December 30, 2010

சஞ்சய் காந்தி

'சஞ்சய் காந்தி குறித்து சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை. சில அதிகப்படியான விஷயங்கள் எமர்ஜென்சியின் போது நடந்தது அனைவருக்கும் தெரியும். இந்திரா காந்தியே இது குறித்து பின்னர் வருத்தம் அடைந்திருக்கிறார்... காங்கிரஸ் சஞ்சய் காந்தி மீது களங்கம் கற்பிப்பதாக பலரும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அந்தப் புத்தகத்தில், சஞ்சய் காந்தியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.'

சில தினங்களுக்கு முன்பு சோனியா காந்தி வெளியிட்ட The Congress and the Making of the Indian Nation என்னும் புத்தகம் குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது கூறிய விளக்கம் இது. அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் சஞ்சய் காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தப் புத்தகம் விமரிசனம் செய்கிறது என்பது காங்கிரஸ் ஆதரவாளர்களின் வருத்தம். அதெப்படி கட்சி, சஞ்சய் காந்தியை இப்படி பொதுவெளியில் விமரிசிக்கலாம்? இது கட்சிக்குக் கெட்ட பெயரை அல்லவா கொண்டு வரும்?

1885 தொடங்கி 1985 வரையிலான நூறு ஆண்டு வரலாறு, ஆக்டேவியன் ஹ்யூம் தொடங்கி இன்று வரையிலான 125 வருட வரலாறு என்று காங்கிரஸ் கட்சி தொடர்பான பல நூல்கள் அடுத்தடுத்து தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சஞ்சய் காந்தி குறித்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. செய்தி 1 | செய்தி 2.

தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸின் வரலாறை விவரிக்கும் ஒரு புத்தகத்தில், சோனியா காந்தி தலைமையேற்று வெளியிடும் ஒரு புத்தகத்தில், சஞ்சய் காந்தியை இடித்துரைக்கும் பகுதிகள் வெளிவரவேண்டிய அவசியம் என்ன? என்றால், இருக்கிறது. சிலர் நினைப்பது போல், காங்கிரஸ் தன் கடந்த காலத் தவறுகளை, மனம் திறந்து நேர்மையாகப் பதிவு செய்ய விரும்புகிறது என்று இதனை எடுத்துக்கொள்ளமுடியாது. அவ்வாறு செய்வதாக இருந்தால், சஞ்சய் காந்தியை மட்டுமல்ல, சஞ்சய்க்கு இடம் கொடுத்த இந்திரா காந்தியையும் சேர்த்தேதான் அந்தப் புத்தகம் விமரிசித்திருக்கவேண்டும். இந்திராவையும் சஞ்சையையும் சேர்த்தே மறுதலித்திருக்கவேண்டும். அது நடக்கப்போவதில்லை.

காங்கிரஸுக்கு இது மிகப் பெரிய நெருக்கடி காலகட்டம். தொட்ட இடமெல்லாம் ஊழல். பாதாளத்தில் விழுந்துகிடக்கும் இமேஜை தூக்கி நிறுத்தியாகவேண்டும். அதற்கான முன்னோட்டம்தான் இந்த வரலாற்று நூல்கள். ஏ.ஓ. ஹ்யூம் வேண்டும், சஞ்சய் அவ்வளவாக வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்ததன் காரணமும் இதுதான். ஆம், சஞ்சய் சில தவறுகள் செய்துள்ளார் என்று ஒப்புக்கொள்வதன் மூலம் கட்சிக்கு எந்த இழப்பும் வரப்போவதில்லை. மாறாக, நல்ல இமேஜ் கொஞ்சம் கிடைக்கலாம் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.


தமது பலம் என்று காங்கிரஸ் நினைக்கும் விஷயங்கள் இவை. தேசத்தந்தை காந்தி (இந்தியாவின் நிரந்தர முகவரி). சுதந்தரம் வாங்கித்தந்த கட்சி என்னும் பெயர் (தேசப்பற்று கொண்ட ஒரே கட்சி). நேருவின் அடையாளம் (கொஞ்சம் சோஷலிசம்). இந்திரா காந்தி (வலிமை). ராஜீவ் காந்தி (பரிதாபம்). மதநல்லிணக்கம். நீண்ட காலமாக காங்கிரஸ் இந்த விஷயங்களைச் சொல்லிச் சொல்லித்தான் ஓட்டு வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இனியும் அது செல்லாது என்பதால் வேறு மாதிரியான பிராண்ட் பில்டிங் வேலையை ஆரம்பித்திருக்கிறது.

படித்தவர், அறிவாளி, மிஸ்டர் க்ளீன் என்று பலவிதமாக மார்க்கெட் செய்யப்பட்ட மன்மோகன் சிங்கின் இமேஜ் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தவுடன், ராகுல் காந்தியை முன்னிறுத்திய சாமர்த்தியத்தைத்தான் அரசியல் ராஜதந்திரம் என்று அழைக்கவேண்டும். மாற்றம் தேவை என்பதால் ஒபாமாவை வெற்றி பெற வைத்த அமெரிக்காவின் அதே தந்திரம்.

யாரை எப்போது அணைத்துக்கொள்ளவேண்டும், எப்போது தூக்கியெறியவேண்டும் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரியும். எப்போது எது விற்கும், எது விற்காது என்பதும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போது மாவோவை ஏற்றுக்கொள்கிறது, எப்போது நிராகரிக்கிறது என்பதைக் கவனித்தால் இந்த உண்மை புரியும். ரஷ்யா எப்போது லெனினையும் ஸ்டாலினையும் ஏற்றுக்கொள்கிறது, எப்போது நிராகரிக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆர். முத்துக்குமார் எழுதிய சஞ்சய் காந்தி வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது. சஞ்சயின் கார் ஆசை, அரசியல் நுழைவு, இந்திராவின் வழிகாட்டுதல், எமர்ஜென்சி என்று பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.

2 comments:

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Subbaram said...

Sanjay Gandhi is undoubtedly a villain. Is the book projecting so? Or is it another attempt to glorify him?