September 16, 2010

ஏசு வரவில்லை என்பதால் மார்க்ஸ் வந்தார்

ஹோவர்ட் ஜின் (Howard Zinn) முதலில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் படித்திருக்கிறார். குறிப்பாக அவரைத் திகைக்க வைத்த வாசகம் இதுதான். 'அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்படும் ஒரு நிறுவனம் அல்ல. அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காகவே செயல்படுகிறது. பதினேழு வயதில் இதை நான் படித்தபோது, அதிர்ச்சியடைந்துவிட்டேன்...'

அவர் தொடர்கிறார். 'டைம்ஸ் சதுக்கத்தில் ஒருமுறை போராட்டம் ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். போருக்கு எதிராகவும், ஃபாசிஸத்துக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்றுகொண்டிருந்தார்கள். சைரன் சத்தம் கேட்டது. சிவிலியன் உடையில் இருந்த காவலர்கள் என்னைத் தாக்கினார்கள். சுதாரித்து எழுந்தபோது ஒரு விஷயம் தெளிவானது. காவல்துறையும் அரசாங்கமும், செல்வம் உள்ளவர்களுக்காகவே செயல்படுகிறது. உங்களுக்கு எந்த அளவுக்கு பேச்சு சுதந்தரமும் கூட்டம் கூடும் சுதந்தரமும் இருக்கிறது என்பது நீங்கள் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர் என்பதைப் பொறுத்தே அமைகிறது.'

அதற்குப் பிறகு மார்க்ஸின் மூலதனம், எங்கெல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு என்று பல நூல்களைத் தேடிப் பிடித்து ஜின் படித்திருக்கிறார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு பலரும் கம்யூனிஸம் தோற்றுவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, ஹோவர்ட் ஜின் மார்க்சியத்தின் மீது நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், சர்ச்சைக்குரியது. ரஷ்யாவில் மார்க்சிஸம் செயல்படுத்தப்படவில்லை. மார்க்சியத்துக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பி்ல்லை. சோவியத்தின் தோல்வி மார்க்சியத்தின் தோல்வியல்ல.

மார்க்ஸை ஏற்கிறேன், ஆனால் லெனினையும் ஸ்டாலினையும் மாவோவையும் நிராகரிக்கிறேன் என்று சொல்லும் அறிவுஜீவி முகாமில் ஒருவர், ஹோவர்ட் ஜின். மார்க்ஸ், எங்கெல்ஸுக்குப் பிறகு, அரசாங்கத்தை மறுதலிக்கும் அராஜகவாதம் (Anarchism) பற்றிய ஆய்வில் அவர் ஈடுபட்டார். எம்மா கோல்ட்மேன், மைக்கேல் பகுனின் ஆகியோரின் எழுத்துகளால் கவரப்பட்டார்.

அப்போது அவருக்கு எந்த எண்ணம் உதித்தது. மார்க்ஸ் மீண்டும் தோன்றினால் என்ன செய்வார்? கம்யூனிஸம் இறந்துவிட்டது என்று சொல்பவர்களை அவர் எப்படி எதிர்கொள்வார்? ஸ்டாலினை ஏற்பாரா, நிராகரிப்பாரா? இன்றைய பொருளாதார நெருக்கடியை அவர் எப்படி அணுகுவார்? பகுனின் போன்றோரின் வாதத்தை எப்படி முறியடிப்பார்?

ஹோவர்ட் ஜின்னின் கற்பனை, Marx in Soho என்னும் நாடகமாக உருப்பெற்றது. (முன்னதாக, எம்மா கோல்ட்மேன் பற்றிய நாடகத்தை அவர் எழுதியிருந்தார்). மிக எளிமையான, சுருக்கமான, ஒற்றைப் பாத்திர நாடகம் அது. மார்க்ஸை முதல் முதலாக வாசிப்பவர்களுக்கும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் இது அடிப்படை ஆவலைத் தூண்டக்கூடியது. மார்க்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஓர் அறிமுகத்தை இது தருகிறது. அவரது அடிப்படை சிந்தனைகள் சிலவற்றையும் தொட்டுச்செல்கிறது. இதன் நூல் வடிவம், மிகச் சிறியது. அறுபது பக்கங்களுக்கும் குறைவு.

இந்த நாடகத்தில், மார்க்ஸ் உயிர்த்தெழுந்து வருகிறார். லண்டனில் முன்னர் வசித்த சோஹோ என்னும் பகுதிக்குத் திரும்பிச் செல்வதுதான் அவர் திட்டம். ஆனால், தவறுதலாக நியூ யார்க்கில் உள்ள சோஹோவுக்கு வந்துவிடுகிறார். பிறகு, மக்கள் முன் கூடி பேச ஆரம்பிக்கிறார்.

'நான் உங்கள் செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். என் சிந்தனைகள் இறந்துவிட்டன என்று அவை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. நூறு ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுததவில்லையா? நான் இறந்துவிட்டேன் என்பது உண்மையெனில், எதற்காக அதை திரும்பத்திரும்ப சொல்லவேண்டும்?'

'நான் உங்கள் வீதிகளில் நடந்து சென்றேன். குப்பைக்கூளங்களையும், தெருக்களின் ஓரத்தில் உறங்கும் ஆண்களையும் பெண்களையும் பார்த்தேன். குளிரில் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். நான் மெல்லிசையைக் கேட்கவில்லை. ஐயா காபி குடிக்க கொஞ்சம் சில்லரை கிடைக்குமா என்னும் குரலைத்தான் கேட்டேன்... (கோபத்துடன்) இதையா நீங்கள் முன்னேற்றம் என்கிறீ்ர்கள்? மோட்டார் கார்களும், தொலைபேசிகளும், பறக்கும் இயந்திரங்களும் கூடவே தெருக்களில் உறங்கும் மனிதர்களும் உங்களுடன் இருக்கிறார்களே. இதுவா வளர்ச்சி?'

