November 23, 2010

முதலாளித்துவம் நன்மை செய்திருக்கிறதா? பகுதி 1


அநேகமாக தலைப்பைக் கண்டு பயந்திருப்பார்கள். Capitalist Trajectories of Global Interdependence and welfare outcomes: The Lessons of History for the present. இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், (சென்னை) நவம்பர் 23 அன்று ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் உத்சா பட்நாயக் இந்தத் தலைப்பில் உரையாடியபோது, (ராணி சீதை) அரங்கம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. வந்திருந்த சிலரில், ஒரு பகுதியினர் தங்கள் செல்பேசியோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எரிச்சலடைந்த உத்சா பட்நாயக், தன் உரையை இடையில் நிறுத்திவிட்டார். நீங்கள் செல்பேசியை அணைக்கும்வரை நான் பேசப்போவதில்லை! அறிவிப்புக்குப் பிறகும்கூட செல் சிணுங்கல் ஒலிகள் வந்துகொண்டுதான் இருந்தன. வேறு வழியின்றி, உரையை அவர் தொடர வேண்டியிருந்தது.

உத்சா படநாயக், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றியவர். உங்களுடன் உரையாடுவதற்காக வெகு தொலைவில் இருந்து வந்திருக்கிறேன், தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள் என்று அவர் விண்ணப்பித்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஆய்வாளர்களுக்கே உரித்தான மொழி. எடுத்துக்கொண்ட தலைப்பின் கனம். அடர்த்தியான தகவல் கோர்வை. அனைத்தும் சேர்ந்துகெண்டதன் விளைவைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

உத்சா பட்நாயக்கின் உரையை, நான் புரிந்துகொண்ட அளவில், இங்கே பதிவு செய்கிறேன். குறைகள், என்னுடையவை.


0

1. விவசாய உற்பத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. உலக நாடுகளுடன் போட்டிப்போடும் அளவுக்கு நம் விவசாயத் திறன் வளர்ச்சிபெறவில்லை. எனவே, அந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிலிருந்து வெளியேறவேண்டும். பணம் சம்பாதிக்கக்கூடிய வேறு துறைகளுக்கு அவர்கள் நகரவேண்டும். பதிலுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழைந்து, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கொண்டுவரவேண்டும். ஆட்சியாளர்களின் கருத்து இது. அந்தக் கருத்தின் நீட்சி இது. வளரும் நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகள் விவசாய உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இரு நூற்றாண்டு முதலாளித்துவ வளர்ச்சி இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இயந்திரமயமாக்கலில் வெற்றிகரமாக இருக்கும் நாடுகள், தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றன.

2. இந்தக் கருத்தை முன்வைப்பவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள். வளர்ந்த நாடுகள் என்று அறியப்பட்டவை, எவ்வாறு அந்த வளர்ச்சியை அடைந்தன? வளரும் நாடுகளைக் காட்டிலும் மேலான தொழி்ல்நுட்பத் திறன் கொண்டிருப்பதாலா? முதலாளித்துவ வளர்ச்சியாலா? அதிக கூலி அளிப்பதாலா? கிடையாது. இந்த முன்னேற்றம் ஏற்பட்டதற்குக் காரணம், காலனி ஆதிக்கம்.

3. இதன் தொடக்கப்புள்ளி, Primitive accumulation of Capital. நிலங்களில் வாழும் சிறு விவசாயக் குழுக்களிடம் இருந்து பெரும் முதலாளிகள் நிலத்தை அபகரித்துக்கொண்டுவிட்டனர். சிறு எண்ணிக்கையிலான விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும், பொதுவான நன்மைக்கு இந்த நில மையப்படுத்துதல் அவசியம் என்று காரணம் சொல்லப்பட்டது. வளரும் நாடுகள் பலவும் இன்று இந்த வழிமுறையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இவ்வாறு செய்தால்தான், முன்னேறிய நாடுகள் அடைந்த வளர்ச்சியை நாம் அடையமுடியும் என்று இந்நாடுகள் நம்புகின்றன. பொருளாதார வல்லுனர்கள் பலரும்கூட இந்தக் கருத்தைதான பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

4. இந்த வாதத்தை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும்? விவசாய உற்பத்தியி்ல் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நிலத்தை கைவிட்டு, விவசாயத்தைக் கைவிட்டு, வேறு துறைகளுக்கு நுழையவேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை எடுத்துக்கொள்ளும். என்றால், இது ஒரு வகையில் நல்லதுதானே? லாபம் தராத வேளாண்மையை விட்டுவிட்டு விவசாயிகள் வெளியேறுவதில் என்ன தடை இருக்கமுடியும்? கிராமப்புறங்களில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு அவர்கள் வருவதுதானே அவர்கள் வளர்ச்சியை உறுதிபடுத்தும்? மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது தர்க்க ரீதியில் சரியான வாதம் என்றுதான் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. நிலத்தைவிட்டு வெளியேறிய, வெளியேறும் விவசாயிகளுக்கு என்ன மாற்று இருக்கிறது? அவர்கள் எந்தெந்த துறைகளில் நுழைந்திருக்கிறார்கள்? எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள்? எவ்வளவு வளர்ந்திருக்கிறார்கள்? இயந்திரமயமாக்கல் மற்றும் முதலாளித்துவத்தின் வரலாறை ஆராயும்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கிறது. இன்றைய முன்னேறிய நாடுகளின் விவசாய வளர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சி மூலமாக ஏற்படவில்லை. வளரும் நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட பரிமாற்றங்கள் மூலமாகவே இது நிகழ்ந்துள்ளது.

5. நிலத்தில் பணியாற்றுபவர்களை நிலத்தில் இருந்து பிரித்தெடுத்ததன் மூலம், வளம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டது. வளரவும் ஆரம்பித்தது. 18ம் நூற்றாண்டு பிரிட்டனில் இது நடந்தது. அடுத்த நூற்றாண்டில் தொடர்ந்தது. 1846-47 பஞ்சம், விவசாயிகளைப் பெருமளவில் அவர்களுடைய நிலத்தில் இருந்து விரட்டியது. (மேல்விவரம் இங்கே). நிலத்தைவிட்டு வெளியேறிய விவசாயக்கூட்டம் என்ன ஆனது? அவர்களுக்கு என்ன மாற்று செய்யப்பட்டது? எந்தெந்த துறைகள் அவர்களை வரவேற்று வேலை கொடுத்தன? சொத்து இழந்த, பொருள் இழந்த, மிகப் பெரும் கூலிக்கூட்டத்தை அல்லவா இந்தப் பஞ்சம் ஏற்படுத்தியது? நிலத்தைவிட்டு வெளியேறுபவர்களின் உண்மை நிலை இதுவல்லவா?

6. காலனிகள் மூலமாகவே பிரிட்டன் வளர்ச்சியடைந்தது என்பதை நிரூபிப்பது எளிது. விவசாயத் துறை அங்கே வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் காலனிகளிடம் இருந்து பிரிட்டன் பெருமளவில் உணவுப்பொருள்களை இறக்குமதி செய்துகொண்டதுதான். இந்திய விவசாயிகளிடம் இருந்தும் கைவினைஞர்களிடம் இருந்தும் பிரிட்டன் வரி வசூலித்தது. கோதுமை உள்ளிட்ட பொருள்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடம் இருந்து இறக்குமதி செய்ய இந்த வரிப்பணத்தின் ஒரு பகுதியை பிரிட்டன் செலவிட்டது. 18ம் நூற்றாண்டு நிலைமை இது. இதே வழியில், நெதர்லாந்து, தன் விவசாயத் தேவைகளுக்கு ஜாவாவை நம்பி வந்தது. ஜப்பான், இயந்திரமயமாக்கலின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தபோது, உள்நாட்டு உணவுப்பற்றாக்குறையைச் சரிகட்ட, கொரியா, தைவான் ஆகிய காலனி நாடுகளின் உற்பத்தியைப் பயன்படுத்திக்கொண்டது.

7. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளைக் காட்டிலும் அதிகம் வேளாண் உற்பத்தி செய்கின்றன என்னும் வாதம் தவறானது. உதாரணத்துக்கு அமெரிக்காவில் உள்ளதைக் காட்டிலும் இந்தியாவில், உழத்தக்க நிலம், மூன்றில் ஒரு பங்கு குறைவு. ஆனாலும், இந்தியாவின் வருடாந்திர காய்கறி, பழம், சர்க்கரைப் பயிர்கள், பருப்புகள் உற்பததி அமெரிக்காவைக் காட்டிலும் அதிகமானது. சீனா, இந்தியாவைவிட முன்னணியில் இருக்கிறது. சீனாவின் 2007ம் ஆண்டு உணவு உற்பத்தி, 900 மில்லியன் டன். ஒப்பீட்டளவில், அமெரிக்காவைக் காட்டிலும் ஒன்றேகால் பங்கு குறைவான நிலத்தில் இருந்து இந்த உற்பத்தி சாத்தியமானது.

8. 19ம் நூற்றாண்டு உணவுப் பொருள்கள் வர்த்தகம், பிரதானமாக, சூடான நிலப்பரப்பில் உற்பத்தியாகும் பண்டங்களை உள்ளடக்கியிருந்தது. அதாவது, வளரும் நாடுகளை நம்பி மேற்கொள்ளப்பட்ட வர்த்தம் அது. எனில், இந்தப் பரிவர்த்தனைகள் மூலம், வளரும் நாடுகள் பெருமளவில் லாபம் அடைந்திருக்கவேண்டும் அல்லவா? விவசாயிகள் கொழுத்திருக்கவேண்டும் அல்லவா? ஆனால், நடந்தது முற்றிலும் எதிர்மறையானது. இதே காலகட்டத்தில், விவாசியகள் பெருமளவில் தங்கள் நிலங்களை இழந்தனர். வளர்ந்த நாடுகள் கேட்டுக்கொண்ட உணவுப் பொருள்களை மட்டும் தேர்ந்தெடுத்து உற்பத்தி செய்து அளித்ததன் மூலம், விவசாயிகள் பட்டினி கிடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்ன தேவையோ அதனை அவர்களால் உற்பத்தி செய்யமுடியவில்லை. என்ன உற்பத்தி செய்தார்களோ அது அவர்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. காரணம், அவர்கள் உற்பத்தி செய்தவை, Cash crops எனப்படும் பணப் பயிர்கள் (காபி, தேயிலை, ஏலக்காய், மிளகு உள்ளிட்டவை). அரிசி, கோதுமை உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன. எஞ்சியிருந்தனை சிறு தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்குகள். ஊட்டச்சத்து குறைந்தது. பஞ்சம் படர்ந்தது. பெருமளவு உற்பததியில் ஈடுபட்ட காலனிய நாடுகளின் மக்கள் உணவின்றி தவித்தனர். உற்பத்தியில் ஈடுபடாத முன்னேறிய நாடுகள், தங்களுக்குத் தேவையானதைத் திருப்தியுடன் பெற்றுக்கொண்டன.

தொடர்புடைய கட்டுரை Origins of the Food Crisis in India and Developing Countries

(படம் : கல்கத்தாவில் 1943ல் ஏற்பட்ட பஞ்சம். நன்றி: Flickr)

(தொடரும்)

6 comments:

heartsnatcher said...

it's a good post.the picture made me to read fully.but i need to know how can i know abt these conference?

மருதன் said...

heartsnacher : தி ஹிந்து போன்ற பத்திரிகைகளில் வரும் இன்றைய நிகழ்ச்சிகளில் இதுபோன்ற விவரங்கள் வரும். நண்பர் ஒருவர் அழைத்ததன் பேரில் நான் சென்றேன்.

ஹரிஹரன் said...

பஞ்சம் ஏற்படுவது உணவுப்பொருள் உற்பத்தியில்லாமல் அல்ல, மாறாக விநியோகத்தில் உள்ள குறைபாட்டால் மேலும் இந்தியா காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் நம் விவசாயிகளை வணிகப்பயிர்களை விளைவிக்க கட்டாயப்படுத்தினர்.

Anonymous said...

உங்கள் கொள்கைக்கு விரோதமான விசயத்தை நீங்கள் விமர்சிப்பதால் யாருக்கு என்ன நன்மை ?

கம்மூனிசம் செய்த நன்மைகளைப்பற்றி நீங்கள் பட்டியலிட்டால் நம்பலாம்.

மருதன் said...

ஹரிஹரன் : உண்மைதான். உற்பத்தியைப் போலவே விநியோகமும் பஞ்சத்துக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. காலனியாதிக்கத்தி்ன் போது மட்டுமல்ல, இப்போதும் இந்த இரண்டும் பிரச்னைக்குரிய அம்சங்களாக நீடிக்கின்றன. என்ன உற்பத்தி செய்யவேண்டும், என்ன விலை நிர்ணயிக்கவேண்டும், எப்படி விநியோகிக்கவேண்டும் உள்ளிட்ட எதையும் விவசாயி தீர்மானிப்பதில்லை. அதற்கான உரிமை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. பி. சாய்நாத்தின் கட்டுரைகளையும் உடன் வாசித்துப் பாருங்கள்

Anonymous said...

theervu dhaan yenna?