September 23, 2013

குஜராத் குறிப்புகள் - 1

அகமதாபாத்தில் இன்று முதல் நாள். நவஜீவன் வந்து சேரும்போதே இரவு எட்டு மணி ஆகிவிட்டதால் எதுவும் காணமுடியவில்லை. ரயில் நிலையத்தில் பையைத் திறந்து காட்டச் சொல்லி சோதனை செய்தபிறகே அனுப்புகிறார்கள். என் பையில் கிழக்கு பதிப்பகத்தின் மோடியின் குஜராத் புத்தகங்கள் சில இருந்தன. மோடி படத்தைப் பார்த்துவிட்டு இதென்ன புத்தகம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் கேட்கவில்லை. நேராக ஓட்டல் அறைக்கு வந்துவிட்டோம். நாளை முதல் பயணம் ஆரம்பம்.

0

முதல் நாள் முழுநேர குஜராத் பயணம் இன்று தொடங்கியது. அரசாங்கம் சார்ந்த சிலர், அரசாங்கத்தை எதிர்க்கும் சிலர் என்று சந்தித்து உரையாடினோம்.

ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த், குஜராத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஷகில் அஹமத் மோடி குறித்து உரையாடினார். அவர் மூலமாக சில முக்கியத் தொடர்புகள் கிடைத்துள்ளன. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்று வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த பலரை அவர் அறிமுகம் செய்துவைத்தார். இவர்கள் அனைவரையும் நேரில் சென்று சந்திக்க முடியாவிட்டாலும், பலரிடம் சென்னை திரும்பிய பிறகும் நீண்ட தொடர் உரையாடல்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குஜராத்தின் அதிகம் அறியப்படாத இன்னொரு முகத்தைத் தரிசிக்க இவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

இன்று சென்று வந்த பகுதிகள்: காந்திநகர், பழைய செகரடேரியேட், ஜுஹாபுரா.


0

The Future of Solar Energy in India என்னும் தலைப்பில் ஒரு செமினார் இன்று காந்திநகர் அருகில் நடைபெற்றது. Centre for Science and Environment (CSE) என்னும் அமைப்பும் குஜராத் எனர்ஜி ரிசர்ச் அண்ட் மேனேஜ்மெண்ட் என்னும் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் இது.

அங்கு உரையாடியதில் கிடைத்த ஒரே ஒரு தகவல் மட்டும் இங்கே. சோலார் பவர்தான் எதிர்காலம் என்று பெருமிதமாக சொன்ன ஒருவரிடம், எதற்காக மோடி அரசு தெர்மல் பவர் மீதும் ஆர்வம் செலுத்துகிறது என்று கேட்டபோது, அது குறித்து தனக்குத் தெரியாது, சோலார் பற்றிய சந்தேகம் இருந்தால் மட்டுமே கேளுங்கள், உதவுகிறோம் என்றார்.


0

சூரியன் கொளுத்தும்போது ஸ்வெட்டர் போட்டுக்கொண்டது போல் குஜராத் வீதிகள் மூச்சு விடமுடியாமல் திக்கித் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் பெங்களூரூ எவ்வளவோ பரவாயில்லை. குறைந்தது, சாலை விதிகள் என்று ஒரு கான்செப்ட் அங்கு இருக்கிறது. இங்கு சாலை மட்டுமே. பாவப்பட்டவர்கள் போல் டிராஃபிக் போலிஸ்காரர்கள் நின்று கண்டபடி வாகனங்களை ஏசிக்கொண்டிருக்கிறார்கள். முன்னால், பின்னால், இடது, வலது, நடு என்று எங்கிருந்து வேண்டுமானாலும் திடீர் திடீரென்று என்று வந்து மோதுகிறார்கள். போதாததற்கு இன்று மழை. Complete chaos!

0

காந்தி நகர் சுத்தமாக இருக்கிறது. சோலார் பார்க், ஐடி ஹப், செமினார் என்று happening place ஆக இருக்கிறது. இங்கு நிறைய மோடி சுவரொட்டிகள் காண முடிந்தது. ஆனால் இங்கும் டிராஃபிக் படு மோசம்.
 
மேற்கு வங்கத்துக்கும் அகமதாபாத்துக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. நிறைய அழுக்கு, சாக்கடைகள், தார்பாலின் கூரைகள், பாழடைந்த, பழைய கட்டடங்கள்.

0

நேற்று ஜமாத் நண்பர் கொடுத்த இணைய முகவரி இது. http://pheku.in/

முன்னேற்றம், குஜராத் மாடல் என்று முழங்கும் மோடியைப் பற்றி இதிலும் கொஞ்சம் வாசியுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். இப்போதைக்கு நேரமில்லை. ஊருக்குத் திரும்பிய பிறகுதான் நிதானமாகப் படித்துப் பார்க்கவேண்டும்.

0

நேற்று ஓர் அரசு அதிகாரியிடம் உரையாடிக்கொண்டிருந்தோம். குஜராத் காவல்துறை குறித்து அவராகவே சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இஷ்ரத் ஜெஹன் வழக்கு தொடர்பாக ஏ கெ ஷர்மா (ஜாயிண்ட் கமிஷனர்), ஜி சி முன்ரோ (முதல்வரின் முதன்மை செகரேட்டரி) இருவரிடமும் சிபிஐ சனிக்கிழமை விசாரணை நடத்தியிருப்பது குறித்து இந்த அதிகாரி உண்மையாகவே வருத்தப்பட்டுக்கொண்டார். The police here have become notorious என்றார்.

காவல் துறையை அணுகவே பொதுவாக மக்கள் அஞ்சுகிறார்கள் என்று நான் சொன்னபோது அது உண்மைதான் என்றார். சென்னையில் Friends of Police என்றொரு அமைப்பு இருக்கிறதாமே என்று கேட்டார். இவர்களுடைய பிரசன்டேஷன் ஒன்று அவரிடம் இருந்தது. காண்பித்தார். இதே போல் குஜராத்திலும் செயல்படுத்தமுடியுமா என்பதில் அவர் ஆர்வத்துடன் இருந்தார். காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு மலரவேண்டும் என்று இவர் விரும்புவதாகவும் தெரிகிறது.

மோடியின் புகழுக்கு இத்தகைய காவல் துறை அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று இவர் கருதியிருக்கலாம். அதனை மாற்றவும் இவர் விரும்பியிருக்கலாம்.

அப்படி ஒருவேளை இவர் நினைத்திருந்தால் காவல் துறை என்பது சுதந்தரமாக இயங்கும் தனியொரு பிரிவு என்பது போன்ற தோற்றமே ஏற்படுகிறது.



(ஃபேஸ்புக் பதிவுகளை இங்கும் சேமித்து வைத்துக்கொள்கிறேன்).

22-23 செப்டெம்பர் 2013

No comments: