April 22, 2013

மாகாளி வரவேயில்லை!

முதல் பகுதி

கடவுளை அடைவதற்கு ஒரு குறுக்கு வழி கிடைத்தது. ஒரு தேவதை அல்லது சக்தியையோ வசப்படுத்திக் கொள்ளும் வெறி ராகுல்ஜிக்கு ஏற்பட்டது. அதற்கான வழிமுறைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார்.

ஒரு தனி அறையில் மரப்பலகையின்மீது அமர்ந்துகொண்டார். ஆறு கோணங்கள் வரைந்து அதன் மத்தியில் ஓம் என்று எழுதி, ஆறு மூலைகளில், ஸ்ரீ ம், ஹ்ரீம், க்லீம், பட், ஸ்வா, ஹா என்று எழுதினார். பொழுது விடிவதற்கு முன்பே கங்கையில் குளித்து முடித்து, தோட்டப் பூக்கள் பறித்து, தூபதீபங்கள் ஏற்றி, உருத்திராட்சை உருட்ட ஆரம்பித்தார். நியம நிஷ்டைகளுடன் ஒன்பது லட்சம் தடவை அந்த மந்திரத்தை உச்சரித்தால் மாகாளி சிங்கத்தின் மேலேறி நேரிலே காட்சியளிப்பார் என்று சொல்லியிருந்தார்கள். ‘பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று காளி கேட்டதும் செல்வம், பலம், அறிவுத்துறை, கல்வி இவற்றில் ஏதாகிலும் கேட்டுக்கொள்' என்றும் சொல்லியிருந்தார்கள். 

ஆறு நாள்கள் கழிந்தன. ஏழாவது நாள் மாகாளி வரவேண்டும். ‘ஏழாவது நாளும் வந்து போய்விட்டது. மாகாளி ஏறிவரும் சிங்கத்தின் கழுத்திலிருக்கும் மணியோசையும் கேட்கவில்லை.’ அதற்காக விட்டுவிடமுடியுமா? ‘எல்லா மந்திரங்களையும் கனகச்சிதமாக உச்சாடனம் செய்திருக்கிறேன். பின் எதனால் அம்பிகை தரிசனம் தரவில்லை?’

வெறுத்துப் போனார் ராகுல்ஜி. ஊமத்தைப் பழ விதைகள் உட்கொண்டு தற்கொலைக்குத் துணிந்தார். முயற்சி தோல்வியடைந்தது.

காளியிடம் இருந்து கவனத்தைத் திரும்பப் பெற்று சமூகத்தின்மீது அக்கறை காட்டத் தொடங்கினார்.

வேலைக்கு என்று சொல்லி பையன்களை அழைத்துச் சென்று ஏமாற்றும் கங்காணிகள் சிலர் உலவிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரின் கொட்டத்தை அடக்க நண்பர்களைத் திரட்டிக்கொண்டார் ராகுல்ஜி. கோபத்துக்குக் காரணம் இளைஞன் ஒருவரை கங்காணிகள் கடத்தி வைத்திருந்தனர். ‘விடுதியிலிருந்த மாணவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு ஹாக்கி மட்டைகள் எடுத்துக் கொண்டு, அடிதடியிலும் இறங்கி அந்த வாலிபனை மீட்டுக் கொண்டு வந்துவிடவேண்டுமென்பதுதான் அந்த யோசனை. ஆனால் இன்றைய பாரதத்தைப் போல் அன்றைய பாரதம் இல்லை. அன்னிபெசண்ட் அம்மையார் உதவி செய்வதற்குப் பதிலாக மாணவர்களை அமைதியாயிருக்கும்படி ஒரு லெக்சர் அடித்துவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார்.’

0

மடாதிபதி அழைப்பின் பேரில் காசியில் இருந்து பரஸா சென்றார். அங்கே 1912 மற்றும் 1913ல் சாமியாராக உலாவிக்கொண்டிருந்தார். வேதாந்தம் கற்க விரும்பினார். அதற்கு முதல் காரியமாக, சங்கு சக்கரச் சின்னங்களைக்
காய்ச்சி அவர் அக்குளில் பதித்தனர்.

ஆனால் நாள்கள் செல்லச் செல்ல வேதாந்தத்தின்மீதான ஆர்வம் குறைந்தது.
‘வேதாந்திகள் நடைமுறையில் அழுகிப் போன, கவைக்குதவாத, முட்டாள்தனமான முன்னுக்குப்பின் முரணான விஷயங்களையும் நம்பச் செய்துவிடுகின்றனர்.'

1913ல் பரஸாவில் இருந்து ஓட்டம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் பூந்தமல்லி, திருமழிசை ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்டார் ராகுல்ஜி.‘தாழ்த்தப்பட்டவர்கள் தெருவிலும் நடமாட முடியாத நிலைமை’ இருந்ததைக் கவனித்தார்.

இங்கும் கோயில்களே அவருக்கு அடைக்கலம் கொடுத்தன. தாமரை இலைச் சாப்பாடு, தயிர், நெய் எல்லாம் கிடைத்தது.  ‘திருமழிசையில் பிராமணரல்லாதவர் வாழ்ந்த இடம் அவ்வளவு தூய்மையாக அழகாக, பண்பாட்டுடன் விளங்கவில்லை. அங்கு ஏழ்மையும் கல்வியின்மையும்தான் அரசாட்சி செய்துகொண்டிருந்தன. ஓரளவு வசதி படைத்த விவசாயக் குடும்பத்தினர்தான் நிம்மதியுடன் இருந்தனர். என்னுடன் சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்த பிராமண நண்பர்கள் அந்தப் பக்கம் வரவும் அருவருப்படைந்தனர். தென்னாட்டில் பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர்கள் என்றே அழைத்து வந்தனர். வடநாட்டு பிராமணர்களாகிய நாங்கள் அங்குள்ள சூத்திரர்களிடம் தண்ணீர் மட்டுமல்ல, அவர்கள் கைப்படச் செய்த பலகாரங்களையும் வாங்கிச் சாப்பிட்டுவிடுகிறோம் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரிதும் வியப்படைந்தனர்.’

காஞ்சிபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருப்பதி, பெங்களூர், விஜயநகரம் என்று விரிவாகப் பயணங்கள் மேற்கொண்டார் ராகுல்ஜி.


No comments: