November 14, 2010

சூ சி என்ன செய்யப்போகிறார்?


1962ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை பர்மாவில் ராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது. 1990ம் ஆண்டு, தேர்தல் நடத்துவதற்கு முதல் முறையாக ராணுவத் தலைமை ஒப்புக்கொண்டது என்றாலும் சூ சியின் கட்சி (National League for Democracy - NLD) வெற்றி பெற்றதையடுத்து, தன் முடிவை மாற்றிக்கொண்டது. தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. சூ சி கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் குவிந்தபோதும், சூ சியை ராணுவம் விடுவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று, நிபந்தனையின்றி சூ சி விடுவிக்கப்பட்டிருக்கிறார். தன் வீட்டு வாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மலர்ந்த புன்னகையுடன் வரவேற்று உரையாடினார் அறுபத்தைந்து வயது சூ சி. இனி வரும் காலங்களில், அவர் எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கடைபிடிப்பார் என்பது இன்னமும் தெரியவில்லை. ஆனால், சில மாற்றங்களை அவரிடம் காணமுடிகிறது.

பர்மா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவேண்டும் என்று அழுத்தமாகக் கோரி வந்தவர் சூ சி. அவ்வாறு செய்தால்தான், ராணுவத் தலைமை சில பாடங்கள் படித்துக்கொள்ளும் என்றும், வெளியில் இருந்து கொடுக்கப்படும் இதுபோன்ற அழுத்தங்கள் உள்நாட்டில் ஜனநாயகத்தைக் கொண்டு வரும் என்றும் முன்னர் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1993ம் ஆண்டு, அமெரிக்கா பர்மாவுக்கான ஆயுத ஏற்றுமதி மீது தடை விதித்தது. எந்தப் புதிய முதலீடும் அந்நாட்டில் செய்யப்பட மாட்டாது என்று அமெரிக்கா அறிவித்தது. தேக்கு, ஜெம் நீங்கலாக பர்மாவில் இருந்து எந்தவொரு பொருளும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று 2003ல் வலியுறுத்தியது. பர்மிய ராணுவ அதிகாரிகள் சிலரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவர்களுக்கு விசா வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மே 2009ல், பராக் ஒபாமா, பர்மாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை, நீட்டித்தார்.

1996ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் பர்மாவின் ஆயுத வர்த்தகத்தைத் தடை செய்தது. முக்கிய ராணுவத் தலைமை அதிகாரிகளின் அயல்நாட்டு வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. பொருளாதார மற்றும் மனிதாபினமான உதவிகளும் தடை செய்யப்பட்டன. 2007ம் ஆண்டு, கனடா பர்மா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து போன்ற நாடுகளும் சில கட்டுப்பாடுகளை பர்மா மீது விதித்தன.

இப்போது, விடுதலைக்குப் பிறகு சூ சியின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. வெளியில் இருந்து அல்ல, உள்ளுக்குள் இருந்தே மாற்ற்ங்களைக் கொண்டு வரலாம் என்கிறார் சூ சி. 'பர்மா மீது விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்படவேண்டும் என்று மக்கள் விரும்பினால், அந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கத் தயார்' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சூ சி. NLD வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கான இயக்கமும்கூட என்கிறார் சூ சி.

சிறையில் தன்னை ஒழுங்காகப் பார்த்துக்கொண்டதாகவும், இதே போ்ல் மக்களையும் ராணுவ அரசு நடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் சூ சி. சீனியர் ராணுவ ஜெனரல் தான் ஷ்வேயுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சூ சி தயாராக இருக்கிறார். அரசியலில் ஈடுபடக்கூடாது என்னும் நிபந்தனை விதிக்கப்பட்டால், அப்படிப்பட்ட விடுதலை தேவையில்லை என்று சொல்லி வந்தவர் சூ சி. எனில், சூ சி இனி அரசியலில் ஈடுபடமாட்டார் என்னும் நம்பிக்கையின் பேரில் ராணுவ அரசு அவரை விடுவித்திருக்கிறதா? அல்லது, பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள சூ சியின் விடுதலை உதவும் என்று கணக்குப்போட்டு காய் நகர்த்தியிருக்கிறதா?

அண்டை நாடான இந்தியா, எந்த நிலையிலும் பர்மாவுடனான தன் உறவை விட்டுக்கொடுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சர்வாதிகாரம் பலம் பெற்று தழைத்த காலத்திலும்கூட, இந்தியா பர்மாவுடனான தன் பொருளாதார உறவை தாற்காலிகமாகக்கூட முறித்துக்கொள்ளவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று உலகின் பல மூலைகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும், இந்தியா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. சீனாவை எதிர்த்து தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து திபெத் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதே இந்தியா. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்ட யுத்தத்தை ஆதரித்து, ஊக்குவித்து, உதவிய அதே இந்தியா. ராணுவ ஆட்சியா, ஜனநாயக ஆட்சியா என்பதல்ல விஷயம். பொருளாதார லாபம் உண்டா இல்லையா என்பதுதான் இந்தியாவுக்கு முக்கியம்.

2 comments:

Anonymous said...

Good post

சுடர் said...

சூகி காந்தியின் வழியில் முன்னேறுவார் என்று நினைக்கிறேன்