September 7, 2010

பிரிட்டிஷ் பேரரசு - 3 : மாக்னா கார்ட்டா

இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாகப் போர் நடைபெற்று வந்தது. 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு போரில், இங்கிலாந்து இழப்புகளைச் சந்தித்தது. குறிப்பாக, ஆங்கிலோ-நார்மன் மக்களின் வாழ்விடமாக இருந்த நார்மாண்டி என்னும் பகுதியை இங்கிலாந்து இழந்தது.

அப்போது இங்கிலாந்தின் மன்னராக இருந்தவர், ஜான். ஏற்கெனவே ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி. கடுமையான வரிவிதிப்பு. போப்புடன் தகராறு. போரிடவும் தெரியவில்லை. வருத்தம், கோபமாக மாறியது. பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என்று ஒரு பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. பிரான்ஸை அடக்குவதைக் காட்டிலும் இந்தக் கலகத்தை அடக்குவது மிகப் பெரிய சவாலாக இருந்தது ஜானுக்கு.

கலகம் செய்துகொண்டிருப்பவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று ஜானுக்குத் தோன்றவில்லை. அவர்களை ஒடுக்கவே விரும்பினார். அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. சீற்றத்துடன் ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கியது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.

பேச்சுவார்த்தை நடத்துவது தவிர வேறு வழி இல்லை ஜானுக்கு. அழைத்துப் பேசினார். பல சுற்றுகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. This Little Britain நூலாசிரியர் ஹாரி பிங்கமின் வார்த்தைகளில் சொல்வதானால், பிரிட்டன் இந்த உலகுக்கு அடுத்த ஆகச் சிறந்த கொடை மாக்னா கார்ட்டா.

ஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த மன்னருக்கும் சரி, கையெழுத்து வாங்கிக்கொண்ட பிரபுக்களும் சரி, இருவருக்குமே மாக்னா கார்ட்டாவின் மகத்துவம் என்னவென்று தெரியும். இது ஒரு வெற்று காகிதம் என்பதைத் தாண்டி வேறிலலை. இது தெரிந்ததால்தான் மன்னரும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் முத்திரையைப் பதிந்தார். இது தெரிந்ததால்தான் பிரபுக்களும் ஒப்புக்கு இதை பெற்றுக்கொண்டனர்.

சாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். சாசனம் உருவான பிறகும் கலகக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டுதான் இருந்தார்கள். எந்தவிதத் தடங்கலும் இன்றி படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஒருவ்ரும் மாக்னா கார்ட்டாவை துணைக்கு அழைக்கவில்லை.

மேலும், மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது என்பது இயல்பான ஒன்று. எப்போதெல்லாம் மோதல் தீவிரமடைகிறதோ அல்லது எப்போதெல்லாம் ராணுவத்துக்கு ஓய்வு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டன் மட்டுமல்ல, மத்தியக்கால ஐரோப்பா முழுவதிலும் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. முடியாட்சிக்கு எதிரான கலகங்கள் வெடிக்கும்போதெல்லாம் மன்னர் தன் படைகளைத்தான் ஏவிவிடுவார். படைகள் செயலிழந்தால், ஒப்பந்தம். ஒரு நாட்டின் அதிபதியாகத் திகழும் மன்னருக்கும், ஆயுதக் குழுக்களைக் கொண்டிருக்கும் பிரபுக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட அதிகாரப் போட்டி நடந்துகொண்டிருந்தது. மாக்னா கார்ட்டா உருவானது இந்தப் பின்னணியில்தான்.

அரசு முத்திரை பதிப்பிக்கப்பட்ட அதே நாள். மாக்னா கார்ட்டா செயலிழந்தும் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மரணங்களு்ம் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கையில் சாசனம் தனது பேழையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. லண்டனைக் கைப்பற்றியிருந்த கலகக்காரர்கள் அதனை திருப்பித் தரவில்லை. அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் அளிக்கிறேன் என்று முழங்கியிருந்த மன்னர், தன் படைகளை திரும்பப் பெறவில்லை. உறக்கத்தில் இருந்ததாகக் கருதப்பட்ட மாக்னா கார்ட்டா, உண்மையில் இறந்து போயிருந்ததைக் கண்டறிந்த அதனை எடுத்துக்கொண்டு சென்று புதைத்தார்கள்.

ஓராண்டு கழிந்த பிறகு, 1216ம் ஆண்டு, பிரெஞ்சு ராணுவம் மீண்டும் பிரிட்டனில் கால் பதித்தது. இவர்களைச் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட ஜான் மன்னர் படைகளை விட்டுவிட்டு ஓடிப்போனார். பிரான்ஸ் பிரிட்டனை வெற்றிக்கொண்ட அந்தத் தருணத்தில் ஜான் தன் வாழ்நாளில் இதுவரை செய்திராத ஒரு வீரச் செயலை செய்தார். இறந்துபோனார். அவர் இடத்தி்ல் பொருத்தப்பட்ட மூன்றாம் ஹென்றி, முதல் காரியமாக மாக்னா கார்ட்டாவைத் தோண்டி எடுத்தார். அவருக்கு ராஜதந்திரம் தெரிந்திருந்தது. பிரான்ஸைத் துரத்தியடிக்கவேண்டுமானால் படைகள் மட்டும் போதாது, மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். மாக்னா கார்ட்டா கைகொடுத்தது.

ஆபத்து சமயங்களில் இன்றைய தேதி வரை உலக நாடுகள் மேற்கொண்டுவரும் ஒரு யுக்தியை மூன்றாம் ஹென்றி வெற்றிகரமாகப் பிரயோகித்தார். தேச பக்தியைத் தூண்டிவிட்டார். நம் நாடு (ஜான் நாடோ ஹென்றி நாடோ அல்ல) அபாயத்தில் இருக்கிறது. நம் மக்கள் எதிரிகளால் தாக்கப்படுகிறார்கள். நமக்கு ஆபத்து. நாம் ஒன்றுசேர்ந்தால்தான் அவர்களை ஒழிக்கமுடியும். எனவே, பொதுமக்களே அரசரின் கீழ் திரளுங்கள். மாக்னா கார்ட்டா என்னும் ஒப்பற்ற உரிமை சாசனத்தில் கீழ் திரண்டு வாருங்கள். மன்னர் உங்களை அழைக்கவில்லை, மாக்னா கார்ட்டா அழைக்கிறது. எதற்காக உயிரூட்டப்பட்டதோ அந்தப் பணியை மகாசாசனம் நிறைவேற்றியது.

மாக்னா கார்ட்டாவில் இடம்பெறும் பெரும்பாலான சட்டத்திட்டங்களை பிரிட்டனே அடுத்தடுத்து உடைத்தெறிந்தது தனிக்கதை. உதவாதச் சட்டங்கள் முதலில் உடைக்கப்பட்டன. 31வது பிரிவு: பிரபுக்களும் அரசு அதிகாரிகளும் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் மரம் எடுத்துச்செல்லக்கூடாது. இது மாக்னா கார்ட்டாவின் ஒரு விதி. தங்களுக்கான கோட்டை வீடுகளைக் கட்டிக்கொள்ள பிரபுக்கள் பொது மக்களுக்குச் சொந்தமான மரங்களை வெட்டியெடுத்து அபகரித்துச்செல்வது வழக்கமாக இருந்த காரணத்தால் இந்த விதி சேர்க்கப்பட்டது. மக்களைத் திருப்திபடுத்துவதற்காக பிரபுக்களால் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவு இது. சேர்க்கப்பட்டது கண்துடைப்புக்காக மட்டுமே என்பதால் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் இந்த விதியை மீறினார்கள்.

இதுவரை நாம் கைப்பற்றியிருந்த காடுகளையும் நதிக்கரைகளையும் நாம் விட்டுக்கொடுக்கவேண்டும் என்கிறது இன்னொரு சட்டப்பிரிவு. காடுகளை வைத்துக்கொண்டு இதுவரை பிரபுக்கள் செய்துவந்த அக்கிரமங்கள் கைவிடப்படவேண்டும் என்றும் இந்தப் பிரிவு கேட்டுக்கொண்டது. பொது மக்களை அரசும் அவரது பிரபுக்களும் எந்த அளவுக்குச் சுரண்டி வந்தனர் என்பதை இந்த விதியைக் கொ்ண்டே புரிந்துகொள்ளமுடியும். கீழே விழுந்திருக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி வந்தால்கூட, திருட்டுக்குற்றம் சாட்டி வந்த காலகட்டம் அது. பழங்களைத் தின்றால் குற்றம். விறகு எடுத்தால் குற்றம். ஏனென்றால், சம்பந்தப்பட்ட மரம் ஏதாவதொரு பிரபு வளைத்துப்போட்ட காட்டின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும். ஐரோப்பாவில் நிலவி வந்த இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களால் உந்தித்தள்ளப்பட்ட கார்ல் மார்க்ஸ் தன் பொருளாதாரத் தத்துவத்தை முற்றிலும் எதிர் திசையில் வடிவமைத்தார்.

மேற்படி சட்ட அம்சம் தவிர்த்து, மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே. அவையும் அலங்காரத்துக்காக மட்டுமே சேர்க்கப்பட்டவை. உதாரணத்துக்கு, சட்டப்பிரிவு 39 மற்றும் 40. எந்தவித சுதந்தர மனிதனும் அநியாயமான முறையில் கைது செய்யப்படமாட்டான், சட்டத்து்க்கு விரோதமாக சிறை வைக்கப்படமாட்டான், நாடு கடத்தப்படமாட்டான் என்கிறது பிரிவு 39. எந்த சுதந்தர மனிதனின் உரிமையும் பறிக்கப்படமாட்டாது, மறுக்கப்படமாட்டாது என்கிறது 40.

இந்த அலங்கார மொழிகளுக்கு உள்ளேயும் ஒரு திருகல் இருக்கிறது. அரசர் அளிக்கும் உரிமைகள் சுதந்தர மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். யார் சுதந்தர மனிதன் என்பதை அரசர்தான் தீர்மானிப்பார். தங்களுககுப் பிடிக்காத கலகக்காரர்களை பிரபுக்கள் நிச்சயம் சுதந்தர மனிதர்கள் என்று அழைக்கப்போவதில்லை. உரிமைகள் வழங்கப்போவதும் இல்லை.

ஹாரி பிங்கம் வியந்து பாராட்டும் சட்டப்பிரிவு 61, மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்தான் என்று அறிவிக்கிறது. 'மன்னர் சட்டத்தை மீறினால், அவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், அவர் நிலங்கள் பிடுங்கப்படும்'. அரசர்தான் எல்லாமும் என்று இருந்து வந்த காலத்தில் இது புரட்சிகரமான ஓர் அம்சம் என்று திகைக்கிறார் ஹாரி பிங்கம். ஆனால், எந்த மன்னரையும் மாக்னா கார்ட்டாவைப் பயன்படுத்தி பொது மக்கள் பதவியில் இருந்து இறக்கவில்லை. பிரபுக்குலத்தைச் சேர்ந்த எந்தவொரு கோமகனையும் மாக்னா கார்ட்டா தண்டிக்கவில்லை. விதிகளை மீறும் எந்தவொரு செல்வந்தரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில்லை.

மாக்னா கார்ட்டா என்பது ஒரு அரசு ஏற்பாடு. அது மக்களுக்கானதல்ல. தவறிழைக்கும் மன்னரைப் பதவியில் இருந்து தூக்க வேறு ஒரு புதிய ஏற்பாடு தேவைப்பட்டது. அது பின்னால்.

(தொடரும்)

1) Magna Carta
2) The Secret History of the Magna Carta

6 comments:

kashyapan said...

பல பு த்தகங்களைப் படிக்கிறோம். அவற்றின் சாரத்தை மற்றவர்களோடு பங்கு பெரும்போது நமது புரிதல் மெலும் விரிவடைகிறது.மாக்னா கர்ட்டா பற்றிய என்னுடைய ஞானம் உங்ளைப் படித்தபின் மேலும் விரிவடைந்துள்ளது.
வாழ்த்துக்கள் மருதன்....காஸ்யபன்.

சுதிர் said...

A refreshingly new approach to magna carta. congrats

Anonymous said...

நல்ல தொடர் மருதன்

Anonymous said...

மரியாதை- ஒரு பார்வை:

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post.html


---d........

Anonymous said...

உங்களின் இந்திய பிரிவினை புத்தகத்தில் நீங்கள் மூன்றே மாதத்தில் ஒரு தேசத்திற்கே பைத்தியம் பிடித்து விட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். ரயில் முழுவதும் பிணங்கள்,ரத்தம் என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். ஆனால் எத்தனை பேர் தோராயமாய் இறந்து போனார்கள் என்பதை சொல்லவில்லை. Train to Pakistan என்ற குஷ்வந்த்சிங்கின் நாவலைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது என் நண்பன் பிரிவினையின் போது கிட்டதட்ட 50லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்று சொன்னான். இது நிஜமா? 50லட்சம் பேரா இறந்து போனார்கள்?

மருதன் said...

d: இந்தியாவுக்குப் பைத்தியம் பிடித்தது உண்மை. பிரிவினையின்போதும் அதைத் தொடர்ந்த வன்முறையின் போதும் இறந்தபோனவர்களின் எண்ணிக்கையை இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சத்துக்குள் சிலர் அடக்குகிறார்கள். முடமாகிப்போனவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கூட்டினால் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தொட்டுவிடும். சரியான எண்ணிக்கை என்ன என்பது தெரியப்போவதில்லை.