January 31, 2013

கிழக்கும் மேற்கும்

36வது சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்துவிட்டது. தீவிரமாகப் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஒரு சில பெரிய பதிப்பகங்கள் தவிர மற்ற பலரும் வருத்தப்பட்டனர். கண்ணைப் பறிக்கும் புதிய வரவுகள், வாங்கியே தீரவேண்டிய பட்டியல் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை.

பாரதி புத்தகாலயம், விடியல், நியூ செஞ்சுரி பதிப்பகங்கள் சில புதிய புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய புத்தகங்கள் : இந்தியா பற்றி மார்க்ஸ், பிபின் சந்திராவின் இரு புத்தகங்கள், பில் பிரைஸனின் எல்லாவற்றையும் பற்றிய சுருக்கமான வரலாறு.

0

எப்படிப்பட்ட புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன? வாசகர்கள் எப்படிப்பட்ட நூல்களை வாசிக்கிறார்கள்? எது அவர்களுக்குப் பிடிக்கிறது? புதினம் அதிகம் விற்கிறதா அல்லது அபுதினமா? தங்களைச் சுற்றி நடைபெறும் அரசியல், சமூக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள மக்கள் ஆசைப்படுகிறார்களா? வரலாறுமீது ஆர்வம் இருக்கிறதா? யார் பல்ப் ஃபிக்ஷ்ன் வாசிக்கிறார்கள்? யார் படக்கதைகள் விரும்புகிறார்கள்? யாரெல்லாம் சீரியஸ் நூல்களில் மூழ்கிப்போகிறார்கள்? அல்லது வாசிப்பை மொத்தமாக டிவி விழுங்கிவிட்டதா? சில புள்ளிவிவரங்களைப் பதிப்பகங்கள் தெரிந்துகொண்டேயாகவேண்டும். யார் என்ன வாசிக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது. பதிப்புலகில் ஒருவித தேக்க நிலை நிலவுவதை இப்போதே காணமுடிகிறது.

0

கிழக்கு பதிப்பகத்தில் இந்த ஆண்டு வெளிவந்த பெரும்பாலான நூல்கள் வலதுசாரி சிந்தனையோட்டம் கொண்டவை. ஒரு புத்தகம் மோடியின் குஜராத்தைப் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து தள்ளுகிறது  (மோடியின் குஜராத்).. இன்னொன்று, இந்து கலாசார மீட்சியே இந்திய மீட்சிக்கு ஒரே வழி என்று சாதிக்கிறது (இந்தியனாவது எப்படி?). அணு மின்சாரம் மிகவும் நல்லது என்கிறது அறிவியல் ஆய்வு நூலொன்று (அணு மின்சாரம் : அவசியமா ஆபத்தா?). பயங்கரவாதம் என்று சொல்லாதீர்கள், இஸ்லாம் என்றாலே போதும் என்கிறது சர்வதேச அரசியல் ஆய்வு ஒன்று (பயங்கரவாதம் நேற்று இன்று நாளை). அர்விந்த் கெஜ்ரிவால் தன்னாட்சிக்கான வழிமுறைகளை விவரிக்கிறார். அத்தானு தே, நாளைய இந்தியாவை வடிவமைப்பதற்கான வழிமுறைகளை அளிக்கிறார். நாளைய இந்தியாவை இனி யார் காப்பாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

0


டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 4 தொடங்குகிறது.  கொல்கத்தாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பிப்ரவரி 10 வரை நடைபெறுகிறது. அறிமுகம் இங்கே. இன்று இரவு ரயிலில் கொல்கத்தா கிளம்புகிறேன். அடுத்த வாரம் முழுவதும் அங்கேதான். புத்தக அரங்கில் சில தினங்களும் நகரைச் சுற்றி வர சில தினங்களும் ஒதுக்கியிருக்கிறேன்.

2 comments:

தமிழ் said...

பயனுள்ள கட்டுரைதான்.
சில கேள்விகள்:

உண்மையில் வாசிப்புப் பழக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் புத்தகங்களின் விற்பனை முன்புபோல் இல்லை என்றால், தரமான நூல்களை மக்கள் வாங்கத் தயாராகிவிட்டனர் எனக் கொள்ளலாமா?

புத்தகத்தின் விலை முக்கியக் காரணியாகிவிட்டதா?

வேறு ஏதேனும் காரணங்கள் இதைத் தாண்டியும் இருக்கும். கொஞ்சம் அதைப்பற்றி எழுதுங்களேன்.

மருதன் said...

தமிழ் : புத்தக விலை உயர்வு நிச்சயம் ஒரு சாராரைப் பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், வாசிப்பு ஆர்வம் கொண்டவர்களையும் தொடர்ச்சியாகப் புத்தகம் வாங்கும் வழக்கம் கொண்டவர்களையும் விலை உயர்வு பாதிக்காது. பொதுவாகப் பார்க்கப்போனால் வாசிப்பு வழக்கம் குறைந்து வருகிறது என்றுதான் நினைக்கிறேன். காரணங்களை விரிவாக அலசவேண்டியிருக்கிறது.