October 7, 2010

முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள் - 1

1

1999ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள சியாட்டலில் உலக வர்த்தக நிறுவனம் (WTO) சர்வதேச மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக, 135 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சியாட்டலில் குழுமியிருந்தனர். உலகமயமாக்கலை உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து அவர்கள் விவாதிக்க இருந்தனர். இவர்களை வரவேற்க, உலகெங்கிலும் இருந்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கே திரண்டு வந்தனர். சியாட்டல் வீதிகளை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். பல வண்ணப் பதாகைகளை இவர்கள் ஏந்திவந்தனர். அவற்றுள், சில. முதலாளித்துவம் ஒழிக! WTO ஒழிக! விவசாயிகளை விழுங்கும் பெரும் முதலாளிகளை எதிர்ப்போம்! உலகயமாக்கலே, உலகத்தைவிட்டு வெறியேறு!

இவர்களில் சிலர், முதலாளித்துவத்தின் அடையாளம் என்று தாங்கள் கருதுவதைத் தாக்க ஆரம்பித்தனர். ஸ்டார்பக்ஸ், மெக்டொணால்ட், கேப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. பலர் வீதிக்கு நடுவே அமர்ந்துகொண்டு பாடல்கள் பாடினர், கோஷமிட்டனர். சிலர், அப்போதைய அமெரிக்கப் பிரதமர் பில் கிளிண்டனைப் பரிகசிக்கும் டி ஷர்ட்டுகளை அணிந்துகொண்டு ஊர்வலம் சென்றனர். சியாட்டில் வீதிகளைச் சுற்றிவந்த சில ஆர்ப்பாட்டக்காரர்கள், முதலாளித்துவத்துக்கு எதிரான துண்டறிக்கைகளை அமெரிக்கர்களுக்கு விநியோகித்தனர்.

இவர்கள் சியாட்டலில் இருக்கும்வரை மாநாடு நடைபெறாது என்பதை உணர்ந்த உலக வர்த்தக அமைப்பினர் கவலைகொண்டனர். காவல்துறையினர் திரண்டு வந்து கண்ணீர் புகை வீசி, ரப்பர் குண்டுகளால் சுட்டு, பலரைக் கைது செய்தனர். ஆர்ப்பாட்டம் அடக்கப்பட்டது என்றாலும், மாநாடு தடைப்பட்டது பற்றிய செய்தி உலகம் முழுவதும் வெளிவந்து பலரைச் சங்கடத்துக்கு உள்ளாக்கியது. ‘உலகம் முழுவதும் நடந்துவரும் இந்தப் போராட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டால்; ஆங்காங்கே உதிரியாகவும் பரவலாகவும் வெளிப்படும் எதிர்ப்புகள் ஒன்று திரட்டப்பட்டால், தற்கால வரலாறை வேறு மாதிரியாக மாற்றி எழுதமுடியும்!’ நோம் சாம்ஸ்கி 1990களில் உரையாற்றியபோது தன் ஏக்கத்தை இப்படிப் பகிர்ந்துகொண்டார்.

அப்போதிருந்ததைக் காட்டிலும் நிலைமை இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கிறது. உலகமயமாக்கலுக்கு எதிராகவும் தாரளமயமாக்கலுக்கு எதிராகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் ஒரு புதிய வீச்சோடு தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி உலகம் முழுவதிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சீட்டுக்கட்டு சரிவது போல் பல நாடுகளின் பொருளாதாரக் கட்டுமானம் அடுத்தடுத்து சரிந்துகொண்டிருக்கின்றன. இதை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வி என்று சில பொருளாதார நிபுணர்களும், இல்லை இது தவிர்க்க முடியாத ஒரு சரிவு மட்டுமே என்று வேறு சிலரும் சொல்லிவருகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும், வரலாற்றில் முதலாளித்துவம் சந்தித்த முதல் வீழ்ச்சி அல்ல இது. இறுதி வீழ்ச்சியும் அல்ல. வளர்ச்சி, அபரிமிதமான முன்னேற்றம், வீழ்ச்சி, சரிவு, தேக்கம், மீண்டும் வளர்ச்சி என்று தொடர்ச்சியாக பல்வேறு நிலைகளை முதலாளித்துவம் கடந்து வந்துள்ளது. அதே சமயம், செழித்து வளர ஆரம்பித்த சமயம் தொடங்கி இன்றைய தேதி வரை, தொடர்ச்சியாகப் பல்வேறு எதிர்ப்புகளை முதலாளித்துவம் சந்தித்து வருகிறது.

