June 4, 2012

கோஸ்ட் ரைட்டர்


ரைட்டிங் தொடங்கியபோதே கோஸ்ட் ரைட்டிங்கும் தொடங்கியிருக்கக்கூடும். என்னிடம் சொல்வதற்கு விஷயங்கள் பல இருக்கின்றன, ஆனால் எழுதவராது என்பவர்களுக்காக எழுதப்படும் கோஸ்ட் ரைட்டிங் ஒரு வகை. சொல்ல விஷயம் இருக்கிறதோ இல்லையா, நான் பெரிய ஆள் அதனால் என் கதையை எழுது என்று சொல்பவர்களுக்காக எழுதப்படும் கோஸ்ட் ரைட்டிங் இன்னொரு வகை. பெரும்பாலான பிரபலங்கள் இரண்டாவது வகையினர்.

ரோமன் போலன்ஸ்கியின் தி கோஸ்ட் ரைட்டர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் சுயசரிதையை எழுதுவதற்காக நியமிக்கப்படும் ஒரு எழுத்தாளர் பற்றியது. ஜேம்ஸ் பாண்ட் புகழ் பியர்ஸ் ப்ராஸ்னன்தான் பிரதமர். பத்தாண்டு காலம் பதவி வகித்தவர். இவர் கதையை எழுதுவதற்காக முன்னதாக ஒருவர் நியமிக்கப்படுகிறார். மர்மமான முறையில் அவர் இறந்துபோவதால், அவர் இடத்துக்கு புதிய கோஸ்ட் ரைட்டர் வருகிறார். படம் இவரைப் பற்றியதுதான் என்றாலும் இவர் பெயர் இறுதிவரை நமக்குச் சொல்லப்படுவதில்லை.

பிறகு என்ன ஆச்சுன்னா என்று ஈஸி சேரில் சாய்ந்தபடி தன் கதையை விவரிக்கும் நிலையில் இல்லை அந்த பிரிட்டிஷ் பிரதமர். காரணம், அவர்மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் என்று கருதப்பட்ட சிலரை சிஐஏவின் சித்திரவதை விசாரணைக்காக அவர் ஒப்படைத்தார் என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பின்னணியில்தான் அவர் கதையைக் கேட்டு எழுத வருகிறார் நம் ஹீரோ. பிரிட்டிஷ் பிரதமர் பற்றி முன்னுக்குப் பின் முரணாக சில விஷயங்கள் தெரியவரும்போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுவிடுகிறார்.  கோஸ்ட் ரைட்டர், இன்வஸ்கேடிவ் ஜர்னலிஸ்டாக மாறவேண்டிய சூழல்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலெல்லாம் அரசியல் ஆர்வம் துளியும் இல்லாத ஒரு பிரதமர் திடீரென்று எப்படி கட்சியில் முக்கியப் பொறுப்பு ஏற்கிறார்? எப்படி அவருக்கு ஆதரவு கிடைக்கிறது? எப்படி அவர் பிரதமர் ஆகிறார்?  அதே கல்லூரியில் படிக்கும் ஓர் இளம் பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டதாகவும் அவர் மூலமாகவே தனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது என்றும் பிரதமர் முன்பு சொன்னது ஏற்புடையதாக இல்லையே!

ஆனால் யோசிப்பதற்கு அவகாசமில்லை. பிரதமர் சொன்ன விஷயங்கள், முந்தைய கோஸ்ட் ரைட்டர் எழுதி வைத்திருந்த முதல் டிராஃப்ட் இரண்டையும் ஒன்று சேர்த்து, டெட்லைனுக்குள் புத்தகத்தை முடித்து கொடுத்துவிடுகிறான் ஹீரோ.  பிரதமர் உயிருடன் இருக்கும்போது உருவான புத்தகம் அவர் இறந்தபிறகு வெளியாகிறது. பிரதமரின் மனைவி, புத்தகத்தை வெளியிடுகிறார். அமர்க்களமாக விழா நடைபெறுகிறது. கோஸ்ட் ரைட்டரின் வேலை முடிந்துவிட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக, சில தகவல்கள் கோஸ்ட் ரைட்டருக்குக் கிடைக்கின்றன. நீண்டகாலமாக அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த சில கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடைகள் கிடைக்கின்றன.  (ஸ்பாய்லர்ஸ் அலெர்ட் அஹெட்! படத்தை முழுவதுமாக ரசிக்க விரும்புவர்கள் இத்தோடு படிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்). பிரதமரின் மனைவி, ஒரு சிஐஏ ஏஜெண்ட். பிரதமர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால் இருப்பவர் இவர்தான். சுருக்கமாகச் சொல்வதானால், சிஐஏ மூலம் பத்தாண்டு காலம் பிரிட்டனை மறைமுகமாக அமெரிக்கா வழிநடத்தியிருக்கிறது.

