July 5, 2010

போபால் எக்ஸ்பிரஸ்

போபால் பற்றி நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் குறித்து தகவல்கள் சேகரித்துக்கொண்டிருந்தபோது, போபால் எக்ஸ்பிரஸ் திரைப்படம் பற்றி அறிந்துகொண்டேன். 'போபால் பற்றிய மிக முக்கியமான பதிவு', 'நஸ்ருதின் ஷாவின் நடிப்பு மெச்சத்தக்கது', 'பாடல்களும் சினிமாத்தனங்களும் இல்லாத நேர்மையான படம்' என்று இணையத்தில் ஏகப்பட்ட பாராட்டுகள். சரி பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து தேடியபோது, ஆங்கில சப்டைட்டில்ஸ் கொண்ட ஒரு பிரதி உடனே கிடைத்தது.

கதாநாயகன், யூனியன் கார்பைட் நிறுவத்தில் பணியாற்றுகிறான். இயந்திரங்களைப் பழுது பார்ப்பதில் வல்லவன். உருது கவிதைகள் நிறைய சொல்பவன் என்பதால் தொழிற்சாலையிலும் வெளியிலும் அவனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள். அவர்களுள் ஒருவர், ஆட்டோ ஓட்டுனரான நஸ்ருதின் ஷா. முன்னாள் யூனியன் கார்பைட் ஊழியர். ஆள்குறைப்பு நடத்தியபோது, துரத்திவிடப்பட்ட எண்ணற்ற ஊழியர்களுள் ஒருவர். அதனால், இயல்பாகவே யூனியன் கார்பைட் மீது நஸ்ருதின் ஷாவுக்குக் கோபமும் வெறுப்பும் இருந்தது.

அடிக்கடி கதாநாயகனிடம் புலம்புவார். எதற்காக அங்கே அடிமையாக இருக்கிறாய்? என்னதான் மாடாக உழைத்தாலும் உன்னையும் ஒருநாள் துரத்தத்தான் போகிறார்கள். என்னைப் போல் சுதந்தரமாக ஆட்டோ ஓட்டி ஏன் சம்பாதிக்கக்கூடாது? ஆனால், நாயகனுக்கு ஆட்டோ மீது ஆர்வம் இல்லை. யூனியன் கார்பைட் தன்னைக் கைவிடாது என்று திடமாக நம்பினான். தன் மனைவிக்கு இணையாக கார்பைடையும் கவிதையையும் அவன் நேசித்தான்.

ஒரு நாள், கதாநாயகி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறார். வா, கொஞ்சம் வாழ்க்கையை ரசிக்கலாம் என்று நாயகனை ஒரு நடன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் நஸ்ருதின் ஷா. அங்கே ஷப்னா ஆஸ்மி நடனம் ஆடுகிறார். இருவரும் மது அருந்திக்கொண்டே ரசிக்கிறார்கள்.

அதே இரவு, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் விபத்து நிகழ்கிறது. இரவின் பின்னணியில் புகைப்போக்கியில் இருந்து நீல நிறத்தில் புகை வெளியேறுகிறது. அருகில் உள்ள பகுதிகளில் பரவுகிறது. மக்கள் விழுந்தடித்து ஓடுகிறார்கள். ஓடுபவர்கள் அப்படியே சரிந்து விழுகிறார்கள். எங்கும் மரண ஓலம்!

கேளிக்கை முடிந்ததும், கவிதை பாடிக்கொண்டே தடுமாறியபடி தெருவுக்குள் நுழைகிறார்கள் இருவரும். நஸ்ருதின் ஷா முதலில் சுதாரித்துக்கொள்கிறார். கார்பைட் நாய்கள் செய்த வேலை என்று கத்துகிறார். வந்து விழுந்த சிலரை ஆட்டோவுக்குள் ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு நாயகனைப் பணிக்கிறார். நாயகன், மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கே, நோயாளிகள் பெரிய வரிசையில் இருமியபடி காத்திருக்கிறார்கள். ஸ்ட்ரெச்சர்கள் பறக்கின்றன. மருத்தவர்களுக்கு என்ன மருந்து தருவது என்று தெரியவில்லை. கார்பைடை தொலைபேசியில் அழைத்தால், பதிலில்லை.

நான் கார்பைட் ஊழியன்தான், நேரில் சென்று பார்க்கிறேன் என்று ஓடுகிறான் நாயகன். சொல்லுங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மருந்து தரவேண்டும் என்று கார்பைட் மேலாளரிடம் கத்துகிறான். அவர்கள் அவனை உதாசீனம் செய்கிறார்கள். கோபமும் ஏமாற்றமும் பொங்கி வருகிறது.

அதற்குள் நஸ்ருதின் ஷா இறந்துபோகிறார். என்ன செய்து என்று தெரியாமல் விழித்து நிற்கும்போதுதான் சட்டென்று நினைவுக்கு வருகிறது. ஊருக்குப் போன மனைவி, அன்றைய தினம் திரும்பி வருகிறார். ஆட்டோவை எடுத்துக்கொண்டு பறக்கிறான் நாயகன். போபாலுக்குள் நுழைவதற்கு முன்னால் அவளைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும்.

ஆனால் அதற்குள் புகையோடு சேர்ந்து ரயிலும் போபாலுக்குள் நுழைந்துவிடுகிறது. ரயிலில் இருந்து வெளியேறும் அனைவரும் மயங்கி சரிந்து, இறக்கின்றனர். நாயகி மட்டும மீண்டு, அருகிலுள்ள ஒரு டெலிஃபோன் பூத்தில் ஒளிந்திருக்கிறாள். நாயகன் பரவசத்துடன் நாயகியைக் கண்டடைகிறான். தன் தாயைக் கட்டிப்பிடித்தபடி மயங்கிக்கிடந்த ஒரு குழந்தை சட்டென்று கண் விழித்துப் பார்க்கிறது. நாயகனும் நாயகியும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்கிறார்கள். இறந்து போன நஸ்ருதின் ஷாவின பெயர் அந்தக் குழந்தைக்குச் சூட்டப்படுகிறது. சுபம்.

டொமினிக் லாபயர், ஜாவியர் மோரோ எழுதிய Five Past Midnight in Bhopal ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு சதவீதத்தைக்கூட இந்தப் படம் ஏற்படுத்தவில்லை. யூனியன் கார்பைட் விவகாரத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டிலும், நடன அரங்கில் நடைபெற்ற ஆடல், பாடல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மக்கள் என்ன ஆனார்கள் என்று அல்ல, நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வார்களா என்னும் துடிதுடிப்பையே பார்வையாளர்களிடம் ஏற்படுத்த முயல்கிறது இந்தப் படம். நாயகன், நாயகி, நஸ்ருதின் ஷா போல் போபாலும் இதில் ஒரு காரக்டர். அவ்வளவுதான்.

ஒரு மசாலா படமாக இருந்திருந்தால் இப்படி எடுத்திருப்பார்கள். ரயில் வண்டியில் வில்லன் ஒருவன் குண்டு வைத்துவிட்டான். ரயிலில் உள்ளவர்கள் இறந்துவிட்டார்கள். நாயகி மட்டும் தப்பிவிடுகிறாள். குண்டுக்குப் பதிலாக போபால் என்பதால் மட்டும் இது உயர் ரக படமாக மாறிவிடவிலை.

கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய், ரோஜா ஆகிய படங்கள் இலங்கை பற்றியும் பம்பாய் குண்டுவெடிப்பு பற்றியும் காஷ்மீர் பிரச்னை பற்றியும் எந்த அளவுக்கு 'ஆழமாக' பதிவு செய்ததோ, அதே அளவுக்குப் போபால் பற்றியும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.

எரிந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்னையை ஒரு திரைப்படத்தால் எந்த அளவுக்கு நீர்த்துப் போகச் செய்யமுடியும் என்பதைக் காட்ட போபால் எக்ஸ்பிரஸ் உதவும். உலகின் மிகக் கோரமான, மிகக் கொடூரமான ஒரு பேரழிவுச் சம்பவத்தை, நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான உணர்வுப் போராட்டமாகச் சுருக்கிவிடுகிறது இந்தப் படம். அதற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தார்கள் என்று டைட்டில் கார்ட் போட நாம் என்ன தேவதைகளின் உலகிலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

6 comments:

வீ.புஷ்பராஜ் said...

