஞனும் 57 வயது முதியவரும் அவர்களுள் அடக்கம். இவர்களைக் கொன்றதற்குக் காரணம் எதுவும் இல்லை. இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் துடிதுடித்துப்போன ஐரோம் ஷர்மிளா, தன் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். நவம்பர் 2000ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் அது.

அந்தப் பன்னிரண்டு பேரைப் போல் ஐரோம் ஷர்மிளாவும் தன் உடலையே ஆயுதமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பத்து ஆண்டுகளாக நீர், ஆகாரம் இன்றி போராடிக்கொண்டிருக்கிறார். காலில் செருப்பு அணிவதில்லை. உயி்ர் பிரிவது குறித்து பயமில்லை என்று புன்னகைக்கிறார். பாதுகாப்புப் படையினரால் பெண்களின் உடல்கள் நித்தம் நித்தம் குதறித்தள்ளப்படும் மணிப்பூரில், வேறு எந்த ஆயுதத்தைக் கொண்டு போராடுவது என்று கேள்வி எழுப்புகிறார்.

ஷர்மிளாவின் கோரிக்கை ஒன்றுதான். ஆயுதப் படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (Armed Forces Special Powers Act - AFSPA)உடனடியாக இந்திய அரசு விலக்கிக்கொள்ளவேண்டும். மணிப்பூரில் செயல்படும் 'தீவிரவாத' அமைப்புகளைக் காட்டிலும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆயுதப் படையினரே ஆகப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். பெண்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்குகிறார்கள். சந்தேகம் என்று சொல்லி கொல்கிறார்கள். இவர்களுக்கு மனிதத்தன்மை என்பதே இல்லை. தவிரவும், மணிப்பூருக்குத் தனியே சிறப்பு அதிகாரச் சட்டம் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன? பிரிட்டன் கால கொடுமைகளை 'சுதந்தர' இந்தியா தொடரவேண்டிய அவசியம் என்ன?

இப்படிக் கேட்டால் பதில் வராது வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வோம் என்று புறப்பட்ட ஆயுதம் தாங்கிய அமைப்புகள் மீதும் ஷர்மிளாவுக்கு நம்பிக்கையில்லை. அரசு வன்முறை, அமைப்புகளின் வன்முறை இரண்டையும் அவர் நிராகரிக்கிறார். இயற்கை மீதும் இறைவன் மீதும் இவருக்கு ஆழ்ந்த பக்தி உள்ளது. பைபிள், கீதை, குர்ஆன் மூன்றையும் நான் பெரும் விருப்பத்துடன் படிக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.

இந்தப் பத்து ஆண்டுகளில் ஷர்மிளா பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். பலமுறை விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. ஊடகங்களுடன் உரையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தங்கியிருந்த அறையில், காவலர்கள் சமையல் தயார் செய்து உட்கொண்டிருக்கிறார்கள். உணவின் வாசம் அவர் போராட்டத்தை முறிக்கும் என்று நம்பியிருக்கிறார்கள். எதுவொன்றும் ஷர்மிளாவின் போராட்டத்தை நிறுத்தவில்லை.

2

ஐரோம் ஷர்மிளா குறித்து தீப்தி ப்ரியா மெஹ்ரோத்ரா என்பவர் எழுதி, 2009ல் வெளிவ்ந்திருக்கும் புத்தகம்,Burning Bright. அனுமதி பெற்று ஷர்மிளாவைப் பலமுறை சந்தித்து, உரையாடி, அவரிடம் இருந்தும் அவர் குடும்பத்தினரிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், தகவல்கள் சேகரித்து இந்நூலை அவர் உருவாக்கியிரு்க்கிறார்.

என்றாலும், இது ஒரு முழுமையான, ஆழமான புத்தகம் அல்ல. மணிப்பூரை இன்று உலுக்கிக்கொண்டிருக்கும் பிரச்னைகள் தெளிவாக விவரிக்கப்படவில்லை. மணிப்பூரை முன்னிறுத்தி இந்திய வட கிழக்கு மாநிலங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கவேண்டும். செய்யவில்லை. மணிப்பூர் வலுக்கட்டாயமாக இந்தியாவோடு இணைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள் என்று போகிற போக்கில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். ஆழமான அலசல்கள் இல்லை. மணிப்பூரில் செயல்படும் ஆயுதம் தாங்கி அமைப்புகளின் அரசியல் குறித்து அதிகம் சொல்லப்படவில்லை.

