July 12, 2010

நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்!

Andy Bichlbaum, Mike Bonanno இருவரும் The Yes Men குழுவைச் சேர்ந்தவர்கள். உலகின் பணக்கார நிறுவனங்களுக்கு இவர்கள் எதிரிகள். பிபிசி தொடங்கி நியூ யார்க் டைம்ஸ் வரை பல செய்தி நிறுவனங்கள் இவர்களைக் கண்டு அலறியிருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அசாதாரணமான விஷயங்களை இந்த இருவரும் நிஜ வாழ்வில் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

எது பிடிக்கவில்லையோ அதுவாக மாறிவிடு என்பதுதான் இவர்களது சித்தாந்தம். புஷ்ஷின் அராஜக ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் அவர் பெயரில் கிண்டலாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தார்கள். (www.gwbush.com என்னும் முகவரியில் தொடங்கப்பட்ட அந்தத் தளம் தற்போது உபயோகத்தில் இல்லை.) என்னை அபாண்டமாகவும் அநியாயமாகவும் விமரிசனம் செய்கிறார்கள் என்று புஷ்கூட வருத்தப்பட்டுக்கொண்டார்.

உலக வர்த்தக மையம் செயல்படும் விதம் அதிருப்தி அளித்ததால், அவர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு போலி வலைத்தளத்தை ஆரம்பித்து, தாங்கள் விரும்பிய செய்திகளைப் பரப்பினார்கள். பல சர்வதேச அமைப்புகள் அசல் உலக வர்த்தக மையம் என்று நினைத்து இவர்களை இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் நாட்டுக்கு வந்து உரையாற்ற அழைத்தார்கள்.

நவம்பர் 12, 2008 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையை 80,000 பிரதிகள் அச்சிட்டு நியூ யார்க்கிலும் லாஸ் ஏஞ்ஜெலஸிலும் விநியோகித்தார்கள். இராக் யுத்தம் முடிந்துவிட்டது என்பதுதான் தலைப்புச் செய்தி. பத்திரிகையைப் படித்த பலரும் இராக் யுத்தம் நிஜமாகவே முடிந்துவிட்டதாக நம்பினார்கள். பரவாயில்லையே, துணிச்சலாக எழுதுகிறார்களே என்று பலரும் ஆச்சரியமடைந்தார்கள். தேசிய அளவில் மருத்துவச் சேவை மையம் தொடங்கப்போகிறோம் என்றது ஓர் அரசு தரப்பு செய்தி. நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு அதிகபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றது இன்னொரு செய்தி. மற்றொன்றில், ஜார்ஜ் புஷ் தன் தவறுகளைப் பட்டியலிட்டு, நான் குற்றவாளிதான் என்று ஒப்புக்கொண்டிருந்தார்.

1984 போபால் பேரழிவுக்காக,டவ் கெமிக்கல்ஸை பழி தீர்க்க விரும்பினார்கள் யெஸ் மென் இரட்டையர்கள். யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கிக்கொண்ட டவ் கெமிக்கல்ஸ் பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு நிவாரணம் அளிக்க மறுத்து வந்தது. யூனியன் கார்பைட் செய்த தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது டவ் கெமிக்கல்ஸின் நிலைப்பாடு.

இந்த முறையும் ஊடகத்தையே யெஸ் மென் தமது ஆயுதமாக எடுத்துக்கொண்டது. வழக்கம் போல், டவ் கெமிக்கல்ஸ் பெயரில் ஒரு போலி வலைத்தளத்தைத் தொடங்கினார்கள். டவ் நிறுவனம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விமரிசனப்பூர்வமான கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. எங்களைத் தொடர்பு கொள்ள ஈமெயில் அனுப்புங்கள் என்று ஒரு சுட்டியையும் திறந்து வைத்தார்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எது அசல் டவ், எது போலி டவ் என்று கண்டுபிடிக்கமுடியாதபடி வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது.

விரித்து வைத்திருந்த வலையில், பிபிசி சிக்கிக்கொள்ளும் என்று யெஸ் மென் எதிர்பார்க்கவில்லை. பிபிசி செய்திப் பிரிவில் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. நாங்கள் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேட்டி எடுக்க விரும்புகிறோம். சம்மதமா? உடனுக்குட்ன் டவ் கெமிக்கல்ஸில் இருந்து பதில் வரும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. பிபிசி உற்சாகமடைந்தது. தேதி குறித்துக்கொண்டார்கள். டிசம்பர் 3, 2004. போபால் சம்பவம் நிகழ்ந்து இருபது ஆண்டுகள் பூர்த்தியானதை நினைவூட்டும் தினம். பிபிசி நிறுவனத்தில் இருந்த பலருமேகூட இந்தப் பேட்டியை படபடப்புடன் எதிர்நோக்கியிருந்தனர். மிக முக்கியமான தினத்தில் ஒளிபரப்பாகப் போகும் மிக அரிதான ஒரு பேட்டி அல்லவா?

