August 19, 2010

பிரிட்டிஷ் பேரரரசு - 1

பிரிட்டன் அப்படியொன்றும் மோசமான ஒரு காலனியாதிக்க நாடு அல்ல என்று நிரூபிக்க விரும்பும் புத்தகங்கள் சிலவற்றை பிரிட்டிஷ் நூலகத்தில் பார்க்க நேர்ந்தது. இந்தப் புத்தகங்களி்ன் வாதம் அநேகமாக இப்படி இருக்கும். பிரிட்டிஷ் பேரரசு என்றாலே ஜாலியன்வாலாபாக், ஆப்பிரிக்கா, ஆதிக்கம், அடிமைத்தனம் என்று ஒரு மோசமான சித்திரத்தை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டிய தேவையில்லை. பிரிட்டன் தன் காலனி நாடுகளுக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது. ரயில் பாதை போட்டுக்கொடுத்திருக்கிறது. ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிறிஸ்தவத்தையும் நல்நெறிகளையும் பரப்பியிருக்கிறது. ஆட்சி நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத நாடுகளுக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக்கொடுத்திருக்கிறது. இவ்வளவையும் மறந்துவிட்டு, பிரிட்டனை குறைகூறுவது நியாயமில்லை.

ஹாரி பிங்கம் (Harry Bingham) எழுதிய This Little Britain புத்தகத்துக்குக் கூடுதல் நோக்கம் ஒன்றும் உண்டு. இந்தப் புத்தகம் காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இன்றைய பிரிட்டிஷ் மக்களுக்கும் பிரிட்டனை மறுஅறுமுகம் செய்கிறது. இன்றைய நவீன உலகம் பிரிட்டனிடம் இருந்து என்னவெல்லாம் கற்றுக்கொண்டுள்ளது, எவ்வளவு தூரம் பிரிட்டனுக்குக் கடமைப்பட்டுள்ளது என்பதை இன்றைய தலைமுறைக்கு ஆதாரங்களுடன் நிரூபித்து தேசபக்தியை வளர்க்கிறார் ஆசிரியர் ஹாரி பிங்கம்.

முதலில், மொழி. பிரிட்டனில் பேசப்படும் ஒரு மொழியாக இருந்த ஆங்கிலம் இன்று உலக மொழியாக மாறியுள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர் எந்த நாட்டுககு வேண்டுமானாலும் போகலாம், எங்கே வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம், யாரிடம் வேண்டுமானாலும் உரையாடலாம். வெவ்வேறு மொழிகளைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்களும் பொதுவான உரையாடல் மொழியாக ஆங்கிலத்தையே தேர்வு செய்கிறார்கள். உலக வர்த்தகங்கள் ஆங்கிலத்தில்தான் நடத்தப்படுகின்றன. சர்வதேச தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்கிறது. ஒருவேளை, பிரிட்டனும் அமெரிக்காவும் உஸ்பெக் மொழி பேசியிருந்தால், உலகின் பொது மொழியாக உஸ்பெக் ஆகியிருக்கும்.

நவீன ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் அரை மில்லியன் ஆங்கில வார்த்தைகள் உள்ளன. அமெரிக்க வெப்ஸ்டரில், 4,50,000 வார்த்தைகள். இரண்டிலும் பொதுவாக உள்ள வார்த்தைகளை விலக்கிவிட்டு பிறவற்றை ஒன்று சேர்த்தால் கிட்டத்தட்ட 7,50,000 வார்த்தைகள் கிடைக்கும். தொழில்நுட்ப, அறிவியல் பதங்களை இத்துடன் சேர்த்தால் எண்ணிக்கை இரட்டிப்பாகலாம். பிரெஞ்சு அகராதியின் பலம் 1,00,000 வார்த்தைகள். ஜெர்மனின் பலம், 1,90,000. இதன் பொருள் ஆங்கிலம் உயர்ந்தது என்பதல்ல. பிரிட்டன் உயர்ந்தது. (அமெரிக்காவை விட்டுவிடுவோம்!)

ஹாரி சொல்வது போல், உண்மையில் ஆங்கிலம்தான் உலகின் பொது மொழியாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறதா? டேவிட் கிரடோல் (David Graddol) எழுதிய The future of English? என்னும் புத்தகம் மாறுபட்ட பார்வையை அளிக்கிறது. மொழியியல் ஆராய்ச்சியாளரான டேவிட்டும் பிரிட்டனைச் சேர்ந்தவர்தான். இவ்ர் கருத்துப்படி, ஆங்கிலம் எதிர்காலத்தில் ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். 'ஒரு மொழி (ஆங்கிலம்)மட்டுமே தெரிந்திருக்கும் (Monolingual) பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்கள் வருங்காலத்தில் வேலை வாயப்பு பெறுவதிலும் அரசியலில் பங்கேற்பதிலும் பல சிக்கல்களைச் சந்திப்பார்கள். தங்களைச் சுற்றியுள்ள சமூகங்களையும் கலாசாரங்களையும் கண்டு அவர்கள் திகைக்கப்போகிறார்கள்!'

மேலும்,ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் உலக மக்கள்தொகையின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துவருகிறது. 2003ம் ஆண்டு சென்சஸ் பியூரேவின் தகவலின்படி, அமெரிக்காவில் ஐந்தில் ஓர் அமெரிக்கர் ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் உரையாடிக்கொண்டிருக்கிறார். ஸ்பானிஷ் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. சீன மொழி ஸ்பானிஷோடு போட்டியிட்டுக்கொண்டிருக்கிறது. மேல் விவரம் இங்கே. இதே கருத்தை முன்வைத்திருக்கும் மற்றொரு ஆய்வாளர், டேவிட் கிறிஸ்டல்.

This Little Britain எடுத்துக்கொள்ளும் அடுத்த துறை, இலக்கியம். யுனெஸ்கோ 1979ல் வெளியிட்ட உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் பட்டியலைப் பாருங்கள். தேவையற்ற பெயர்களைக் கழித்துவிட்டு மிச்சமுள்ள 41 எழுத்தாளர்களின் பெயர்களை எடுத்துக்கொள்ளுங்கள். உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டவர்கள் இவர்களே. முதலிடம், அகதா கிறிஸ்டி. யார்? பிரிட்டிஷ் எழுத்தாளர். இரண்டாவது இடம், பிரிட்டனைச் சேராத ஜூல்ஸ் வெர்ன். மூனறாவது, எனிட் பிளைட்டன். ஆம், பிரிட்டிஷ். நான்காவது, ஷேக்ஸ்பியர். யார்? பிரிட்டனின் பெருமைமிகு அடையாளம். ஐந்தாவது, பார்பரா கார்டலாண்ட். (நூறுக்கும் அதிகமான நாவல்கள் எழுதியிருக்கிறார்). இவரும் பிரிட்டிஷ். ஆறாவது, ஏழாவதையெல்லாம் விட்டுவிட்டு பதினான்குக்கு வருவோம். ஆர்தர் கானன் டாயில். பிறகு, பத்தொன்பது. ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸ்ன். இருபது, சார்லஸ் டிக்கன்ஸ். (ஷேக்ஸ்பியருக்கும் பைபிளுக்கும் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கியிருக்கிறார்.)

கணக்கெடுப்புக்கு முன்பு, தேவையற்ற பெயர்கள் என்று ஆசிரியர் ஹாரி ஒதுக்கியவர்களில் லெனின், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் வருகிறார்கள். இவர்களை ஒதுக்கியதற்குக் காரணம் இவர்கள் எழுதியது எதுவும் இலக்கியம் அல்ல என்பதால். இன்னும் யார், யாரை எந்தெந்த காரணங்களுக்காக இவர் விலக்கிவைத்திருக்கிறார் என்பதை கண்டறியவேண்டும்.

ஆனால், மசாலா காதல் கதைகள் படைத்த பார்பரா கார்ட்லாண்ட் போன்றோரை எப்படி இலக்கியவாதியாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டால் ஆச்சரியமளிக்கும் விடையை அளிக்கிறார் ஹாரி. உன்னத காவியங்களை மட்டுமல்ல கமர்ஷியல் மசாலா கதைகள் எழுதியும் உலகப் பிரபலம் அடைய முடியும் என்பதை உலகுக்குக் காட்டியவர்கள் நாம்தான்!

இன்னமும், அறிவியல், சமூகம், சட்டம், போர்முறை, ராணுவம், பொருளாதாரம் என்று பல விஷயங்கள் குறித்து ஹாரி இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்ப்போம்.

(தொடரும்)

5 comments:

சுதிர் said...

பிரமாதமான ஆரம்பம். தொடருங்கள்

Anonymous said...

Britain has definitely contributed positively you cant deny it.

கலையரசன் said...

ஆங்கிலம் அதிகமானோர் பேசுவதற்கு காரணம் Pax Britanica. ரோமர்களின் சாம்ராஜ்ய யுகத்தில் அந்த சொல் (Pax Romana) பயன்பாட்டுக்கு வந்தது. அதாவது ஒரு சாம்ராஜ்யம் நிலைநாட்டப்பட்ட பின்னர் அங்கு நிலவும் சமாதான சூழ்நிலை. ஆதிக்க மொழி பரவ ஏதுவாகின்றது. உலகில் அரைவாசிப் பகுதியில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்தனர், அல்லது செல்வாக்கு செலுத்தினர். அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ஆங்கிலத்தை கற்றதில் வியப்பில்லை.

SR said...

English is leading the world. Even communist chinese are taking efforts to learn that language

ரமேஷ் said...

//ஆங்கிலம் அதிகமானோர் பேசுவதற்கு காரணம் Pax Britanica. ரோமர்களின் சாம்ராஜ்ய யுகத்தில் அந்த சொல் (Pax Romana) பயன்பாட்டுக்கு வந்தது. அதாவது ஒரு சாம்ராஜ்யம் நிலைநாட்டப்பட்ட பின்னர் அங்கு நிலவும் சமாதான சூழ்நிலை. ஆதிக்க மொழி பரவ ஏதுவாகின்றது. உலகில் அரைவாசிப் பகுதியில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்தனர், அல்லது செல்வாக்கு செலுத்தினர். அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ஆங்கிலத்தை கற்றதில் வியப்பில்லை//

எல்லா நாடுகளில் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள் என்பது பிரிட்டனுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் தானே?