November 3, 2010

ஹூ ஜிண்டாவ்

டைம் இதழின் 2007ம் ஆண்டுக்கான Person of the Year ஆக ஹூ ஜிண்டாவ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அறிமுகக் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:

‘ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நெருங்கும் சமயத்தில், ஒவ்வொருவரின் மனத்திலும் சீனா நிறைந்துள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக, பிரபலமான நாடாக, அரசியல் ரீதியில் கிளர்ச்சியான நாடாக சீனா திகழ்கிறது. இத்தனைச் சிக்கல்கள் கொண்ட சீனாவை எப்படி ஒருவரால் நிர்வகிக்கமுடியும்? அவ்வாறு நிர்வகித்துவரும் ஹூ ஜிண்டாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகம் தெரியாது என்பதுதான் உண்மை.’

2010ம் ஆண்டிலும் இதுவேதான் நிலைமை.

ஹூ ஜிண்டாவ் குறித்த குழப்பம் அல்லது தகவல் போதாமை அல்லது மர்மம் அவர் பிறப்பில் இருந்து தொடங்குகிறது. ஹூவின் பிறப்பிடம் என்று இரு வேறு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. குடும்பப் பின்னணி, கல்வி, இளமைக்கால அனுபவங்கள், அரசியல், சித்தாந்தம், திருமணம், லட்சியம், கனவுகள் என்று அவர் வாழ்வின் எந்தவொரு அத்தியாயமும் இதுவரை கறுப்பு வெள்ளையில் விரிவாகப் பதிவு செய்யப்படவில்லை. காணக்கிடைப்பவை துணுக்குச்செய்திகளும் யூகங்களும் சிறு குறிப்புகளும் மட்டுமே.

மார்ச் 2003ல் ஹூ ஜிண்டாவ் மக்கள் சீனக் குடியரசின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, உலக ஊடகங்கள் ஒரு கணம் விழித்தன. யார் இவர்? பின்னணி என்ன? இதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்?

விரிவான, மனம் திறந்த பேட்டி எதையும் ஹூ ஜிண்டாவ் யாருக்கும் இந்த விநாடி வரை அளித்ததில்லை. தகவல் புரட்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக (பல சமயங்களில் அமெரிக்காவுடன் நேரடியாகப் போட்டியிட்டும்) உலகின் ஆகப் பெரும் வல்லரசாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் தலைவரைப் பற்றிப் போதுமான அளவுக்கு இன்னும் எழுதப்படவில்லை என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஒரு வகையில், சீனாவுக்கும் இந்த நிலை பொருந்தும். எண்ணற்ற குழப்பங்களையும் முரண்பாடுகளையும் மர்மங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கிய ஒரு ரகசிய நாடாகவே சீனா இன்றளவும் திகழ்கிறது.

அருணாச்சல பிரதேசம், எல்லைத் தகராறு, போர், திபெத் என்று அவ்வப்போது இந்திய ஊடகங்கள் சீனாவை ஒரு சிவப்பு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி புலனாய்வுக் கட்டுரைகள் அளித்துக்கொண்டிருக்கின்றன என்றாலும் அந்தத் தேசம் பற்றி நமக்கு அதிகம் தெரியாது.

மேலை நாடுகளுக்கும் சீனா ஒரு புதிர்தான். தெரியுமா, சீனர்கள் மனிதக்கறி சாப்பிடுகிறார்களாமே என்பதில் தொடங்கி சீனா குறித்த அவதூறுகளும் பொய்ப் பிரசாரங்களும் கற்பனைச் செய்திகளும்தான் அதிகம் பதிப்பிக்கப்படுகின்றன. சோவியத் யூனியன் உயிர்ப்புடன் இருந்தபோது சந்தித்த அதே பிரச்னை. மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் சந்தித்த, சந்தித்துவரும் அதே பிரச்னை.

தவறான புரிதல் ஒரு காரணம். புரிந்துகொள்ள மாட்டேன் என்னும் பிடிவாதம் இன்னொரு காரணம்.

மாவோ தலைமையில் சீனா, சோஷலிசத்தை நிர்மாணித்துக்கொண்டிருந்தபோது கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் அவதூறுகளும் கிளம்பின. டெங்சியோபிங்கும் ஜியாங் ஜெமினும் மாவோவின் சித்தாந்தத்தை நகர்த்தி வைத்துவிட்டு, பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்து வைத்தனர். அப்போதும், எதிர்ப்புகள், கண்டனங்கள், அவதூறுகள்.

தற்சமயம், ஹூ தலைமையில் சீனா ஒரு வலுவான பொருளாதாரச் சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவற்றை வரவேற்று இன்றைய சூழலுக்குத் தக்கவாறு சீனா தன்னைத் தகவமைத்துக்கொண்டது.

இப்போதும் அதே எதிர்ப்புகள். அதே கண்டனங்கள். அதே அவதூறுகள்.

ஏன் சீனாவுக்கு இந்த நிலை என்று ஆராய்ந்தால் ஏன் ஹூவுக்கு அந்த நிலை என்பது தெரியவரும்.

மாவோவின் காலத்தில் பிறந்து, படித்து, டெங்சியோபிங்கால் அடையாளம் காணப்பட்டு, ஜியாங் ஆட்சிக்குப் பிறகு பதவியில் அமர்ந்தவர் ஹூ ஜிண்டாவ். சீனாவின் மூன்று முக்கியத் தலைமுறைகளை ஹூ அறிவார். அவர் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர். ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் சீனா எப்படிப்பட்ட மாற்றங்களைச் சந்தித்தது என்பது அவருக்குத் தெரியும். சீனா எங்கெங்கே சறுக்கியது, எங்கெங்கே உயர்ந்து நின்று ஜொலித்தது என்று அவருக்குத் தெரியும். இன்று காணும் பொருளாதார மினுமினுப்பு எப்படிச் சாத்தியமானது என்று அவருக்குத் தெரியும். அதற்கு விலையாக சீனா என்னென்ன கொடுத்திருக்கிறது என்பதையும் அவர் அறிவார். ஆனால், அவர் பேசியதில்லை.

நாம் பேசியாகவேண்டும். எப்படி எதிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஹூ அமைதியாக இருக்கிறார் என்று மட்டுமல்ல, ஏன் அவ்வாறு இருக்கவேண்டும் என்றும். உலகின் மிகப் பெரிய கட்சியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்படித் திகழ்கிறது என்று மட்டுமல்ல, சீனக் ‘கம்யூனிஸ்ட்’ கட்சியில் சிறு முதலாளிகள் தொடங்கி பெரும் முதலாளிகள் வரை நிறைந்திருப்பதன் பொருள் என்ன என்றும். சீனா எப்படி ஒரு வல்லரசானது என்று மட்டுமல்ல, சீனா ஒரு வல்லரசுதானா என்றும். சீனா தன் ராணுவ பலத்தை எப்படிப் பெருக்கிக்கொண்டது என்று மட்டுமல்ல, ஏன் என்றும்.

எனது ஹூ ஜிண்டாவ் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி. புத்தக விவரம் இங்கே.

1 comment:

Anonymous said...

இந்த புத்தகம் சீனாவுக்கு ஆதரவானதா எதிரானதா?