December 14, 2010

புத்தருக்குப் பிறகு மஹிந்த

கோபம் வந்தால், மஹிந்த ராஜபக்ஷே மரத்தில் ஏறிவிடுவாராம். நான் சொல்வதை நீங்கள் கேட்காவிட்டால் இங்கிருந்து குதித்துவிடுவேன் என்று அங்கிருந்தபடியே மிரட்டுவாராம். எதற்கு பொல்லாப்பு என்று பயந்து நண்பர்கள் அவருக்கு அடிபணிந்துவிடுவார்களாம். மரத்தில் தொடங்கி, பரிணாம வளர்ச்சி பெற்று போஸ்ட் கம்பம், ரயில்வே கம்பம் என்று பல உயரங்களை மஹிந்த தன் வாழ்வில் அடைந்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் விதவிதமான கோரிக்கைகள். கிட்டத்தட்ட அனைத்திலும் வெற்றி. தான் நினைத்ததை சாதிக்க சிறு வயதில் மஹிந்த கடைபிடித்த உத்தியாம் இது. பகவான் கண்ணனின் லீலைகளையும் குறும்புகளையும் வியந்து ரசிக்கும் கோபியர்களைப் போல், மஹிந்தவின் குறும்புகளையும் லீலைகளையும் ரசித்திருக்கிறார் முத்து பத்மகுமாரா. Mahinda என்னும் புத்தகத்தின் ஆசிரியர் (படம் கீழே).

ராஜபக்ஷேவை நேரில் சந்தித்தது பேட்டி கண்டு, உரையாடி அவர் வாழ்க்கையைத் தொகுத்திருக்கிறார். கிட்டத்தட்ட புத்தருக்கு அடுத்த வரிசையில் மஹிந்தவை நிறுத்துகிறார் முத்து பத்மகுமாரா. ஒருவேளை ராஜபக்ஷே சற்று முன்னால் அவதரித்திருந்தால், அவரே புத்தராகியிருக்கக்கூடும். அந்த அளவுக்கு, மஹிந்த அமைதியானவர். பண்பானவர். நல்லவர். அகிம்சாமூர்த்தி. தீமைகளை ஒழித்து நீதியை நிலைநாட்டிய உத்தமர். மனித நேயமிக்க போராளி. இதுவரை இலங்கையை ஆண்டவர்களால் முடியாததை தனியொரு நபராகச் சாதித்தவர். கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில், போட்டிகளை முறியடித்து பதவியேற்றவர். இரண்டாவது முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2004 தேர்தலில் கலந்துகொள்வதற்கு முன்னால், புகழ்பெற்ற ஒரு புத்த மடாலயத்துக்கு மஹிந்த சென்றார். கண்கள் மூடி, இரு கை விரித்து, பிரார்த்தனையைத் தொடங்கினார். அப்போது, அருகில் இருந்த போதி மரத்தில் இருந்து ஓர் இலை, பறந்து வந்து மஹிந்தவின் கரங்களில் விழுந்தது. கண் திறந்து பார்த்த மஹிந்த பரவசத்துடன் நின்றார். புத்த துறவி, மஹிந்தவிடம் பிறகு விளக்கினார். 'இது மிகவும் அபூர்வமானதும் அதிசயமானதுமான ஒரு நிகழ்வு. உங்களுக்கு இது வாய்த்திருக்கிறது என்றால் நீங்கள் விசேஷமானவராக இருக்கவேண்டும். புத்தரின் அருள் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.' அந்தத் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றிபெற்றார்.

முதல் முதலில் கார் வாங்கிய அனுபவம், எதிர்கட்சிகள் நடத்திய கலவரத்தில் இருந்து தப்பித்துச் சென்ற சாகசம், மஹிந்த மீது பதிவான கொலை கேஸ், அவருடைய தாராள குணத்தை வெளிப்படுத்தும் சம்பவங்கள் என்று அடுக்கடுக்கான சம்பவக் கோர்வையுடன்கூடிய ஒரு 'போற்றிப் பாடடி கண்ணே' புத்தகம் இது.

எதிர்பார்த்தபடியே, இந்தப் புத்தகத்துக்கு இலங்கையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சண்டே அப்ஸர்வர் பத்தியாளர் எட்வின் அரியதசா ஆஹா ஓஹோவென்று இதைப் புகழ்ந்திருக்கிறார். 'வெகு சிறப்பான பணி.' 'நம் தலைவரின் வாழ்க்கை பற்றிய மெச்சத்தக்க படைப்பு.' 'மிக எளிமையாக நாவல் போல் எழுதியுள்ளார்.' 'நம் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் பெயர், மஹிந்த.' 'மஹிந்தா என்பதன் பொருள், பூமியின் தலைவர்.'

இப்படியெல்லாம் எழுதவில்லை என்றால் போதி மரத்தில் ஏறிவிடுவேன் என்று மஹிந்தா பயமுறுத்தினாரா அல்லது இவர்களாகவே எழுதினார்களா என்பது தெரியவில்லை.

5 comments:

Anonymous said...

That was a good one!

சுடர் said...

எல்லா நாடுகளிலும் இது போன்ற ஜால்ரா ரைட்டர்ஸ் இருப்பாங்க போல. நம்ம சாரு மாதிரி. காசு வாங்கி புக் எழுதியிருப்பாங்க. ஹிட்லர் காந்தியவாதின்னு கூட எழுதவாங்க

Jawahar said...

பட்டுக்காம எழுதியிருக்கீங்க! பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

praba said...

விட்டால் மகிந்தாவை காந்திக்கு மூத்த பேரன் என்று கூட சொல்வார்கள்.... மகிந்தாவை அமைதியின் உரு, பண்பின் சிகரம் என்று உளறியுள்ள அந்த அம்மையார் ஈழ படுகொலை என்று ஒன்று நடந்தை பற்றியே மறந்திருப்பார் போலும்....

தேசியவாதி said...

மஹிந்த ஒரு திறமைவாய்ந்த தலைவர் என்பதில் சந்தேகமில்லை. விடுதலை புலிகளை ஒழித்ததால் அவரை வில்லன் என்று சொல்வது சரியல்ல. நம் நாட்டில் உள்ள வடகிழக்கு தீவிரவாதிகளுக்கு நாம் என்ன மாநிலத்தை தாரை வார்த்தா கொடுக்கிறோம்? அவர்மட்டும் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எபப்டி சரி? பிரிவினைவாதிகளுக்கு செய்யவேண்டிய நியாயமான தீர்ப்பைதான் அவர் தந்துள்ளார்.