ஏற்பாடு செய்தபடியே பேட்டி ஒளிபரப்பானது. அது ஒரு நேரடி ஒளிபரப்பு. இரட்டையரில் ஒருவரான Andy Bichlbaum, தன்னை டவ் நிறுவனத்தின் பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக்கொண்டார்.

சுருக்கப்பட்ட வடிவம் கீழே.

பிபிசி : வணக்கம், டவ் கெமிக்கல்ஸ் சார்பாக Jude Finisterra என்பவர் இன்று நம்முடன் பாரீசில் இருந்து உரையாற்றவிருக்கிறார். யூனியன் கார்பைட் நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் டேக் ஓவர் செய்துள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். வணக்கம், மிஸ்டர் ஜூட். உங்களுக்கு எங்கள் காலை வணக்கம். போபால் விவகாரத்துக்கு இப்போதாவது நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா?

ஜூட் : ஆம், பொறுப்பேற்கிறோம். டவ்வில் எங்கள் அனைவருக்கும் இன்று ஒரு முக்கிய தினம். உலகிலுள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கும் இன்று ஒரு முக்கியமான தினம். பேரழிவு நடந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இன்றாவது அதற்காகப் பொறுப்பேற்றுக்கொள்கிறோமே என்னும் வகையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

12 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு திட்த்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட 1,20,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிவாரண உதவி வழங்கவிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 500 டாலருக்கு மேல் கிடைக்கும்படி செய்துள்ளோம். இது நிச்சயம் போதுமானதாக இருக்காது என்று தெரியும். இன்னும் சொல்லப்போனால், ஓராண்டுக்கான சிகிச்சை செலவுதான் இது. வேறு திட்டம் மூலமாக அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

தவிரவும், யூனியன் கார்பைட் போபாலைவிட்டு அகன்றபோது, டன் கணக்கில் விஷக் குப்பைகளை விட்டுச் சென்றனர். குழந்தைகள் இன்னமும் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி நிலத்தடி நீரை மக்கள் இன்னமும் பருகிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போபால் பகுதியைச் சுத்தமாக்கப்போகிறோம்.

பிபிசி : ஓ, இது நிஜமாகவே மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திதான் ஜூட்.

ஜூட் : அது எங்கள் கடமையல்லவா?

பிபிசி : அப்படியானால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சட்டப்பூர்வமாக நடந்து வரும் வழக்குகளைச் சந்திக்கவும் நீங்கள் தயாரா?

ஜூட் : நிச்சயமாக. அது மட்டுமல்ல, வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றவேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்கப்போகிறோம். மேலும், யூனியன் கார்பைட் மேற்கொண்ட ரசாயன ஆய்வுகள் குறித்த விவரத்தையும் முழுவதுமாக வெளியிடப்போகிறோம்.

டவ் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து உலகம் முழுவதிலும் இருந்து பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் அவை அழிவை ஏற்படுத்தக்கூடியவை என்று கணிக்கிறார்கள். இது குறித்து ஆய்வுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.

பிபிசி : ஓ, இத்துடன் இந்த உரையாடலை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுடன் கலந்துகொண்டு உரையாடியதற்கு மிக்க நன்றி ஜூட்.

ஜூட் : நன்றி.

அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு இந்தப் பேட்டியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். எழுத்தில், பேச்சில், உரையாடலில் இந்தச் செய்தி தீயாகப் பரவிக்கொண்டிருந்தது. மூன்று மணி நேரங்களில், டவ் கெமிக்கல்ஸின் பங்கு 4.2 சதவீதம் இறங்கி, 2 பில்லியன் டாலர் இழப்பானது.

பின்னரே, பிபிசி விழித்துக்கொண்டது. தவறுக்கு வருந்துகிறோம், இப்போது ஒளிபரப்பான செய்தி உண்மையானதல்ல. யாரோ ஒருவர் உள்ளே புகுந்து ஏமாற்றியிருக்கிறார்கள். நாங்களும் ஏமாந்துவிட்டோம். விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். டவ் நிறுவனம், தயவு செய்து மன்னிக்கவும்.

நான்கு தினங்கள் கழித்து Democracy Now இணைய இதழுக்காக, ஆமி குட்மேன் என்பவருக்குப் பேட்டி அளித்தார் 'ஜூட்'.

