April 20, 2011

ஒபாமா ஒரு தரம், ஒபாமா இரண்டு தரம்!




2012ல் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் பராக் ஒபாமா. வேட்பு மனு தாக்கல் செய்த முதல் நபர் இவரே.  இணையத்தில் முறைப்படி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். ‘ஆடம்பரமான தொலைக்காட்சி விளம்பரங்களையோ பிரமாண்டமான நிகழ்ச்சிகளையோ அல்ல உங்களைத்தான் நாங்கள் நம்புகிறோம்.’ அதே ஒபாமா இதையும் சொல்கிறார். ‘இதுவரை இல்லாத  அளவுக்கு இந்த முறை தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு பில்லியன் டாலர் திரட்டப்போகிறோம்.’

புஷ் மற்றும் அமெரிக்காவின் சந்தை மதிப்பு உலக அரங்கில் படு பாதாளத்தில் விழுந்து கிடந்த சமயத்தில், ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக பராக் ஒபாமா 2008 தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்பட்டார். புஷ்ஷுக்குக் கிடைத்ததைக் காட்டிலும் இரு மடங்கு அதிக தேர்தல் நிதி (770 மில்லியன் டாலர்) ஒபாமாவுக்குக் கிடைத்தது. இராக் யுத்தத்தை முடித்து வைப்பேன், பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவேன், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவேன், உலக அரங்கில் அமெரிக்காவுக்குக் கம்பீரமான ஓரிடத்தைப் பெற்றுத்தருவேன் என்று வண்ணமயமான வாக்குறுதிகளை வழங்கி, ஜனவரி 2009ல் ஆட்சியைப் பிடித்தார் ஒபாமா.

அவர் வெற்றியின் ரகசியம், மாற்றம் என்னும் மந்திரச்சொல். அமெரிக்கா எதை விரும்பியதோ அதையே தன் முழக்கமாக முன்வைத்தார் ஒபாமா. அமெரிக்கா மட்டுமல்ல முழு உலகமும் அவரை உயர்த்திப் பிடித்து கொண்டாடியது. வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஒரு கறுப்பு அதிபர் என்று ஊடகங்கள் சிலிர்த்துக்கொண்டன. இனி அமெரிக்கா நல்ல பிள்ளையாகிவிடும் என்று பலர் ஆருடம் சொன்னார்கள்.

கனவு முடிந்து கண் விழித்து பார்த்தபோது, அமெரிக்காவிடம் மட்டுமல்ல ஒபாமாவிடமும் மாற்றம் எதுவும் இல்லை. புஷ்ஷுக்குப் பதில் ஒபாமா. வெள்ளையருக்குப் பதில் ஒரு கறுப்பர்.  மற்றபடி, ஆட்சி முறையிலோ நிர்வாகத்திலோ அணுகுமுறையிலோ அடிப்படை சித்தாந்தத்திலோ எந்தவித மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், புஷ்ஷின் கொள்கைகளுக்கு ஒபாமா வலுவூட்டவே செய்தார்.

அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டு மக்கள் தள்ளாடிக்கொண்டிருந்தபோது, ஒபாமா முதலில் கை கொடுத்து தூக்கிவிட்டது, மக்களை அல்ல, கார்ப்பரேட் கம்பெனிகளை.  வால்ஸ்ட்ரீட்டையும் தனியார் வங்கிகளையும் பிணை கொடுத்து மீட்டெடுத்து பங்குச்சந்தைக்கு உயிரூட்டினார். 2010ல் பங்குச்சந்தை முன்பிருந்த நிலையை அடைத்தது. பெரிய இடைவேளைக்குப் பிறகு தலைமை நிர்வாகிகளுக்குப் பளபளக்கும் சம்பளம் வர ஆரம்பித்தது. அமெரிக்கா மீண்டும் ஒளிர ஆரம்பித்தது. அதே சமயம் சராசரி தொழிலாளர்களின் ஊதியம் தேக்கம் அடைந்தது. ஆனால் புதிய மீட்பரின் கரிசனம் அவர்களுக்குக் கிட்டவில்லை. பொதுப் பணிகளும் சமூக நலத் திட்டங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கியது ஒபாமா அரசு.