2


பண்டங்களை உருவாக்குவதற்கான உற்பத்திச் சாதனங்களும் கருவிகளும் தனியார் முதலாளிகளிடம் இருக்கவேண்டும் என்பது முதலாளித்துவத்தின் சாரம். உற்பத்திப் பொருள்களையும் சேவைகளையும் விற்று அதன் மூலம் அளவற்ற லாபத்தை தனி நபர்களும் தனியார் நிறுவனங்களும் அடையும்போது, அந்நாட்டில் சுதந்தரமும் செழிப்பும் பல்கிப் பெருகும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.

சுதந்தரச் சந்தை பொருளாதாரம் என்றும் முதலாளித்துவம் அழைக்கப்படுகிறது. இதன்படி, யார் வேண்டுமானாலும் எவ்வளவு சொத்து வேண்டுமானாலும் சேர்க்கலாம், அதை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம். சொத்து என்று இங்கே குறிப்பிடப்படுவது ஒரு புத்தகத்தையோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியையோ மட்டுமல்ல. அந்தப் புத்தகத்தையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் உருவாக்குவதற்கான உற்பத்திக் கருவிகளையும் சேர்த்தே. சுதந்தரச் சந்தையில் யாரும் எதையும் உருவாக்கி, விற்க, வாங்கமுடியும். ஒரு பொருளுக்கான அல்லது சேவைக்கான கொள்முதல் விலையை அதை உற்பத்தி செய்பவர்கள் நிர்ணயிக்கமுடியும். இவ்வாறு செய்வதன் மூலம் சந்தையில் ஒரு போட்டி மனப்பான்மை உருவாகும் என்றும், ஒருவரைவிட இன்னொருவர் குறைந்த விலைக்குப் பொருள்களை வழங்க முன்வருவார்கள் என்றும் முதலாளித்துவம் நம்புகிறது.

ஒரு நாட்டுக்குள் மட்டுமல்ல உலகம் தழுவிய அளவிலும் வர்த்தகங்களை நடத்தமுடியும் என்பதை முதலாளித்துவம் நிரூபித்தது. முழு உலகமும் ஒரு திறந்த சந்தையாக மாறிப்போனது. உங்களிடம் விற்பனைக்கு ஒரு பண்டம் இருந்தால் அதை இந்த உலகின் எந்த மூலைக்கும் கொண்டுசெல்லமுடியும். வளமில்லா பகுதி என்று இவ்வுலகில் இனி எந்தப் பகுதியும் இருக்காது. எங்கே முதலாளித்துவம் கால் பதிக்கிறதோ, எங்கே சுதந்தரச் சந்தை நிலவுகிறதோ அங்கே ஏழைமை குடியிருக்காது.

முதலாளித்துவப் பொருளாதாரத்துக்குப் பலத்த ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. ஏழை நாடுகள் முதலாளித்துவத்தை ஒரு மீட்புத் தத்துவமாகக் கண்டனர். முதலாளித்துவம் உலக மக்களுக்கு நன்மையே செய்கிறது என்று பொருளாதார வல்லுனர்கள் ஆதாரக்கட்டுரைகள் எழுதினார்கள். உலக ஊடகங்கள் வரவேற்றன.