ஹீரோவிடம் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் இது. ‘யோசித்துப் பார். பத்து வருடத்தில் இவர் பிரிட்டனுக்காக என்ன செய்திருக்கிறார்? தான் ஆட்சிக்கு வந்ததே அமெரிக்காவுக்காக என்பது போல்தானே இவர் செயல்பட்டார்? இவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், கொண்டு வந்த ஒவ்வொரு மாற்றமும், அமல்படுத்திய ஒவ்வொரு திட்டமும் அமெரிக்காவுக்குத்தான் சாதகமாக இருந்ததே ஒழிய, பிரிட்டனுக்கு அல்ல!’

முதல் கோஸ்ட் ரைட்டர் மர்மமான முறையில் இறந்ததற்குக் காரணம், இந்த உண்மையை அவர் கண்டறிந்ததுதான். தனது கையெழுத்துப் பிரதியில், இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாகவும் சூசகமாகவும் தெரியப்படுத்தியபிறகே அவர் இறந்திருந்தார். இந்த உண்மை வெளியில் வருவது அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதால் அவரை நீக்கவேண்டியதாகிவிட்டது.

இந்தப் படம் திரையிடப்பட்டபோது, தொடக்க காட்சிகளிலேயே பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிட்டது. கற்பனையல்ல, இது கிட்டத்தட்ட டோனி பிளேரின் கதை! டோனி மற்றும் செர்ரி பிளேர் இருவரும் சிஐஏ ஏஜெண்டுகள் என்று அப்போது பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பரவலாகப் பலர் கிசுகிசுத்துக்கொண்டதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். இந்தப் படம் அந்தச் சந்தேகத்தை மேலும் கிளறிவிட்டது. கார்டியன், ஸ்டேஸ்மென் என்று பல பத்திரிகைகளில் டோனி பிளேரையும் கோஸ்ட் ரைட்டரையும் ஒப்பிட்டு கட்டுரைகள் வெளியாகின.

ஆட்சியில் இருந்த காலத்தில், டோனி பிளேர்மீது சுமத்தப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டே இதுதான். நீங்கள் பிரதமராக இருப்பது அமெரிக்காவுக்கா, பிரிட்டனுக்கா? அமெரிக்கா எடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் நீங்கள் மறுபேச்சின்றி தலையசைப்பது ஏன்? தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பிரிட்டன் ஏன் பங்கேற்கவேண்டும்? (போர்க்குற்றம் என்று படத்தில் இடம்பெறுவது நிஜத்தில் இராக். ஆப்கன் யுத்தத்தில் பிரிட்டனின் பங்களிப்பு பற்றியதுதான்.)

படத்தின் இறுதிக் காட்சி மறக்கமுடியாதது. புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீடியா வெளிச்சத்தில் நனைந்துகொண்டிருக்கிறார் பிரதமரின் மனைவி. எனக்கு உண்மை தெரியும், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று ஒரு சீட்டில் எழுதி, அவருக்குச் சேர்ப்பித்துவிட்டு வெளியேறுகிறான் கோஸ்ட் ரைட்டர். சீட்டைப் படித்து அவள் அதிர்ச்சியடைகிறாள். எப்படியாவது அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று துடிக்கிறான். அவளை ஏஜெண்டாக வளர்த்தெடுத்த ஒரு புரொபசர் (இவரும் சிஐஏதான்) அவளை அமைதிபடுத்துகிறான்.

