October 16, 2013

நரேந்திர மோடியைப் புரிந்துகொள்வது எப்படி?

ஜூலை 1991ல் டாக்டர் மன்மோகன் சிங் ‘பொருளாதாரச் சீர்திருத்தங்களை’ அறிமுகம் செய்தபோது, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுடைய ரத யாத்திரைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் இருந்தார் நரேந்திர மோடி. மன்மோகன் சிங் கொண்டு வந்த மாற்றங்களின் பின்னணியில் வளர்ந்த இந்த யாத்திரா மேனேஜர் அடுத்த இருபதாண்டுகளில் அவருக்கும் அவர் கட்சிக்கும் தனிப் பெரும் சவாலாக உருப்பெற்று எழுந்தார்.

குஜராத்தின் வடக்குப் பகுதியில் ரயில் பெட்டி போன்ற ஒரு சிறிய வீட்டில் பிறந்த மோடி, ஆறு வயதில் தனி குஜராத் மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தும் முத்திரைகளை வாங்கி வினியோகிக்கத் தொடங்கினார். இளவயதிலேயே திருமணம் முடிந்து, உடனேயே அதிலிருந்து வெளியேறியும்விட்டார். சிறிது காலம் மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார். (இந்தக் காலகட்டம் இன்னமும் ரகசியமாகவே நீடிக்கிறது). பிற்படுத்தப்பட்டப் பிரிவில் இருந்து வந்தாலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஒரு பிரசாரக்காக வளர்ந்து, அதிகார ஏணியில் மிக விரைவாக தாவி ஏறி, குஜராத் முதல்வராகவும், ‘வளர்ச்சித் திருமகனாகவும்’ வளர்ந்த கதையை நிலஞ்சன் முகோபாத்யாய் தனது Narendra Modi : The Man, The Times நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

கிங்ஷுக் நாக் தனது The Namo Story நூலில் நரேந்திர மோடி உருவான கதையை இன்னமும் விரிவாக்கி, இந்தியாவின் சமூகப் பொருளாதாரப் பின்னணியில் பொருத்தி ஆய்வு செய்கிறார். 1991 மாற்றங்களின் ஒரு பகுதியாக லைசன்ஸ் ராஜ் ரத்து செய்யப்பட்டபோது புதிய தொழில்முனைவோர்கள் களத்தில் உதயமானார்கள். எதிர்பார்த்தபடியே தொழில்துறையில் பணம் கொட்டத் தொடங்கியது. அது நாள் வரை என்ன தயாரிக்கவேண்டும், எவ்வளவு என்பதையெல்லாம் மத்திய அரசாங்கம்தான் முடிவு செய்து வந்தது. இப்போது நிலைமை மாறி, தங்களுக்கு என்ன தேவை என்பதை தொழில்முனைவோர் முடிவு செய்தனர். என்ன தயாரிக்கவேண்டும், எவ்வளவு என்பதை மட்டுமல்ல எங்கே தங்கள் தொழிற்சாலைகளும் அலுலகங்களும் அமையவேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்தார்கள். எனவே, அவர்களைத் தம் பக்கம் ஈர்க்கவேண்டிய அவசியத்துக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டன. நான் உன் மாநிலத்துக்கு வரவேண்டுமானால் எனக்கு நீ என்ன தருவாய் என்று முதலமைச்சர்களைக் கேட்டனர் தொழிலதிபர்கள். நான் உன்னை வரவேற்கிறேன், பதிலுக்கு நீ என்ன தருவாய் என்று முதல்வர்கள் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர். இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலுடன் கூடிய ஒரு புதிய உறவுப் பிணைப்பு உருவானது.

எங்கே அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் ஒன்றிணைகிறார்களோ அங்கே மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்று அனைவரும் நம்பத் தொடங்கினார்கள். இந்த இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சார்ந்தும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டும் செல்வம் சேர்க்க ஆரம்பித்தனர். நாளடைவில், ஓர் அரசியல்வாதி தொழிலதிபராகவும், ஒரு தொழிலதிபரே அரசியல்வாதியாகவும் மாற்றம் பெறுவதும் நடந்தது. தாராளமயமாக்கல் தொழில்துறையில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தது. நரேந்திர மோடியையும் குஜராத் பாணி வளர்ச்சியையும் புரிந்துகொள்ள இந்தப் பின்னணி முதலில் அவசியம்.

2014 மக்களவைத் தேர்தல் குறித்து கிங்ஷுக் நாக் அளிக்கும் கணக்கு இது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 135 இடங்கள் உள்ளன. இங்குள்ள இளைஞர்கள் மற்றும் புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே மோடிக்கு நல்ல ஆதரவு இருப்பதால் இங்கெல்லாம் அவர் வலுவாக இருக்கிறார். பிகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் 168 இடங்கள் உள்ளன. இங்கே மோடி ஒரு போட்டியாளர் மட்டுமே. இதுவரை பாஜக இங்கே தனியாக எந்த வெற்றியையும் ஈட்டியதில்லை. மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 140 இடங்களில் மோடியால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாது.

2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 26.53% மற்றும் 28.55% வாக்குகளையே பெற்றன. கூட்டணி ஆட்சி என்பது தாரக மந்திரமாக மாறிவிட்ட இன்றைய தேதியில் முப்பது சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுவிட்டாலே ஒரு கட்சியால் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என்பதுதான் யதார்த்தம். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 15% வாக்காளர்கள், முஸ்லிம்கள். மோடியே பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் இவர்களைச் சுலபமாகத் தம் பக்கம் கொண்டுவந்துவிடமுடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை. இன்னொரு பதினைந்து சதவிகிதம் என்பது அதிக சிக்கலில்லாதது.

மைனாரிட்டி வாக்குகளை காங்கிரஸால் ஈர்க்கமுடியும் என்றால் பாஜகவால் மெஜாரிட்டி இந்துக்களை ஈர்க்கமுடியாதா? ஆனால் சிக்கல் என்னவென்றால், ‘இந்து ஓட்டு என்று ஒன்று இல்லவே இல்லை’ என்கிறார் இந்துத்துவ  அரசியல் குறித்து ஆராய்ந்து வரும் ஜோதிர்மய ஷர்மா. எனவே மாற்றுத் திட்டங்களை மோடி யோசிக்கவேண்டியிருக்கும் என்கிறார் கிங்ஷுக் நாக். இதுவரை தேசிய அரசியல் பற்றியும் அயல்நாட்டு கொள்கைகள் பற்றியும் வாய் திறக்காமல் இருந்த மோடி இனி அவற்றையும் விவாதித்தாகவேண்டும். பாகிஸ்தான் பற்றியும் பங்களாதேஷ் பற்றியும் அவர் பேசினால் (அதாவது, ‘இஸ்லாமிய அபாயம்’) இந்துக்களின் வாக்குகளை வென்றெடுக்கலாம் என்கிறார்கள் இன்னும் சிலர்.

பாஜகவின் கொள்கைகள் குறித்து அதிகம் அக்கறையில்லாத வேறு சிலரும்கூட மோடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். உதாரணத்துக்கு, கார்பரேட் நிறுவனங்கள், தொழில்முனைவோர், பெரும் முதலாளிகள், செல்வந்தர்கள், வளமான குஜராத்தி தொழில் பிரிவினர். மோடியின் டார்கெட் இந்துக்கள் மட்டுமல்ல, ‘புதிய நடுத்தர வர்க்கமும்தான். கடந்த இருபதாண்டுகால பொருளாதாரச் சீர்திருத்தங்களால் இரட்டிப்பு சம்பளம் வாய்க்கப் பெற்ற மில்லியன் கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை மோடி நம்பியிருக்கிறார் ’ என்று சுட்டிக்காட்டுகிறார் கிங்ஷுக் நாக்.

ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் நரேந்திர மோடி எப்படி இருப்பார்? ‘நிச்சயம் மன்மோகன் சிங்குக்கு நேர் எதிரானவராக இருப்பார்.’ என்கிறார் கிங்ஷுக் நாக். எப்போதும் அமைதியாக, எல்லாவற்றுக்கும் விட்டுக்கொடுத்து, திரைக்குப் பின்பே இருக்கும் மன்மோகன் சிங்கைப் போல் இருக்க மாட்டார் மோடி. மன்மோகன் சிங், மோடி இருவருமே கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். மன்மோகன் சிங், நிதியமைச்சராக, ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பணியாற்றியவர். மோடிக்கு இத்தகைய அனுபவங்கள் இல்லை என்றபோதும், அவர் ‘ஒரு புடம்போடப்பட்ட  அரசியல்வாதி.’