நவீன உலகளாவிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் தொடக்கப்புள்ளி, மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி. இதன் பலன்கள் முதலில் தென்பட்டது பிரிட்டனில். 1780ம் ஆண்டு தொடங்கி பிரிட்டன் தனித்துவமாக மின்னத்தொடங்கியது. இயந்திரங்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. பிரிட்டிஷ் வர்த்தகர்கள் இயந்திர உற்பத்தியில் அதிக முதலீடு செய்தனர். வெப்பத்தாலும் நீராலும் இயங்கக்கூடிய பெரும் இயந்திரங்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டன. விவசாயம், உற்பத்தி, சுரங்கம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று அனைத்து துறைகளிலும் இயந்திரங்கள் நுழைந்தன. சமூக, அரசியல் வாழ்வில் இயந்திரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பிரிட்டனில், பஞ்சு உற்பத்தி 1785ம் ஆண்டுக்கும் 1850ம் ஆண்டுக்கும் இடையில் 50 மடங்கு அதிகரித்தது. இரும்பு, எஃகு ஆலைகள் பெருகின. புதிய கண்டுபிடிப்புகளும் வர்த்தக முறைகளும் உருவாயின. தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தியும் அதன் மூலம் லாபமும் பெருகியது. இயந்திரமயமாக்கல் ஒரு புதிய அரசியல், சமூக மற்றும் வர்த்தக சித்தாந்தத்தை முன்மொழிந்தது. வர்த்தகம் செய்ய முன்வருபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு விதிக்கக்கூடாது. எந்தவிதமான குறுக்கீடும் கூடாது. முதலாளிகளை சுதந்தரமாக இருக்கவிட்டால் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிப்பார்கள். தொழில்மயமாக்கலைத் துரிதப்படுத்துவார்கள். லாபத்தைப் பெருக்குவார்கள். நாட்டின் வருவாயை உயர்த்துவார்கள். இந்தப் புதிய சித்தாந்தத்தை பிரிட்டனும் பிரிட்டனைத் தொடர்ந்து பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

தொழில்மயமாக்கத்தால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைச் சந்தித்தது. பிரிட்டனின் வழியைப் பிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பின்பற்றத் தொடங்கின. இயந்திரங்களின் பயனை முதல் உலகப் போர் தொடங்குவதற்கு சற்று முன்னால், 1914ம் ஆண்டு உலகம் கண்டுகொண்டது. 1780களில் இருந்த உற்பத்தியைக் காட்டிலும் இப்போது 50 மடங்கு உற்பத்தி பெருகியிருந்தது.

அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த அதே சமயம் அபரிமிதமான ஏழைமையும் உருவாகிக்கொண்டிருந்தது. உற்பத்திக் கருவிகளைச் சொந்தமாக வைத்திருந்த முதலாளிகள் செழிப்படைந்து கொண்டிருந்த அதே சமயம், இந்த ஆலைகளில் பணியாற்றிக்கொண்டிருந்த கடைநிலை ஊழியர்கள் வறுமையில் சிக்கித் தவித்தனர். அவர்கள் வாழ்வில் சிறு வெளிச்சமும் இல்லை. மாறாக, இயந்திரமயமாக்கல் அவர்களைக் கசக்கிப்பிழிந்துகொண்டிருந்தது. தொழிலாளர்கள் அதிக மணி நேரத்துக்குப் பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யவேண்டியிருந்த சூழல், அசுத்தமாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது. உயிர் வாழ்வதற்கு உணவு சமைக்கத் தேவைப்படும் கூலி மட்டுமே அவர்களுக்க வழங்கப்பட்டது. தொழில்துறை நகரமாகத் திகழ்ந்த வடக்கு பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரம், தொழிலாளர்களின் நரகமாகவும் திகழ்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தப் பகுதிக்கு வருகை தந்தவர்கள் அதிர்ந்துபோகும் அளவுக்குக் கொடுமையான ஓரிடமாக இப்பகுதி இருந்தது.

நிலக்கரிச் சுரங்கங்களில் குழந்தைகள் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டனர். கரி நிரப்பப்பட்ட வண்டிகளை இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு விலங்குகளைப் போல் இழுத்துச்சென்றனர். பணிக்கு இடையில் அவர்கள் காயமுற்றாலோ இறந்துபோனாலோ ஆலை முதலாளிகள் வருந்துவதில்லை. அவர்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழந்தைகளைத் தருவித்துக்கொண்டனர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் அனைவரும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக, காலை முதல் இரவு வரை பணியாற்றினால்கூட அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வருவானம் கிடைக்கவில்லை. இதனால் வெறுப்புற்ற, கோபம்கொண்ட பல தொழிலாளர்கள் முதலாளித்துவத்துக்கு எதிராக போராட ஆரம்பித்தனர்.