'தெளிவான திட்டங்களுடன் இந்த நாடகத்தை நடத்தினோம். பேட்டி ஒளிபரப்பாகும் ஒவ்வொரு விநாடியும், இது எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். பிபிசியோ டவ் நிறுவனமோ சுதாரித்துக்கொண்டுவிடும் என்று எதிர்பார்த்தேன். கட், கட் என்று எந்நேரமும் கத்திரி போடுவார்கள் என்று நினைத்தேன். பேட்டி முழுவதுமாக ஒளிபரப்பானதோடு மட்டுமல்லாமல், ராய்டர்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சென்றன.'

தி யெஸ் மென் அரங்கேற்றிய நாடகம் இத்துடன் முடியவில்லை.

பிபிசி வெளியிட்ட மறுப்பைத் தொடர்ந்து, டவ் நிறுவனத்தின் சார்பாக, இரட்டையர்கள் இன்னொரு அதிகாரபூர்வமான அறிவிப்பை டவ் லெட்டர் ஹெட்டில் வெளியிட்டார்கள்.

'இன்று காலை பிபிசியில் ஒளிபரப்பான செய்தி தவறு. பேட்டியளித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. அந்தப் பெயரில் எந்தவொரு நபரும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை. டவ் நிறுவனம் போபால் பேரழிவுக்குப் பொறுப்பேற்றாலும், சம்பவம் நடந்த இடத்தைச் சுத்தப்படுத்தாது. செலவு அதிகம் ஆகாது என்றாலும் அதைச் செய்ய நாங்கள் தயாராக இல்லை. நிவாரணத் தொகை தலைக்கு 500 டாலர் மட்டுமே. இந்தியர்களுக்கு இது அதிகம்தான்.'

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி சென்று சேர்ந்தது. யாரும் சந்தேகிக்கவில்லை. டவ் நிறுவனத்தின் மறுப்பு என்னும் த்லைப்பில் இந்த அறிக்கை மறு நாள் உலா வந்தது. கூகிளின் டாப் தேடலில் இது முதலிடம் பெற்றது.

தி யெஸ் மென் இரட்டையர்களுக்கு இரட்டை வெற்றி. முதல் செய்தியில், டவ் நிறுவனம் போபால் பேரழிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. இரண்டாவது செய்தியில், குற்றத்தை ஒப்புக்கொண்டது. ஆனால், நிவாரணம் அளிக்கமுடியாது, விபத்து நடந்த இடத்தைச் சுத்தப்படுத்தமுடியாது என்று மறுப்பு வெளியிட்டது.

ஆனாலும், இருவருக்கும் ஒரு வருத்தம். 'இந்தச் செய்தி உண்மை என்று எண்ணி இரண்டு மணி நேரங்கள் போபால் மக்கள் கனவு கண்டிருப்பார்கள். அது வருத்தமளிக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகளாக அவர்கள் கண்டு வரும் நிறைவேறாத கனவுடன் ஒப்பிடும்போது இது சிறியதாகிவிடுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். டவ் மேற்கொண்டு எந்தவிதமான உதவியையும் யாருக்கும் செய்யப்போவதில்லை. அவர்களை யார் நம்பினாலும் அவர்கள் ஏமாற்றப்படுவார்கள்.'

10 comments:

சுதிர் said...

விறுவிறுப்பாக நாவல் போல் இருக்கிறது. நம்பவே முடியவில்லை

Anonymous said...

The Yes Man documentary is good one

உஷா said...

When it is not possible to punish them, this is the only option to take revenge. Brilliant plan! Best wishes to Yes Men duo

Anonymous said...

go to design. click layout. click adjust width. set entire blog width to maximum

Anonymous said...

பிரமாதமான பதிவு.

தருமி said...

எப்படி முடிகிறது?

great guys

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

உனமை தான் இதைப் போன்ற நிகழ்வுகளை சினிமாவில் தான் செய்ய முடியும் என்று மக்கள் நினைத்திருந்தாலும், உன்மை வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டிய யெஸ் மென் குழுமத்திற்கு நன்றி, அதை அழகுபட் எடுத்துரைத்த சகோதரர் மருதன் அவர்களுக்கு hats off.

//ஆனாலும், இருவருக்கும் ஒரு வருத்தம். 'இந்தச் செய்தி உண்மை என்று எண்ணி இரண்டு மணி நேரங்கள் போபால் மக்கள் கனவு கண்டிருப்பார்கள். அது வருத்தமளிக்கிறது. //

விளையாட்டு போல் செய்து முடித்தாலும், அவர்களுடைய உன்மை நோக்கமும், அவர்களின் மனிதாபிமானமும் உடலை சிலிர்க்க வைக்கிறது. வாழ்க அவர்களது பனி.

GSV said...

அருமை !!! நீங்க மட்டும் தான் இப்படி எழுத முடியும். வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

இந்தக் கட்டுரையை போபால் வலைப்பூவில் வெளியிட உங்கள் அனுமதி தேவை...

மருதன் said...

தாராளமாக நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம் புலவன் புலிகேசி.