காந்தி, தொரோ, சூ கீ, ரோசா பார்க்ஸ் ஆகியோரோடு ஐரோம் ஷர்மிளாவை ஒப்பிட்டுள்ளார் நூலாசிரியர். ஷர்மிளா மேற்கொள்ளும் போராட்டம், ஒரு வகையில் ஆன்மிகமயமானது என்று பரவசத்துடன் விவரிக்கிறார். புத்தரும் காந்தியும் போதித்த அகிம்சைக்கு ஷர்மிளா செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்கிறார். மதங்கள் எவ்வாறு விரதத்தை வலியுறுத்துகின்றன என்பதற்கு தனியொரு அத்தியாயம். ஷர்மிளாவின் ஆன்மிக பலத்தையும ஆன்ம பலத்தையும் (யோகாசனம், இயற்கை வழிபாடு, ஆயிரம் பக்க தத்துவ கவிதை, பக்த மீராவுடனான ஒப்பீடு) சிலிர்ப்புடனும் சிரத்தையுடனும் பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில், ஓளிவட்டத்துடன் வலம் வரும் ஒரு தேவதையாக ஷர்மிளா உருமாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், மணிப்பூரின் பிம்பத்தோடு, AFSPA-யின் பிம்பத்தோடு, இந்த பிம்பம் ஒட்டாமல், தனித்து நிற்கிறது. இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய குறை இது.

காந்திக்கு இப்படிபட்ட ஒரு பிம்பம் அளிக்கப்பட்டுள்ளது. மார்டின் லூதர் கிங், சூ கி, மண்டேலா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட அதே பிம்பம். அதே, கவர்ச்சித்தன்மை. அதே, ஆன்மிகத்தன்மை. Pure romanticizing. ஆனால், வெளிப்புற யதார்த்தங்களோடு இந்த கனவுலக அம்சங்கள் பொருந்தாமல் நிற்கின்றன. புற உலகப் பிரச்னைகளை ஆன்ம பலமும் ஆன்மிக பலமும் முறியடித்துவிடும் என்னும் கற்பனாவாதம் இந்தப் புத்தகத்தில் உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஷர்மிளா குறித்தும் மணிப்பூரின் போராட்டம் குறித்தும் அறிந்துகொள்ள அதிக நூல்கள் இல்லை என்னும் நிலையில், Burning Bright முக்கியத்துவம் பெறுகிறது. ஓர் எளிமையான அறிமுகமாக இதனை எடுத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு, மணிப்பூரை, அதன் பிரச்னைகளை இன்னும் தீவிரமாக, ஆழமாக ஆராயலாம்.

(Burning Bright: Irom Sharmila And the Struggle for Peace in Manipur, Deepti Priya Mehrotra, Penguin. Rs.275. இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை, கிழக்கு பதிப்பகம் விரைவில் வெளியிடவிருக்கிறது).

9 comments:

சுதிர் said...

மிக முக்கியமான புத்தகம். நல்ல ரிவ்யூ

Anonymous said...

மணிப்பூரில் தற்போது நடந்து வரும் பந்த் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்.

ஆர்.கே said...

//காந்திக்கு இப்படிபட்ட ஒரு பிம்பம் அளிக்கப்பட்டுள்ளது. மார்டின் லூதர் கிங், சூ கி, மண்டேலா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட அதே பிம்பம். அதே, கவர்ச்சித்தன்மை. அதே, ஆன்மிகத்தன்மை. Pure romanticizing. ஆனால், வெளிப்புற யதார்த்தங்களோடு இந்த கனவுலக அம்சங்கள் பொருந்தாமல் நிற்கின்றன. புற உலகப் பிரச்னைகளை ஆன்ம பலமும் ஆன்மிக பலமும் முறியடித்துவிடும் என்னும் கற்பனாவாதம் இந்தப் புத்தகத்தில் உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளது.//

அகிம்சை போராட்டம் உதவாது என்று சொல்ல வருகிறீர்களா?

Ramnathan said...

Look at this site. http://www.manipur.org/ Manipur is such a beautiful place of earth. Like Kashmir, all beautiful places are getting raped. The real terrorists are not outside but inside.

Anonymous said...

your archive page(padhivugal) shows all post titles in google chrome but not in explorer...

Anonymous said...

place a sharing button
below or above your header. Use either any one of the button below

http://addthis.com/web-button-select?where=website&type=bm&bm=bn3&analytics=0

(or)

http://freetellafriend.com/get_button/

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்

மருதன் said...

நன்றி இளா.

ஜோதிஜி said...

அக்கறையுடன் எழுதும் உங்கள் எழுத்தின் வாசகன். இந்த தளம் அமைப்பே வெகு சிறப்பாக உள்ளது. ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த நகைச்சுவை உணர்வாளரை கொஞ்சம் வெளியே கொண்டு வந்து ஒரு இடுகையில் தாருங்கள் மருதன்.