September 23, 2011

மதம் : பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்

அமெரிக்காவில் நாத்திகவாதம் பெருகிவருவதைச் சுட்டிக்காட்டும் இந்தக் கட்டுரை பல முக்கியமான விவாதங்களை எழுப்புகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவத்தின் பிடி தளர்ந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்தப் பின்னடைவுக்கான காரணங்களை இரண்டு பிரிவுகளில் அடக்கலாம்.

அகநிலைக் காரணங்கள்
மத அமைப்புகளுக்கு உள்ளே நடக்கும் கோஷ்டி மோதல்கள், மத அமைப்புகளை வழிநடத்தும் தலைவர்களின் முறைதவறிய நடத்தை ஆகியவற்றால் ஏற்படும் பலவீனம் முதன்மையானது. உதாரணத்துக்கு, பாதிரிகள் மீது குவிந்துள்ள பாலியல், வன்முறை வழக்குகள் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்கத் தேவாலயங்கள் தங்கள் மதிப்பையும் செல்வாக்கையும் கணிசமாக இழந்துள்ளன. தேவாலயங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை இதனால்  குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் உறுதிபடுத்துகின்றன. குற்றம்சாட்டப்பட்ட பாதிரிகள் மீது நடைபெறும் வழக்குகளின் எண்ணிக்கை அசாதாரணமானது. குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கப் பாதிரிகளின் பட்டியலை மட்டும் பாருங்கள். இது பற்றி வாட்டிகன் போப் அதிகம் அலட்டிக்கொள்ளாதது கிறிஸ்தவர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புறநிலைக் காரணங்கள்
புறநிலைக் காரணங்கள் பலவகைப்பட்டவை. மாறிவரும் இன்றைய உலகச் சூழலில் மதத்தின் பங்கு என்ன? மதத்தால் மனிதர்களை ஒன்றிணைக்கமுடியுமா? கடவுள் அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நம்ப வைக்கமுடியுமா? சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவுபடுததிக்கொண்டிருக்கமுடியுமா? மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்னைகளை மதம் எப்படித் தீர்க்கப்போகிறது? அந்தப் பிரச்னைகளைக் குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவாவது முடியுமா? மதத்தால் மனிதனைக் கைதூக்கிவிடமுடியுமா? 
இன்றைய அறிவியல் தொழில்நுட்பச் சூழலுககு ஏற்றவாறு தமது கோட்பாட்டுகளை வளர்த்தெடுக்கவேண்டிய நிலை மதங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அந்நியப்பட்டும் பிளவுபட்டும் கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வருத்தப்பட்டு அவர்கள் சுமக்கும் பாரத்தைக் குறைத்தாகவேண்டும். இம்மையில் இல்லாவிட்டாலும் மறுமையில் சுகவாழ்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்பும்படிச் செய்யவேண்டும். சாவலான பெரும்பணி இது.
கருக்கலைப்பு, விவாகரத்து ஆகியவற்றை மரணத்தோடு ஒப்பிட்டுப்பேசி கடும் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார் போப் இரண்டாம் ஜான் பால். ஆனால், போப்பின் இந்த கருத்தை 90 சதவீத மேற்கத்திய கதோலிக்கர்கள் ஒதுக்கிவைத்தனர். மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிடக்கூடாது என்று அஞ்சிய இதே போப் பின்னாள்களில் சிலுவைப் போரின்போது இழைக்கப்பட்ட தவறுகளுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். (உண்மையில் அவர் சிலுவைப் போருக்காக மன்னிப்பு கேட்கவில்லை, போரில் ஏற்பட்ட 'தவறுகளுக்காக' மட்டும்தான் மன்னிப்பு கேட்டார் என்னும் வாதமும் உள்ளது.)

பிரச்னை என்னவென்றால் மக்களின் மாறிவரும் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு மாறவும் வேண்டும். அதே சமயம், அதிகம் விட்டுக்கொடுத்துவிடவும் கூடாது. கிறிஸ்தவம் மட்டுமே எதிர்கொள்ளும் தனிப் பிரச்னை அல்ல இது. இந்து மதம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் உண்மை. உலகம் முழுவதிலும் உள்ள மத அமைப்புகளின் அதிகாரமும் ஆதிக்கமும் சிறிது சிறிதாக பலவீனமடைந்துகொண்டிருக்கின்றன. மக்களிடம் இருந்து மதங்கள் அந்நியப்பட்டு நிற்கின்றன. அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டமுடியாமல், அவர்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்தமுடியாமல் எந்தவித ஆரோக்கியமான மாற்றத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.

இக்கட்டில் இருந்து மீள, கிட்டத்தட்ட அனைத்து மத அமைப்புகளும் சுயபரிசீலனையில் இறங்கியுள்ளன.  அதற்கான அவசியமும் தேவையும் முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருப்பதால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது தெரிந்துவிட்டது. அச்சமூட்டியும் ஆசைக்காட்டியும் மாற்று மதங்களின் மீது வெறுப்பை உமிழ்ந்தும் மக்களைப் பெருமளவில் திரட்டமுடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே தனது செயல்திட்டங்களையும் உத்திகளையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். இப்போதைய உடனடித் தேவை, ஒரு மறுமலர்ச்சி.

அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த அவர்கள் கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
  1. சடங்குகளின் இறுக்கத்தைக் குறைப்பது.
  2. கடவுள் மீதான நம்பிக்கையையும் மத நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் மீட்டெடுப்பது.
  3. ஒரே மதத்தில் உள்ள உட்பிரிவுகளையும், கிளைகளையும், பிளவுகளையும் சீர்செய்வது.
  4. இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் செயல்பாடுகளை மாற்றியமைப்பது. வலைத்தளங்களையும் சமூக வலைப்பின்னல்களையும் அதற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வது. மதத்தின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு விளக்குவது. அதன் மூலம் அவர்களை வென்றெடுப்பது.
  5. அறிவியலைத் துணைக்கு அழைத்துக்கொள்வது.
  6. வரலாற்றைத் திருத்தியெழுதுவது
  7. புனிதர்களையும் அற்புதங்களையும் உருவாக்கி மக்களிடைய பரப்புவது.
  8. பொருளாதார உதவிகள் செய்வது, சமூகப் பணிகளில் ஈடுபடுவது. 
  9. அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியைக் கோருவது. முடிந்தால் அவர்களை தங்களது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவது. 
  10. மாற்று மதங்களின் மீது வெறுப்புணர்வை வளரச் செய்வது.
  11. அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது.
  12. 'அவதூறுகளைச்' சரி செய்து, புனித பும்பத்தை மீட்டெடுப்பது.
  13. நேரடியாகப் பிரசாரம் செய்யும் அமைப்புகளையும் மறைமுகமாகப் பிரசாரம் செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி, மக்களை நோககித் திருப்புவது.
  14. மறை நூல்களை 'புதிய ஒளியில்' மறுவார்ப்பு செய்வது
  15. கல்வி நிலையங்களை ஆக்கிரமிப்பது. குறிப்பாக, ஆரம்பப் பள்ளிகள்.
  16. மாற்று மதத்தினரைத் திருப்புவது. சொந்த மதத்தில் இருப்பவர்கள் மதம் மாறாமல் தடுப்பது.
இந்தப் பின்னணியில், இந்து மதம் எப்படித் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது என்பதை அடுத்து பார்ப்போம். 

8 comments:

காரிகன் said...

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்துவம் பல விமர்சனங்களுக்கும் தாக்குதலுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டு இத்தனை காலம் வளர்ந்து வந்துள்ளதே அதன் சிறப்பு. கிறிஸ்துவம் சந்தித்த ஏளனங்கள் அவமரியாதைகள் இஸ்லாமோ அல்லது இந்து மதமோ கண்டதில்லை. இந்து மதமாவது அவ்வபோது விமர்சனம் செய்யப்படுவது உண்டு அதுவும் தமிழ் நாட்டில் திராவிடம் வந்த பிறகே. இஸ்லாமில் எந்த விதமான விமர்சனகளுக்க்கும் இடமில்லை. ஆனால் கிறிஸ்துவம் கண்டிப்பாக அப்படி அல்ல. இன்னும் கூட அழுத்தமான விமர்சனங்கள் எழலாம். ஆனாலும் அதனால் பாதிப்பு வராது என்பதை வரலாறு நமக்கு நினைஊட்டிக்கொண்டே இருக்கிறது.

காரிகன் said...

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்துவம் பல விமர்சனங்களுக்கும் தாக்குதலுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டு இத்தனை காலம் வளர்ந்து வந்துள்ளதே அதன் சிறப்பு. கிறிஸ்துவம் சந்தித்த ஏளனங்கள் அவமரியாதைகள் இஸ்லாமோ அல்லது இந்து மதமோ கண்டதில்லை. இந்து மதமாவது அவ்வபோது விமர்சனம் செய்யப்படுவது உண்டு அதுவும் தமிழ் நாட்டில் திராவிடம் வந்த பிறகே. இஸ்லாமில் எந்த விதமான விமர்சனகளுக்க்கும் இடமில்லை. ஆனால் கிறிஸ்துவம் கண்டிப்பாக அப்படி அல்ல. இன்னும் கூட அழுத்தமான விமர்சனங்கள் எழலாம். ஆனாலும் அதனால் பாதிப்பு வராது என்பதை வரலாறு நமக்கு நினைஊட்டிக்கொண்டே இருக்கிறது.

SURYAJEEVA said...