'500 பேருக்கும் குறைவானவர்கள், 2000 பில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் உழைப்பவர்களா, அதிகம் நல்ல பண்புகள் கொண்டவர்களா, சமூகத்துக்குத் தேவையானவர்களா? 150 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்ன சொன்னேன்? முதலாளித்துவம் பெரும் செல்வத்தை உற்பத்தி செய்யும். ஆனால், அந்தச் செல்வம் ஒருசிலரிடம் மட்டுமே குவிந்திருக்கும். சொன்னேனா இல்லையா?'

'ஒரு நாள் Principles of Political Economy புத்தகம் தொலைந்துவி்ட்டது. என்னுடைய ரிக்கார்டோ எங்கே என்று ஜென்னியிடம் கேட்டேன். அவர் அதை அடகு வைத்துவிட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. என் ரிக்கார்டோவையா நீ அடகு வைத்துவிட்டாய்? கத்தினேன். அவர் அமைதியாகப் பதிலளித்தார். ஆம், என் மோதிரத்தைப் போலவே உங்கள் ரிக்கார்டோவையும் அடகு வைத்துவிட்டேன்... ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி நடந்துகொண்டிருந்தபோது குளிர் என்னைக் கடுமையாகத் தாக்கியது. அப்போதுதான் உணர்ந்தேன். என் காலணிகள் முந்தைய தினம் அட்கு வைக்கப்பட்டுவிட்டன.'

'எலியனோர் ஓர் அபூர்வமான, விநோதமான குழந்தை. ஓரிரவு, பிரிட்டிஷ் அரசாங்கம் இரு ஐரிஷ் இளைஞர்களைத் தூக்கில் போட்டுவிட்டது. சோஹோவில்தான் இது நடந்தது... அவர்கள் இங்கிலாந்திடம் இருந்து சுதந்தரம் கேட்டதால் இந்தத் தண்டனை... எலியனோர் அழுதுகொண்டே இருந்தாள். நான் அவளிடம் சொன்னேன். அழாதே, குழந்தை. உனக்குப் பதினைந்து வயதுதான் ஆகிறது. அதற்குள், இந்த உலகின் கொடூரங்களில் உன்னைப் பறிக்கொடுத்துவிடாதே. அவள் என்ன சொன்னாள் தெரியுமா? அப்பா, எனக்கு 13 வயதோ 14 வயதோ அல்ல. 15 வயது!'

'இங்கே அமெரிக்காவில், சிறைச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. அவற்றில் யார் இருக்கிறார்கள்? ஏழைகள். சிலர் வன்முறை செயல்கள் புரிந்திருக்கிறார்கள். பெரும்பாலும், திருடர்கள், வழிப்பறிகள், கொள்ளையர்கள், போதை மருந்து விற்பவர்கள். அவர்கள் அனைவரும் சுதந்தர சந்தையை ஆதரிப்பவர்கள்! முதலாளிகள் என்ன செய்கிறார்களோ அதையேதான் இவர்களும் செய்கிறார்கள். ஆனால், சிறிய அளவில்... நானும் எங்கெல்ஸும் இதுபற்றி என்ன எழுதினாம் தெரியுமா? தனி நபர்களைத் தண்டிப்பதைவிட, அவர்களை இயக்கும் சமூகத் தளத்தையே நாம் தகர்க்கவேண்டும்.'

'முதலாளித்துவம் குறித்தும் சோஷலிஸம் குறித்தும்கூட நாம் பேசவேண்டியதில்லை. பூமியில் இருக்கும் செல்வத்தை எப்படி மனிதர்கள் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றி பேசுவோம். ஏழைகளுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை வழங்குங்கள். உணவு, மருந்து, சுத்தமான காற்று, நல்ல நீர், மரங்கள், புற்கள், நல்ல வீடுகள், சில மணி நேர வேலை, நிறைய ஓய்வு. யார் இவற்றுக்குத் தகுதியானவர்கள் என்று கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் தகுதியானவரே.'

'ஏசு திரும்பி வருவார் என்று உங்களில் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் வரமாட்டார். எனவே, நான் வந்தேன்.'

4 comments:

S.Rengasamy - cdmissmdu said...

மார்க்ஸ் மரித்தால்தானே பிறப்பதற்கு. சின்ன சின்ன போராட்டங்களாக, எதிர்ப்புக் குரலாக, இன்னும் அதிக சமூக நீதி வேண்டி எங்கெங்கே முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறதோ அங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Anisha Yunus said...

//தொலைபேசிகளும், பறக்கும் இயந்திரங்களும் கூடவே தெருக்களில் உறங்கும் மனிதர்களும் உங்களுடன் இருக்கிறார்களே. இதுவா வளர்ச்சி?'//

உண்மையான ஆதங்கம். கார்ல் மார்க்ஸுக்கு மட்டுமல்ல, காந்திக்கும் கூட இந்தியாவைப் பார்த்தால் இந்த கேள்விதான் வரும், இல்லையா மருதன். நல்ல நல்ல புத்தகங்கள் படிக்கறீங்க. திருமணத்திற்கு பிறகு அந்த பழக்கம் வெகுவாக குறைந்து போய்விட்டது சுய பச்சாதாபத்தையே உண்டு பண்ணுகின்றது.!

ahamed5zal said...

உண்மையான ஆதங்கம். by faizal

Anonymous said...

அருமையான செய்தி. மார்க்ஸ் மீதான் மதிப்பு இன்னும் உயர்கிறது