January 29, 2014

சுயமதிப்பீடு


நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியான என்னுடைய இரு புத்தகங்கள் இதுவரை நான் எழுதியவற்றில் இருந்து பெரிதும் மாறுபட்டவை என்பதால் அவை குறித்து சுருக்கமாக இங்கே விவரிக்க விரும்புகிறேன்.

1) குஜராத் மோடி இந்துத்துவம்

முதல் முறையாக நெருங்கிச் சென்று பார்த்து, உணர்ந்து, உரையாடி ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதற்கு முன்பு எழுதியவை அனைத்தும் secondary sources ஆதாரங்களின் அடிப்படையில் மட்டும் உருவானவை. குஜராத் புத்தகத்திலும்கூட இத்தகைய ஆதாரங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன என்றபோதும் அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் நேரடியாக உணரவும் பொருத்திப் பார்த்துக்கொள்ளவும் முடிந்தது.

உதாரணத்துக்கு, Ornit Shani தனது Communalism, Caste and Hindu Nationalism நூலில் அகமதாபாத்தின் நிலப்பரப்பையும் இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்புகளின் அமைப்பையும் விவரமாக விவரித்திருப்பார். இந்தக் குறிப்புகளைக் கொண்டே அகமதாபாத் குறித்த பகுதிகளை என்னால் எழுதியிருக்கமுடியும். ஆனால் ஜுஹாபுரா போன்ற ஒரு பகுதியைப் புத்தகங்களின் வாயிலாக மட்டும் புரிந்துகொண்டுவிடமுடியாது. ஒரு வார காலம் என்பது மிகவும் குறைவானதுதான் என்றபோதும் குஜராத் பயணம் என்னுடைய புரிதலைப் பெரிய அளவில் அகலப்படுத்தியது. சந்தித்த மனிதர்கள், அவர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகத்தில் கொண்டுவந்திருக்கிறேன். அந்த ஒரு வாரம் அகமதாபாத் வீதிகளைச் சுற்றியலையாமல் இருந்திருந்தால் இந்தப் புத்தகம் ஜீவனற்றுப் போயிருக்கும்.

‘நான்’ இடம்பெறும் என்னுடைய முதல் புத்தகம் இது என்றபோதும் புத்தகம் முழுவதிலும் விரவிக்கிடக்காமல் குறிப்பாகச் சில இடங்களில் மட்டுமே நேரடியாகப் பங்கேற்றிருக்கிறேன். ஒரு புத்தகம் தொடர்பாக ஏராளமானவர்களுடன் உரையாடியாதும் இதுவே முதல் முறை. அதேபோல், எழுத்துப் பிரதியைச் சிலரிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பெற்று திருத்தங்கள் செய்ததும் இதுவே முதல்முறை.

Making India Hindu, Talking Back ஆகிய புத்தகங்களை வாசிக்கும்போது இதுவரை நான் எழுதிய கிட்டத்தட்டட அனைத்தின்மீதும் வெறுப்பும் கோபமும் வந்தது. பத்தே பக்கங்களில் அடர்த்தியாகச் சொல்லியிருக்கவேண்டிய பல விஷயங்களை ஒரு புத்தகமாக மாற்றும் அளவுக்கு எனக்குத் துணிச்சல் இருந்திருக்கிறது! 

தமிழில் இப்படியெல்லாம் எழுதமுடியாது, கதை வடிவில் சொன்னால்தான் புரியும் போன்ற போர்வைகளுக்குள் வசதியாக இனி நான் ஒளிந்துகொள்ளப் போவதில்லை. தமிழில் பலவற்றுக்கு அடிப்படைப் புத்தகங்களே இல்லை என்னும் காரணத்தை முன்வைத்து அதீதமாக எளிமைப்படுத்தும் பணியையும் செய்யப்போவதில்லை. இத்தகைய நடைமுறைகளில் இருந்து சென்ற ஆண்டே வெளிவந்துவிட்டேன்.

