February 17, 2013

ஹேப்ப சயின்ஸ் என்றால் என்ன?

இந்தப் பதிவை அவரும் படிக்கக்கூடும் என்பதால் அவர் பெயரைத் தவிர்த்துவிடுகிறேன். நான் ஒரு எழுத்தாளர், உங்களை வந்து சந்திக்கலாமா என்று தொலைபேசியில் சென்ற வாரம் அழைத்து பேசினார் அவர். மன்னிக்கவும், சுயமுன்னேற்றப் புத்தகங்களை நாங்கள் அதிகம் கொண்டுவருவதில்லை என்று பதிலளித்தேன். பரவாயில்லை நேரில் வந்து ஒரு பிரசன்டஷன் தருகிறேன் என்கிறார்.

ஒரு நாள் காலை வந்தார். தனது திரைப்படத் தொடர்புகள் குறித்தும் தயாராக வைத்திருக்கும் ஒரு திரைக்கதை குறித்தும் பேசினார். சுயமுன்னேற்றம் பற்றி பேச்சு திரும்பியபோது நேரடியாகவே கேட்டேன். 'எழுதுபவரைத் தவிர்த்துவிட்டால் சுயமுன்னேற்றப் புத்தகங்களால் யாருக்காவது பலன் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?'

'ஏன், நானே சுயமுன்னேற்றப் புத்தகங்களால் உருவானவள்தான். பிறர் எழுதிய புத்தகங்கள் மட்டுமல்ல நான் எழுதிய புத்தகங்களாலேயேகூட நான் இன்ஃப்ளூயன்ஸ் ஆகியிருக்கிறேன்.'

எப்படி என்பதைத் தன் வாழ்நாள் அனுபவத்தில் இருந்து அவர் விவரித்தார். யாருடைய புத்தகங்களையும் தற்போது படிப்பதில்லை, எந்தச் சாமியாரையும் பின்பற்றுவதில்லை, எந்த மத நூல்களில் இருந்தும் உத்வேகம் கொள்வதில்லை, என் சொந்த அனுபவங்களில் இருந்தே கற்கிறேன், எழுதுகிறேன் என்றார்.

சுருக்கமான எளிமைப்படுத்தவேண்டுமானால், என் புரிதலில் அவருடைய தத்துவம் இதுதான். 'எதைப் பற்றியும் கவலைப்படாதே. சமூகத்தைப் பார்த்து கலங்காதே. நீ, உன் வழியை மட்டும் பார்த்துக்கொண்டு போ.'

இதையே இன்னும் கொஞ்சம் நீட்டித்தால் இப்படி வரும். 'நீ எப்படி இருக்கவேண்டும் என்பதை நீயேதான் தீர்மானிக்கவேண்டும். உன் உடல், மனம், ஆன்மா அனைத்துக்கும் நீயே பொறுப்பாளி. மகிழ்ச்சியாக இருப்பேன், நோயின்றி இருப்பேன், கவலைப்படாமல் இருப்பேன், வெற்றிகரமாக இருப்பேன் என்று நீங்கள் உங்களுக்குள் சொல்லிக்கொண்டால் அதையே நம்பவும் செய்தால் உங்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.'

அயன் ராண்டின் அப்ஜெக்டிவிசம் போல் இருக்கிறது என்றோ, பல முறை படித்து சலித்த விஷயம்தானே என்றோ நீங்கள் நினைத்தால் ஒரு சிறிய முத்தாய்ப்பு இதோ. 'உங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கும் நீங்களேதான் காரணம். நான் கேன்சர் இல்லாமல்,  மாரடைப்பு நேராமல், சுகரை நெருங்கவிடாமல் இருப்பேன் என்று முன்பே நீங்கள் உங்களுக்குள் சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு எதுவும் வந்திருக்காது.'

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்றார். ஏற்கெனவே இந்த உபாதைகள் இருப்பவர்களும்கூட பாசிடிவ் திங்கிங் இருந்தால் அனைத்து நோய்களிலிருந்தும விடுபட்டுவிடலாம் என்றார். தன் புத்தகத்தில் அதற்கான வழிமுறை இருப்பதாகவும் சொன்னார். Secrets என்றொரு புத்தகத்தை எனக்குச் சிபாரிசு செய்தார். அந்தப் புத்தகத்தைப் படித்த பலர் தலைகீழ் மாற்றம் அடைந்திருக்கிறார்களாம்.

கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜப்பானில் இருந்து ஓர் ஆன்மிக கம் சயமுன்னேற்ற எழுத்தாளர் ஒருவரின் படைப்புகளைத் தொகுத்து, தமிழ்படுத்தி அரங்கு அமைத்திருக்கிறார்கள். அவர் பெயர் Ryuho Okawa. இன்வின்சிபிள் திங்கிங் என்னும் ஒகாவாவின் தமிழ்படுத்தப்பட்ட புத்தகத்தில் இருந்து ஓர் அறிமுகப் பகுதி.

‘ரியோ ஒகாவா ஹேப்ப சயின்ஸ் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர், மற்றும் ஒரு ஆன்மிகத் தலைவர் ஆவார். மனிதனின் மகிழ்ச்சிக்கான வழிகளைப் பற்றியும் ஆவி உலகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். ஹேப்ப சயின்ஸ் உறுப்பனர்கள் அவர் கற்றுக்கொடுத்த வழிகளைப் பன்பற்றி தேவைப்படுபவர்களுக்கு உதவி புரிகிறார்கள்.’

புத்தகம் நெடுகிலும் பி வரவேண்டிய இடத்தில் ப வருவதால் ஹேப்பி சயின்ஸ் ஹேப்ப சயின்ஸ் ஆகிவிட்டது. ‘ஹேப்ப சயின்ஸ் புத்த மதத்தின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டது... தவறுகள் செய்யாமல் எவராலும் வாழமுடியாது... பரச்சினைகள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையைக் கடக்கமுடியாது.’

சுயமுன்னேற்றம் என்பதே ஒரு ஹேப்ப சயின்ஸ்தான் என்னும் புரிதலுக்கு நான் வந்து சேர்ந்துவிட்ட சமயத்தில் அந்த எழுத்தாளர் விடைபெற்றுக்கொண்டார். கடைசியாக எனக்கு இன்னொரு பரிந்துரையும் செய்தார். 'நீங்கள் ஏன் கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள்? எனக்குக் கண்ணாடி வேண்டாம், கண்ணாடி இல்லாமலேயே எனக்குக் காட்சிகள் துல்லியமாகத் தெரியும் என்று சொல்லிப் பாருங்கள். கண்ணாடி உங்களுக்குத் தேவைப்படாது.'

அப்படி மட்டும் நடந்துவிட்டால் அவர் புத்தகத்தை அவசியம் அனைவருக்கும் சிபாரிசு செய்கிறேன்.

4 comments:

suryajeeva said...

எதிர்மறை எண்ணம் நேர்மறை எண்ணம் எது எது என்று இனம் காண முடியாது பல சுய முன்னேற்ற நூல்களில் காண முடிகிறது... பலரை பொறுத்தவரை என்னால் முடியாது என்று சொல்லி விட்டால் அது எதிர்மறை எண்ணம் என்று ஆகி விடுகிறது... மின்சாரம் தடை பட்டிருக்கும் நேரத்தில் நகல் எடுக்க செல்லும் நபரிடம் எடுக்க முடியாது என்று கடைக்காரர் கூறி விட்டால் எதோ எதிர்மறை எண்ணத்தில் மட்டுமே அவர் வாழ்ந்து கொண்டிருப்பது போல் பார்க்கும் மக்களை பார்க்கும் பொழுது வேதனையில் சிரித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை...
ஒரு வேலை இது தான் ஹப்ப சயின்சோ ????????

Shankar said...

//அயன் ராண்டின் சப்ஜெக்டிவிசம்// - ஆப்ஜெக்டிவிசம் சார் :)

மருதன் said...

Shankar : திருத்திவிட்டேன். நன்றி

தமிழ் said...

சுய முன்னேற்ற புத்தகங்கள் பற்றி அவ்வளவு சிறப்பான அபிப்ராயம் எனக்கு கிடையாது.
கடைசி வரிகள் சிறப்பாக இருந்தன. என்றாவது ஒரு நாள் அந்த மெடிக்கல் மிராக்கிள் நடந்தால் தெரியப்படுத்துங்கள்.
நன்றி