வாஜ்பாய் அணிந்திருந்ததைப் போன்ற மென்மையான முகமூடி மோடிக்கு இல்லை. (எனவே வாஜ்பாய்க்குத் திரண்டதைப் போன்ற பிற கட்சிகளின் ஆதரவு மோடி தலைமையிலான பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்புகள் குறைவு). ராஜிவுடன் மோடியை ஒரு விஷயத்துக்காக ஒப்பிடலாம். 2002 கலவரம் என்பது கோத்ரா சம்பவத்தின் ‘விளைவு’ என்று நியாயப்படுத்தினார் மோடி. சீக்கியக் கலவரம் தொடங்கிய இரண்டாவது நாள் ராஜிவ் காந்தி, ‘ஒரு பெரிய மரம் சாயும்போது நிலம் அதிரத்தான் செய்யும்’  என்றார்.

ஆனால் ராஜிவ் காந்தியைப் போல் பிரதமர் பதவிக்கான பயணம் மோடிக்குச் சுலபமாக இல்லை. அரசியல் சதுரங்கக் கட்டத்தில் மோடி எப்படி ஒவ்வொரு கட்டமாக முன்னுக்கு நகர்ந்து வந்தார் என்பதை நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய புத்தகம் விரிவாக பதிவு செய்கிறது. சீனியர் தலைவர்களின் யாத்திரைகளை நிர்வகிப்பதில், தனக்கு ஒவ்வாதவர்களை வீழ்த்துவதில், சக்திவாய்ந்த தலைவர்களின் நட்பைப் பெறுவதில் மோடி திறமைசாலியாக இருந்தார் என்கிறார் முகோபத்யாய்.

மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி இருவருமே குஜராத்திகள் என்றாலும் இருவருக்கும் இடையில் அதிக ஒற்றுமைகள் இல்லை என்கிறார் கிங்ஷுக் நாக். தேசாய் வளமான தெற்கு குஜராத் பகுதியைச் சேர்ந்தவர். மோடி, பின்தங்கிய வடக்குப் பகுதியில் இருந்து வந்தவர். மொரார்ஜி பழம்பெரும் காங்கிரஸ்காரர், காந்தியத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். மோடியோ சிறுவயது முதலே காங்கிரஸை வெறுத்து வந்தவர். காங்கிரஸ் வெறுப்பு மிகவும் இயல்பாக தனக்கு வந்துவிட்டதாக முகோபாத்யாயிடம் உரையாடும்போது சொல்கிறார் மோடி. ‘மக்கள் அப்போது காங்கிரஸைத் தீவிரமாக வெறுத்தனர். பேரணி நடத்தினர், கோஷமிட்டனர், உருவபொம்மைகள் எரித்தனர். ஏன் காங்கிரஸ்மீது இவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று யோசித்தேன். விசாரித்தபோது, காங்கிரஸ் நமக்கு தீங்கு செய்துவருகிறது என்று சொன்னார்கள். ’

லால் பகதூர் சாஸ்திரியைப் போலவே மோடியும் வாய்ப்புகள் குறைவான, சாமானியப் பின்னணியில் இருந்து வந்தவர். ‘ஆனால் சாஸ்திரி தன்னடக்கம் மிக்கவர். அதனாலேயே நேருவால் தனது வாரிசாக நியமிக்கப்பட்டார். மோடியைப் பணிவானவர் என்று ஒருபோதும் சொல்லமுடியாது.’ என்கிறார் கிங்ஷுக் நாக். மத அடையாளத்தை வெறுத்த நேருவோடு ஒப்பிட மோடியிடம் எதுவும் இல்லை.

சிறிது காலமே ஆட்சியில் இருந்தும் வி.பி. சிங்கோடு மோடியை ஒப்பிடலாம் என்கிறார் கின்ஷுக் நாக். அறியப்படாத பின்புலத்தில் இருந்து வந்தபோதும் பெரும் எழுச்சி பெற்று ஊழலுக்கு எதிராகவும் அமைப்புக்கு எதிராகவும் போரிட்டுள்ளார் வி.பி. சிங். அவரைப் போலவே இப்போதிருப்பதைத் தகர்த்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவேன் என்கிறார் மோடி. வி.பி. சிங்கை வீழ்த்த முடிந்தது என்றாலும் அவர் கொண்டுவந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவருக்குப் பிறகு ஆட்சியில் அமைந்தவர்களால் புறக்கணிக்கமுடியவில்லை. மோடியாலும் அத்தகைய அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என்கிறார் கின்ஷுக் நாக்.

‘யாராவது ஒரு இந்தியப் பிரதமருடன் மோடியை நெருக்கமாக ஒப்பிடவேண்டுமானால் அவர் இந்திரா காந்திதான்’ என்கிறார் கின்ஷுக் நாக். இருவருமே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் நிலவிவந்த அரசியல் நடைமுறையை மாற்றியமைத்தவர்கள். மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதிலும் அவர்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிடுவதிலும் இருவரும் வல்லவர்கள். இருவராலும் மக்களுடன் நேரடியாக உரையாடமுடியும். இந்திராவின் ஆள்கள் என்பதாலேயே எப்படிப் பலர் அப்போது அமைச்சர் பதவியைப் பிடித்தார்களோ அதே போல் மோடியின் ஆள்கள் என்பதாலேயே பலர் குஜராத்தில் பதவி பெற்றிருக்கிறார்கள். இருவரும் பயத்துடனே அணுகப்படுகிறார்கள்.

அதே சமயம், ஒற்றுமைகளைப் போலவே வேற்றுமைகளும் இவர்களிடம் உள்ளன என்கிறார் கிங்ஷுக் நாக். ‘இந்திராவின் உலகப் பார்வை சோஷலிசத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஏழைமையை ஒழிப்போம் என்னும் முழக்கத்தை அவர் கொண்டுவந்தார். வங்கிகள், நிலக்கரிச் சுரங்கங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றை தேசியமயமாக்கினார்.’ மோடியோ தன்னை கார்ப்பரேட்  உலகின் நண்பனாக உயர்த்திக் காட்டுவதில்தான் பெருமிதம் கொண்டிருக்கிறார்.

மோடி புரிந்துகொள்ளமுடியாத ஒரு நபராகவே அன்று தொடங்கி இன்றுவரை நீடிக்கிறார் என்கிறார் நிலஞ்சன் முகோபாத்யாய். தன் குடும்பத்தினர் உள்பட யாருடனும் அவர் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொண்டதில்லை. அரசியல் களத்தில்கூட மோடிக்கு நெருக்கமானவர்கள் என்று யாரையும் சொல்லமுடிவதில்லை. ஜஷோதாபென் சிமன்லால் என்பவருடனான மோடியின் இளவயது திருமணம் குறித்து பத்திரிகைகளில் சில செய்திகள் வருவதற்கு முன்பு தங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்று பாஜகவிலேயே பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். மோடியிடம் உரையாடி தன் புத்தகத்தை எழுதியிருக்கும் நிலஞ்சன் முகோபாத்யாய், ‘ஏற்கெனவே எழுதப்பட்டதைத் தவிர புதிதாக எந்த உபயோகமான தகவலும் கிடைக்கப்போவதில்லை என்பதால் இது பற்றி மோடியிடம் எதுவும் கேட்கவில்லை’ என்கிறார்.

மோடியின் முரண்பட்ட பர்சனாலிட்டிக்கு இது ஓர் உதாரணம் என்கிறார் முகோபாத்யாயிடம் உரையாடிய ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர். தான் எப்படிப்பட்டவர் என்பதை மோடி ஒரு போதும் பொதுவெளியில் வெளிக்காட்டியதில்லை. அவர் வெளிக்காட்டும் தோற்றம்தான் நிஜமானது என்று நினைப்பதும் தவறு என்கிறார் இந்தப் பிரமுகர். மோடி தன் மனைவியை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, முறைப்படி விவாகரத்தும் பெறவில்லை என்பதையும் இவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது மோடியின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் முகோபாத்யாய். சங் பரிவாரத்தில் பெண்களுடனான திருமண மற்றும் நட்புரீதியான உறவுமுறை நீண்டகாலமாகவே குழப்பம் மிகுந்ததாக இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நிறுவிய கே பி ஹெட்கேவாரின் மரணத்துக்குப் பிறகு பல இயக்கத் தலைவர்களின் உறவுமுறைகள் குறித்து மீடியாவில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவாதங்களைத் தடுத்து நிறுத்தத்தான் இயக்கத்தினர் முயன்றார்களே ஒழிய எதற்கும் பதிலளிக்க அவர்கள் தயாராக இல்லை. மோடியும்கூட மிரட்டலையும் சமரசத்தையும் பயன்படுத்தி தன் திருமணம் குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கச் செய்தார். ஆனால் அவருடைய முயற்சிகள் குஜராத்தைத் தாண்டி வெற்றிபெறவில்லை.

பொதுவாகவே தனது கடந்த காலத்தைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவரக்கூடாது என்பதில் மோடி கவனமாக இருந்திருக்கிறார். சிறு வயதில் மோடி ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் என்பதைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருக்கிறார் ஒரு நிருபர். மோடிக்கு நன்றாக நடிக்க வருகிறது, ‘இளம் வயதிலிருந்தே இயல்பாக அவருக்கு நடிப்பு வந்துவிட்டது’ என்றும் அவர் எழுதிவிட்டதால் மோடி கோபம் அடைந்துவிட்டாராம்.

மோடியை இன்னொரு காந்தியாகவோ அல்லது மற்றொரு ஹிட்லராகவோ முன்னிறுத்தாமல், ‘அவரைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்திருக்கிறேன்’ என்கிறார் நிலஞ்சன் முகோபாத்யாய். புகழ் புராணமாகவும் இல்லாமல் கூர்மையான விமரிசன நூலாகவும் இல்லாமல் பல கோணங்களில் இருந்து மோடியை அணுகி முடிந்தவரை விருப்பு, வெறுப்பற்று இந்நூலைத் தொகுத்திருக்கிறார் முகோபாத்யாய். ஆனால் அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவதைப் போல், 2002 சம்பவத்தை விலக்கிவிட்டு மோடியைப் புரிந்துகொள்வதோ மதிப்பிடுவதோ முடியாத காரியம். அந்தச் சம்பவம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் மோடி ‘வழிபாட்டுக்குரிய ஒரு தலைவராக வளர்ச்சி அடைந்திருக்கமாட்டார். அவரைப் பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண்டிருக்கவும் மாட்டோம்.’

கிங்ஷுக் நாக், நிலஞ்சன் முகோபாத்யாய் இருவருமே குஜராத் அரசியல் களம் குறித்தும் நரேந்திர மோடி அதில் வகித்த பாத்திரம் குறித்தும் தொடர்ந்து எழுதி வரும் பத்திரிகையாளர்கள். மோடியை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை இவர்களுடைய நூல்களை வாசித்த ஒருவரால் தீர்மானமாக முடிவு செய்ய இயலும்.

(ஆழம் அக்டோபர் 2013 இதழில் வெளியான எனது கட்டுரை).

3 comments:

N.Sadagopan said...

பல ஊடகங்களில் 60 வருடங்களுக்கும் மேலாக எத்தனயோ பேர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மீது பல அவதூறுகளைம் அள்ளி வீசியும், போய்க் கதைகளைக் கட்டிவிட்டும் கூட ஆர்.எஸ்.எஸ்.அமைதியாக ஆரவாரம் எதுவும் இல்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறது. ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்ன அவதூறுகளை அள்ளி வீசினாலும் எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரும் அதை நம்ப மாட்டார்கள். எனவே ஊடங்களில் வருகின்ற கட்டுரைகளைப் பற்றி அதிகமாக எதுவும் கவலைப் படத் தேவையில்லை. எத்தனையோ இடது சாரிகள், காங்கிரஸ் காரர்கள், திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஆதரவார்களாக மாறியுள்ளனர். இவர்களும் ஒரு நாள் அந்நிலைக்கு வருவர். நாம் நமது பணியை செய்துகொண்டே இருப்போம். தூற்றுவார் தூற்றட்டும். அது நம்மை மேலும் வேலை செய்ய ஊக்கம் கொடுக்கும் அருமருந்தாகும்.

Anonymous said...

"Does anyone remember who the chief minister of Maharashtra was during the Mumbai riots which were no less deadly than the Gujarat riots of 2002?

Does anyone recall the name of the chief minister of UP during Malliana and Meerut riots or that of the Bihar CM when the Bhagalpur or Jamshedpur riots under Congress regimes took place?

Do we hear names of earlier chief ministers of Gujarat under whose charge, hundreds of riots took place in post-Independence India?

Does anyone remember who was in-charge of Delhi's security when
the 1984 massacre of Sikhs took place in the capital of India?

How come Narendra Modi has been singled out as the Devil Incarnate as if he personally carried out all the killings during the
riots of 2002?"

No speck of doubt about what Salim Khan has said.

When one says Gujarat's agriculture growth is 10-11% since whole last decade
The other says 2002 Riots!

When one says he made the Asia's biggest solar plant,
The other says 2002 Riots!

When one says Gujarat is the only state in the whole of India to provide 24*7 and 365 days electricity to almost all of its 18,000
villages,
The other says 2002 Riots!

When one says - World Bank's statement of 2011 said, Gujarat roads are equivalent to international standards,
The other says 2002 Riots!

When one says Gujarat is the first State in country to have "high speed wireless Broadband service in its all 18,000 villages,
The other says 2002 Riots!

When one says Forbes Magazine rated Ahmadabad as the fastest
growing city in India and 3rd in the world,
The other says 2002 Riots!

When one says Gujarat Tourism is growing faster than ever before,
The other says 2002 Riots!

When one says according to central govt's Labour Bureau's report, Gujarat has the lowest unemployment rate in country,
The other says 2002 Riots!

When Narendra Modi is being chosen as the best current Indian leader in
almost all surveys & polls again and again
The other says 2002 Riots!

When one says 2003-2013 are the only 10 straight years in Gujarat history which are totally riot-free,
The other STILL says 2002 Riots!

But when we remind them about riots which occurred during Congress and in Communist Party rule :

1947
Bengal....5,000 to 10,000 dead ...CONGRESS RULE.

1967
Ranchi....200 DEAD..........CONGRESS RULE.

1969
Ahmedabad...512 DEAD........CONGRESS RULE.

1970
Bhiwandi....80 DEAD.............CONGRESS RULE.

1979
Jamshedpur..125 DEAD......CPIM RULE (COMMUNIST PARTY)

1980
Moradabad...2,000 DEAD...CONGRESS RULE.

1983
Nellie Assam.....5,000 DEAD...CONGRESS RULE.

1984
anti-Sikh Delhi...2,733 DEAD...CONGRESS RULE

1984
Bhiwandi....146 DEAD....CONGRESS RULE

1985
Gujarat.....300 DEAD..CONGRESS RULE

1986
Ahmedabad......59 DEAD.....CONGRESS RULE

1987
Meerut....81 DEAD...CONGRESS RULE

1989
Bhagalpur......1,070 DEAD......CONGRESS RULE

1990
Hyderabad......300 PLUS DEAD....CONGRESS RULE

1992
Mumbai....900 TO 2000 DEAD....CONGRESS RULE

1992
Aligarh....176 DEAD.....CONGRESS RULE

1992
Surat.......175 DEAD.....CONGRESS RULE

they become totally deaf ..................because they have no answer.

Congress is a government of hypocrites.

The youth of India says:............

We are not interested in 2002, We are interested in 2022

Karuppusamy said...

மோடியின் ஆட்சியில் நடந்த கலவரத்தில் இறந்த இஸ்லாமியர்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதும் அ.மார்க்ஸ் முதல் விணவு வரை முகநூலில் மகிழ்நன் வரை சொல்லுவது ஒன்று தான் மோடியினால் தான் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் மோடி கொலைகாரன் என்ற பாட்டை பத்து வருடங்களாக பாடி வருகிறார்கள்! போதாதற்கு இவர்கள் மனித உரிமை காவலர்கள் வேறு !

குண்டு வைத்து இறந்த போனவர்களுக்கு இவர்களின் மனித உரிமை வெங்காயம் வேலை செய்யாது குண்டு வைதவனுக்கு தூக்கு என்று வரும் போது மனித உரிமை வெங்காயம் கண்ணை கசக்கும் ! என்ன மாதிரியான நியாய சொம்பு என்று தெரியலை !

சரி விடையதிர்க்கு வருவோம் இந்த பொதுவுடைமை பேசும் சீன எச்சிகளைகள் வைக்கும் வாதம் மோடியின் ஆட்சியில் நடந்த கலவரத்திற்கு முழு காரணம் மோடி என்று சொல்லும் இதே நாய்கள் தங்களின் கடவுள்களான ஜோசப் ஸ்டாலின்,லெனின்,மாவோசேதுங்,போல்பாட் போன்ற கொலை இயந்திரங்களை தான் இவர்கள் பார்வையில் தலைவர்கள் கம்யூனிச கடவுள்கள் !

ஜோசப் ஸ்டாலின் நேரடி உத்தரவு பெயரினால் கொலை செய்யப்பட மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடி ! இந்த நாய்கள் தான் சொல்லுது மோடி இரத்த வெறி பிடித்தவர் என்று