June 9, 2010

மருத்துவர்கள், ஜாக்கிரதை!

சென்ற பதிவின் தொடர்ச்சியாக, கிழக்கு மொட்டைமாடியில் நடைபெற்ற கூட்டத்தில் சுகுமாரன் ஆற்றிய உரை மற்றும் தொடர்புடைய விவாதங்களின் ஒலி வடிவம் இங்கே உள்ளது. இது ஓர் அறிமுகம் மட்டுமே. இந்தியாவின் மருத்துவக் கொள்கை குறித்து மேலும் சில விவாதங்களை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

மருத்துவர்களுக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பை சுகுமாரன் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். மருத்துவப் பிரதிநிதிகள் எவ்வாறு மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் மருந்தை பிரமோட் செய்கிறார்கள் என்பதையும் விவரித்தார்.

நம் வருமானத்தில் கணிசமான அளவை நாம் மருந்துகளுக்கே செலவிடுகிறோம். இந்த மருந்துகளில் எத்தனை சதவீதம் உயிர் காப்பவை, எத்தனை சதவீதம் தேவையற்றவை? எதை உட்கொள்ளலாம், எதை நிராகரிக்கலாம்? ஏன்?

இன்றைய உலகை மருந்து தயாரி்க்கும் நிறுவனங்கள்தான் ஆள்கின்றன. வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு கலவைகளில் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பெரும்பாலான மருந்துகள் பிற நாடுகளில் தடை செய்யப்பட்டவை என்பதை அறிவீர்களா? இவற்றில் 80 சதவீதத்துக்கும் மேலானவை நமக்கு பயனற்றவை என்பது தெரியுமா?

தாராளமயமாக்கலின் அழுத்தம் காரணமாக, மருந்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மாஃபியா கும்பல்கள் போல் செயல்படுகின்றன. இவர்களது பரிசோதனைச் சாலைகளில் எலிகளும் முயல்களும் மட்டுமல்ல வசதியற்ற ஏழைகளும் அடைந்து கிடக்கிறார்கள். அதிகார வர்க்கத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதால் இவர்களைச் சட்டம் நெருங்குவதில்லை.

எனில் என்னதான் செய்யவேண்டும்? சுகுமாரன் அளிக்கும் தீர்வு இது. டாக்டர் எழுதிக் கொடுக்கும் மாத்திரை, மருந்துகள் அனைத்தையும் வேளா வேளைக்கு விழுங்கிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. டாக்டரிடம் பேசவேண்டும். கேள்விகள் கேட்கவேண்டும். என் உடம்புக்கு என்ன? எதற்காக இந்த மருந்தை உட்கொள்ளவேண்டும்? எதற்காக இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டும்? ஒருவேளை பதில் வராவிட்டால், டாக்டரை மாற்றிவிடுங்கள். பதிலளிக்க முடியாதவர்கள் நிச்சயம் போலி டாக்டர்கள்.

2 comments:

மதுரை சரவணன் said...

நல்ல ஆலோசனை. அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்