3


1811ம் ஆண்டு, நாட்டிங்காம்ஷயர், லங்காஷயர், யோர்க்ஷயர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் துணி ஆலைகளில் உள்ள இயந்திரங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். தங்கள் வாழ்கைக் கெடுக்கும் இயந்திரங்களை இவர்கள் எதிரிகளாகக் கண்டனர். இயந்திரங்கள் பணியாற்றுவதை அழித்துவிட்டால் தீர்வு கிடைக்கும் என்பது இவர்கள் எதிர்பார்ப்பு. இந்த எண்ணம் வேறு பல தொழிலாளர்களுக்கும் இருந்தது. இவர்கள் லுடிட்டிகள் (Luddities) என்று அழைக்கப்பட்டனர். நெட் லுட் (Ned Lud) என்னும் தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. இயந்திரங்கள் மனிதர்களைவிட துரிதமாகவும் அதிகப்படியாகவும் இயங்குவதால் முதலாளிகள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இயந்திரங்களைப் பயன்படுத்திவந்தனர். இயந்திரங்களை அப்புறப்படுத்தி நம் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்று நெட் லுட் கருதினார். லுடிட்டியின் சிந்தனை தொழிலாளர்கள் மத்தியில் சிறிது காலம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது. நாளடைவில், இவர்கள் இயக்கம் அடக்கப்பட்டது. லுடிட்டியின் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். பலர், தூக்கிலிடப்பட்டனர்.

1834ம் ஆண்டு, பிரிட்டனில், டார்ஸெட் என்னும் பகுதியில் உள்ள Tolpuddle என்னும் கிராமத்தில் ஆறு விவாசயத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். முதலாளிகளின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க இவர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டிருந்ததால் இந்தத் தண்டனை. இந்த ஆறு பேர் நாடு கடத்தப்பட்ட செய்தி அந்தக் கிராமத்தைத் தாண்டி நாடு முழுவதும் சென்று சேர்ந்தபோது, பலர் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். வேறு வழியின்றி, இரண்டு ஆண்டுகள் கழித்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டிருந்தன. தொழிற்சங்கங்கள் அமைத்துக்கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஓரணியில் திரள்வதும் விவாதித்துக்கொள்வதும் கண்டிக்கப்பட்டது. இயந்திரங்களை எப்படி வெற்றிக்கொள்வது என்று தெரியாமல் தொழிலாளர்கள் திகைத்து நின்றனர். உடல் உழைப்பு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. சமூக வாழ்வின் சவால்கள் அவர்களை மிரட்சி கொள்ள வைத்தது. எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து தூக்கியெறியப்படலாம், கிடைத்துவரும் கூலியும் நின்றுபோகலாம் என்னும் யதார்த்தம் அவர்களை அச்சுறுத்தியது. மாற்று தேடி பலர் மதத்திடம் தஞ்சம் புகுந்தனர். மார்க்சிய சிந்தனையாளரான ஜார்ஜ் தாம்சன் தொழிலாளர்களின் இந்தக் கையறு நிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ‘நாகரிக மனிதனுக்கு இருக்கும் பலவீனத்தின் வெளிப்பாடு மதம் ஆகும். இயற்கையைப் புரிந்துகொள்ளவும் வெல்லவும் முடியாத ஆதிகால மனிதன் மாய வித்தையின் ஆதரவை நாடியது போல், வர்க்க சமுதாயத்தைப் புரிந்துகொள்ளமுடியாத நாகரிக மனிதன், சமயத்தின் துணையை நாடுகிறான்.’ மதம் அவர்களை அமைதிப்படுத்தியது. இந்த உலகில் இல்லாவிட்டாலும் மேலுலகில் நிச்சயம் பொற்காலம் உண்டு என்று அவர்கள் காத்திருந்தனர்.

மதம் என்னும் அமைப்பு முதலாளிகளுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. தொழிலாளர்களின் விரக்தியையும் மன உளைச்சலையும் ஏக்கத்தையும், மிக முக்கியமாக, கோபத்தையும் மதம் நீர்த்துபோகச்செய்தது. மதம் ஒரு பக்கம் சேவையாற்றிக்கொண்டிருந்த அதே சமயம், முதலாளிகள் சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினர். தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யும் சட்டங்களை 1800களில் பல ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்தன. அமெரிக்கா, இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நியூ யார்க்கில் பதினாறு மணி நேரங்கள் குழந்தைகள் கடும்வேலை செய்துவந்தனர்.

