August 23, 2013

தமிழில் ஒரு EPW சாத்தியமா?

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 23வது மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் 22 முதல் நடைபெற்றுவருகிறது. இன்று நிறைவு நாள். பிரதிநிதிகள் மாநாடு, பேரணி, கருத்தரங்கம், புத்தகக் கண்காட்சி என்று விரிந்துசென்ற நிகழ்ச்சிகளில் சிலவற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

சிபிஎம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவிடம் நேற்று தனிப்பட்ட முறையில் விரிவாக உரையாடமுடிந்தது. ஆழம் மாதாந்திரப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்து வரும் அவர் இதழைப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தையும் இதழில் இடம்பெறவேண்டிய சில பகுதிகள் குறித்தும் உற்சாகமாகத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி போன்ற ஒரு கனமான ஆய்விதழ் தமிழில் இல்லை என்னும் தன் குறையையும் அவர் பகிர்ந்துகொண்டபோது, இப்போதைக்கு அதற்கான சாத்தியம் இல்லை என்று அவரிடம் கூறினேன். ஏன் என்பது EPW இதழை மேலோட்டமாக ஒருமுறை புரட்டினாலே  புரிந்துவிடும்.

தபால்தலை அளவுக்குக்கூட ஒரு சிறு படம் கிடையாது. பரபரப்பு செய்திகள், பேட்டிகள், சினிமா, 'லைட் மெட்டீரியல்' எதுவும் கிடையாது. ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு நிதானமான தொனியில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சித்தாந்தப் பின்னணியில் அதைப் பொருத்திப் பார்த்து ஆய்வாளர்களுக்கே உரித்தான மொழியில் அடிக்குறிப்புகள், புள்ளிவிவரங்களுடன் தர்க்கரீதியில் உரையாடும் கட்டுரைகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன. ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு தூக்கிப்போட்டுவிடமுடியாது. அதே போல், முதல் பக்கத்தில் இருந்து கடைசிவரை தொடர்ந்து ஒரே மூச்சில் படித்துவிடவும் முடியாது.

தமிழில் சிறு பத்திரிகைகளால் மட்டுமே இப்படியெல்லாம் முயன்று பார்க்கமுடியும். ஒருசிலர் செய்தும் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து செயல்படவேண்டுமானால் அதற்கென்று ஒரு டிரஸ்ட் இருந்தாகவேண்டும். ஒரு பத்திரிகை ஆபிஸாக இல்லாமல் ஓர் இயக்கமாக அது மாறியாகவேண்டும். நீடித்த, தொடர்ந்த வாசகர் வட்டம் உருவாகவேண்டும். அறிவுஜீவிகள் மத்தியில் விவாதப் பொருளாக அந்தப் பத்திரிகை திகழவேண்டும். கல்லூரிகள், ஆய்வரங்கங்கள், நூலகங்கள் அனைத்திலும் இதழ் சென்று சேர்ந்தாகவேண்டும்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், EPW போல் தமிழில் ஒரு பத்திரிகை தேவை என்றால் நான்கு விஷயங்கள் அத்தியாவசியம்.

1) எனக்குக் கனமான விஷயங்கள் படிக்கத் தேவைப்படுகின்றன என்று வாசகர்கள் குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குரல் வலிமை பெறவேண்டும்.

2) அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகம் ஆகிய துறைகளில் எழுத ஆழ்ந்த புலமையுள்ள ஆய்வாளர்கள் வேண்டும்.

3) முதல் பிரிவினரையும் இரண்டாவது பிரிவினரையும் இணைக்க தேர்ந்த எடிட்டர் / எடிட்டோரியல்.

4) பத்திரிகை முயற்சிக்கான நிதி.


தோழர் பீமாராவ் உற்சாகத்துடன் சொன்னதுபோல் ஆழம் இதழைத் தமிழின் EPW-ஆக கொண்டுச் செல்வது சாத்தியமற்றது. ஆனால், EPW போல் கொண்டுசெல்லவேண்டும் என்று கனவு காண்பது நிச்சயம் சாத்தியம்தான். அதைத்தான் அவரிடமும் என்னால் சொல்லமுடிந்தது.


எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி.
ஆழம் மாதாந்திர இதழ்.

5 comments:

Gopi Shankar said...

Spelling of எனகாமிக் economic is wrong

Somasundaram Hariharan said...

translation couldbe possible!

Somasundaram Hariharan said...

Trnslation couldbe possible!

மருதன் said...

கோபிஷங்கர்,மாற்றிவிட்டேன்.

மருதன் said...

Somasundaram Hariharan : மொழிபெயர்ப்பதும்கூட கடினமானதுதான்.ஆனால், முடியாதது அல்ல. EPW வாரா வாரம் வெளியாகிறது. ஒரு குழுவாக இருந்து கட்டுரைகளை உடனுக்குடன் மொழிபெயர்த்தால்தான் தமிழிலும் கொண்டுவரமுடியும்.