இந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாத பிரெஞ்சு வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் India The Rebel Continent ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணம், இந்தியா என்பது தாஜ் மஹாலும் பாம்பாட்டிகளும் சேரிகளும் பாலிவுட் நடிகர்களும் நிறைந்த நாடு என்று நினைத்துகொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிக்கவேண்டும் என்பதுதான். பண்டைய காலம் தொட்டு 21ம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை
வெவ்வேறு கோணங்களில் காட்சிபடுத்தியிருக்கிறார் நூலாசிரியர் டெலூரி (Guy Deleury). இந்தியா ஒரு சாதாரண ஏழை நாடல்ல, பல்வேறு போராட்டங்களை, பல்வேறு கருத்து மோதல்களை, பல்வேறு கிளர்ச்சிகளைத் தோற்றுவித்த நாடும்கூட என்பதை இந்தப் புத்தகம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
புத்தருக்கும் வேத பண்டிதர்களுக்கும் இடையிலும்; பௌத்தத்துக்கும் பிராமணீயத்துக்கும் இடையிலும்; ஆதிக்கச் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலும் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்தன. பின்னர் பிரிட்டன் ஆட்சிக்கு உட்பட நேரிட்டபோது இந்தப் போராட்டங்கள் விரிவான தளத்தில் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை மையப்படுத்தும் டெலூரியின் இந்தப் புத்தகத்தை காலவரிசையுடன் நிகழ்வுகளைப் பட்டியலிடும் வரலாற்றுப் பிரதியாகக் கொள்ளமுடியாது. பிரிட்டன் ஆட்சி, பிராமணர்கள் ஆட்சி, பௌத்தத்தின் பங்களிப்பு, காந்தியின் அணுகுமுறை, மார்க்ஸின் இந்தியா, தாகூர் ஆங்கிலம் கற்ற கதை, பக்தி இலக்கியம் என்று மேற்பார்வைக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் அடித்தளத்தில் சங்கிலித்தொடர்பு கொண்ட விஷயங்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்காட்டி சில வாதங்களை எழுப்புகிறது இந்நூல்.
இந்தியா என்பது இந்து நாடு என்று இன்னமும் பலர் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான நம்பிக்கையை அவர்கள் அரசியல் களத்துக்குக் கொண்டு சென்றதோடு நிற்காமல் இதையே ஒரு வரலாற்று உண்மையாகவும் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்துவருகிறார்கள். அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், சமூகவியலாளர்கள், ஏன் பல வரலாற்றாசிரியர்களுமேகூட இதில் அடக்கம்.
இந்தியாவில் எங்கு பயணம் மேற்கொண்டாலும், பழங்காலச் சிற்பங்கள், கட்டடங்கள் என்று நாம் பார்க்கும் அனைத்து வரலாற்றுச் சின்னங்களிலும் பௌத்தத்தின் அடையாளம் அழுத்தமாகப் பதிந்திருப்பதைப் பார்க்கமுடியும். சாஞ்சி, சாரநாத் ஆந்திரா என்று இந்தியாவில் ஐந்து நூற்றாண்டுகளாக பௌத்தம் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வணிக ரீதியிலான உறவை பௌத்தர்கள் உருவாக்கிக்கொண்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. பௌத்தம் தழைத்திருந்ததற்கான கலை, இலக்கிய, கலாசாரச் சான்றுகள் ஏராளம் உள்ளன.
இந்த இடத்தில் அசோகரின் பங்களிப்பைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்தியாவை அசோகர் ஜம்புத்விபா என்று அழைத்தார். அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த சமஸ்கிருதத்துக்கு மாற்றாக அவர் பிராகிருதியை முன்னிறுத்தினார். சமஸ்கிருதம் பண்டிதர்களின் மொழியாகவும் பிராகிருதி சாமானிய மக்களின் மொழியாகவும் இருந்ததை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். கல்வெட்டுகளிலும் அரசு அறிவிப்புகளிலும் பிராகிருதியைப் பயன்படுத்தியதன்மூலம் அரசாங்கம் மக்களுக்கானது என்பதையும் மக்களுடன் நேரடியாக அரசு உரையாட வேண்டியது அவசியம் என்பதையும் அசோகர் புரியவைத்தார். பௌத்தத்தை மக்கள் மதமாக அவர் முன்னிறுத்தினார். பௌத்தம் இந்தியாவில் பின்னர் வீழ்ச்சியடைந்துவிட்டது என்றாலும் பௌத்தத்தின்மூலம் இந்தியா பெற்றுக்கொண்ட கொடைகள் ஏராளம்.
பௌத்தம் பிராமணிய ஆதிக்கத்துக்குச் சவாலாகத் திகழ்ந்தது என்றால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் பிராமணர்களுக்குச் சாதகமாக அமைந்தது என்கிறார் நூலாசிரியர். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் குறித்து அவர் அளிக்கும் சித்திரம் இந்த வாதத்தை உறுதிசெய்வதாக இருக்கிறது. கிப்ளிங்குக்கு 28 வயதாகும்போது காந்திக்கு 24 வயது. 1902ல் போயர் யுத்தத்தைப் பற்றி எழுதுவதற்காக கிப்ளிங் பணிக்கப்பட்டிருந்தார். அதே யுத்தத்தால் காயம்பட்ட பிரிட்டிஷ் வீரர்களுக்காக காந்தி மருத்துவ உதவி செய்துகொண்டிருந்தார். கிப்ளிங், காந்தி இருவரும் ஒரே போர்க்களத்தில் ஒரே அணியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
உலக இலக்கியங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரமாகத் திகழும் மௌக்ளியை (ஜங்கிள் புக்) உருவாக்கிய ருட்யார்ட் கிப்ளிங் கடைசிவரை இந்தியாவின் காடுகளில் கால் பதிக்கவேயில்லை. ஜங்கிள் புக்கில் இடம்பெறும் பாத்திரங்கள், நிலப்பரப்பு, புவியியல் மற்றும் விலங்குகள் பற்றிய அவருடைய விவரணைகள் அனைத்தும் கற்பனையே. இருந்தும், பிரிட்டிஷாரும் இந்தியர்களும் கிப்ளிங்கின் கற்பனையில் மயங்கினர். இந்தியாவை எழுத்தில் உயிரோட்டத்துடன் கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராக இரு சாராராலும் கிப்ளிங் கொண்டாடப்பட்டார்.
ஆதிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாட்டை எப்படிக் காண்பாரோ அப்படியேதான் கிப்ளிங்கும் இந்தியாவைக் கண்டார். இந்திய கிராமங்கள் அவரை முகம் சுளிக்க வைத்தன. கிராமத்து மனிதர்களை அவர் இளக்காரத்துடன் கண்டார். ‘மேற்கு மேற்குதான் கிழக்கு கிழக்குதான். இரண்டும் இணையாது.’ இதைத்தான் கிப்ளிங் உலகப் பொதுவான தத்துவமாக முன்னிறுத்தினார்.
கிப்ளிங்கின் கதைகளையும் கதை மாந்தர்களையும் நூலாசிரியர் டெலூரி நுணுக்கமாகப் பரிசீலிக்கிறார். கிப்ளிங்கின் காட்டில் புலி, சிறுத்தை, கரடி ஆகியவை உயர்வான இடத்தில் இருப்பதையும் பிற விலங்குகள் அவற்றுக்கு அடங்கிபோவதையும் எப்படிப் புரிந்துகொள்வது? ஜங்கிள் புக்கில் ஓரிடத்தில் மௌக்ளியைப் பார்த்து கரடி பேசுகிறது.
இரு விஷயங்களை கிப்ளிங் இந்தக் கதைகள்மூலம் தெரியப்படுத்துகிறார். ஒன்று, இந்தியாவில் நிலவும் சாதி முறையையும் சிலர் மேல் நிலையிலும் சிலர் கீழ்நிலையிலும் இருப்பதையும் கிப்ளிங் பொதுவிதியாக அங்கீகரிக்கிறார். இந்த விதியை அவர் காட்டுக்கும் பொருத்திப் பார்த்து மகிழ்கிறார். இரண்டாவதாக, இந்தியர்கள் எப்படிப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்களோ அப்படியே இந்தியர்கள் பிரிட்டனின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே கிப்ளிங்கின் விருப்பம். இதை பிரிட்டிஷ் வாசகர்கள் புரிந்துகொண்டதால் அவர்களுக்கு கிப்ளிங்கின் ஜங்கிள் புக் பிடித்துப்போனது.
நூலாசிரியர் இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். இந்தியாவில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தையும் சாதிய அடுக்குமுறையையும் கிப்ளிங் உள்ளிட்டோர் கொண்டாடுவதை வைத்து பார்க்கும்போது, இந்தியாவிடம் இருந்தே இப்படிப்பட்ட மேலாதிக்கக் கருத்தாக்கத்தை பிரிட்டன் கற்றுக்கொண்டது என்று சொல்லமுடியும் அல்லவா? இந்திய அனுபவங்கள் வாயிலாகத்தான் இந்தச் சித்தாந்தத்தை பிரிட்டன் உள்வாங்கிக்கொண்டதா? பின்னர் தென் ஆப்பிரிக்கர்களை அபார்தெய்ட் என்னும் நிறவெறிக்கொள்கைமூலம் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியதற்கு இந்திய அனுபவங்கள் உதவியிருக்குமா? எனில், பிரிட்டிஷார் தங்களை பிராமணர்களாகக் கண்டனரா?
அது மட்டுமல்ல, இந்தியாவை பிராமணமயமாக்கியதிலும் பிராமணர்களின் ஆதிக்கக் கரங்களை வலுப்படுத்தியதிலும்கூட பிரிட்டனுக்குப் பங்கிருந்தது என்கிறார் நூலாசிரியர். வில்லியம் ஜோன்ஸ் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் கல்கத்தாவை தொடங்கியதைத் தொடர்ந்து ஆங்கிலேயப் பண்டிதர்கள் விருப்பத்துடன் சமஸ்கிருதம் படித்தார்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளை ஒத்தது என்பதையும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழிதான் என்பதையும் கண்டறிந்து மகிழ்ந்தார்கள்.
சமஸ்கிருதத்தைப் படித்த கையோடு இந்திய கலாசாரம் குறித்தும் பழக்க வழக்கங்கள் குறித்தும் மதப் புராணங்கள் குறித்தும் ஆங்கிலேயர்கள் தீவிரமாக வாசித்தறிந்தார்கள். முக்கியம் என்று தாங்கள் கருதியதை அவர்கள் தங்கள் மொழிக்குக் கொண்டு சென்றார்கள். மனுவின் தர்மங்களை முதலில் மொழிபெயர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம். பிராமணர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் என்னும் மனுவின் தர்மம் அவர்களை வசீகரித்ததில் வியப்பில்லை. மனு தர்மத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தர்மமாக அவர்கள் கருதினார்கள். இந்தியன் சிவில் கோடில் இந்த விஷயங்களை அவர்கள் நுழைத்தார்கள். இந்த அடிப்படையிலேயே ஆங்கில நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அதுவரை பிராமணர்களுக்கு இடையில் மட்டும் புகழ்பெற்றிருந்த மனு தர்மங்களை அனைவருக்குமானதாக மாற்றியதில் பிரிட்டிஷாரின் பங்களிப்பு முதன்மையானது. அந்த வகையில், ‘இந்தியாவை பிராமணமயமாக்கியதோடு தங்களையும் அவர்கள் பிராமணமயமாகிக்கொண்டனர்.’
நாம் உயர்ந்தவர்கள், நம்முடைய இனவாதத் தூய்மையை நாம் காக்கவேண்டும் என்னும் உணர்வு அவர்களை உந்தி தள்ளியது. இந்தியப் பெண்களோடு பழகுவது தூய்மையைக் கெடுக்கும் செயல் என்று கருதிய கிழக்கிந்திய அதிகாரிகள் 1800க்குப் பிறகு தங்கள் வீட்டுப் பெண்களை கப்பலில் இந்தியாவுக்கு அழைத்து வரத் தொடங்கினர். அரை சாதியினர் என்னும் பொருள்படும் ஹாஃப் காஸ்ட் என்னும் பதத்தை பிரிட்டனே உருவாக்கியது. வெள்ளைக்கார அப்பாவுக்கும் இந்திய அம்மாவுக்கும் பிறக்கும் குழந்தை இப்படி அழைக்கப்பட்டது. இந்தப் பதத்தை அதிகம் பயன்படுத்தியவர் ருட்யார்ட் கிப்ளிங்.
சில பத்தாயிரம் பேர் கொண்ட கிழக்கிந்திய அதிகாரிகளால் இவ்வளவு பெரிய தேசத்தை எப்படி இத்தனை ஆண்டுகள் ஆளமுடிந்தது என்னும் கேள்விக்கான விடை பிராமணர்களிடம் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் இடையிலான உறவு பிராமணர்களுக்கும் பிற சாதியிருக்கும் இடையிலான உறவைப் போல் நீடித்திருக்கவேண்டும் என்று பிரிட்டன் விரும்பியிருக்கிறது. நாம், தனியொரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் கிப்ளிங். கிப்ளிங்கை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் அவரது கருத்தையும் ஏற்றுக்கொண்டது. கோவாவில் போர்ச்சுகல் ஆட்சி செலுத்தியபோது அவர்கள் தங்களை உயர் குடியினர் என்ற அழைத்துக்கொண்டனர். காஸ்ட் என்னும் பெயரையும் அவர்கள் உருவாக்கினார்கள்.
1785ல் வங்காளம் மட்டும்தான் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது. சில நூறு அதிகாரிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இருந்தும் அவர்கள் தங்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்த்தார்கள். தங்களை உயர் குடி என்று கருதினார்கள். நாகரிகம் குறைந்த மக்களை ஆள வந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். பிராமணர்களின் நினைப்பும் இதுவேதான் என்கிறார் நூலாசிரியர். 1857 புரட்சிக்குப் பிறகு 1877ல் விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார். அதற்குப் பிறகு இந்தியாவில் உயர்குடி, உயர் வர்க்கம், உயர் சாதி என்றால் அது பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே.
ருட்யார்ட் கிப்ளிங் இங்கிலாந்து திரும்பிச்சென்ற பிறகும் மயக்கத்தில் இருந்து கலையவில்லை. இந்தியாவில் இருந்து வீடு திரும்பும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனியிடம், தனி மரியாதை அளிக்கப்படவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆங்கிலோ இந்தியர்களுக்கென்றே பிரத்தியேகமான கிளப்புகள், பள்ளிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் இந்தியா திரும்பியபோதும் அவர் தன்னை ஆங்கிலோ இந்தியன் வட்டத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார். மற்றொரு ஆங்கிலோ இந்தியரும் எழுத்தாளருமான ஜார்ஜ் ஆர்வெல் கிப்ளிங்கை பின்னர் விமரிசிக்கத் தொடங்கியது தனி கதை.
இந்தியா அதிகம் மாறிவிடவில்லை. பிராமணீய ஆதிக்கம் இன்று பல புதிய தளங்களில் புதிய வடிவங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி அரசியல் முன்பைவிட அதிக தீவிரத்தன்மையுடன் இயங்கி வருகிறது. ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை. இந்தியா இன்று அடிமை நாடல்ல. அதே சமயம், முழுமையான சுதந்தர நாடாக இருக்கிறது என்றும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. எனவே, வரலாற்றில் இருந்து தொடர்ந்து பாடங்கள் படிக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தப் புத்தகம் அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும்.
India The Rebel Continent : The French Looking Glass, Guy Deleury, Macmillan India Ltd
(உங்கள் நூலகம் இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரை)

மனித குட்டியே இதைக் கேள். இங்குள்ள அனைவருக்கும் காட்டின் சட்டம் என்ன என்பதை நான் விளக்கிவிட்டேன். அதாவது, மரங்களில் வசிக்கும் குரங்குகளைத் தவிர. அவர்களுக்குச் சட்டம் என்று எதுவுமில்லை. அவர்கள் சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கென்று மொழியில்லை. காதில் விழும், ஒட்டுகேட்கும் சில வார்த்தைகளத் திருடி பயன்படுத்துகிறார்கள். எப்போதும் கிளைகளில் தொங்கிகொண்டிருக்கிறார்கள். நம்முடைய வழிமுறை வேறு, அவர்களுடையது வேறு. அவர்களுக்குத் தலைவர்கள் என்று யாருமில்லை. அவர்களுக்கு நினைவுகள் இல்லை. ஆனால் தாம் பெரிய மனிதர்கள் என்றும் காட்டில் ஏதோ பெரிதாகச் சாதிக்கப்போகிறோம் என்றும் தமக்குள் பெருமையடித்துக் கொள்வார்கள். ஆனால் மூளையில் ஒரு திருகு கழண்டு விழுந்தால் உடனே எல்லாவற்றையும் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் அவர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுவது கிடையாது. குரங்குகள் குடிக்கும் இடத்தில் நாம் எதுவும் குடிப்பதில்லை. குரங்குகள் போகும் இடங்களுக்கு நாம் போவதில்லை. குரங்குகள் வேட்டையாடும் இடங்களில் நாம் வேட்டையாடுவதில்லை. அவர்கள் இறக்கும் இடங்களில் நாம் இறப்பதில்லை.சிறுத்தை இன்னோரிடத்தில் சொல்கிறது.
குரங்கு மனிதர்கள் சட்டம் இல்லாதவர்கள். எதையும் தின்பவர்கள். அது பெரும் அவமானத்துக்குரிய விஷயம்.இதைவிட வெளிப்படையாக சாதிப் படிநிலை குறித்தும் அந்தப் படிநிலையில் கீழ் நிலையில் இருப்பவர்களைப் பற்றியும் கதை வடிவில் சொல்லிவிடமுடியுமா?
இரு விஷயங்களை கிப்ளிங் இந்தக் கதைகள்மூலம் தெரியப்படுத்துகிறார். ஒன்று, இந்தியாவில் நிலவும் சாதி முறையையும் சிலர் மேல் நிலையிலும் சிலர் கீழ்நிலையிலும் இருப்பதையும் கிப்ளிங் பொதுவிதியாக அங்கீகரிக்கிறார். இந்த விதியை அவர் காட்டுக்கும் பொருத்திப் பார்த்து மகிழ்கிறார். இரண்டாவதாக, இந்தியர்கள் எப்படிப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்களோ அப்படியே இந்தியர்கள் பிரிட்டனின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே கிப்ளிங்கின் விருப்பம். இதை பிரிட்டிஷ் வாசகர்கள் புரிந்துகொண்டதால் அவர்களுக்கு கிப்ளிங்கின் ஜங்கிள் புக் பிடித்துப்போனது.
நூலாசிரியர் இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். இந்தியாவில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தையும் சாதிய அடுக்குமுறையையும் கிப்ளிங் உள்ளிட்டோர் கொண்டாடுவதை வைத்து பார்க்கும்போது, இந்தியாவிடம் இருந்தே இப்படிப்பட்ட மேலாதிக்கக் கருத்தாக்கத்தை பிரிட்டன் கற்றுக்கொண்டது என்று சொல்லமுடியும் அல்லவா? இந்திய அனுபவங்கள் வாயிலாகத்தான் இந்தச் சித்தாந்தத்தை பிரிட்டன் உள்வாங்கிக்கொண்டதா? பின்னர் தென் ஆப்பிரிக்கர்களை அபார்தெய்ட் என்னும் நிறவெறிக்கொள்கைமூலம் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியதற்கு இந்திய அனுபவங்கள் உதவியிருக்குமா? எனில், பிரிட்டிஷார் தங்களை பிராமணர்களாகக் கண்டனரா?
அது மட்டுமல்ல, இந்தியாவை பிராமணமயமாக்கியதிலும் பிராமணர்களின் ஆதிக்கக் கரங்களை வலுப்படுத்தியதிலும்கூட பிரிட்டனுக்குப் பங்கிருந்தது என்கிறார் நூலாசிரியர். வில்லியம் ஜோன்ஸ் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் கல்கத்தாவை தொடங்கியதைத் தொடர்ந்து ஆங்கிலேயப் பண்டிதர்கள் விருப்பத்துடன் சமஸ்கிருதம் படித்தார்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளை ஒத்தது என்பதையும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழிதான் என்பதையும் கண்டறிந்து மகிழ்ந்தார்கள்.
சமஸ்கிருதத்தைப் படித்த கையோடு இந்திய கலாசாரம் குறித்தும் பழக்க வழக்கங்கள் குறித்தும் மதப் புராணங்கள் குறித்தும் ஆங்கிலேயர்கள் தீவிரமாக வாசித்தறிந்தார்கள். முக்கியம் என்று தாங்கள் கருதியதை அவர்கள் தங்கள் மொழிக்குக் கொண்டு சென்றார்கள். மனுவின் தர்மங்களை முதலில் மொழிபெயர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம். பிராமணர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் என்னும் மனுவின் தர்மம் அவர்களை வசீகரித்ததில் வியப்பில்லை. மனு தர்மத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தர்மமாக அவர்கள் கருதினார்கள். இந்தியன் சிவில் கோடில் இந்த விஷயங்களை அவர்கள் நுழைத்தார்கள். இந்த அடிப்படையிலேயே ஆங்கில நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அதுவரை பிராமணர்களுக்கு இடையில் மட்டும் புகழ்பெற்றிருந்த மனு தர்மங்களை அனைவருக்குமானதாக மாற்றியதில் பிரிட்டிஷாரின் பங்களிப்பு முதன்மையானது. அந்த வகையில், ‘இந்தியாவை பிராமணமயமாக்கியதோடு தங்களையும் அவர்கள் பிராமணமயமாகிக்கொண்டனர்.’
நாம் உயர்ந்தவர்கள், நம்முடைய இனவாதத் தூய்மையை நாம் காக்கவேண்டும் என்னும் உணர்வு அவர்களை உந்தி தள்ளியது. இந்தியப் பெண்களோடு பழகுவது தூய்மையைக் கெடுக்கும் செயல் என்று கருதிய கிழக்கிந்திய அதிகாரிகள் 1800க்குப் பிறகு தங்கள் வீட்டுப் பெண்களை கப்பலில் இந்தியாவுக்கு அழைத்து வரத் தொடங்கினர். அரை சாதியினர் என்னும் பொருள்படும் ஹாஃப் காஸ்ட் என்னும் பதத்தை பிரிட்டனே உருவாக்கியது. வெள்ளைக்கார அப்பாவுக்கும் இந்திய அம்மாவுக்கும் பிறக்கும் குழந்தை இப்படி அழைக்கப்பட்டது. இந்தப் பதத்தை அதிகம் பயன்படுத்தியவர் ருட்யார்ட் கிப்ளிங்.
சில பத்தாயிரம் பேர் கொண்ட கிழக்கிந்திய அதிகாரிகளால் இவ்வளவு பெரிய தேசத்தை எப்படி இத்தனை ஆண்டுகள் ஆளமுடிந்தது என்னும் கேள்விக்கான விடை பிராமணர்களிடம் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் இடையிலான உறவு பிராமணர்களுக்கும் பிற சாதியிருக்கும் இடையிலான உறவைப் போல் நீடித்திருக்கவேண்டும் என்று பிரிட்டன் விரும்பியிருக்கிறது. நாம், தனியொரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் கிப்ளிங். கிப்ளிங்கை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் அவரது கருத்தையும் ஏற்றுக்கொண்டது. கோவாவில் போர்ச்சுகல் ஆட்சி செலுத்தியபோது அவர்கள் தங்களை உயர் குடியினர் என்ற அழைத்துக்கொண்டனர். காஸ்ட் என்னும் பெயரையும் அவர்கள் உருவாக்கினார்கள்.
1785ல் வங்காளம் மட்டும்தான் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது. சில நூறு அதிகாரிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இருந்தும் அவர்கள் தங்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்த்தார்கள். தங்களை உயர் குடி என்று கருதினார்கள். நாகரிகம் குறைந்த மக்களை ஆள வந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். பிராமணர்களின் நினைப்பும் இதுவேதான் என்கிறார் நூலாசிரியர். 1857 புரட்சிக்குப் பிறகு 1877ல் விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார். அதற்குப் பிறகு இந்தியாவில் உயர்குடி, உயர் வர்க்கம், உயர் சாதி என்றால் அது பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே.
ருட்யார்ட் கிப்ளிங் இங்கிலாந்து திரும்பிச்சென்ற பிறகும் மயக்கத்தில் இருந்து கலையவில்லை. இந்தியாவில் இருந்து வீடு திரும்பும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனியிடம், தனி மரியாதை அளிக்கப்படவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆங்கிலோ இந்தியர்களுக்கென்றே பிரத்தியேகமான கிளப்புகள், பள்ளிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் இந்தியா திரும்பியபோதும் அவர் தன்னை ஆங்கிலோ இந்தியன் வட்டத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார். மற்றொரு ஆங்கிலோ இந்தியரும் எழுத்தாளருமான ஜார்ஜ் ஆர்வெல் கிப்ளிங்கை பின்னர் விமரிசிக்கத் தொடங்கியது தனி கதை.
இந்தியா அதிகம் மாறிவிடவில்லை. பிராமணீய ஆதிக்கம் இன்று பல புதிய தளங்களில் புதிய வடிவங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி அரசியல் முன்பைவிட அதிக தீவிரத்தன்மையுடன் இயங்கி வருகிறது. ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை. இந்தியா இன்று அடிமை நாடல்ல. அதே சமயம், முழுமையான சுதந்தர நாடாக இருக்கிறது என்றும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. எனவே, வரலாற்றில் இருந்து தொடர்ந்து பாடங்கள் படிக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தப் புத்தகம் அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும்.
India The Rebel Continent : The French Looking Glass, Guy Deleury, Macmillan India Ltd
(உங்கள் நூலகம் இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரை)
No comments:
Post a Comment