அமெரிக்காவின் நிலைமையை மாற்றுவேன் என்று ஒபாமா ஓராயிரம் முறையாவது முழங்கியிருப்பார். எந்த அமெரிக்காவின் நிலைமையை என்று அவர்களில் ஒருவரும் கேட்காதது அவர்கள் தவறு. 2009 தொடங்கி இன்றுவரையிலான வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 6 மில்லியன். இவர்களுக்கு ஒபாமாவின் அருள் கிடைக்கவில்லை. ஆனால் செல்வந்தர்களுக்கு இன்றுவரை வரிக்குறைப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. புஷ் ஆட்சியில் இருந்தபோது இதையேதான் செய்தார். மக்கள் அல்ல, பென்டகனும் பெரும் நிறுவனங்களுமே அமெரிக்காவுக்கு முக்கியமானவை.

இன்றைய தேதி வரை இராக் போர் முடிவடையவில்லை. இன்றைய தேதி வரை ஆப்கனிஸ்தானில் அமெரிக்கக் குண்டுகள் விழுந்துகொண்டிருக்கின்றன. இன்றைய தேதி வரை குவந்தனாமோ சிறைச்சாலை மூடப்படவில்லை. இந்த வருடம், அடுத்த வருடம் என்று தேதி கொடுப்பதும் பிறகு சத்தமில்லாமல் பின்வாங்குவதும் ஒபமாவுக்குப் பழகிவிட்டது. புஷ் முன்னெடுத்துச் சென்ற போரைக் கைவிடும் எண்ணம் ஒபாமாவுக்கு இல்லை. போர் என்றால் வர்த்தகம். போர் என்றால் வாய்ப்புகள். போர் என்றால் லாபம். அதனால்தான் தன் பங்குக்கு லிபியா மீது போர் தொடுத்திருக்கிறார் ஒபாமா. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பராக் ஒபாமா.  நிதி, அரசியல், யுத்தம். இந்த மூன்றுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் புஷ்ஷைப் போலவே ஒபாமாவும் புரிந்து வைத்திருக்கிறார். எனவே, மாறுதல் ஏதுமின்றி தொடர்கிறது ஒபாமாவின் ஆட்சி.

எனவே, அமெரிக்கர்கள் சலிப்படைந்துவிட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒபாமாவின் மதிப்பும் ஜனநாயகக் கட்சியின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது. தொழில்துறை மாநிலங்களான பென்சில்வேனியா தொடங்கி மினசோட்டா வரை இந்த சரிவு தெரிகிறது. ஒபாமாவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கு 42 சதவீதத்தினரே ஆதரவு அளித்திருக்கிறார்கள். போதாதததற்க, விஸ்கான்சின் போன்ற பகுதிகளில் ஒபாமா ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வு பெருகிக்கொண்டிருக்கிறது.

தன்னம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் ஒபாமா தன் பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பரந்து விரிந்த அதே புன்னகை. அதே கையசைப்பு.  சென்ற முறை வெளிப்படுத்திய அதே திடம், அதே நம்பிக்கை, அதே மன உறுதி. கிட்டத்தட்ட அதே தேர்தல் உத்திகள். தேர்தல் வாக்குறுதிகளும், பிரசார உரைகளும், நுணுக்கமான செயல்திட்டங்களும் அநேகமாக தயாராகியிருக்கும். அல்லது, தயாராகிக்கொண்டிருக்கும்.

(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)

4 comments:

Jay Rajamanickam said...

நம் நாட்டோட முன்னெற்றத்திற்கு காரணம் விவசாயமும் உழைக்கும் வர்க்கமும். மன்மோகன் சிங்கோ, ப.சிதம்பரமோ கிடையாது. அது போல் அமெரிக்காவின் தற்போதைய வீழ்ச்சிக்கு ஒபாமா காரணம் கிடையாது. அமெரிக்க மக்களே காரணம். எந்தப் போர்களினால் பொருளாதாரம் அடிவாங்கியதோ, அதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பணக்காரன் திடிரென்று ஏழையாகிவிட்டால் எப்படி அவன் பகட்டை விடாமல் பிடித்து வைத்திருப்பானோ, அது போல் அமெரிக்கா நடந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் யூகேவும் தங்கள் நாட்டாம்மைதனத்தை நிறுத்திக் கொண்டு தங்கள் நாட்டை சரிவில் இருந்து காத்துக்கொள்ள முயல வேண்டும்.

ananda said...

LIKE

Unknown said...

நல்ல ஆலசல் மருதன் பாராட்டுக்கள். நம் பாரத பிரதமர் கூட ஊழலை ஒழிக்க போகிறராமே அவரையும் கொஞ்சம் பாருங்க

பேட்டையான் said...

நல்ல அலசல் மருதன் நம் பாரத பிரதமர் கூட ஊழலை ஒழிக்க போகிறாராம் அவரையும் ஒரு அலசு அலசுங்க