நம் உலகைப் புரிந்துகொள்ள நாம் ஊடகங்களையே பெரிதும் நம்பியிருக்கிறோம். விதவிதமான செய்தித்தாள்கள் வாசிக்கிறோம். இருபத்து நான்கு மணி நேரமும் சுடச்சுட செய்திகள் பரிமாறும் உள்ளூர், அயல்நாட்டு சேனல்கள் பார்க்கிறோம். இணையத்தளங்களில் தேடுகிறோம். பெரும்பாலும், கேள்விகள் எதுவுமின்றி, நாம் படித்ததை, பார்த்ததை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுகிறோம். செய்திகளுக்காக நாம் நம்பியிருக்கும் ஊடகங்கள் நம்மை எவ்வாறு அலைகழிக்கின்றன, ஏமாற்றுகின்றன என்பது தெரிந்தால் செய்திகள் பற்றிய நம் பார்வையும் வெகுவாக மாறும்.
ஸ்பெக்ட்ரம் ஓர் உதாரணம். நடந்திருப்பது ஊழல் அல்ல என்று ஒரு சாராரும், ஊழல்தான் என்று இன்னொரு சாராரும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? அத்தனை ஆயிரம் கோடியா என்று மலைக்கலாம். மாயப்பணம் என்று நிராகரிக்கலாம். அரசியலே இப்படித்தான் சார் என்று சலித்துக்கொள்ளலாம். யார் எவ்வளவு அடிச்சாலும் நமக்கு வேலை நடந்ததாதான் பொழப்பு என்று முகத்தைத் திருப்பிக்கொள்ளலாம். அநியாயம் என்று கோபம் கொள்ளலாம். அமெரிக்கா போல் இங்கும் லாபியிங்கை அனுமதிக்கலாம் என்று அறிவுரைகள் கூறலாம். இது ஒரு கோணம். ஒரு பார்வை.
சற்றே ஆழமாகச் சிந்தித்தால், சில கேள்விகள் முளைக்கும். ஏன் ஆ. ராசாவைப் பிரதானப்படுத்தி மீடியா தாக்குகிறது? 'ஸ்பெக்ட்ரம் ராசா' என்னும் வார்த்தைக் கோர்வையை யார் முதலில் பயன்படுத்தியது? இந்தியத் தமிழ் மீடியாவும் இந்திய ஆங்கில மீடியாவும் வெளிநாட்டு மீடியாவும் ஸ்பெக்ட்ரம் விஷயத்தை ஏன் வெவ்வேறு விதமாக அணுகுகின்றன? இந்தக் கேள்விக்கு விடை காண இன்னொரு கேள்வியைத் தொடுக்கவேண்டும். திமுகவின் 'தலித் முகத்தின்' மீது இப்போது படிந்திருக்கும் புழுதி யாரையெல்லாம் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது? ஏன்?
இந்த திமுக கவர்ன்மெண்ட்டே இப்படித்தான் என்று அலுத்துக்கொள்பவர்களின் அரசியல் என்ன? அவர்கள் ஆ. ராசாவுக்கு எதிரானவர்களா? ஊழலுக்கு எதிரானவர்களா? திமுகவுக்கு எதிரானவர்களா? திராவிட இயக்கத்துக்கு எதிரானவர்களா? பெரியார் குறித்த அவர்கள் பார்வை என்ன? அவர்கள் அண்ணாவை எப்படி அணுகுகிறார்கள்? கலைஞரை? ஆ. ராசாவை, கலைஞரை, திமுகவை அவர்கள் வெறுப்பதற்கு என்ன காரணம்? திமுக ஆட்சி ஊழலா? அல்லது, திராவிட அரசிய்ல் மீதான வெறுப்பா?
ஆ. ராசா மீதான அதிருப்திக்குப் பின்னால் இத்தனைக் கேள்விகள் உள்ளன. ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் முக்கியமானது. பிள்ளையாரைப் போட்டு உடைக்கும் கட்சியில் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று சலித்துக்கொள்பவர்களுக்கும், பெரியார் முன்னெடுத்த திராவிட இயக்கம் இன்று இப்படி சீரழிந்துவிட்டதே என்று கவலை கொள்பவர்களுக்கும் இடையில் பலத்த வேறுபாடுகள் உள்ளன. அவர்களும் ஆ. ராசாவை விமரிக்கிறார்கள். இவர்களும் ஆ. ராசாவை விமரிசிக்கிறார்கள். பிள்ளையார் சிலை உடைத்தவர்கள் என்பதற்காக திமுகவை நிராகரித்தவர்கள் ஒரு வகை. உடைப்பதை ஏன் நிறுத்தினீர்கள் என்று ஆதங்கப்பட்டு திமுகவை நிராகரித்தவர்கள் ஒரு வகை.
சிஎன்என் ஐபிஎன் தொடங்கி வாஷிங்டன் போஸ்ட் வரையிலான ஆங்கில மீடியா உலகம், ஆ. ராசாவைப் பற்றி வெளியிடும் செய்திகளை மீண்டுமொருமுறை வாசித்துப் பாருங்கள். அதில் தொனிக்கும் காழ்ப்புணர்ச்சியும், அதன் பின்னணியில் உள்ள அரசியலும் புலனாகும். உண்மையிலேயே இவர்கள் ஊழலைத்தான் எதிர்க்கிறார்களா என்னும் கேள்விக்கு விடையும் கிடைக்கும்.
இதுபோல் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் ஓர் அரசியல் உள்ளது. விரிவான, ஆழமான வாசிப்பின் மூலமே இந்த அரசியலைப் புரிந்துகொள்ளமுடியும்.
மீடியா திணிக்கும் செய்திக்குவியல்களைப் புரிந்துகொள்வதற்கு முன்னால், மீடியா எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பி. சாய்நாத் ஒருமுறை அளித்த தன்னிலை விளக்கம் உதவும். 'நாங்கள் முதலாளிகளுக்கும், பெரும் நிறுவங்களுக்கும் சாதகமாக செயல்படுபவர்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள்தான் முதலாளிகள். நாங்கள்தான் பெரும் நிறுவனங்கள்.'
ஏன் படிக்கவேண்டும்? எப்படிப் படிக்கவேண்டும்? எதைப் படிக்கவேண்டும்? இந்த மூன்று கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளிக்கிறது தோழர் மருதையனின் இந்த உரை.
2 comments:
very nice introduction to reading
You communists have no heart. enough of your advices. Marudhayan has no sense of what he is talking about. we yougsters are better than what he think we are
Post a Comment