September 2, 2011

நூறு பூக்கள் : எது சிறந்த மொழிபெயர்ப்பு?

நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் 'உங்கள் நூலகம்' ஆகஸ்ட் 2011 இதழில் வெளியாகியுள்ள அறிவிப்பு. 1978ல் என்.சி.பி.எச் முதன்முதலாக வெளியிட்ட சோவியத் மார்க்சிய-லெனினியக் கழகத்தின் பல பத்தாண்டுக் கால உழைப்பில் உருவான முழுமையான காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு. ரூ. 700 மதிப்புள்ள இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.450/-க்குக் கிடைக்கிறது. 1300 பக்கங்கள்.  கூடுதலாக, எங்கெல்ஸின் வாழ்க்கை வரலாறு இலவசமாக இத்துடன். அணுகவேண்டிய முகவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, தொலைபேசி 26251968, 26359906. (உங்கள் நூலகம் செப்டெம்பர் மாத இதழ், கார்த்திகேசு சிவத்தம்பி நினைவு மலராக வெளிவரவிருக்கிறது).

மேற்படி இதழில் கோவை ஞானியின் பேட்டி இடம்பெற்றுள்ளது. மார்க்சியம் இலக்கியத்தை நிராகரிக்கவில்லை, அழகியலை நிராகரிக்கவில்லை, ரசனையை நிராகரிக்கவில்லை என்று ஆதாரத்துடன் விளக்கினார். ஒரு சிறந்த படைப்பு எப்படி உருவாகிறது? மார்க்ஸின் ஒரு மேற்கோளைக் குறிப்பிட்டார். Milton produced Paradise Lost for the simple reason that a silkworm produces silk, for it has become its own nature. ஆனால் தமிழ் இலக்கியத்தை மார்க்சிய நோக்கில் கட்டுடைக்கும் இவருடைய முயற்சி எல்லை தாண்டுவதை உணரமுடிகிறது. சித்தர் பாடல்கள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாடல்கள், பக்தி இலக்கியம் என்று அனைத்தையும் இவர் சிரமப்பட்டு மறுவாசிப்பு செய்கிறார். ஷேக்ஸ்பியரை மார்க்ஸ் கொண்டாடியதற்கும் பால்சாக்கை எங்கெல்ஸ் போற்றியதற்கும் ஞானி இந்த பக்தி இலக்கியங்களைப் போற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

குரூஸ்கயா ஒருமுறை லெனினை பீத்தோவன் இசையைக் கேட்க மாஸ்கோ தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். இசை மெல்ல மெல்ல லெனினுக்குள் நுழைந்து அவரை ஆக்கிரமித்துக்கொண்ட நிலையில் திடீரென்று எழுந்து அவர் வெளியேறிவிட்டார். இசைக்கு முற்றாக வயப்படுவதை லெனின் விரும்பவில்லை. தன் அரசியல் பொறுப்பு கெடும் என்பது அவர் கருத்து. ரசனைக்கும் ரசனைக்குள் மூழ்கித் தொலைந்து போவதற்குமான வேறுபாடு இது.

அதற்காக லெனின் இசையைத் தடை செய்துவிடவில்லை. இலக்கியங்களை நிராகரித்துவிடவில்லை. மதத்தை அதிகாரபூர்வமாக ஒழித்துவிடவில்லை. ஓர் உதாரணம். மாயகோவ்ஸ்கியின் புதுக்கவிதைகள் மீது லெனினுக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், அந்தக் கவிதைகளைப் பள்ளி மாணவர்கள் விரும்பி பாடியதைக் கேட்டதும், மனம் கசிந்து மாயகோவ்ஸ்கியின் கவிதைகளை எல்லா நூலகங்களிலும் இடம்பெறச் செய்தார். கலையையும் கலையுணர்வுயும் புறக்கணிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் அவற்றுள் சிக்கி தொலைந்துபோகவேண்டியதும் இல்லை.

0

மூலப்பிரதியைச் சிதைக்காமல் வருவதே சிறந்த மொழிபெயர்ப்பு என்கிறார் எஸ். பாலச்சந்திரன். (புத்தகம் பேசுது, ஆகஸ்ட் 2011). சே குவேரா வாழ்வும் மரணமும், லுமூம்பா : இறுதி நாட்கள், ஃபனான் : அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் போன்ற பல முக்கிய நூல்களை இவர் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இவருடைய நூல்களில் பெரும்பாலானவை விடியலில் வெளிவந்துள்ளன. இடைவிடாத பயிற்சி, இடைவிடாத வாசிப்பு இரண்டும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை என்கிறார் பாலச்சந்திரன். 'மொழிபெயர்ப்பாளர்கள் வெறும் மொழிமாற்றத்தில் ஈடுபடுபவர்களாகவும் படைப்பாற்றல் இல்லாதவர்களாகவும்'  கருதப்படுவதை அவர் எதிர்க்கிறார்.

தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் நடைபெறுவதில்லை என்பது 'ஆங்கில மொழியாளர்கள் கவலைப்படவேண்டிய விஷயம், அது தமிழ் மொழியின் பிரச்னையல்ல.' எது சிறந்த மொழிபெயர்ப்பு? 'மூலப்பிரதியின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றை எக்காரணத்தைக் கொண்டும் சிதைக்காததாக, படைப்புலகம் கோருகின்ற ஆழமும் செறிவும் நிறைந்ததாக, நூற்பிரதியிடமிருந்து தொடர்பற்று விலகிச் செல்லாததாக, அம்மூலப் பிரதியிலுள்ள அனைத்து அந்நியமொழி சார்ந்த கலாசாரத்தையும் இயன்றவரையில் முழுமையாக மொழிபெயர்ப்புக்குள் கொண்டுவரக்கூடியதாக' இருக்கும் படைப்பே சிறந்த மொழிபெயர்ப்பு.

எஸ். பாலச்சந்திரன் மொழிபெயர்ப்பில் பாரதியில் வெளியாகவுள்ள இரு புத்தகங்கள். Kathleen Gough எழுதிய Rural Society in South East India, Rural Changes in South East India.

0

ஹை ஹீல்ஸ் அணிந்த ஒரு பெண் நவீன உடை உடுத்தி நடந்து செல்கிறாள். அவள் கையில் ஒரு கயிறு. அதன் மற்றொரு முனையில் ஓர் ஆண் தவழ்ந்து பின்தொடர்கிறான். அந்த வலைப்பதிவின் முகவரி இப்போது எனக்கு நினைவில்லை. நீ என்னை அடக்கியாண்டாய் அல்லவா இப்போது என் முறை! இதுதான் அந்த வலைப்பதிவின் சித்தாந்தம். இதுதான் பெண்ணியமா? 'ஓர் ஆணை எதிராக வைத்து, ஆண் என்ற ஒற்றை அடையாளத்தை எதிரியாக கருதி, குற்றச்சாட்டுகள் வைப்பது, பாலியல் சுதந்தரம், நுகர்வு கலாசார சுதந்தரம் ஆகியவற்றை வேண்டுவது, ஆணைவிட பெண் உயர்வானவள் என்று வாதம் செய்வது அல்லது ஆணை முற்றிலுமாக நிராகரிப்பது, குடும்ப அமைப்பை உதாசீனப்படுததுவது, குழந்தைப் பெற்றுக்கொள்ள மறுப்பது' ஆகியவற்றைதான் பெண்ணியம் என்று அழைக்கவேண்டுமா?

பெண்ணியம் : ஓர் உரையாடலுக்கான தொடக்கம் என்னும் கட்டுரையை எழுதிய கொற்றவை மேற்படி கருத்தில் இருந்து மாறுபடுகிறார். ஜூலை 2011 உயிர் எழுத்தில் வெளிவந்துள்ள இவரது கட்டுரை பெண்ணியம் பற்றிய அ,ஆ,இ,ஈயைச் சொல்லித்தருகிறது.  இணையத்தில் வாசிக்க இங்கே செல்லலாம்.

0

நூறு பூக்கள் என்பது ஒரு வகை டிஜிட்டல் டைரி. புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், இணையத்தளம் ஆகியவற்றில் இருந்து நான் சேகரிக்கும் சில குறிப்புகளை ஒரு வசதிக்காக இங்கே சேமித்து வைக்கிறேன். 

1 comment:

hariharan said...

//குரூஸ்கயா ஒருமுறை லெனினை பீத்தோவன் இசையைக் கேட்க மாஸ்கோ தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். இசை மெல்ல மெல்ல லெனினுக்குள் நுழைந்து அவரை ஆக்கிரமித்துக்கொண்ட நிலையில் திடீரென்று எழுந்து அவர் வெளியேறிவிட்டார். இசைக்கு முற்றாக வயப்படுவதை லெனின் விரும்பவில்லை. தன் அரசியல் பொறுப்பு கெடும் என்பது அவர் கருத்து//

மக்கள் நலனிற்காக தன்னுடைய ரசிப்புத்தன்மையை துறந்தவர் மாமேதை.