August 25, 2011

பிரிட்டன் : இது வேறு ஷாப்பிங்!


அறியப்படாத ஓர் இளைஞனின் மரணத்துக்காக ஒட்டுமொத்த தேசமும் தார்மீகக் கோபத்துடன் திரண்டு வந்து கலகம் செய்வது இன்றைய தேதியில் சாத்தியமல்ல. காவல்படை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருபத்தோரு வயது ஆப்பிரிக்க-கரீபிய இளைஞரான மார்க் டகனுக்கும் இன்று கொழுந்து விட்டு எரியும் பிரிட்டன் வீதிகளுக்கும் அதிக தொடர்பில்லை என்று உத்தரவாதமாகச் சொல்லலாம். அது ஒரு வலுவான ட்ரிக்கரிங் பாயிண்ட் என்றபோதும்.

ஆகஸ்ட் 4ம் தேதி டோடென்ஹாமில் காரில் சென்றுகொண்டிருந்த மார்க்கை சில காவல்துறை அதிகாரிகள் வழிமறித்து விசாரணை நடத்தியது மட்டுமே செய்தியாக வெளிவந்திருக்கிறது. மார்க் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி, ஏன் என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மார்க் குடும்பத்தினர் தங்கள் அதிகபட்ச கோபத்தை காவல் நிலையத்தின் முன் ஊர்வலம் நடத்தி தணித்துக்கொண்டுவிட்டார்கள். அதுவும் அமைதி ஊர்வலம். அதுவும்கூட நான்கு மணி நேரம் காத்திருந்து அனுமதி பெற்ற பிறகு நடந்தது. காவல்துறை அராஜகம் ஒழிக என்று சத்தம் போட்டு நாலு கத்தி கத்தியிருந்தால் அதிகம்.

மறுநாள் லண்டன் வீதிகளில் புகை கசிய ஆரம்பித்தது. எரியும் கார் டயர்கள் வீதிகளில் உருண்டோடின. சில மணி நேரங்களில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளும் பெரிய ஷாப்பிங் மால்களும் சூறையாடப்பட்டன. லண்டன் கலவரம் என்று பிபிசி சுருக்கமாக அடையாளப்படுத்துவதற்குள் சரசரவென்று மான்செஸ்டர், சால்ஃபோர்ட், லிவர்பூல், நாட்டிங்காம், ப்ரிம்மிங்காம் என்று பிரிட்டன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. யார், எப்படி கூடுகிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் எதுவும் யாருக்கும் புரியவில்லை. பகல் வெளிச்சத்தில், போக்குவரத்தை உடைத்துக்கொண்டு கடைகளுக்குள் புகுந்து சிசிடிவி காமிராக்களைப் புறக்கணித்துவிட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.

தடுக்கவோ தவிர்க்கவோ யாருமில்லை. முடியவில்லை என்பதுதான் உண்மை. ஓவென்று சத்தம் கேட்கும்போதே கல்லாப் பெட்டியை நகர்த்திவிட்டு நகர்ந்துகொண்டுவிட்டார்கள் கடைக்காரர்கள்.  விசில் ஊதிக்கொண்டு காவல்துறையினர் குதிரையிலும் காரிலும் பாய்ந்து வருவதற்குள் காலி பண்ணிக்கொண்டு அடுத்த தெரு புகுந்துவிட்டது கும்பல். ஒருவேளை எதிர்கொண்டிருந்தாலும் திகைத்து நிற்பதைத் தவிர மேலதிகம் எதுவும் செய்திருக்கமுடியாது.

எதற்காக இந்தக் கலவரம் என்னும் கேள்விக்கு ஒரே ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கையில் கிடைத்ததைத் தூக்கிக்கொண்டு ஓவென்று சத்தமிட்டபடி கும்பலமாக ஓடிவரும் ஆண்களையும் இளம் பெண்களையும் பள்ளிச் சிறுவர்களையும் எது ஒன்றிணைக்கிறது? இவர்கள் ஒருவரையொருவர் அறிவார்களா? பிளாஸ்டிக் பையில் நைக் டி ஷர்ட்களையும் செல்ஃபோன்களையும் செண்ட் பாட்டில்களையும் இன்னபிற சாக்லேட் வகைகளையும் வீட்டுக்குக் கொண்டு செல்லும்போது அவர்கள் தங்கள் ‘ஷாப்பிங்’ பற்றி என்ன நினைத்துக்கொள்வார்கள்?

இவர்களில் பலர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் பார்ப்பவர்கள். நாளை எங்கே கூடலாம் என்று யோசித்து, தகவல் சேகரித்து, செய்திகள் பரிமாறி, கற்பனைகளுடன் உறங்கி மறுநாள் மாலை முகத்தில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஓடுபவர்கள். இவர்களில் எத்தனை பேருக்கு மார்க் டகனைத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?

