August 30, 2013

ஒரு வித்தியாசமான திருமணம்

இதுவரை சென்று வந்த எந்தத் திருமணம் போலவும் இல்லை கடந்த சனிக்கிழமை அரும்பாக்கத்தில் கலந்துகொண்ட தோழர் ஜிம்ராஜ் மில்ட்டனின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா. அடிப்படையில் வழக்கறிஞரான மில்ட்டன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஹெச்ஆர்பிசி), சென்னைக் கிளையின் செயலாளராக இருக்கிறார். சிறுமி ஸ்ருதியின் மரணம் குறித்து இவர் தலைமையில் சமர்பிக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் (நடைபெற்றது விபத்தல்ல, கொலை), இவர் சார்ந்துள்ள அமைப்பு மரக்காணம் கலவரம் குறித்து மேற்கொண்ட ஆய்வும் (நடைபெற்றது சாதி மோதல் அல்ல, ஆதிக்க சாதியினரின் திட்டமிட்ட வன்முறை) முக்கியமானவை.

காவல்துறை போலி மோதல்கள் குறித்து மில்ட்டனிடம் ஆழம் இதழுக்காக ஒருமுறை உரையாடியிருக்கிறேன். கடந்த இதழில், சாதி மோதல்கள் குறித்த ஆழம் கவர் ஸ்டோரிக்காக அவரிடம் பேட்டி எடுத்திருக்கிறோம். எந்த ஒரு சமூக நிகழ்வு குறித்தும் அவரிடம் விரிவாக உரையாடமுடியும்; கருத்து கோர முடியும்.

ஹெச்ஆர்பிசி மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு நெருக்கமான உறவு கொண்டிருக்கும் அமைப்பு என்பதால் மில்ட்டனின் மணமேடை ஒரு பிரசார அரங்கமாக உருமாற்றப்பட்டிருந்தது. அரங்கத்தின் நுழைவாயிலில் கீழைக்காற்று பதிப்பகம் புத்தகக் கடை போட்டிருந்தார்கள். புத்தகங்கள் தவிர வேறு அன்பளிப்புகள், பரிசுகள் ஏற்பதற்கில்லை என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் கடைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பரிசளிப்பதற்காக மட்டுமின்றி வாசிப்பதற்கும் பலர் புத்தகங்கள் வாங்கி சென்றனர்.

மருதையன், வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் விஜயகுமார் என்று ஒரு சிறு கூட்டம் மில்ட்டன் ரமா தம்பதியுடன் மேடையில் அமர்ந்திருந்தது. அமைப்புத் தோழர்கள், இயக்கநண்பர்கள், வழக்கறிஞர்கள் என்று திரண்டிருந்த கூட்டத்தில் மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோரும் உறவினரும் கிட்டத்தட்ட மறைந்தே இருந்தார்கள். சம்பிரதாயத்துக்காக ஒரே ஒரு முறை அவர்களை மேடை ஏற்றி, மணமக்களோடு சேர்த்து ஒரு படம் எடுத்ததோடு சரி.

மில்ட்டன் ஒரு கிறிஸ்தவர். ரமா, இந்து. இரு தரப்பினருக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. எதிர்ப்புக்கு முதல் காரணம் சாதி மீறிய காதல். இரண்டாவது காரணம், இரு சாதியினரின் சம்பிரதாயங்களையும் மீறி, கடவுளின் கிருபை சிறிதும் அண்டிவிடமுடியாதபடி நடத்தப்பட்டுள்ள திருமண ஏற்பாடு. பெற்றோரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே திருமணம் என்று இருவரும் முடிவு செய்துவிட்டபடியால் தொடர்ந்து பேசியும் போராடியும் மிரட்டியும் (மில்ட்டன் தன் வீட்டில் சில தினங்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்) சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