இயந்திரமயமாக்கலில் இருந்து எந்தவொரு நாடும், எந்தவொரு தனிநபரும் தப்பவில்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்னும் நிலையே இருந்தது. பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்துக்கு மற்ற நாடுகள் ஆளாயின. காரணம், தொழில் புரட்சி அவர்களுக்கு ஆயுதங்களையும் அதன் மூலமாக அளவற்ற அதிகாரத்தையும் அளித்திருந்தது. இயந்திரத் துப்பாக்கி தொடங்கி போர்க்கப்பல்கள் வரை அனைத்தும் அவர்களிடம் இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன், சீனாவுடன் வர்த்தக உறவு ஏற்படுத்திக்கொள்ளமுடிவு செய்தது. ஆனால், சீனாவுக்கு இதில் விருப்பமில்லை. பிரிட்டன் அளிப்பதாகச் சொன்ன எந்தவொரு பண்டமும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ஆனால், புதிய சந்தைகளைக் கண்டறிந்து தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ளவேண்டிய சூழலில் இருந்தது பிரிட்டன். உதாரணத்துக்கு, இந்தியா போன்ற காலனி நாடுகளில் இருந்து தயாராகி வரும் பருத்திஆடைகளை பிற நாடுகளுக்கு விற்று லாபம் சம்பாதிக்க பிரிட்டிஷ் முதலாளிகள் விரும்பினார்கள். எனவே, சீனா போன்ற மக்கள் வளம் கொண்ட பெரிய சந்தை அவர்களுக்குத் தேவைப்பட்டது. சீனா ஒத்துழைப்பு தர மறுத்தபோது, பிரிட்டன் பின்வாசல் வழியாக ஒரு புதிய பண்டத்தைச் சீனாவுக்கு அறிமுகப்படுத்தியது. அது, ஓபியம்.

மதம் ஒரு அபின் என்றார் கார்ல் மார்க்ஸ். தங்கள் கவலைகளை மறந்து, கற்பனையான ஒரு பொன்னுலகத்தில் மிதக்க மதம் என்னும் அபின் உதவியது போல் ஓபியம் சீனர்களுக்கு உதவியது. மக்கள் போதை மருந்துக்கு அடிமையாவதை விரும்பாத சீன அரசு, ஓபியத்தைத் தடை செய்யமுயன்றது. 1839ம் ஆண்டு, பிரிட்டன் சீனா மீது போர் தொடுத்தது. 1842ம் ஆண்டு வரை நீடித்த இந்தப் போரில், பிரிட்டனின் ராணுவப் பலத்தை எதிர்கொள்ளமுடியாமல் சீனா, தோற்று, அடிபணிந்தது. 1856 தொடங்கி 1860 வரை பிரிட்டன், பிரான்ஸுடன் இணைந்து சீனாவை முற்றுகையிட்டது. சீனா கடைபிடித்துவந்த மூடிய பொருளாதாரக் கொள்கை ஓபியம் யுத்தங்களால் வலுக்கட்டாயமாக தகர்க்கப்பட்டது. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் சீனாவின் சந்தையை முற்றுகையிட ஆரம்பித்தன. ஜப்பானில் ஆட்சியாளர்களான ஷோகன்கள், சீனர்களைப் போலவே பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்வதைத் தவிர்த்து வந்தபோது, 1853 தொடங்கி பத்து ஆண்டுகள் அமெரிக்கா ஜப்பானை ஆக்கிரமித்து, மிரட்டி வழிக்குக்கொண்டுவந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் பெரும்பாலான ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா ஆகியவை ஐரோப்பாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்துசேர்ந்தன.

4

சமூக அளவில் தொழிலாளர்களும் ஏழைகளும் திணறிக்கொண்டிருந்தபோது, அரசியல் தளத்தில் மக்களுக்குச் சமஉரிமை அளிப்பது பற்றி பல நாடுகள் சிந்தித்துக்கொண்டிருந்தன. அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படவேண்டும், ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்தன. முதலாளித்துவமும் இயந்திரமாக்கலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த அதே 1800களில்தான் சோஷலிசமும் பிறந்தது. சம உரிமைக்கான முழக்கங்கள் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார தளங்களிலும் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று சோஷலிஸ்டுகள் வாதிட்டனர். முதலாளிகளின் நலன் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன் குறித்தும் சிந்திக்கப்படவேண்டும் என்று சோõஷலிஸ்டுகள் கோரிக்கை விடுத்தனர்.