குஜராத் புத்தகத்தில் எளிமைப்படுத்தல்கள் இல்லை. இலகுவாக இருக்கவேண்டும், வாசகர்களுக்குப் புரியவேண்டும் என்றெல்லாம் பிரயத்தனப்படாமல் புத்தகத்தின் தேவைக்கும் கட்டமைப்புக்கும் ஏற்ற விஷயங்களை அடுத்தடுத்துச் சொல்லிச் சென்றிருக்கிறேன். உதாரணத்துக்கு, சாதிக் கட்சிகளின் எழுச்சி குறித்து விவாதிக்கும்போது, சமஸ்கிருதமயமாக்கல் குறித்து அதைப் பிரபலமான கோட்பாடாக மாற்றிய எம்.என். சீனிவாஸ் குறித்தும் கோடிட்டு மட்டுமே காட்டியிருக்கிறேன்.

2) உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

ஒருசில புத்தகங்கள் நீங்கலாக, இதுவரையிலும் நான் எழுதிய பெரும்பாலான வாழ்க்கை வரலாற்று நூல்களை hagiography என்றே வகைப்படுத்தவேண்டியிருக்கும். இத்தகைய படைப்புகள் ஒருவருடைய வாழ்க்கையை ரசிக்கும் வகையில் விவரிக்கிறது; விவாதிப்பதில்லை. சர்ச்சைக்குள்ளான பகுதிகள் வரும்போது தாண்டிச் சென்றுவிடுவதோ, ஒரேயொரு தரப்பின் (பெரும்பாலும் எழுதப்படும் நபர் சார்ந்த தரப்பு) நியாயத்தை மட்டுமே எடுத்துரைப்பதோ இந்த வகையில் சேரும். நல்லபடியாக மட்டுமே ஒருவரை உயர்த்திக் காட்டும் இத்தகைய புத்தகங்களின் உபயோகம் மிகவும் மேலோட்டமானது. பணிகளையும் பங்களிப்புகளையும் தீற்றலாகக் காட்டிவிட்டு வாழ்க்கைச் சம்பவங்களை மட்டுமே அடுக்கிக் காட்டும் ஒரு நூலிடம் இருந்து நம்மால் அதிகம் பெறமுடியாது.  இந்தத் தவறை இனி செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தபிறகு எழுதிய புத்தகம் இது.

சிந்தனைகளுக்கு மட்டுமே இதில் இடம் கொடுத்திருக்கிறேன், சிந்தனையாளர்களுக்கு அல்ல. அவர்கள் எப்போது எங்கே எப்படி வாழ்ந்தார்கள், மடிந்தார்கள் போன்ற விவரங்கள் இதில் இருக்காது. கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் புத்தரும் அல்ல; மார்க்சியமும் பௌத்தமும்தான் இங்கே விவாதிக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மேற்கோள்களும் விவாதங்களும்கூடிய அறிமுகமாக இதனை உருவாக்கியிருக்கிறேன்.

தமிழ்பேப்பரில் தொடராக வெளிவந்து சில மாற்றங்களுடன் இது புத்தகமாகியிருக்கிறது. இதன் இரண்டாவது பாகத்தை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவேண்டும். இதுபோக என் வலைப்பதிவில் சில விஷயங்களைத் தொடர்ச்சியாக எழுத உத்தேசித்திருக்கிறேன். புரட்சியாளர்கள்போல் வாரம் ஒரு முறை என்று கறாராக நிர்ணயித்துக்கொள்வது சிரமம் என்பதால் விரும்பியபோதெல்லாம் எழுதும் வசதிக்காக இந்த ஏற்பாடு.

மற்றபடி, இந்த ஆண்டு வேறு என்ன எழுதவேண்டும் என்பது குறித்து தீர்மானமாக இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் எப்படி எழுதவேண்டும் என்றும் அதைவிட முக்கியமாக எப்படி எழுதக்கூடாது என்பதையும் தீர்மானித்துவிட்டேன்.

0

No comments: