May 22, 2013

ஸ்டாலின் அறுபது


இறந்து அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகும் சோவியத் யூனியன் தகர்ந்து 20 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஜோசப் ஸ்டாலினை ரஷ்யாவும் உலகமும் மறந்துவிடவில்லை.

மாஸ்கோவில் இன்னமும் ஸ்டாலினைக் காண மக்கள் திரண்டுகொண்டே இருக்கிறார்கள். ரஷ்ய வீதிகளில் ஸ்டாலினின் புகைப்படங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவரது பதாகைகளைத் தாங்கியபடி இன்றும் அரசியல் கட்சிகளும் மக்களும் ரஷ்யாவின் வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 5ம் தேதி ஜோசப் ஸ்டாலினின் அறுபதாவது நினைவு நாள் ரஷ்யாவில் அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. வரலாற்றில் ஸ்டாலினின் பாத்திரத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது 49 சதவிகிதம் பேர் ஸ்டாலின் நேர்மையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் 32 சதவிகிதம் பேர் அவர் எதிர்மறையாக பங்காற்றியிருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கருத்து கணிப்பை நடத்தியது அரசு சாரா ரஷ்ய நிறுவனமான லெவாடா செண்டர். பத்தாண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டபோது 53 சதவிகிதம் பேர் ஸ்டாலினுக்குச் சாதகமாகவும் 33 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ஸ்டாலினின் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வரிசையாக மக்கள் திரண்டிருந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் என்று சிலரும் ஆயிரக்கணக்கானவர்கள் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். லெனினைப் போலவே ஸ்டாலினின் உடலும் முன்னர் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது பங்களிப்பை மறுக்கும் காலகட்டம் தொடங்கியபிறகு 1961ல் ஸ்டாலினின் உடல் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் ஸ்டாலின் குறித்த விவாதங்கள் அடங்கவில்லை. சோவியத் யூனியன் ஆச்சரியமூட்டும் வகையில் வளர்ச்சி பெற்றதற்கு ஸ்டாலினின் வழிகாட்டுதல் முக்கியக் காரணம் என்கிறார் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கென்னாடி ஜியுகனோவ். ‘தொழில்மயமாக்கல், தேசபக்திப் போரில் கிடைத்த வெற்றி, அறிவியல் துறையில் படைத்த சாதனைகள், அணுசக்தித் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது, முதல் விண்வெளிப் பயணம் மேற்கொண்டது, சோவியத் யூனியன் என்னும் மாபெரும் மக்கள் கூட்டமைப்பைக் கட்டமைத்தது ஆகியவை மக்களின் நினைவில் நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன. இவை அனைத்தும் ஸ்டாலினின் சாதனைகள்.’

நூற்றாண்டுகால ஜார் ஆட்சி ரஷ்யாவின் உழைக்கும் மக்களைக் கடும் வறுமையின் பிடியில் சிக்க வைத்திருந்தது. லெனின் தலைமையிலான 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியன் பிறந்தது. அடித்தட்டு மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. லெனினுக்குப் பிறகு பொறுப்பேற்ற ஜோசப் ஸ்டாலின் தொழிலாளர் மற்றும் அடித்தட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தி, துரித தொழில்மயமாக்கல்மூலம் சோவியத் யூனியனைப் பலம் மிக்க தேசமாக வளர்த்தெடுத்தார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் படைகளை சோவியத் ஒன்றுதிரண்டு வீழ்த்தியதை மாபெரும் தேசபக்தி போர் என்று மக்கள் பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

பண்ணையடிமைகளைக் கொண்ட ஏழை நாடாக மேற்கத்திய ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்ட ரஷ்யாவை உலகம் நிமிர்ந்து பார்த்து ஆச்சரியப்பட்டது ஸ்டாலினின் ஆட்சிகாலத்தில்தான். வான்வெளி அறிவியல், ஆயுத பலம், அடிப்படை கட்டுமானம், நகரமயமாக்கல் என்று அனைத்து துறைகளிலும் அமெரிக்காவுக்குப் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்தது சோவியத். மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு ஓர் உந்துசக்தியாகவும் போராடும் வர்க்கத்துக்குத் தாய் நாடாகவும் திகழ்ந்தது. முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு வலுவான மாற்று செயல்திட்டத்தை ஸ்டாலின் முன்வைத்தார். தவிர்க்கவியலாதபடி இது பனிப்போரைத் தொடங்கிவைத்தது.

சோவியத்தின் வளர்ச்சிக்கு அதன் மக்கள் கொடுத்த விலை அதிகம் என்கிறார்கள் ரஷ்ய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஸ்டாலினுக்கு எதிராக தற்போது வாக்களித்தவர்களின் வாதமும் இதுவேதான். மக்களின் நலனுக்காகத்தான் அரசே தவிர, அரசின் நலனுக்காக மக்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்கிறார்கள் இவர்கள். ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் தேச நலனே அனைத்துக்கும் முதன்மையானதானதாக நிறுத்தப்பட்டது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர் என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு.

சோவியத்தின் சாதனைகளைப் பற்றி நாம் இன்று பெருமையுடன்  பேசுவதும் நினைவுகூர்வதும் ஸ்டாலினின் தவறுகளையும் சேர்த்தே அங்கீகரிப்பதாக மாறிவிடாதா என்று கேள்வி எழுப்புகிறார் மாஸ்கோவின் வரலாற்றுத் துறை ஆசிரியர் ஒருவர். குழந்தைகளுக்குத் தங்கள் கடந்த காலத்தைப் பற்றி எப்படிச் சொல்லிக்கொடுப்பது என்பதில் இன்னமும் சில சிக்கல்கள் இருப்பதாக வேறு சிறு ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

ஸ்டாலினின் வரலாற்றுப் பாத்திரத்தை எப்படி மதிப்பிடுவது என்பதில் சாமானியர்களுக்கு மட்டுமல்ல அறிவுஜீவிகளுக்கு மத்தியிலும்கூட குழப்பங்களும் மயக்கங்களும் நீடிக்கின்றன. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் விடாப்பிடியாக ஸ்டாலினை ஒரு சர்வாதிகாரியாகவே முன்னிறுத்துகின்றன. ஹிட்லரோடு ஒப்பிடத்தக்கவராக, எதிர்ப்புக்குரல்களைத் தொடர்ந்து நசுக்கியவராக, உக்ரேன் உள்ளிட்ட  இடங்களில் செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தியவராக ஸ்டாலினை அவர்கள் கட்டமைத்து வருகிறார்கள். குலாக் வதைமுகாம்கள் அமைத்து ‘பல லட்சம் பேரைக் கொன்றவர்’ என்று அலெக்ஸாண்டர் சோல்ஷனிஸ்டன்,  போரிஸ் பாஸ்டர்நாக், ஆர்தர் கீஸ்லர் போன்ற பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

இணையத்தில் காணக்கிடைக்கும் ரஷ்யர்களின் கருத்துகளைத் தொகுத்து பார்க்கும்போது சில விஷயங்கள் தெரியவருகின்றன. இன்றைய தலைமுறையினர் ஸ்டாலினை வெளிப்படையாக ஆதரிக்கவும் அவருடைய பங்களிப்பை ஒப்புக்கொள்ளவும் தயங்குகிறார்கள். அவ்வாறு செய்வது இன்றைய சூழலுக்கு ஒவ்வாதது என்று அவர்கள் கருதுகிறார்கள். அதே சமயம், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்துபோன நாடுகளான ஜார்ஜியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முந்தைய சோவியத் ஆட்சி திரும்பவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஸ்டாலினின் மதிப்பு நன்கு தெரிந்திருக்கிறது.

ஆர்மீனியா, அஸர்பைஜான், ஜார்ஜியா ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் இன்னமும் விருப்பத்துக்குரிய ஒரு தலைவராகத் திகழ்கிறார் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த கார்னே என்டோமெண்ட் ஃபார் இண்டர்நேஷனல் பீஸ் என்னும் அமைப்பு சென்ற ஆண்டு நடத்திய கருத்து கணிப்பு. இவர்கள் கண்டறிந்த சில முக்கிய விஷயங்கள்.
  • ரஷ்யாவில் சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு ஆதரவு கூடியிருக்கிறது.
  • விளாதிமிர் புடின் ஆட்சிக்கும் ஸ்டாலின் மீண்டும் நிறுவப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது.
  • இளைய தலைமுறையினர் ஸ்டாலின் குறித்து அறிந்திருக்கவில்லை. அசர்பைஜானில் 39 சதவிகிதம் பேருக்கு ஸ்டாலின் யார் என்றே தெரியவில்லை.
  • ஜார்ஜியா மக்கள் ஸ்டாலின்மீது அபாயகரமான அளவுக்கு அபிமானம் கொண்டிருக்கிறார்கள். 45 சதவிகிதம் பேர் ஸ்டாலின் குறித்து நேர்மறையாகப் பேசினார்கள்.
  • ஸ்டாலின் ஒரு ‘குரூரமான சர்வாதிகாரி’ என்று சொல்பவர்களும்கூட அவர் ‘அறிவுத்திறன்மிக்க தலைவர்’ என்று சொல்கிறார்கள்.
இந்த முடிவுக்கு மக்கள் வந்தடைந்ததற்கான காரணங்களையும் இந்த அமைப்பு ஆராய்ந்து பட்டியலிட்டிருக்கிறது.
  • ஸ்டாலினை ஆதரித்தவர்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். அவர்களுக்குப் போதுமான வரலாற்று உணர்வு இல்லை.
  • நாஜி ஜெர்மனி வீழ்த்தப்பட்டது ரஷ்யர்களின் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. குறிப்பாக, மூத்தவர்களிடம். எனவே ஸ்டாலினின் ஒடுக்குமுறையை இவர்கள் நிராகரித்தாலும் அவரை ஒரு போர்க்கால தலைவராக அங்கீகரிக்கிறார்கள்.  
  • ஸ்டாலின் குறித்த உண்மைகளை அறியச்செய்யும் முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை. கோர்பசேவ் ஓரளவுக்கு இதில் வெற்றி பெற்றார். ஆனால், புடின் ஸ்டாலினின் பிம்பத்தைப் பயன்படுத்தி தன் அதிகாரத்தை வலுவாக்கிக்கொள்கிறார்.
  • ஜார்ஜியாவில் ஸ்டாலினுக்கு எதிராகவும் சோவியத்துக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் போதுமானதாக இல்லை.
ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் யார் என்று 2012ல் ரஷ்யர்களிடையே கேட்கப்பட்டபோது ஜோசப் ஸ்டாலினின் பெயரையே அவர்கள் முதன்மையாக முன்மொழிந்தார்கள். ஸ்டாலின்கிராட் யுத்தத்தின் 70வது நினைவுநாள் இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஓல்காகிராட் நகரம் ஸ்டாலின்கிராட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்டாலினை ரஷ்யா இவ்வாறெல்லாம் கொண்டாடத் தொடங்கியிருப்பதை ‘அபாயகரமான போக்கு’ என்று குறிப்பிடுகிறது கார்னே அமைப்பு. கருத்து கணிப்புகளில் ஸ்டாலினுக்குச் சாதகமான ஓட்டுகள் பதிவாவதை ‘துரதிர்ஷ்டவசமானது’ என்றும் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை.  ஸ்டாலினின் பிம்பம் மீண்டும் மக்கள் மத்தியில் நிறுவப்படுவதை ‘ஸ்டாலினுக்கு எதிரான பிரசாரங்கள் போதுமான வெற்றிபெறவில்லை’ என்றே இவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

முடிவாக, கார்னே அமைப்பின் அறிக்கைக்கு இணையத்தில் வந்துள்ள ஒரு பதில் இது. ‘இந்தக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தும் செய்தி தெளிவானது. கம்யூனிசம் என்றால் என்னவென்றே தெரிந்திராத, கம்யூனிச நாட்டில் வாழ்ந்திராத எதிர்ப்பாளர்களைவிட ரஷ்ய மக்களுக்குத் தங்கள் வரலாறு குறித்து நன்கு தெரிந்திருக்கிறது.’

(ஆழம் ஏப்ரல் 2013 இதழில் வெளியான என் கட்டுரை).

2 comments:

Chandramowleeswaran. V said...

கம்யூனிசம் என்றால் என்னவென்றே தெரிந்திராத, கம்யூனிச நாட்டில் வாழ்ந்திராத எதிர்ப்பாளர்களைவிட ரஷ்ய மக்களுக்குத் தங்கள் வரலாறு குறித்து நன்கு தெரிந்திருக்கிறது.’

Well said

Selvabarathy S said...

இந்த பதிவுலையே ஒரு பொய்யை நுழைத்து உள்ளீர்கள். 'ஓல்காகிராட் நகரம் ஸ்டாலின்கிராட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது' இது பாதி உண்மைதான். வருடத்திற்கு 6 நாட்களுக்கு மட்டும்தான் இந்த பெயர்மாற்றம் இருக்கும். பாதி உண்மைகள் பொய்யை விட பயங்கரமானது.