March 14, 2011

கருணையும் கொலையும்

மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றி வந்தவர் அருணா ஷான்பாக். அதே மருத்துவமனையில் உதவியாளராக இருந்த ஒருவரால் நவம்பர் 1973ல் அருணா பாலியல பலாத்காரம் செய்யப்பட்டார். அதிர்ச்சியில் உரைந்துபோன இருபது வயது அருணா அன்று தொடங்கி கடந்த 37 ஆண்டுகளாக செயலற்று படுத்துகிடக்கிறார். பேச்சில்லை, இயக்கமில்லை, சுயநினைவில்லை. துவண்டு கிடக்கும் அருணாவைக் கருணைக் கொலை செய்துவிடலாம் என்று அவருடைய நண்பரும் பத்திரிகையாளருமான பிங்கி வர்மா என்பவர் சட்டப்படி விண்ணப்பித்துக்கொண்டார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிங்கியின் விண்ணப்பத்தை நிராகரித்து, அருணா வாழவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

கடந்த ஞாயிறு என்டிடிவியில், அருணா ஷான்பாக் வழக்கின் தீர்ப்பை முன்வைத்து, கருணைக் கொலை பற்றிய நீண்ட விவாதம் நடைபெற்றது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கருணைக் கொலையை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு விதமான கருத்துகள் வெளிப்பட்டன.

1) அருணா ஷான்பாக் கடந்த 38 ஆண்டுகளாக பச்சைக்காயாக மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருக்கிறார். உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றாலும் அவரால் இயல்பு வாழ்வுக்கு மீண்டு வர முடியாது. இந்நிலையில் எதற்காக அவரைத் தொடர்ந்து வதைக்கவேண்டும்?

2) யார் சொன்னது அவர் வதைபடுகிறார் என்று? நான் சென்று பார்த்தேன். கைகளைத் தொட்டேன். அசைவு தெரிந்தது. ஒரே சமயத்தில் பலர் சூழ்ந்துகொண்டால், கண்களால் சலிப்பு காட்டுகிறார். ஊட்டினால் உண்கிறார். அருணா என்று அழைத்தால் அவர் தலை திரும்புகிறது. சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது. வேறு என்ன வேண்டும்? கருணைக் கொலை பற்றியெல்லாம் தயவு செய்து பேசாதீர்கள் சார்.

3) முப்பது ஆண்டுகள் என்பது பெரிய விஷயமில்லை. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டெழுந்திருக்கிறார்கள். மருத்துவர் என்ன கடவுளா? அவர் சொல்வது இறுதி தீர்ப்பா?

4) வலியில் துடிக்கும் ஒருவரைக் கொல்வது பாவமில்லை.

5) கடவுள் கொடுத்த உயிரை நீக்க மனிதர்களுக்கு உரிமையில்லை. ஒருவரைக் கொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய நாம் யார்?

6) குறிப்பிட்ட நோயாளி உயிர் பிழைப்பாரா என்பதை மருத்துவர்களும் சட்ட நிபுணர்களும் இணைந்து ஆராயவேண்டும். இந்தக் குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளலாம்.

7) கருணைக் கொலையை அனுமதிப்பதில் தவறில்லை. ஆனால், இதைச் சாக்கிட்டு மருத்துவர்கள் சட்டத்தை மீற ஆரம்பித்துவிடுவார்கள். அச்சமாக இருக்கிறது.

8) சம்பந்தப்பட்ட நோயாளியின் கருத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். என்னைக் கொன்றுவிடுங்கள் என்று அவரே முன்வந்து விண்ணப்பித்துக்கொண்டால் பரிசீலிக்கலாம்.

9) கண்ணியத்துடன் இறப்பதற்கு ஒருவருக்கு உரிமையுண்டு. அந்த உரிமையில் நாம் தலையிடமுடியாது.

10) அதெப்படி கருணையுடன் கொல்லமுடியும்?

உணர்ச்சிபூர்வமாகவும் கோபாவேசத்துடனும் அறிவுபூர்வமாகவும் பலர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அதே நாள், அதே இரவு, அதே விஷயத்தைப் பற்றி சிஎன்என்-ஐபிஎன்னில் மற்றொரு அரை மணி நேர நிகழ்ச்சி. மேலும், சென்ற வாரப் பத்திரிகைகள் முழுவதிலும் கருணைக் கொலை விவாதப்பொருளாக மாறியிருந்தது. இணையத்திலும் பரவலாக விவாதித்தார்கள். பெரும்பாலும் மேற்கண்ட கருத்துகளே ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டன. பெரும்பாலானவர்கள், கருணைக் கொலையை எதிர்த்தனர்.

நிற்க. 1995 தொடங்கி 2009 வரை 2,16,500 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். பொதுவாக பெண்கள் விவசாயிகளாகக் கருதப்படுவதில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை இதில் அடங்காது. மூன்றில் இரண்டு பங்கு தற்கொலைகள் ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர். 1997 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2001க்குப் பிறகு, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒருவர் இறந்துபோனார். 2009ம் ஆண்டு மட்டும் 17,000 தற்கொலைகள்.

கருணைக் கொலை பற்றிய விவாதத்தில் விவசாயிகள் தற்கொலையை நுழைத்ததற்குக் காரணம் இருக்கிறது.