நம்மால் மட்டுமல்ல, பிரிட்டனால்கூட இவர்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. விடுமுறை காலம் என்பதால் காவல்துறை அதிகாரிகளும் மேயர்களும் தங்கள் குடும்பத்தோடு மூலைக்கு ஒருவராக விமானம் பிடித்து பறந்துபோயிருந்த சமயம் வீதிக் கலவரம் உக்கிரமடைந்திருக்கிறது. பிரதமர் டேவிட் கேமரன் கூட கடுப்புடன்தான் தன் விடுமுறையை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியிருக்கவேண்டும். வழக்கத்தைவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருக்கவேண்டிய சமயத்தில், அனைவரையும் திரும்பப் பெற்று, இரு மடங்கு அதிகாரிகளை (16,000 பேர்) வீதிகளில் நிறுத்தியிருக்கிறோம் என்று காமிரா முன்னால் நின்று அறிவித்தபோது கேமரனின் விரக்தி வெளிப்பட்டது.

இது கிரிமினல்களின் வேலை என்று டேவிட் கேமரன் சொல்வதை முழுமையாக ஏற்க முடியவில்லை. எனில், ஒரே இரவில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கிரிமினல்கள் உருவாகிவிடமுடியுமா? சொல்லிவைத்தாற்போல் ஒரு குழுவாகத் திரளமுடியுமா? நிதி நெருக்கடி காரணமாக பிரிட்டன் சில மக்கள் நலப் பணித் திட்டங்களையும் மானியங்களையும் ரத்து செய்தது ஒரு பிரிவினரிடையே அதிருப்தியையும் கோபத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது என்கிறது லேபர் கட்சி. அரசியல் லாபத்துக்காகவே லேபர் கட்சி இந்த வாதத்தை ஆரம்பித்து வைத்தது என்றாலும் இதிலுள்ள உண்மையை மறுக்கமுடியாது.

முன்னெப்போதும் இல்லாதபடி, வர்க்க பேதம் பிரிட்டனில் (அமெரிக்காவிலும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும்கூடத்தான்) அதிகரித்திருக்கிறது. பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. நம் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் புறக்கணிக்கப்படுகின்றன என்னும் உணர்வு வலுகூடியிருக்கிறது. உதாரணத்துக்கு ஹாரிங்கே கவுன்சிலில் (மார்க் கொல்லப்பட்ட டோடென்ஹாம் இங்குதான் உள்ளது) மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வித் தொகையும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது அல்லது பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் பிரிட்டனின் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த சிலரும் நிற, இன வேறுபாடுகளால் புறக்கணிக்கப்பட்ட சிலரும் இந்த  வீதிக் குழுக்களோடு இணைந்திருக்கலாம்.

அதே சமயம் இது முழுக்க முழுக்க அடித்தட்டு மக்களின் கலவரம் மட்டுமல்ல. பசி உந்தித்தள்ளியிருந்தால் உணவுப் பொருள்களையே அவர்கள் கைப்பற்றியிருப்பார்கள். சிடி பிளேயரையும் செல்ஃபோனையும் ஜீன்ஸ் பேண்டையும் அல்ல. என்றால் இது அசாதாரணமான பசி. போட்டி, பொறாமை, வலி, பொறுப்பின்மை, வெறி, ஏமாற்றம் அனைத்தும் கொண்டிருக்கும் நுகர்வோரின் பசி. ஒரு சில வாரங்களிலோ மாதங்களிலோகூட இந்த உணர்வுகள் உற்பத்தியாகியிருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாக புகைய ஆரம்பித்திருக்கவேண்டும். அங்கே, இங்கே என்று தாவி ஒரு கட்டத்தில் எங்கும் வைரஸ் போல் பரவியிருக்கவேண்டும்.

எண்பதுகளில் இதே போல் பிரிட்டனில் ஒரு கலவரம் நடந்தது. விரக்தியின் உச்சத்தில் இருந்த இளைஞர்களின் எழுச்சியை மார்கரெட் தாட்சர் தன் பலத்தைப் பிரயோகித்து ஒடுக்கினார். பொருளாதார ஏற்றத்தாழ்வும் வாய்ப்பின்மையும் பிரதான காரணங்களாக அப்போது சுட்டிக்காட்டப்பட்டன. தாட்சருக்குக் கிடைத்த செல்வாக்கும் புகழும் பலமும் கேமரனுக்கு இல்லை என்பதால் பிரிட்டன் திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமானோரைச் சிறையில் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான தண்டனைகளைக் காட்டி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.பலனில்லை.

அன்று தாட்சர் அணைத்த நெருப்பு முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் புகைந்திருக்கிறது. இந்த முறையும் நெருப்பை அணைக்கவே பிரிட்டன் முயன்றுகொண்டிருக்கிறது. புகை அதன் கண்களுக்குத் தெரியவில்லை. அல்லது, பார்க்க மறுக்கிறது.

(புதிய தலைமுறையில் வெளியான என் கட்டுரை).

3 comments:

Anonymous said...

//இன்றைய தேதியில் சாத்தியமல்ல//--->


:) எல்லா தேதியிலும்தான்...d

Ernesto Balaji said...

நீங்கள் புதிய தலைமுறையில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.. :)

தமிழ் said...

//அன்று தாட்சர் அணைத்த நெருப்பு முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் புகைந்திருக்கிறது.//
30 ஆண்டுகளுக்கு முன் நடந்தவையெல்லாம் எனக்கு தெரியவில்லை.ஆனால் இப்போது கண்டுவிட்டேன்.இருப்பினும் சரியான காரணத்தை நீங்களும் சரி பிறரும் சொல்லவே இல்லை.