உண்மையைக் கண்டறிந்த திருப்தியுடன், (ஒருவேளை அதை வெளியிடும் நோக்கத்தோடு) கோஸ்ட் ரைட்டர் சாலையில் இறங்கி நடக்கிறான். அவன் கையில், முந்தைய கோஸ்ட் ரைட்டரின் கையெழுத்துப் பிரதி சாட்சியமாக இருக்கிறது. வீதியில் இறங்கி நடக்கிறான். திடீரென்று காகிதக் கட்டிலிருந்து தாள்கள் ஒவ்வொன்றாக நிதானமாகச் சாலையில் பறந்து செல்கின்றன. அனைவரும் விழிகளை அகல விரித்து பார்க்கிறார்கள். காமிராவுக்குப் பின்னால் கோஸ்ட் ரைட்டர் அநேகமாக கார் அடித்து இறந்துபோயிருக்கவேண்டும்.

8 comments:

Raman Azhahia Manavalan said...

நீண்ட நாட்களாக நான் பதிவிட வேண்டியதை இங்கே நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஒன்று மட்டும் மிஸ்ஸிங்!
இந்தியாவின் முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தி, அவரது இத்தாலி மனைவி சோனியா மைனோ, - ராஜீவின் மறைவு, போபர்ஸ் ஊழல், சோனியாவின் தற்போதைய ஆட்சி அதிகாரம். - கோஸ்ட்ரைட்டர் - இந்தியாவின் அத்தியாகம் புலப்படுகிறதா?

தங்கள் கருத்தினை பகிரவும்.

மருதன் said...

சுப்பிரமணிய சுவாமி இப்படிப்பட்ட ஒரு தியரியை முன்வைத்திருக்கிறார். வேறு சிலரும்கூட இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.ஆதாரம் மட்டும் மிஸ்ஸிங்.

Jawahar said...

பிரபல நடிகர் ஒருவர், எழுத்தாளர்களை விட்டு எழுத வைத்து தன் பெயரைப் போட்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். முன்னமே செய்திருப்பாரோ என்கிற சந்தேகம் வருகிறது.

http://kgjawarlal.wordpress.com

ஒஜஸ் said...

நிச்சியம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. உண்மை மாதிரியே இருக்கு, ஆனால் இந்திய பெயர்கள் மட்டும் முன்பின்ன போட்டு யோசித்தால் கலக்கல் :-)

ஒஜஸ் - நாற்சந்தி

ஒஜஸ் said...

நிச்சியம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. உண்மை மாதிரியே இருக்கு, ஆனால் இந்திய பெயர்கள் மட்டும் முன்பின்ன போட்டு யோசித்தால் கலக்கல் :-)

ஒஜஸ் - நாற்சந்தி

தோமா said...

”யோசித்துப் பார். இத்தனை வருடத்தில் இவர் இந்தியாவுக்காக் என்ன செய்திருக்கிறார்? தான் ஆட்சிக்கு வந்ததே அமெரிக்காவுக்காக என்பது போல்தானே இவர் செயல்படுகிறார்? இவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், கொண்டு வந்த ஒவ்வொரு மாற்றமும், அமல்படுத்திய ஒவ்வொரு திட்டமும் அமெரிக்காவுக்குத்தான் சாதகமாக இருந்ததே ஒழிய, இந்தியாவுக்கு அல்ல!”

நம்ம பிரதமர் குறித்து இப்படி தான் சொல்லனும்!!!

தோமா said...

”யோசித்துப் பார். இத்தனை வருடத்தில் இவர் இந்தியாவுக்காக் என்ன செய்திருக்கிறார்? தான் ஆட்சிக்கு வந்ததே அமெரிக்காவுக்காக என்பது போல்தானே இவர் செயல்படுகிறார்? இவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், கொண்டு வந்த ஒவ்வொரு மாற்றமும், அமல்படுத்திய ஒவ்வொரு திட்டமும் அமெரிக்காவுக்குத்தான் சாதகமாக இருந்ததே ஒழிய, இந்தியாவுக்கு அல்ல!”

நம்ம பிரதமர் குறித்து இப்படி தான் சொல்லனும்!!!

இதை என்னுடய facebook wall ல் பதிவிட்டு கொள்ளலாமா? நன்றி

மருதன் said...

தோமா, இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்