மாண்டு போன விவசாயிகளும் அருணா ஷான்பாகைப் போலவே வஞ்சிக்கப்பட்டவர்கள்தாம். மீள முடியாத பெரும் துன்பத்தில் சிக்கிக்கொண்டவர்கள்தாம். உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்னும் நிலையில், நிலத்தில் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை சிறிதளவு உட்கொண்டு இறந்துபோனவர்கள். இது விழிப்புணர்வுடன் அவர்கள் எடுத்த முடிவு. கண்ணியத்துடன் வாழ்வது சாத்தியமில்லாமல் போனதால் கண்ணியத்துடன் செத்துப் போனார்கள்.

'விவசாயிகள் தற்கொலை என்பது பிரச்னை அல்ல, பிரச்னையின் விளைவு' என்கிறார் பி. சாய்நாத். என்ன பிரச்னை அது? தற்கொலைக்கு அவர்களை யார் தூண்டியது? அரசாங்கம்? கிராமப்புறங்களையும் விவசாயத்தையும் புறக்கணிக்கும் புதிய தாராளமயக் கொள்கை? விவசாயிகளின் போராட்டங்களை வெளியில் கொண்டு வராத ஊடகங்கள்? கட்சிகள்? பாராளுமன்றம்? கண்டும் காணாமல் இருக்கும் பொது மக்களாகிய நாம்?

அருணா ஷான்பாக்கை என்ன செய்யலாம் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது பற்றி கவலைப்படும் நாம், விவசாயிகள் தற்கொலை பற்றி என்றாவது நினைத்து பார்த்திருப்போமா? விவாதித்திருப்போமோ? என்டிடிவியும் சிஎன்என்-ஐபிஎம்மும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து இதுபோல் விவாதித்திருக்கிறதா?

ஏன் செய்யவில்லை? அருணாவின் துயரங்கள் நமக்குத் தெரியும். இறந்து போன லட்சக்கணக்கான விவசாயிகளின் துயரம்? அவர்களது பெயர்? அவர்கள் பிரச்னை? அவர்கள் குடும்பத்தினர் பற்றிய விவரம்?

அதெப்படி கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று அறச்சீற்றம் கொள்பவர்கள், லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலையை அமைதியாகக் கடந்து சென்றது ஏன்? கடவுள் பறித்த உயிரை நீ யார் பறிப்பதற்கு என்று மைக்கில் சீறிய இறை பக்தர்கள், விவசாயிகளின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?

நித்தம் நித்தம் துன்பப்படுவதைக் காட்டிலும் கருணைக் கொலை செய்துவிடலாம் என்று சொல்பவர்கள் அதே அளவுகோலை விவசாயிகளுக்கும் பயன்படுத்துவார்களா? அவர்களது தற்கொலைகள் சரி என்று வாதிடுவார்களா? அல்லது, ஒரு விவசாயி உண்மையிலேயே மீளாத் துயரில்தான் இருக்கிறாரா என்பதை ஆய்வாளர்கள் மூலம் கண்டறிந்து, ஆம் என்று தெரிய வந்தால் அவரை நீக்கிவிடலாமா?

கருணைக் கொலை என்றதும் நம் உடலும் உள்ளமும் பதறுவது ஏன்? நாளை எனக்கும இந்த நிலைமை வந்தால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது என்று நடுங்குவது ஏன்? கருணைக் கொலை அளவுக்கு விவசாயிகள் தற்கொலை நம்மை உலுக்காதது ஏன்?

ஏன் நாம் சில விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, பிறவற்றை வெறுமனே கடந்து செல்கிறோம்? இந்தக் கேள்விக்கு விடை காணவேண்டுமானால், சில அடிப்படைப் புரிதல்கள் தேவை. மீடியா நம்மை எப்படிப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். மீடியா எதையெல்லாம் நமக்குப் பெரிதுபடுத்திக் காட்டுகிறது, எதையெல்லாம் மூடிமறைக்கிறது என்பதை உணரவேண்டும்.

அருணாவும் கருணைக் கொலையும் sensation topics. நம் உடனடி கவனத்தை ஈர்க்கும் திறன் அவற்றுக்கு உண்டு. ஆனால், விவசாயிகள் தற்கொலை பரபரப்புச் செய்தியாக மாறுவதில்லை. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ஆராயப் புகுந்தால், இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக அடித்தளங்களைக் கேள்விக்கு உட்படுத்தவேண்டியிருக்கும். மீடியாவுக்கு அதில் விருப்பமில்லை.

அருணா ஷான்பாக் கொல்லப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும் நம் மனச்சாட்சியும் உரத்துச் சொல்வதற்குக் காரணம் கருணை என்றால், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலையை நாம் அலட்சியப்படுத்துவதற்குக் காரணம் என்ன?

விவசாயிகள் தற்கொலை மட்டுமல்ல கருணைக் கொலையும்கூட பிரச்னை அல்ல. பிரச்னையின் விளைவே. நமது நீதித்துறை கருணைக் கொலையை மட்டுமல்ல தற்கொலையையும் சேர்த்தே தடை செய்து வைத்திருக்கிறது. கண்ணியமாக வாழ முடியாத ஒரு நாட்டில் கண்ணியமாக இறக்கவும் முடியாது.

ஆதாரங்கள் :

4 comments:

Anonymous said...

Thought provoking essay congrats to you!!!!!!!!!!!

Anonymous said...

கொல்லப்படுவது கருணை தான் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள் மருதன்

வெங்கடேஷ் said...

சாய்நாத்தின் everone loves a good drought புத்தகத்தில் இது பற்றிய செய்திகள் வருகின்றன. கருணைக் கொலை பற்றிய வித்தியாசமான பார்வையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

Anonymous said...

கண்ணியமாக வாழ முடியாத ஒரு நாட்டில் கண்ணியமாக இறக்கவும் முடியாது

greatly said...