’போபால் எக்ஸ்பிரஸ்’ என்று நீங்கள் ஆரம்பித்ததும், அதெல்லாம் நம் ஊரில் கிடைக்காதே என்றெண்ணியபடியே படிக்க ஆரம்பித்தால், படத்தை பார்ப்பதற்கு அவசியமே இல்லாமல் செய்துவிட்டது தங்களின் விவரணை!

//யூனியன் கார்பைட் விவகாரத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டிலும், நடன அரங்கில் நடைபெற்ற ஆடல், பாடல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மக்கள் என்ன ஆனார்கள் என்று அல்ல, நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வார்களா என்னும் துடிதுடிப்பையே பார்வையாளர்களிடம் ஏற்படுத்த முயல்கிறது இந்தப் படம்//

இந்திய சினிமாக்களில் சில காத்திரமான கதைக்கருக்களை கொண்டிருந்தாலும், இந்த வியாபார சமரசத்தில்தான் படைப்பு மொழியின் உன்னதத்தை தவற விடுகின்றன என்று நினைக்கிறேன்.

இன்னொரு கோணத்தில் இருந்தும் இதை அணுக வேண்டியுள்ளது. ஒரு வலுவான தேசியக் கட்சி(காங்கிரஸ்) சம்மந்தப்பட்ட, அரசியல் சிக்கல்கள் நிறைந்த கதைக்கருவை விமர்சனப்பூர்வமாக அணுகுவதில், அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதில் இப்படத்தின் கர்தாக்களுக்கு அச்சம் இருந்திருக்கலாம். பிரச்னையை நேரடித்தன்மையுடன் அணுகினால் படமே முடக்கப்பட்டாலும் படலாம் என்னும் பயத்தில் யூனியன் கார்பைடை மட்டும் விமர்சிப்பதோடு நிறுத்திக்கொண்டு, கதையமைப்பை வழக்கமான சினிமா பாணிக்கு அமைத்து கொண்டிருக்கலாம்.

காரணம், இன்னும் இங்கே விமர்சனங்களை பொறுத்து கொள்ளும் அளவிற்கு அரசியல் சூழல் முதிர்ச்சி பெறவில்லை என்பது நாம் அனு தினமும் பார்ப்பது தானே.

ஆரோ ஜான் said...

நம்மாளுங்க திருந்தவே மாட்டானுங்க...

Anonymous said...

டைட்டானிக் படம் நினைவுக்கு வருகிறது.

Reader said...

யூனியன் கார்பைட் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா ஒரு டாக்குமெண்டரி எடுத்துள்ளது. பல சினிமா தியேட்டர்களில் அடிக்கடி அதைக் காட்டுவார்கள். அதில் ஹீரோ ஹீரோயினெல்லாம் கிடையாது. கண்ணிழந்த, கைகால் இழந்த கிழவிகளும் குழந்தைகளும் சோற்றுக்காக அழுதுபுலம்பும் காட்சிகளை மட்டுமே உள்ளடக்கிய உயரிய உருக்கச் சித்திரம். சினிமா என்னும் கலையின் அடிப்படையே தெரியாமல் இப்படி அபத்தமாக எழுத இடதுசாரிகளால் மட்டுமே முடியும். வாழ்க தோழர்கள்.

வீ.புஷ்பராஜ் said...

@ Reader

நீங்கள் இங்கே இடதுசாரிகள் என்று குறிப்பிடுவது டாக்குமெண்டரி எடுத்தவர்கள் பற்றியா? இல்லை போபால் எக்ஸ்பிரஸ் சினிமா எடுத்தவர்கள் பற்றியா?

டாக்குமெண்டரி பற்றி என்றால், ஒரு செய்திப்படத்தில் சினிமாத்தனத்துக்கு என்ன அவசியம்?

Anonymous said...

u can have a free email me form in a page as like writer charu and pa.raghavan have in their sites. to have tat visit http://www.emailmeform.com/


if you want to know how the form will look like after creating visit

http://www.ammuseasycooking.com/p/contact-me.html