கடவுள் இருக்கிறார் என்று விளம்பரம் கொடுக்க வேண்டிய நிலையில் கடவுள் என்ற பிம்பம் உள்ளது, கடவுள் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவார் என்று தான் அனைத்து மக்களும் அந்த பிம்பத்தை தேடி ஓடுகின்றனர்... பிரச்சினைகளை தீர்க்க முடியாத அளவுக்கு நவீன பொருளாதார அமைப்பு உள்ளது.. ஆகையால் கடவுள் என்ற பிம்பம் உடையும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது... அதை கடவுளை காப்பாற்ற அணிவகுக்கும் புது புது புத்தகங்களிலும் புது புது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது... கடவுள் இல்லை என்ற சத்தம் அதிகமாகும் பொழுது இந்த ஊடகங்கள் மூலமாக கடவுள் இருக்கிறார் என்று காத்த வேண்டி இருப்பதே அதற்க்கு சாட்சி... கார்ல் மார்க்ஸ் சொல்வது போல் இஸ்லாம் மதம் குறித்து விமர்சனமே எழ வில்லை என்று கூறியிருக்கிறார்... சல்மான் ருஷ்டி யும் தஸ்லிமா நஸ்ரீன் இருவரும் போதும் இஸ்லாம் மதத்தை கேள்வி கேட்க என்பது என் கருத்து

BC said...

பிரச்னை என்னவென்றால் மக்களின் மாறிவரும் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு மாறவும் வேண்டும். அதே சமயம் அதிகம் விட்டுக்கொடுத்துவிடவும் கூடாது. கிறிஸ்தவம் மட்டுமே எதிர்கொள்ளும் தனிப் பிரச்னை அல்ல இது. இந்து மதம் இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் உண்மை. உலகம் முழுவதிலும் உள்ள மத அமைப்புகளின் அதிகாரமும் ஆதிக்கமும் சிறிது சிறிதாக பலவீனமடைந்துகொண்டிருக்கின்றன.

உண்மையை அருமையாக சொல்லியுள்ளீர்கள் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவத்தின் பிடி தளர்ந்து வருவதை அலை அலையாக அமெரிக்கர்கள்,ஐரோப்பியர்கள் இஸ்லாமில் இணைகிறார்கள் என்று தமிழில் இஸ்லாமியர்கள் கட்டுரை எழுதுவார்கள். இது நீங்கள் குறிப்பிட்ட சொந்த மதத்தில் இருப்பவர்களை மதம் மாறாமல்,மதத்தைவிட்டு விலகாமல் தடுக்கும் ஒரு உக்தி.

Anonymous said...

காரல் மார்க்ஸ்,

\\இந்து மதமாவது அவ்வபோது விமர்சனம் செய்யப்படுவது உண்டு அதுவும் தமிழ் நாட்டில் திராவிடம் வந்த பிறகே.\\

இது உஙளுக்கே காமெடியாக இல்லை. நீங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவரா இல்லை ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா? ஆயிரம் ஆயிரம் காலமாக ஒவ்வொரு விசயத்திலும் விமர்சனம் செய்யப்பட்டே ஹிந்து மதம் என்று சொல்லப்படும் பாரத பணபாடு வளர்ந்தது... இது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது..

Jawahar said...

சுவாரஸ்யமான ஆராய்ச்சிக் கட்டுரை. விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைப்பது என்பது கவனிக்கப்படவேண்டிய தீர்வு. ஐன்ஸ்டின், நியூட்டன் போன்றோர் கூட ஒரு நிலையில் மனிதனுக்கு மீறிய ஒரு சக்தியின் தாக்கத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்!

http://kgjawarlal.wordpress.com

Unknown said...

எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே ஒரு வித மறுமலர்ச்சி நிலைகளை அடைந்து கொண்டேதான் வந்திருக்கிறது, அதன் விளைவுகள்தான அதனில் தோன்றிய புதிய புதிய பிரிவிகள், பிரட்டஸ்டண்டுகளும் ஆர் சி கிருத்துவர்களும் தனித்தனியே விவாதிக்கும்ப்போது ஏற்படும் தீப்பொறி, இஸ்லாத்தின் சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடமும், இந்து மதத்தில் சிவா வைஷ்ணவா விவாதங்களிலும் பற்றி எரியத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் திரவிடம் வந்ததால் ஏற்பட்ட ஒரு மாற்றம் இப்போது இல்லாமல் போய்விட்டதால்தான் கருணாநிதியே இன்னும் மஞ்சள் துண்டுடன் இருக்கிறார், அவர் குடும்பத்தினர் கோயில்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை அறிவியல் வளர்ந்த நாடுகளிலும், சோற்றுக்கே உணவில்லாத நாடுகளிலும் கடவுளும் மதமும் எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை, நடுத்தர உலக நாடுகளில்தான் இன்று மதம் கடவுள் பற்றிய பயம் இன்னும் மிச்சமிருக்கிறது. இது ஒருவகை middle class mentality, இந்திய வாக்களார்களைப்போல உலகிலும் இந்த நடுத்தர வர்க்கம் அதிக எண்ணிக்கையில் உள்ள வரை அவர்கள் சார்ந்த சம்பவங்கள் வாழும் பலப்பல வேஷங்கள் கட்டி, அவ்வளவுதான்.

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
PART-1 Click here
PART-2 Click here
PART-3 Click here


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454