போட்டியும் பொறாமையும் அல்ல, கூட்டுறவும் ஒருங்கிணைப்புமே சமூகத்தை வழிநடத்தவேண்டும் என்று இவர்கள் விரும்பினர். இப்போது இருப்பது போல் அல்லாமல் வேறொரு புதிய வழியில் ஆளப்பட்டால், ஏழைமையை விலக்கமுடியும் என்று இவர்கள் நம்பினர். இயந்திரமயமாக்கலைக் கொண்டு முதலாளிகள் மட்டுமின்றி தொழிலாளர்களும் பயன் பெறமுடியும் என்று ஆரவாரத்துடன் அறிவித்தனர்.

சோஷலிசம் மக்களுக்குப் புதிய நம்பிக்கையை வழங்கியது. பிரிட்டன் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சோஷலிச சிந்தனையாளராக ராபர்ட் ஓவன் அறியப்பட்டிருந்தார். ஒரு துணி ஆலையில் உதவியாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ராபர்ட் ஓவன், பருத்தி ஆலை ஒன்றின் உரிமையாளராக உயர்த்தார். இதுநாள் வரை முதலாளிகள் நடத்தி வந்ததைப் போன்று இல்லாமல், ஒரு புதிய தொழிற்சாலையை இவர் நிர்மாணிக்க விரும்பினார். இதுநாள்வரை உலகம் கண்டிராத, தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியாத, அவர்களை அடிமைப்படுத்தாத ஓர் ஆலையை இவர் வடிவமைக்க விரும்பினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள நியூ லானார்க் என்னும் இடத்தில், ஓவன் ஓர் இயந்திர குடியிருப்பை வடிவமைத்தார். இங்கே இரண்டாயிரம் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டனர். சுத்தமான, சுகாதாரமான வாழ்விடமாக அது இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
இருபத்து நான்கு மணி நேரமும் வேலையில் மட்டுமே ஈடுபடவேண்டிய அவசியம் தொழிலாளர்களுக்கு இங்கே இல்லை. ஆலைக்கும் குடியிருப்புக்கும் அருகே இசை அரங்கமும் நாடக அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன. 1825ம் ஆண்டு, இன்னமும் மேம்படுத்தப்பட்ட ஒரு சமுதாயக்கூடத்தை இண்டியானாவில் உள்ள நியூ ஹார்மோனியில் உருவாக்கினார் ஓவன். எதிர்காலத்தில் அமையவிருக்கும் சமத்துவ சமுதாயத்துக்கு இது முன்மாதிரியாகத் திகழும் என்று ஓவன் நம்பினார்.

ராபர்ட் ஓவனைப் போலவே பிரான்சில் உள்ள சார்லஸ் ஃபூரியரும் பல சமத்துவக்கூடங்களை நிறுவினர். தொழிற்சாலையோடு சேர்த்து தொழிலாளர்கள் வசிப்பதற்கான வாழ்விடங்களையும் இவை கொண்டிருந்தன. அரசாங்கங்கள் போதுமான நிலத்தையும் சுதந்தரத்தையும் அளித்திருந்ததால், இப்படிப்பட்ட சமத்துவக் கூடங்களை அமைப்பது எளிதாகவே இருந்தது. ஓவன், ஃபூரியர் போன்றவர்களின் சோஷலிச முயற்சிகள் தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது உண்மை. ஆனால், இவற்றை பிற முதலாளிகள் கண்டுகொள்ளவில்லை. ஓவன் எதிர்பார்த்ததைப் போல் முதலாளிகள் இவற்றை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. முதலாளிகள் மனம் மாறி தொழிலாளர்களுக்கு நல்ல பணிச்சூழலையும் நல்ல கூலியையும் வழங்குவார்கள் என்னும் ஓவனின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.

