March 27, 2011

'தலித் முரசு' புனித பாண்டியனுக்கு மறுப்புதலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியனின் உரையைச் சென்ற பதிவில் இணைத்திருந்தேன். அந்த உரையில் இடதுசாரிகள் மீதும் குறிப்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் (ம.க.இ.க.) மீதும் புனித பாண்டியன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருநதார்.

1) சாதியை ஒழிக்காமல் புரட்சி சாத்தியமில்லை.

2) இடதுசாரிகள் புரட்சியைக் கொண்டு வருவார்கள் என்னும் நம்பிக்கையில்லை.

3) கம்யூனிஸ்டுகளில் பலர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அரசியலைக் கடவுள் போல் நினைத்து வணங்கி வருகிறார்கள்.

4) இந்தியச் சூழலுக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரைவிட அம்பேத்கரே நமக்குத் தேவைப்படுகிறார்.

5) இந்து மத அடித்தளத்தைத் தகர்க்காமல் எந்தவித புதிய சிந்தனைகளையும் இங்கே பரப்பமுடியாது.

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து இடதுசாரிகள் விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் புனித பாண்டியன் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ம.க.இ.க. மீது பற்றுறுதி கொண்ட தோழர் சரவணன் இரு தினங்களுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டு உரையாடினார். புனித பாண்டியனின் வாதங்களுக்கு மறுப்பு எழுத விரும்புவதாகவும் தெரிவித்தார். சொன்னபடியே நேற்று இரவு அவரது விரிவான கட்டுரை வந்து சேர்ந்தது.

கட்டுரையின் நீளம் கருதி அதனை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். மற்றபடி கட்டுரையின் மொழி, உள்ளடக்கம் உள்பட எதிலும் நான் திருத்தம் செய்யவில்லை.

புனித பாண்டியனின் முழு உரையையும் கேட்டு முடித்த பிறகு இந்தக் கட்டுரையை வாசிக்க ஆரம்பியுங்கள்.

கட்டுரையின் முதல் பாகம் கீழே.

மருதன்


முற்போக்கு ஜோதிடர் புனித பாண்டியனின் புரட்சி ஆரூடம்

-- சரவணன்

தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு புனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச்செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி. தலித் முரசின் கட்டுரைகளையும், புனிதப்பாண்டியனின் கருத்துக்களையும் இந்த நோக்கிலிருந்து தான் பார்க்க வேண்டும். தலித் முரசின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கவனித்தால்அவர்கள் கம்யூனிச எதிர்ப்பையும் வெறுப்பையும் விதைத்துக்கொண்டிருப்பதை அறியலாம்.

சமீபத்தில் சென்னை அரசியல் பள்ளி என்கிற அமைப்பு 'தேர்தல்களும் மக்களாட்சியும்: சில கண்ணோட்டங்கள்' என்கிற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் 'மக்களாட்சி எனும் மாயை' என்கிற தலைப்பில் பேச வேண்டிய புனிதப்பாண்டியன் “மக்களாட்சியில் ஏதும் மாயை இல்லை. இப்போதிருப்பது மக்களாட்சியா இல்லையா என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர‌ நாம் அடைய வேண்டிய இறுதி லட்சியம் ஜனநாயகம் தான்” என்று பேசினார். தொடர்ந்து மக்களாட்சியை பற்றி சிற்சில தத்துவ முத்துக்களையும் உதிர்த்துவிட்டு அந்த தலைப்பை அத்துடன் முடித்துக்கொண்டு ”இந்தியாவில் புரட்சி நடக்குமா நடக்காதா” என்கிற தனக்கு கொடுக்கப்படாத தலைப்பில் பேசத்துவங்கி விட்டார்.

ஜனநாயகம் என்கிற ’மக்களாட்சி’ அது தோன்றிய நாடுகளிலேயே ’மக்களால்’ கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் சர்வாதிகாரத்தன்மையை உணர்ந்து கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் அதை தூக்கியெறிந்துவிட்டு அடுத்த சமூக அமைப்பை நிறுவப்போராடி வருகிறார்கள். ஆனால், நமது பு.பா வோ இப்போது தான் தனது லட்சிய சமூகமான மக்களாட்சிக்கான பிரச்சாரப் பயணத்தையே துவங்கியிருக்கிறார்!

லெனின் கூறுவார், ”ஒருவன் ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டால் யாருக்கு என்று அடுத்த கேள்வியை கேட்பவன் தான் மார்க்சியவாதி.” ஏனெனில் ஜனநாயகம் என்பது வர்க்கச்சார்பானது. ஒரு சமூக அமைப்பிலிருக்கும் இரண்டு வர்க்கங்களுக்கும் சமமான (ஆளும் வர்க்கம்-ஆளப்படும் வர்க்கம்) ஜனநாயகம் என்பது இருக்கவே முடியாது. சிறுபாண்மை முதலாளிகளுக்கு ஜனநாயகம் என்றால் பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கு அது சர்வாதிகாரமாகத் தான் இருக்க முடியும். மற்றொரு புறம் பெரும்பாண்மை மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்படும் சமூக அமைப்பில் சிறுபாண்மை ஆளும் வர்க்கத்துக்கு சர்வாதிகாரமே வழங்கப்படும்.

இதில் புனிதப்பாண்டியன் அடையப்போகும் லட்சிய ஜனநாயகம் எந்த வகையைச் சேர்ந்தது ? அது எப்படி இருக்கும் ? அதில் முழுக்க ஜனநாயகம் மட்டுமே இருக்குமா அல்லது சர்வாதிகாரமும் இருக்குமா ? எனில் யாருக்கு ஜனநாயகம் யாருக்கு சர்வாதிகாரம் ? உரையில் ஆங்காங்கே சில நரித்தனங்களையும் செய்திருக்கிறார் திருவாளர் பு.பா.

முதல் விசயம், தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் நின்று பேசாமல் பேச்சினூடாகவே வேறு தலைப்பிற்கு மாறிக்கொண்டது. பேசு பொருளை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளை பற்றியும், புரட்சியை பற்றியும் பேச வேண்டிய அவசியம் என்ன ? புரட்சி வருமா வாராதா என்பதை பற்றி அண்ணன் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று அரங்கத்தில் யாராவது ஒற்றைக்காலில் நின்றார்களா ? இல்லையே, எனில் அது குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன, அதுவும் எதிர்மறையில் ? அங்கே தான் இருக்கிறது தலித் முரசிற்கு தேவனால் பணிக்கப்பட்ட வேலைத்திட்டம்!

இரண்டாவதாக விசயம், கம்யூனிஸ்டுகளை ஆன்மீகவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். தோழர் ஜூலிஸ் பூசிக் சொன்னதைப்போல தனி வார்ப்புகளான கம்யூனிஸ்டு புரட்சியாளர்களை மூடத்தனத்தை பரப்பும் ஆன்மீகவாதிகளோடு ஒருவனுக்கு ஒப்பிடத்தோன்றுகிறதென்றால் அந்த விசுவாசிக்கு கம்யூனிஸ்டுகள் மீது எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும்? தீவிர கம்யூனிச விரோதியைத் தவிர வேறு யாரால் இப்படியெல்லாம் ஒப்பிட முடியும் ? மேலும் கம்யூனிஸ்டுகள் சாமி கும்பிடுகிறார்கள் என்றும் பொய் பேசியிருக்கிறார்.

கீழ்கண்டவை கம்யூனிஸ்டுகள் குறித்து பு.பா பேசியவை.

”ஆன்மீகவாதிகள் எப்படி அவனின்றி அணுவும் அசையாது என்கிறார்களோ அதே போலத்தான் இவர்களும் அரசியலின்றி எதுவுமே நடக்காது என்கிறார்கள். இதுவும் ஒரு வகை கடவுள் நம்பிக்கை போலத்தான், மேலும் கடவுளை ஏற்றுக்கொள்கிற கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

விசுவாசத்திற்கு என்ன ஒரு மூர்க்கத்தனம் ? கடவுளை வழிபடுபவன் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும் என்று சொல்லுபவன் எப்படிப்பட்ட ஒரு முட்டாளாக இருக்க முடியும்!!. அப்படி கடவுளை வழிபடுபவனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக வைத்துக் கொண்டிருக்குமா ? இந்த சாதாரண உண்மை கம்யூனிசம் பற்றிய அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு கூடத் தெரியும், ஆனால் இந்த நாட்டில் புரட்சி வருமா வராதா என்கிற அளவுக்கு ஆரூடம் கூறப் புறப்பட்டிருக்கிற திருவாளர் பு.பா வுக்கு தெரியவில்லை என்பது அவரது முட்டாள்தனத்தைக் காட்டுகிறதா அல்லது அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறதா?

இல்லை, இல்லை நான் சி.பி.எம் காரர்களைத் தான் சொன்னேன் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் இப்படி, இப்படி இருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சொல். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் கம்யூனிஸ்டுகள் இல்லை, இல்லை என்று நாங்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறோமே அது இந்த பு.பா காதில் மட்டும் விழவில்லையா ?போலிக் கம்யூனிஸ்டுகளிடம் போய் உண்மையான கம்யூனிச பண்புகளை எதிர் பார்ப்பதும், அதையே சாதகமாக்கிக்கொண்டு கம்யூனிஸ்டுகளே கூட சாமி கும்பிடுகிறார்கள் என்று பொதுமைப்படுத்தி பேசுவது புத்திசாலித்தனமா - அயோக்கியத்தனமா?

இவ்வாறு பேசுவதெல்லாம் வாய் தவறித் தெரியாமல் பேசுவதல்ல, அல்லது கடவுள் மறுப்புக்கொள்கையில் தனக்கிருக்கும் பற்றினால் பேசுவதல்ல மாறாக திட்டமிட்டு செய்வதாகும். இவ்வாறு போலிக் கம்யூனிஸ்டுகளின் தவறுகளை சாதகமாக்கிக்கொண்டு உண்மையான கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்த என்ன காரணம் ? காரணம் மேற்சொன்னது தான். இந்த லட்சணத்தில் இடதுசாரிகள் விவாதத்திற்கு முன் வர வேண்டுமாம். கடவுளை நம்புகிறவன் கம்யூனிஸ்ட் என்று கூறும் ஒரு முட்டாளுடன் விவாதம் நடத்த யாராவது முன் வருவார்களா?

(தொடரும்)

4 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விழிப்புணர்வு பதிவு..

Anonymous said...

Good one. Publish second part soon

விடுதலை said...

அவர்கள் கம்யூனிஸ்டுகள் இல்லை, இல்லை என்று நாங்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறோமே //

மகஇக ஏஜன்ட்டுகளுக்கு சிபிஎம் கட்சியை நக்கி பிழைக்காமல் இருக்கமுடியாத

Siraju said...

இக்கட்டுரைகளையெல்லாம் முதலில் படிக்கவும், பின் மறுப்பு தெரிவிக்கவும்

1. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13898:2011-03-27-17-37-03&catid=26:india&Itemid=135