August 11, 2010

கார்ல் மார்க்ஸின் சொத்து மதிப்பு

'கார்ல் மார்கஸ் ரகசியமாக சொத்து சேர்த்து வைத்தார் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருப்பவர்கள் ஏமாறப்போகிறார்கள். கார்ல் மார்க்ஸின் சொத்து மதிப்பு என்ன என்பது இப்போது தெரிந்துவிட்டது' என்கிறார் Ancestry.co.uk என்னும் இணையத்தளத்தின் நிர்வாகி, டான் ஜோன்ஸ்.

1861ம் ஆண்டில் இருந்து 1941ம் ஆண்டு வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எழுதப்பட்ட 60 லட்சம் உயில்களின் தொகுப்பை இந்த இணையத்தளம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோரின் உயில்களும் இதில் அடக்கம். இந்த வரிசையில், சார்லஸ் டிக்கன்ஸ், சார்லஸ் டார்வின், ஆஸ்கர் ஒயில்ட், ஆர்தர் கானன் டாயில், ஷாக்கல்டன், லூயி கரோல், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உயில்கள் இப்போது பொது மக்கள் பார்வைக்கு வந்துள்ளன.

கார்ல் மார்க்ஸ் 1849ம் ஆண்டு லண்டனுக்கு சென்றபோது மூலதனத்தை எழுத ஆரம்பித்தார். 1867ம் ஆண்டு மூலதனத்தின் (Das Kapital) முதல் பாகம் ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. குறைவான பிரதிகளே தொடக்கத்தில் விற்பனையாயின. இதன் ஆங்கில பதிப்பு 1890ம் ஆண்டு வெளிவந்தபோது, 5000 பிரதிகள் உடனடியாக விற்றுத் தீ்ர்ந்தன. உங்கள் முதலீட்டை பெருக்குவதற்கான வழிகளைச் சொல்லி தரும் நூல் என்று சொல்லி அமெரிக்க பதிப்பாளர் இதனை விற்பனை செய்ததாக இன்று சிலர் சொல்லி வருகிறார்கள். கம்யூனிசத்தை உயர்த்திப் பிடிக்கும் மார்கஸ் எதற்காக முதலாளித்துவம் குறித்து எழுதவேண்டு்ம் என்றும்கூட சிலர் கேள்வி எழுப்பினார்கள். இந்தப் புத்தகத்தில் இருந்து அவர் பெருமளவு ராயல்டி வாங்கி குவித்ததாகவும், ரகசியமாக சொத்து சேர்த்தாகவும் குற்றம் சுமத்தினார்கள்.

ஆனால், மூலதனம் மார்க்ஸுக்குப் புகழை மட்டுமே தேடித் தந்தது, செல்வத்தை அல்ல என்கிறது இந்த இணையத்தளம். தன் மகள் எலியனர் மார்க்ஸுக்கு அவர் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு அன்றைய தேதியில் 250 பவுண்ட் மட்டுமே. (ஒரு பவுண்ட் என்பது இன்றைய தேதியில் 73 ரூபாய்). 'மார்க்ஸ் பற்றி தவறாக நினைத்து வருபவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்' என்கிறார் டான் ஜோன்ஸ்.

1883ம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மறைந்த பிறகு, மூலதனத்தின் இறுதி பாகங்களை எங்கெல்ஸ் செப்பனிட்டு பதிப்பித்தார். பொருளாதாரத் துறையின் மூன்று முக்கிய நூல்களில் ஒன்றாக மூலதனம் கருதப்படுகிறது. மற்ற இரு நூல்கள், ஆடம் ஸ்மித்தின் Wealth of Nations மற்றும் கீன்ஸின் General Theory (The General Theory of Employment, Interest and Money).

மார்க்ஸ் மூலதனம் எழுதிக்கொண்டிருந்தபோது, ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோரின் சிந்தனைகள் பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் அவசியம் என்ற கருத்து மேலோங்கியிருந்த சமயத்தில் நாடுகளுக்கு இடையிலான தொழில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தார் ஆடம் ஸ்மித். பெருகும் மக்கள் தொகையால் இயற்கையின் வளம் குறைந்து உணவுத் தட்டுப்பாடு அதிகரிக்கும்; அதன் காரணமாக மோசமான எதிர்வினைகளை நாம் சந்திக்கவேண்டிவரும் என்று எச்சரித்தார் மால்தஸ். மில், கற்பனாவாத சோஷலிசத்தை முன்னிறுத்தினார். ரிகார்டோ, சுதந்தர வர்த்தகத்தை உயர்த்திப் பிடித்து, அதன் பலன்களைப் பட்டியலிட்டார். அதே சமயம், பொருளாதார வளர்ச்சியின் பலன்களை குறிப்பிட்ட சிலரே (நிலவுடைமையாளர்கள்) அறுவடை செய்துகொள்வார்கள் என்றும் கணித்தார்.

இந்தப் பொருளாதார நிபுணர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு, தன்னுடைய சித்தாந்தத்தை வளர்த்தெடுத்தார் மார்க்ஸ். முதலாளித்துவப் பொருளாதார முறை நீடிக்கும்போது மட்டுமே மால்தஸின் பயம் நீடிக்கும் என்றார். கற்பனாவாதத்தை அவர் புறம் தள்ளினார். ரிகார்டோவின் சிந்தனை மார்க்ஸைக் கவர்ந்தது. காரணம், உற்பத்தி குறித்து மட்டுமல்லாமல் விநியோகம் குறித்தும் ரிகார்டோ சிந்தித்ததுதான்.

ஒரு கேக்கை முடிந்த அளவுக்குப் பெரிதாக எப்படி உருவாக்கமுடியும் என்று ஸ்மித் யோசித்தபோது, அதை எப்படி துண்டுகளாக்கி விநியோகிப்பது என்று ரிகார்டோ யோசித்தார். கேக் உருவாக்கத்தில் ஈடுபட்ட அடிமட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் சிறிய துண்டு என்று மார்க்ஸ் கேள்வி எழுப்பினார். கேக்கைத் துண்டு போடும்போது ஏற்படும் முரண்பாடுகள் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் மார்க்ஸ் உரக்கச் சிந்தித்தார்.

முதலாளித்துவத்தின் விளைவுகளை மார்க்ஸ் இங்கிலாந்தின் புறநகர்ப் பகுதிகளிலும் சேரிகளிலும் கண்டறிந்து வெளிப்படுத்தினார். குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு ஓய்வின்றி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை அவர் பதிவு செய்தார். அவர்களுக்கு இழைக்கப்படுவது அநீதி என்றார். லாபம் எப்படி ஈட்டப்படுகிறது என்பதையும் ஓரிடத்தில் ஏழைமையும் மற்றோரிடத்தில் சொத்துடைமையும் எப்படி ஒரே நேரத்தில் சேர்கின்றன என்பதையும் விளக்கினார்.

தன் மகளுக்கு மார்க்ஸ் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு 250 பவுண்ட். பொருளாதார உலகுக்கும் உலகத் தொழிலாளர்களுக்கும் அவர் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பை அளவிடமுடியாது. சந்தேகம் வேண்டாம், மார்க்ஸ் ஒரு செல்வந்தர்தான்.

8 comments:

Anonymous said...

very useful information on karl marx.

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள பொருளாதார அறிஞர்களின் கருத்துக்கள் குறித்து அறிமுகம் செய்யலாமே.

- நாகராஜ்

சுதிர் said...

மார்க்சின் மூலதனம் இன்றைய தேதிக்கு சரிப்பட்டு வராது. அவருடைய உபரி மதிப்பு பற்றிய பார்வை தவறானது என்று பொருளாதாரம் நிராகரித்துவிட்டது. ஆனாலும் தத்துவத்தில் மார்க்சின் சிந்தனைகளை யாராலும் வெல்ல முடியாது

Anonymous said...

மர்ஃபியின் விதி இப்படி சொல்கிறது:

"வாழ்வில் உள்ள சிறப்பான எந்த ஒன்றும் சட்டவிரோதன வழிகளிலோ, அறநெறிக்கு எதிரான வழிகளிலோ அல்லது தீர்த்துக்கட்டும் வழிகளிலோதான் அடைந்தவையாக இருக்கும்"...

(தன்னுடைய ஒரு பெண் குழந்தை உடல் நலமில்லாத போது அதற்கு வைத்தியம் செய்யக் கூட பணமில்லாமல் சிரமப்பட்டாராமே மார்க்ஸ்... மனிதன் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. ஏதேனுமொரு வழியில் அடுத்தவனை விட தான் பெரியவனாய் இருந்திடவே அவனது அடிப்படை விருப்பம். இதை மார்க்ஸ் கடைசி வரை உணரவில்லை.)

Anonymous said...

உபரி மதிப்பை இன்றைய பொருளாதாரம் நிராகரித்து அதன் இடத்தில் எதனை முன் வைத்துள்ளது
-mani

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு.

அருள் எழிலன்

Anonymous said...

http://blog.mohandoss.com/

see this blog...once, i read an essay in his blog...palarukkum yivarai theriyaamal yirukkiradhu...

கவிக்கதம்பம் said...

ungalin eluthukkal anaithume vazhnthu kaattiya manithargalai pattriyum....mattravargalai vazhala thoonduvathaagavum ullathu...

ungalin ezhuththu payanam thodarattum engalin rasippudan