சமூக, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் ஒரே சமயத்தில் சோஷலிசம் தாக்கத்தை ஏற்படுத்தியது கார்ல் மார்க்சின் வரவுக்குப் பிறகே. நம்மைச் சுற்றி நடைபெறும் பல்வேறு மாற்றங்களையும் புரிந்துகொள்வதற்கு வர்க்கப் போராட்டத்தைதான் அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றார் காரல் மார்க்ஸ் (1818-1883). ஆலைத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நடத்தும் புரட்சியின் மூலமே சோஷலிச சமுதாயம் உருவாகும் என்றார் மார்க்ஸ்.

இந்தச் சமுகம் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மற்றும் சொத்துகள் வைத்திருக்கும் பூர்ஷ்வாக்களால் ஆளப்பட்டு வருகிறது. இவர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பதற்கும் இவர்ளிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்றுமில்லாமல் இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம், தொழிலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட பணம்தான் முதலாளிகளின் சொத்துகளாக மாறுகின்றன. தொழிலாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் சரக்கின் மதிப்பைக் காட்டிலும் வெகு குறைவான கூலியே வழங்கப்படுகிறது.

இந்த நிலை மாறவேண்டுமானால், தொழிலாளர்கள் பூர்ஷ்வா ஆதிக்கத்தை உடைக்கவேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். இந்தப் புரட்சி அல்லது வர்க்கப் போராட்டம் தொழிலாளர்களிடம் அதிகாரத்தை கொண்டு வந்து சேர்க்கும். தொழிலாளர்களின் அரசு அமைக்கப்படும். இந்தப் புதிய அரசு, முதலாளிகளின் நலன் சார்ந்து செயல்படாமல், ஒடுக்கப்பட்டவர்களின் நலன் சார்ந்து இயங்கும். லாபம் பிரதானமாக இல்லாமல், தொழிலாளர் நலன் பிரதானமாக்கப்படும். முதலாளிகள் தொழிலாளர்களைப் பிழிந்து சொத்து சேர்க்கும் வாய்ப்பு முடக்கப்படும். நாளடைவில், கம்யூனிஸம் என்னும் உயர்ந்த நிலைக்கு அந்தச் சமூகம் உயர்த்தப்படும்.

(அம்ருதாவில் வெளியான கட்டுரைத் தொடரின் முதல் பாகம்)

9 comments:

சதுக்க பூதம் said...

நல்ல பதிவு

//1999ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள சியாட்டலில் உலக வர்த்தக நிறுவனம் (WTO) சர்வதேச மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக, 135 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சியாட்டலில் குழுமியிருந்தனர். உலகமயமாக்கலை உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து குறித்து அவர்கள் விவாதிக்க இருந்தனர். இவர்களை வரவேற்க, உலகெங்கிலும் இருந்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கே திரண்டு வந்தனர். சியாட்டல் வீதிகளை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். பல வண்ணப் பதாகைகளை இவர்கள் ஏந்திவந்தனர். அவற்றுள், சில. முதலாளித்துவம் ஒழிக! ஙிகூO ஒழிக! விவசாயிகளை விழுங்கும் பெரும் முதலாளிகளை எதிர்ப்போம்! உலகயமாக்கலே, உலகத்தைவிட்டு வெறியேறு!
//
சியாட்டில் முதலாலித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற பெரும்பாலான தன்னார்வ குழுக்கள் பணத்தை ராக்பெல்லர்,போர்டு போன்ற முதலாளித்துவ ஆதரவு நிறுவனக்களிலிருந்து தான் பெற்றது. அவர்களின் நோக்கமே போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தன் கட்டுக்கள் கொண்டுவந்து கட்டு பாட்டோடு அது பெரிய வளர்ந்த போராட்டமாக மாற கூடாது என்பது தான்.

http://www.globalresearch.ca/index.php?context=va&aid=21110

அழகி said...

பதிவின் நீளம் அதிகமாக இருந்தாலும் ​சொல்லப்பட்ட விவரங்கள் அரு​மையாக உள்ளது. வாழ்த்துக்கள் மருதன்.

ahamed5zal said...

Again again proved!!! Even though the content was big, the sharpness of the script is very clear about socialism... Great. If you don't mine, please send the links of the article "How America became super power" !!!

Anonymous said...

விரிவான அறிமுகம். தொடருங்கள் உங்கள் பணியை

Anonymous said...