ஆழ்ந்த மத நம்பிக்கை இருந்தபோதும், விட்டுக்கொடுத்து ஜோடிகளைச் சேர்த்து வைத்த அவர்களுடைய பெற்றோரை வாழ்த்திப் பேசினார் மருதையன். ‘நம் சம்பிரதாயத்தின்படி, குடும்பங்கள் சூழ, மந்திரங்கள் ஓத இந்தத் திருமணம் நடைபெறவில்லையே,ஒரு குடும்ப விழாவாக அல்லாமல் அரசியல் நிகழ்வு போல் மாற்றிவிட்டார்களே என்னும் வருத்தம் நிச்சயம் இவர்களுடைய பெற்றோருக்கு இருக்கும். அதற்காக வருந்தத் தேவையில்லை. அரங்கு முழுக்க புகை சூழ்ந்திருக்கவேண்டும். கூச்சலும் குழப்பமும் மிகுந்திருக்கவேண்டும். சத்தமான வாத்தியங்கள், ஆர்கெஸ்டிரா என்று எதுவும் யாருக்கும் புரிந்துவிடாதபடி நடப்பதுதான் திருமணம் என்று நினைக்கவேண்டாம்.’

இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரின் மகனாகிய நான், இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரின் மகளை வாழ்க்கைத் துணையாக ஏற்கிறேன் என்று தொடங்கும் உறுதிமொழியை இருவரும் வாசித்து முடிக்க தலா 1 நிமிடம் ஆனது. அவர்கள் வாசித்த சில வாசகங்கள்: திருமணத்துக்குப் பிறகு எங்களுக்குள் பிரச்னைகள் ஏற்பட்டால், அமர்ந்து பேசுவோம்; தவறு யாருடையதாக இருந்தாலும் திருத்திக்கொள்வாம். உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குச் சாதகமாக குரல் கொடுப்போம்.

மாலை மாற்றிக்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த சில விநாடிகள் நீங்கலாக கிட்டத்தட்ட நான்கு மணி நேரமும் வாழ்த்துரை, சிறப்புரை என்று உரையாடலுக்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது.

வாழ்க்கைத் துணை என்று சொல்லவேண்டுமா அல்லது இணை என்று இருந்திருக்கவேண்டுமா என்று கேள்வி எழுப்பினார் பேராசிரியர் கருணாந்தம். மதங்கள் பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கின்றன. அவற்றின் தளைகளில் சிக்கிக்டக்கிடக்கும்வரை பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்) விடுதலை கிடைக்காது என்றார் அவர். தனது திருமணம் மிகவும் எளிமையாக, ஒரு சில நண்பர்களுக்கு தேநீர் வழங்கியதோடு முடிந்துவிட்டது என்றார் வழக்கறிஞர் விஜயகுமார். சடங்குகளற்ற,வீண் செலவுகளற்ற வகையில் இருவர் இணைவதைச் சாத்தியமாக்கியுள்ள சிறப்பு திருமணச் சட்டத்தின் முக்கியத்துவத்தை இவர் பகிர்ந்துகொண்டார்.‘இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் முற்போக்கான சட்டம் என்று இதைச் சொல்லமுடியும். இந்தியாவில் பிறந்த ஒருவர் எந்த நாட்டையும் சேர்ந்த இன்னொருவரையும் இச்சட்டத்தின்படி மணம் செய்துகொள்ளமுடியும்.’  

நாங்கள் போகும் இடங்களுக்கு நீங்கள் வருவதில்லை, நாங்கள் பேசுமிடங்களுக்கு நீங்கள் வருவதில்லை; எனவே இந்த வாய்ப்பை நான் தவறவிடப்போவதில்லை என்று சொல்லியே பேசத் தொடங்கினார் வழக்கறிஞர் அருள்மொழி. எந்த மரபை மீறினாலும் ஒரு மரபை யாரும் மீறுவதில்லை. திருமணம் முடிந்ததும் பெண்ணுக்குப் புத்தி சொல்லவேண்டும் என்றொரு வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். மாமியாரையும் கணவனையும் அவர் குடும்பத்தினரையும் பெண் புரிந்துகொள்ளவேண்டுமாம். வேறோடு பிய்த்து இன்னோரிடத்துக்கு அனுப்பப்படும் பெண் தன் புதிய சூழலைப் புரிந்துகொள்வது எளிதா அல்லது மற்றவர்கள் இந்தப் பெண்ணைப் புரிந்து, ஏற்றுக்கொள்வது எளிதா? அச்சம், மடம், நாணம் (அதென்ன சார் பெயர்ப்பு, அதன் பொருள் யாருக்காவது தெரியுமா?) போன்ற அர்த்தமற்ற வரையறைகளைக் களைந்து பெண்கள் வெளிவரவேண்டும். நண்பர்களாகவோ காதலர்களாகவோ இருந்தபோது எப்படி இருந்தீர்களோ அப்படியே திருமணத்துக்குப் பிறகும் இருக்கவேண்டும்.

கிட்டத்தட்ட அனைத்து பேச்சாளர்களும் ராமதாஸையும் பாமகவையும் கடுமையாக விமரிசித்தனர். சாதி வெறி மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் இப்படிப்பட்ட திருமணங்கள் அதிகரிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார் மருதையன். டெல்லியிலும் சமீபத்தில் மும்பையிலும் நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களை மருதையன் சுட்டிக்காட்டி வேதனைப்பட்டார். ‘ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதற்காக கொலை செய்பவர்களை இன்று நம்மிடையே பார்க்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஒரு பொருளை உயிரைப் போல் நேசிக்கிறார்கள். இன்னொரு பக்கம், பெணை டிஸ்போசபிள் கப் போல் பயன்படுத்திவிட்டு எறிந்துவிடுகிறார்கள்.’

மனிதத் தன்மை மிகுந்து, மிருகத் தன்மை குறைந்திருக்கும் காதலே உயர்வானது என்று லெனினை மேற்கோள் காட்டினார் மருதையன். இன்றைய திரைப்படங்கள் விலங்கு உணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை என்பது எனக்கும் பொருந்தும், நான் பேசுவதை இங்கே யாரும் தடுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்லியபடி மைக்கை கைப்பற்றினார் மில்ட்டனின் சித்தப்பா. நேர்மையான, கடவுள் பக்தி கொண்ட கிறிஸ்தவர்கள் நாங்கள். மில்ட்டன் எங்களைச் சம்மதிக்க வைத்ததில் மகிழ்ச்சியே. கடவுளை இங்கிருப்பவர்கள் யாரும் ஏற்கமாட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் கிறிஸ்துவும் சபையும் போல் இருவரும் இணைந்து வாழவேண்டும் என்று அந்தக் கர்த்தரை நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்! என்னுடன் சேர்ந்து கடவுளை நம்புபவர்கள் அனைவரும் அவர்களை வாழ்த்துங்கள்.

வணக்கம், சுபம் என்று திரைப்படம் போல் முடித்துக்கொண்டுவிடமுடியாது. இனிதான் அவர்கள் வாழக்கை தொடங்கவிருக்கிறது. திருணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததோடு பெற்றோர்களின் கடமை முடிந்துவிடவில்லை. தொடர்ந்து  அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மருதையன்.

சரசரக்கும் பட்டுப் புடவைகள், மலர் மாலைகள், வேட்டிகள், ஆபரணங்கள், மொய், தாம்பூலப்பை, ஐஸ்க்ரீம் எதுவும் இல்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், முடிந்தபின்பும் புரட்சிகரப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நல்ல நேரம், முகூர்த்த நேரம் இல்லை. சாப்பாட்டுப் பந்திக்கு எப்படி வரவேற்றார்கள் தெரியுமா? உறவினர்களும் வெளியூர் செல்பவர்களும் சாப்பிட்டு முடிக்கும்வரை உள்ளூர் நண்பர்கள் காத்திருக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மரபுகள் மீறிய திருமணம்தான் என்றாலும் இதுவும்கூட கொஞ்சம் ஆடம்பரமாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புரட்சிகர திருமணம் இதைக்காட்டிலும் எளிமையாக இருக்கும். அதற்கு அவசியம் அழைத்துச் செல்கிறேன் என்றார் என்னுடன் வந்திருந்த ஒரு தோழர்.

3 comments:

Anonymous said...

Really a great marriage.

Anonymous said...

அறுவை திருமணம். எழுதியிருக்கும் விதம் மட்டும் நன்றாக உள்ளது.

Pattu Raj said...

My salutations to the couple and their near and dears. May such marriages increase.