சிறப்பான பதிவு தேவையான நேரத்தில் தேவையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

srikrishnan said...

சமீபத்தில்தான் உங்கள் வ​லைப்பூ பற்றி என்னு​டைய ​​தேடலில் அறிந்து ​கொண்​டேன். தமிழில் நான் பார்த்த பயனுள்ளதும் ​தைரியமானதுமான ஒரு தளம் உங்களு​டையது தான். உங்களு​டைய இந்த கட்டு​ரை ​தொடர் மிகவும் அரு​மை. நான் பல்​வேறு புத்தகங்களில் படித்த விசயங்க​ளை ​தொகுத்து முதலாளித்துவத்​தைப் பற்றியும், கம்யூனிசத்தின் ​தே​வை பற்றியும் புதியவர்களும் புரிந்து ​கொள்ளும் வ​கையில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் தற்காலத்தில் கம்யூனிசம் குறித்த நமது பார்​வை​யை நி​றைய ​செழு​மைப்படுத்திக் ​கொள்ள ​வேண்டியுள்ளது என்ப​தே என்னு​டைய தற்​பொழு​தைய எண்ணம். ரசிய சீனா காலத்தி​லே​யே இருந்து விடுகி​றோம் என எனக்கு சந்​தேகமாக உள்ளது. மார்க்ஸ், எங்​கெல்ஸ், ​லெனின் ஆய்வுகளுக்குப் பிறகு மாறிய உலகம் குறித்​தோ, கண்டுபிடிப்புகள் குறித்​தோ ஏதும் மார்க்சிய ​நோக்கிலான தீவிரமான ஆய்வுகள் ​வெளிவந்திருக்கிறதா என எனக்குத் ​தெரியவில்​லை. என்னிடம் இது ​போல் நி​றைய ​கேள்விகள் உள்ளன. வாய்ப்பிருந்தால் ​பேசலாம்

மருதன் said...

// ஆனால் தற்காலத்தில் கம்யூனிசம் குறித்த நமது பார்​வை​யை நி​றைய ​செழு​மைப்படுத்திக் ​கொள்ள ​வேண்டியுள்ளது என்ப​தே என்னு​டைய தற்​பொழு​தைய எண்ணம். ரசிய சீனா காலத்தி​லே​யே இருந்து விடுகி​றோம் என எனக்கு சந்​தேகமாக உள்ளது. மார்க்ஸ், எங்​கெல்ஸ், ​லெனின் ஆய்வுகளுக்குப் பிறகு மாறிய உலகம் குறித்​தோ, கண்டுபிடிப்புகள் குறித்​தோ ஏதும் மார்க்சிய ​நோக்கிலான தீவிரமான ஆய்வுகள் ​வெளிவந்திருக்கிறதா என எனக்குத் ​தெரியவில்​லை. என்னிடம் இது ​போல் நி​றைய ​கேள்விகள் உள்ளன. வாய்ப்பிருந்தால் ​பேசலாம் //

நன்றி srikrishnan. தற்போதைய உலகமயமாக்கல் சூழலை பலரும் மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளைத் தொடர்ந்து இங்கே வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன்.

உதாரணத்துக்கு ஒன்று. இந்திய விவசாயிகள் பிரச்னை குறித்து பி. சாய்நாத் எழுதி வரும் கட்டுரைகள் முக்கியமானவை.

மார்க்சிய நோக்கில் மட்டுமல்லாமல், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளின் வாயிலாகவும் இன்றைய உலகை நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. அந்த வகையில், நீங்கள் குறிப்பிட்டது போல் நம்மை நாம் தொடர்ந்து செழுமைப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். தொடர்ந்து உரையாடுவோம்.

srikrishnan said...

மிகப்​பெரிய என்னு​டைய பதி​வை தங்களின் இந்த பகுதியில் பதிவு ​செய்ய முடியவில்​லை. என்னு​டைய பிளாக்கில் முடிந்தால் படித்து பாருங்கள், இல்லாவிட்டால் தங்களின் ஈ​மெயில் ஐடிக்கு அனுப்பலாமா? என்று கூறுங்கள்

மருதன் said...

srikrishnan : இங்கும் பதிவிடலாம். மெயிலிலும் அனுப்பலாம். marudhan@gmail.com